கணவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு இப்போது பிரமிளா பேசினாள். “அவளுக்கு உன்னைப் பிடிக்கிறதுக்கிடையில நீ அவளை நோகடிச்சிருவாய் மோகனன். அது வேண்டாம். அனுபவிச்சவள் நான் சொல்லுறன், தயவு செய்து அப்பிடி நடக்காத. அதத் தாங்கேலாது. வாழ்க்கை சீராகுறதும், சந்தோசமா வாழுறதும் பிறகு பிறகு நடக்கிறது. அந்த மாற்றம் வாறதுக்கிடையில ஒவ்வொரு பொம்பிளையும் அனுபவிக்கிறது நரகவேதனை மோகனன். அத நீ ராதாக்குச் செய்யக் கூடாது. ரஜீவனும் கடைசி வரைக்கும் ஓம் எண்டு சொல்ல மாட்டான். நீ விலகுறதுதான் எல்லாருக்கும் நல்ல முடிவு.” என்று தன்மையாகவே எடுத்துரைத்தாள்.
திகைப்புடன் அவளைப் பார்த்தான் கௌசிகன். இத்தனை வருடம் கழித்து இப்படி ஒரு பேச்சை நிச்சயமாக அவன் எதிர்பார்க்கவில்லை.
தாடை இறுக அப்படியே அமர்ந்திருந்தான். பிரமிளாவின் பார்வையில் அவனுடைய இறுகிய தோற்றம் விழுந்தாலும் அவளின் கவனம் மோகனனிடம்தான் இருந்தது.
மோகனனும் தன்மையாகவே தன்னை அவளுக்கு விளங்க வைத்தான்.
“இல்லை அண்ணி, நிச்சயமா அப்பிடி ஒரு வேதனைய, துன்பத்தை ராதாக்கு நான் குடுக்க மாட்டன். என்னால குடுக்கேலாது. எனக்கு எப்பவோ அவாவைப் பிடிக்கும். ஆனா, அவவுக்கு என்னைப் பிடிக்காது எண்டு தெரிஞ்சுதான் அமைதியா இருந்தன். ஆனா இப்ப…” என்னவோ சொல்ல வந்தவன் அதைச் சொல்லாமல் நிறுத்திவிட்டு,
“கொஞ்சக் காலம் போக எல்லாம் மாறும் அண்ணி. எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுக்காக எந்தப் பிழையான வழியிலயும் நான் போகமாட்டன். ஒருக்கா செய்த பிழையே என்ர காலம் முழுக்கத் தொடருது அண்ணி. இதுல இன்னும் ஒருக்காவா?” என்று கேட்டுவிட்டு மெல்லிய சிரிப்பைச் சிந்தினான் அவன்.
அந்தச் சிரிப்பின் பின்னே மிகுந்த வேதனை மறைந்து கிடப்பதைக் கண்டுகொண்ட பிரமிளாவுக்கும் மனம் கனத்துப் போனது.
“ஆனா அண்ணி, ரஜீவனின்ர விருப்பு வெறுப்பை நான் மதிக்கமாட்டன். எனக்கு ராதான்ர முடிவு மட்டும்தான் தேவை.” என்றான் இப்போது உறுதியான குரலில்.
“அதுதான் அவள் போதுமான அளவுக்கு உன்னைப் பிடிக்கேல்ல பிடிக்கேல்ல எண்டு திருப்பி திருப்பிச் சொல்லிட்டாளேடா. இன்னும் என்ன முடிவு சொல்லோணும் எண்டு எதிர்பார்க்கிறாய்.” என்று கேட்டான் கௌசிகன்.
“அதவிட, எல்லாருக்கும் முன்னால வச்சு இப்பிடித்தான் பிடிச்சிருக்கு எண்டு சொல்லுவியாடா. அந்தப் பிள்ளையைப் பற்றி யோசிக்க மாட்டியா? முகமெல்லாம் சிவந்து என்னவோ மாதிரி ஆகிட்டாள். எனக்கே ஒண்டும் கதைக்கேலாம போச்சு.” என்றும் அதட்டினான்.
‘அதப் பாக்க பயந்துதானே நிக்காம ஓடி வந்தனான்.’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டவன் தமையனை நேர்கொண்டு பார்த்தான்.
“என்னடா?”
“தனியா வச்சு அவாட்ட என்ர விருப்பத்தைச் சொல்லியிருந்தா இதவிட மோசமாத்தான் அண்ணா அது முடிஞ்சிருக்கும். ஒரு பெட்டையத் தனியா சந்திச்சுக் கதைக்கிற அளவுக்கு என்ர கடந்தகாலம் ஒண்டும் சிறப்பா இல்லையே.” என்றான், என்ன என்று பிரித்தறிய முடியாத ஒரு குரலில்.
வாயடைத்துப் போயிற்று கௌசிகனுக்கு. தன் தம்பியின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினான்.
“அதுதான் அண்ணா நீங்க எல்லாரும் இருக்கேக்க சொன்னனான். எனக்கு வேற வழி இல்ல.” என்றான் வருத்தத்தோடு.
“என்னைப் பற்றி ராதாக்கு எல்லாம் தெரியும். இதுல நான் அவாவைத் தனியா சந்திச்சா எதையெல்லாம் யோசிச்சுப் பயப்பிடுவா சொல்லுங்கோ? என்னை அவவுக்குப் பிடிக்கிறதுக்கு முதல் நான் பிழையான நோக்கத்தோட அவவை நெருங்க நினைக்கேல்ல எண்டு அவவுக்கு விளங்கோணும். அதுக்கு இதுதான் சரியான வழி.”
கௌசிகனுக்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை. இந்தளவுக்கெல்லாம் ஆழமாக இறங்கி யோசித்திருப்பான் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.
முன்னர் போன்று அந்த நொடியின் வேகத்தில் உளறிவிட்டுப் போகிறான், கூப்பிட்டுப் பேசினால் விட்டுவிடுவான் என்றுதானே எண்ணிக்கொண்டிருந்தான். அப்படியல்ல, அவனுடைய விருப்பம் ஆழமானது என்று இப்போதுதான் புரிந்தது.
“இப்ப நான் என்னடா செய்ய? அவளுக்கு மாப்பிள்ளை பாக்கவா வேண்டாமா?” என்று அவனிடமே கேட்டான்.
“தாராளமா பாருங்க.” என்றான் சிரிப்புடன்.
அவனை முறைத்தான் கௌசிகன். “இப்ப நீ என்னட்ட அடிதான் வாங்கப் போறாய். சும்மா விளையாடாம என்ன எண்டு சொல்லு. இல்ல, ஏதும் பிளான் போட்டு வச்சிருக்கிறியா?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
“சத்தியமா இல்லை அண்ணா. நீங்க பயப்பிடுற எதுவும் நடக்காது. நீங்க என்ன செய்ய நினைக்கிறீங்களோ அதைச் செய்ங்கோ. என்னைப் பற்றி யோசிக்காதீங்க.” என்று இவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே ஒரு ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
அடுத்த நொடியே, “சிட்டி…!” என்று கூவிக்கொண்டு அவளிடம் ஓடினான் மதுரன்.
பார்க்காமலேயே வருவது யார் என்று மோகனனுக்குத் தெரிந்து போயிற்று. அந்த நேரத்தில் அவள் அங்கு வருவாள் என்று மோகனன் மட்டுமல்ல மற்ற இருவரும் எதிர்பார்க்கவில்லை.
மதுரனைக் கொஞ்சிக்கொண்டு உள்ளே வந்த ராதாவுக்கு அவனைக் கண்டு திகைப்பாயிற்று. கௌசிகனின் வீட்டுக்கு இன்னுமே முறையான கார் நிறுத்துமிடம் அமைக்கப்படாததால், வீட்டின் ஒரு பக்கமாக இருந்த மரத்தின் நிழலில் காரை நிறுத்தியிருந்தான் மோகனன். அதில் அவனுடைய காரைக் கவனிக்காமல் விட்டிருந்தாள். கவனித்திருக்க வந்த வழியிலேயே திரும்பி ஓடியிருப்பாள்.
ஆனாலும், கௌசிகனும் அங்கு இருந்ததில் தைரியமாகவே உள்ளே நுழைந்தாள்.
“வா ராதா!” என்று வரவேற்று, அவளுக்கும் அருந்துவதற்குக் கொண்டுவந்து கொடுத்தாள் பிரமிளா.
கொஞ்ச நேரம் சின்னவர்களோடு கதையும் விளையாட்டுமாக நகர்ந்தது. பிரமிளா கல்லூரியைப் பற்றிப் பொதுவாகப் பேசினாள். கௌசிகனும் ஒன்றிரண்டு வார்த்தை அவளோடு கதைத்தான். மோகனன் இயல்பாக அவளைக் கவனித்தானே தவிர அவளிடம் பேச முயற்சிக்கவில்லை.
அவன் பார்வை அடிக்கடி தன் மீது படிந்து மீள்கிறது என்பதை உணர்ந்தவளுக்கு இயல்பாக அங்கிருக்க முடியவில்லை. அன்று நடந்தவற்றைப் பற்றியும், ரஜீவன் யாழினிக்குள் இயல்பான பேச்சு வார்த்தைகள் இல்லை என்பது பற்றியும் பேசுவதற்காக வந்தவளால் எதையும் பேச முடியாத நிலை.
அதோடு, அவன் இருக்கிற இடத்தில் இருக்கவும் பிடிக்கவில்லை.
அதில், “சும்மாதான் வந்தனான் அக்கா. வெளிக்கிடப்போறன், பேப்பர் வேலை கொஞ்சம் இருக்கு.” என்றபடி எழுந்துகொள்ள, “அண்ணி, நான் அவாவோட கொஞ்சம் தனியா கதைக்கோணும். வெளில இல்ல இஞ்சதான்.” என்றான் மோகனன் இடையிட்டு.


