ஒரு கணம் ஒரேயொரு கணம்தான் அவள் முகத்தைக் கூர்ந்தான் மோகனன். அதற்குமேல் நீர் நிறைந்து கிடந்த அந்த விழிகளைப் பார்க்க முடியாமல் வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டான்.
அவனுடைய பிடரி மயிர்கள் கொத்தாக அவன் கைக்குள் சிக்கின. தாடை இறுக கண்கள் சிவந்தன. அடுத்த கணமே தன் கட்டுப்பாட்டை இழந்தவன் ரஜீவனை நொறுக்கிப் போடும் வேகத்தில் கௌசிகனைக் கூட மறந்துவிட்டு விறுவிறு என்று கோயிலுக்குள் நடந்தான்.
அங்கே, ராதாவைத் தேடிக்கொண்டு வந்துகொண்டிருந்தான் ரஜீவன். கோயில் வாசலில் ஒரு குடும்பம் நிற்பதும் இவன் பார்வையில் விழுந்தது.
இன்னும் வேகம் கூட்டி, இரண்டே எட்டில் ரஜீவனை நெருங்கி, “அறிவுகெட்டவனே, கூடிப்பிறந்தவளை இப்பிடி அழ வைக்கிறியே. உனக்கு மண்டைக்க சரக்கே இல்லையாடா?” என்று சினம் மிகச் சீறியவனின் விடைத்துநின்ற பெருத்த தேகம், ரஜீவனை முட்டித் தள்ளிவிடுகிறேன் என்று நெருங்கி நெருங்கிச் சென்றது.
இவன் எங்கே இங்கே என்று சற்று அரண்டுபோனான் ரஜீவன். பின்னால் நகர்ந்தபடி, “என்ர தங்கச்சிக்கு நான் மாப்பிள்ளை பாக்கிறத நீங்க என்ன கேக்கிறது?” என்றான், எல்லாம் கெட்டுவிடப் போகிறதே என்கிற எரிச்சலுடன்.
“நீ அவளுக்கு மாப்பிள்ள பார். இல்ல மாமியாரைப் பார். அதுக்கு முதல் அவளுக்குப் பிடிச்சிருக்கா எண்டு கேள். அதை விட்டுட்டு நீ நினைச்சதச் செய்ய நினைச்சியோ…” என்று விரலை நீட்டி எச்சரித்தவன், தனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த தமையனின் புறம் திரும்பி,
“அதுக்குப் பிறகு நடக்கிறதுக்கு நான் பொறுப்பு இல்ல அண்ணா. சொல்லிவைங்க!” என்றுவிட்டு அந்த இடத்தை விட்டே அகன்றான்.
திகைப்புடன் அவனைப் பார்த்தாள் ராதா. இப்படியொரு கோபத்தை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அதைவிட அவன் சொன்ன விசயம்?
கௌசிகன் அவனைக் கவனிக்கிற நிலையில் இல்லை. “உன்னட்ட இருந்து இத நான் எதிர்பார்க்க இல்ல ரஜீவன்.” என்றான் அழுத்தமான குரலில்.
“இவ்வளவு ரகசியமா எங்கள் ஆருக்குமே சொல்லாம செய்ற அளவுக்கு நாங்க என்ன உன்ர குடும்பம் கெட்டுப்போகோணும் எண்டு நினைக்கிற ஆக்களா? இல்ல உன்னையும் உன்ர தங்கச்சியையும் படுகுழிக்க தள்ளிப்போடுவம் எண்டு நினைச்சியா?” என்று அடிக்குரலில் சீறினான்.
ரஜீவனுக்கு நடுங்கியது. முகம் கறுத்துப் போனது. எப்படியாவது ராதாவைச் சம்மதிக்க வைத்துவிடலாம் என்றுதான் நினைத்தான். அவள் சம்மதித்து அவளுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்துவிட்டால் போதுமே.
பிறகு அவனை எல்லோர் முன்பும் ராதாவின் வருங்காலக் கணவனாக அறிமுகப்படுத்திவிட்டால் முடிந்தது என்று எண்ணியிருந்தான். ராதா இப்படிக் கௌசிகனை அழைப்பாள் என்று எண்ணிப்பார்க்கவே இல்லை. கூடவே மோகனனும் அல்லவா வந்து நிற்கிறான்.
மனம் பதற, “அது அத்தான்…” என்றவனின் பேச்சை மதிக்காது ராதாவின் புறம் திரும்பினான் கௌசிகன்.
“இந்தக் கலியாணப் பேச்சில உனக்கு விருப்பம் இல்லையா ராதா?” என்றான் நேரடியாக.
தமையனிடம் தவிப்புடன் பார்வை சென்று வந்தாலும், “இல்லை அண்ணா. எனக்கு இந்தக் கலியாணம் வேண்டாம்.” என்றாள் ராதா.
அதற்குமேல் வேறெதுவும் பேசாமல், ரஜீவனோடு பெண் பார்க்க வந்து நின்ற குடும்பத்தினரை நோக்கி நடந்தான் கௌசிகன்.
அங்கேயே நின்றால் நிச்சயம் கையை நீட்டிவிடுவோம் என்றுதான் அந்த இடத்தை விட்டே வந்திருந்தான் மோகனன். அந்தளவில் அவளின் கண்ணீர் அவனை அலைக்கழித்தது.
அவளின் பதட்டம், பயம், கைகால்களின் நடுக்கத்தை எல்லாம் பார்த்தவனுக்குப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. ஆழ மூச்சை இழுத்து இழுத்து விட்டான். அப்போதும் மனம் நிதானத்துக்கு வரமாட்டேன் என்றது.
அங்கிருந்தே திரும்பிப் பார்த்தான். ராதா மட்டும் நிற்பது தெரிந்தது. கண்மண் தெரியாத கோபம் பொங்க, அவளிடம் மீண்டும் வந்தான்.
“எல்லாருக்கும் முன்னால வச்சுக் கொஞ்சமும் யோசிக்காம என்ன வேணாம், பிடிக்கேல்ல எண்டு சத்தமா சொல்லத் தெரிஞ்ச உங்களுக்கு, உங்கட அண்ணாட்ட மட்டும் கதைக்கேலாதோ? இல்ல, இந்த வாய் என்னட்ட மட்டும்தானா?” என்று சீறினான்.
கௌசிகனும் ரஜீவனும் அங்கே என்ன பேசுகிறார்களோ, என்ன நடக்கிறதோ என்று அந்தச் சிந்தனையில் இருந்த ராதா, திடீர் என்று காதருகில் கேட்ட இவனுடைய சீறலில் திடுக்கிட்டுத் துள்ளித் திரும்பினாள்.
பார்வை அவனிலேயே நிலைக்க பேச்சே வரவில்லை. அருகில் தெரிந்த அவனுடைய தோற்றமும், சிவந்த விழிகளும் வெகுவாகவே அச்சமூட்டின.
“எப்ப பாத்தாலும் என்னக் கேவலமா பாக்கவும், முறைக்கவும் மட்டும்தான் தெரியும் போல. தேவையான இடத்தில தேவையானதப் பேச வராதோ? எனக்குப் பிடிக்கேல்லை எண்டு தைரியமா சொல்லிப்போட்டு உங்கடபாட்டுக்கு வெளிக்கிட்டுப் போயிருக்கோணும். அதை விட்டுட்டு…” என்றவனுக்குக் கோபம் அடங்குவேனா என்று நின்றது.
“ஒரு பிரச்சனை எண்டு வந்தா தைரியமா நிக்கப் பழகோணும். இப்பிடிக் கண்ணைக் கசக்கிக்கொண்டு மற்றவையக் கூப்பிடுறேல்ல. இது நீங்களே சமாளிக்கக் கூடிய பிரச்சினை. இதுல நீங்க ஒரு டீச்சர். எங்கட அண்ணிக்கு வராத பிரச்சினையா உங்களுக்கு வந்தது? தனி மனுசியா நிண்டு எவ்வளவு போராடினவா எண்டு பாத்தீங்கதானே? அப்பிடியான தைரியம் எல்லாம் உங்களுக்கு இல்லயா?”
அவனின் கேள்வியில் அவள் முகம் சிறுத்துப்போனது. இவர்களை அழைத்திருக்கக் கூடாதோ. அழைத்ததால்தானே இவன் இப்பிடிக் கேட்கிறான். விழிகள் கலங்கி, சூடான கண்ணீரை வெளியே தள்ளிவிட முயல, வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“அழாதீங்க. நீங்க அழுறதப் பாக்க பாக்க எரிச்சல் வருது.” என்று அதற்கும் சிடுசிடுத்தான் அவன்.
அவமானம் ஒருபக்கம், அவன் முன் இப்படி அழுகிறோமே என்பது மறுபக்கம், அவன் சொன்னதுபோல இதை ஏன் நானே சமாளிக்க வேண்டும் என்று நினைக்காமல் போனேன் என்கிற எண்ணம் இன்னொரு பக்கம் என்று எல்லாமே அவளைப்போட்டு பந்தாடின.
கோயிலுக்கு வா என்று அழைத்த தமையன், பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று திடீரென்று சொன்னால் எப்படி இருக்கும்? அதோடு, அந்த மாப்பிள்ளை அவளைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிடுவானோ, அவளுக்கே தெரியாமல் இவ்வளவு தூரத்துக்குக் கொண்டுவந்த தமையன், இதைத் திருமணம் வரையிலும் கொண்டு போய்விடுவானோ என்கிற பயமும் பதட்டமும்தான் அவளின் சிந்திக்கும் திறனைப் பறித்திருந்தன. நிதானத்தையும் இழக்க வைத்திருந்தன என்று யார் இவனிடம் சொல்வது?
“நான் கௌசிகன் அண்ணாவத்தான் கூப்பிட்டனான்.” அவனைப் பாராது முணுமுணுத்தாள் அவள்.
“ஓ…! உன்னை ஆரடா கூப்பிட்டது எண்டு கேக்கிறீங்களோ?” பொய்யாய் அதட்டியபோதும் அவன் கோபமும் சினமும் போன இடம் தெரியாமல் மறைந்திருந்தன.
என்ன சொல்லுவாள்? சொல்வதறியாது பார்வையைச் சுழற்ற அங்கே கௌசிகனும் ரஜீவனும் வருவது தெரிந்தது.
“என்னட்டக் காட்டுற இந்த வாய கொஞ்சம் உங்கட அண்ணாட்டயும் காட்டுங்க!” என்றுவிட்டுக் கையைக் கட்டிக்கொண்டு அவள் அருகிலேயே நின்றான் அவன்.


