மோகனனின் காரைக் கண்டுவிட்டு, “சித்தப்பா…!” என்று கூவிக்கொண்டு மிதுனா வெளியே ஓடிவர, “அம்மா” என்று கத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடினான் மதுரன்.
ஆளுக்கொரு திசையாகப் பறந்த சின்னவர்களைக் கண்டு, அண்ணன் தம்பி இருவருமே அதுவரை இருந்த இறுக்கம் அகன்று சட்டென்று சிரித்துவிட்டிருந்தனர்.
“வாடா!” என்று சிரித்த முகமாகவே வரவேற்றான் கௌசிகன்.
“சித்தப்பா சித்தப்பா என்னை வெய்ட் தூக்குங்கோ.” என்று அவனிடம் தாவினாள் மிதுனா. ஒற்றைக் கையின் உள்ளங்கையில் அவளின் பின் முதுகைத் தாங்கி, கையை மேலும் கீழுமாக உயர்த்திப் பதித்தான்.
அவளும், அவன் ஏற்கனவே காட்டிக்கொடுத்தது போன்று, தன் கைகள் இரண்டாலும் கால்களைக் கட்டிப் பிடித்தபடி, அவன் கையிலேயே தன்னை பேலன்ஸ் செய்து, காற்றில் மேலும் கீழுமாக மிதந்தாள்.
பார்த்த கௌசிகன் பயந்தேபோனான். “டேய்! கவனமடா!” என்று ஓடிவந்தான்.
“அப்பா பயமில்லையப்பா. சித்தப்பா என்னை விடமாட்டார்.” என்று தகப்பனுக்குப் பதில் சொன்ன மிதுனா கிழுக்கிச் சிரித்தபடி, “மற்றக் கையாலையும் சித்தப்பா.” என்று நின்றாள்.
பெறாமகளில் முழுக்கவனத்தையும் வைத்தபடி ஒருவித லாவகத்தோடு அவளை மற்றக் கைக்கு மாற்றிக்கொண்டு, “பயப்பிடாதீங்க அண்ணா. மிதுக்குட்டி விழமாட்டா. நானும் விடமாட்டன். அப்பிடியே விழுந்தாலும் எப்பிடி ஜம்ப் பண்ணவேணும் எண்டு சொல்லிக் குடுத்திருக்கிறன்.” என்றவன் என்னவோ குட்டிப் பூனையை அங்குமிங்கும் மாற்றுவதுபோல் அவளை இரண்டு கைகளுக்கும் மாற்றிக்கொண்டிருந்தான்.
அதிலேயே இருவருக்கும் இது புதிதல்ல என்று புரிந்தது கௌசிகனுக்கு. இருந்தாலும் பயம் அகலாமல் மகள் விழுந்தால் பிடிப்பதற்கு ஏதுவாகப் பக்கத்திலேயே நின்றான்.
“உங்கட மகளுக்கு இதேதான் வேல கௌசி. மோகனன் வந்தா சும்மா இருக்க விடுறேல்ல. நீங்க இண்டைக்குத்தானே பாக்கிறீங்க. அதுதான் பயப்பிடுறீங்க.” என்றபடி மகனோடு வந்தாள் பிரமிளா.
“பொம்பிளைப் பிள்ளைகள் தைரியமாத்தான் இருக்கோணும் அண்ணி. மிதுக்குட்டிக்குத் துணிச்சல் இருக்கு. உங்கட மகனுக்குத்தான் இன்னும் பயம்.” என்றுவிட்டு, மிதுனாவை இறக்கிவிட்டுவிட்டு, “சித்தப்பாட்ட வாறீங்களா? அக்காவை மாதிரித் தூக்குறன்.” என்று மதுரனுக்கு ஆசை காட்டினான்.
அவனோ, அன்னையின் இடுப்பிலிருந்து நகராமல் தன் முகத்தையும் சேர்த்து மறைத்துக்கொண்டான்.
“பிள்ளையின்ர சித்தப்பா மது, போங்கோ. கார்ல கூட்டிக்கொண்டு போவார்.” என்று பிரமிளாவும் எவ்வளவோ முயன்றும் அவன் அசையவே இல்லை.
“அவனை விட்டுட்டு நீ இவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொண்டுவா ரமி. அலஞ்சு திரிஞ்சிட்டு வந்திருக்கிறான் எண்டு பாக்கவே தெரியுது.” என்று தம்பியைக் கவனித்தான் கௌசிகன்.
கூடவே, “மிதுச் செல்லம், இனிக் கொஞ்ச நேரம் தம்பியோட போய் சைக்கிள் ஓடுங்கோ. அப்பா சித்தப்பாவோட முக்கியமானது கதைக்கோணும்.” என்று அவர்களை முற்றத்துக்கு அனுப்பிவைத்தான்.
“என்ன தர மோகனன்? கணவாய்க் கறி இப்பதான் வச்சனான். சாப்பிடுறியா?” அவனுக்கு அது பிடிக்கும் என்று அறிந்து வினவினாள் பிரமிளா.
“லேட்டா சாப்பிடுறன் அண்ணி. இப்ப ஏதாவது குடிக்கத் தாங்கோ.” என்றுவிட்டுச் சுந்தரத்தின் வீட்டைப் பற்றிக் கௌசிகனிடம் பகிர்ந்துகொண்டான்.
கொண்டுவந்த கோப்பை இருவருக்கும் நடுவே விரித்துவைத்துத் தான் திரட்டிய தகவல்கள் பற்றியும் தரவுகள் பற்றியும் ஒன்றுவிடாமல் விளக்கினான்.
அவற்றைப் பார்த்ததிலேயே அவன் முழுமையாக இறங்கி வேலை செய்திருப்பது கௌசிகனுக்குப் புரிந்தது. தன்னை வந்து சந்திக்காமல் போக்குக் காட்டுகிறானோ என்று யோசித்தவனுக்கு அப்படியல்ல என்று இப்போது தெளிவாயிற்று.
அதோடு, இப்போதுதான் வீடு கட்டி முடித்தவனுக்கு அவனுடைய தரவுகள் அனைத்தும் சரியாக இருப்பதைக் கண்டும் வியப்புத்தான். முறையாகத்தான் வேலை பார்த்திருக்கிறான் என்று மெச்சிக்கொண்டான்.
அவன் மீதான நம்பிக்கை இன்னுமின்னும் கூடிற்று.
“பிறகு என்னடா, வேலைய ஆரம்பிக்க வேண்டியது தானே?”
“முதல் வேல அண்ணா. நீங்கதான் வந்து ஆரம்பிச்சுத் தரோணும். சுந்தரம் அண்ணாவோட கதைச்சு அந்த வீட்டை சிட்டி கன்ஸ்ரக்க்ஷன் அண்ட் எஞ்சினியரிங்(Chity Construction and Engineering) எண்டுற என்ர கம்பனின்ர பெயர்ல வாங்கியும் தரோணும்.” என்று அழைப்பு விடுத்தான்.
பிரமிளா கொண்டுவந்து கொடுத்த ஜூஸை எடுத்துப் பருக ஆரம்பித்த கௌசிகனுக்கு உள்ளூர சந்தோசமும் பெருமையும். இருந்தும் காட்டிக்கொள்ளாமல், “அதென்ன நான்? நீ ஆரம்பிக்கிற தொழில்ல நீதான் முன்னுக்கு நிண்டு செய்யோணும்.” என்றான்.
“நான் செய்வன் அண்ணா. ஆனா, நீங்கதான் ஆரம்பிச்சு வைக்கோணும்.” என்று முறுவலித்தான் மோகனன்.
“அதென்ன அவர் ஆரம்பிக்கிறது? நாங்க வந்து ஆரம்பிச்சா ஆரம்பி படாதோ?” என்று சும்மா சீண்டினாள் பிரமிளா.
“எனக்கு நீங்க வேற அண்ணா வேற இல்லை அண்ணி. நீங்க வந்துதான் அண்ணாவை மாத்தினீங்க. அண்ணா என்னை மாத்தினவர். அதால, நாங்க எந்த உயரத்துக்குப் போனாலும் ஆரம்பப் புள்ளி நீங்கதான் அண்ணி.” மென்முறுவலுடன் பதில் சொன்னான் அவன்.
அவன் எல்லாம் சும்மா பெயருக்கோ, மற்றவர்களைக் குளிர வைக்கவோ, காரியமாவதற்காகவோ பேசுகிறவன் அல்லன் என்று கணவன் மனைவி இருவருக்குமே தெரியும். அதில், இருவருக்குமே மனம் நெகிழ்ந்து போனது.
“சந்தோசமா இருக்கு மோகனன். கட்டாயம் நீ நல்ல இடத்துக்கு வருவாய். நானும் நாலுபேரிட்ட என்ர மச்சான் எண்டு பெருமையா உன்னைப் பற்றிச் சொல்லுவன் பார்.” என்று மனத்திலிருந்து சொன்னாள் பிரமிளா.
“நன்றி அண்ணி! நீங்க சொல்லுற மாதிரியான இடத்திலதான் நானும் இருப்பன்.” என்றான் நம்பிக்கையோடு.
அவர்களின் பேச்சுக்குள் தலையிடாமல் கேட்டுக்கொண்டிருந்த கௌசிகன் குரலைச் செருமிச் சீர் செய்துகொண்டு, “அது என்னடா சிட்டி(City) எண்டு பெயர் வச்சிருக்கிறாய்?” என்று விசாரித்தான்.
“அது City இல்லை அண்ணா Chity.” என்று திருத்தினான் அவன்.
“சரி, அந்தச் சிட்டிக்கும் என்ன பொருள்?”
“உங்கட மகன் என்ர ராதாவை அப்பிடித்தான் கூப்பிடுறவன்.”
கணவன் மனைவி இருவருமே இந்தப் பதிலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவும், ‘என்ர ராதா’வாமே.
“டேய்! அவள் உன்ன வேண்டவே வேண்டாமாம். ரஜீவன் அவளுக்கு மாப்பிள்ளை பாக்கச் சொல்லி என்னட்டக் கேட்டவன். நானும் ஓம் எண்டு சொல்லியிருக்கிறன். பிடிக்காதவளை வற்புறுத்தாத மோகனன். நானும் உன்ன விடமாட்டன்.” என்றான் கௌசிகன் அழுத்தமான குரலில்.
“அண்ணியும் அப்பிடித்தான் உங்களச் சொன்னவா. நீங்க விட்டீங்களா?” இலகு குரலில் திருப்பிக் கேட்டான் அவன்.
இதையும் கணவன் மனைவி இருவருமே எதிர்பார்க்கவில்லை. திகைத்துவிட்டு, “டேய்… என்னடா நீ?” என்றான் கௌசிகன்.
சிரிப்புடன் தமையனைப் பார்த்தான் மோகனன். “இப்ப அவவுக்கு என்னைப் பிடிக்கேல்லதான் அண்ணா. ஆனா, காலத்துக்கும் பிடிக்காம போகும் எண்டு இல்லதானே? பிடிக்கும் அண்ணா. எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்களை மாதிரிக் கட்டின பிறகு பிடிக்க வைக்கமாட்டன். பிடிச்சபிறகுதான் கட்டுவன். அதால நீங்க கவலைப்படாதீங்க.” என்று கௌசிகனையே தேற்றினான் அவன்.


