மோகனன் அப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்காததில் ராதா ஒருகணம் திகைத்தது மெய்தான். அதேநேரம் வேகமாகச் சமாளித்தும் கொண்டாள். இப்போது, அவளுக்கும் சுற்றிவளைத்து மூக்கைத் தொடுவதை விடவும் நேராகத் தொட்டுவிடலாமே என்றுதான் தோன்றியது.
என்ன சொல்ல என்பதுபோல் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த பிரமிளாவிடம், “கதைக்கிறன் அக்கா. பிரச்சினை இல்ல.” என்றாள்.
மோகனனின் உதட்டோரம் மெச்சும் முறுவல் ஒன்று அரும்பிற்று. நிச்சயம் இதை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள். இருந்தும் சமாளித்துக்கொண்டாளே. கெட்டிக்காரிதான்!
கூட்டிக்கொண்டு போகட்டுமா என்பதுபோல் தமையனைப் பார்த்தான்.
“நான் இங்கதான் இருப்பன். போய்க் கதைச்சிட்டு வா!” என்றான் அவன்.
‘மறைமுகமாக எச்சரிக்கிறாராம்’ குறுஞ்சிரிப்புடன் கௌசிகனை நோக்கிக் கண்ணைச் சிமிட்டிவிட்டு எழுந்து போனான் மோகனன்.
‘இவனை…’ பல்லைக் கடித்த கௌசிகனுக்குக் கோபத்துக்குப் பதில் சிரிப்புத்தான் வந்தது. ராதா சம்மதித்துவிட்டால் எல்லாம் சுமூகமாக முடியுமே. முடிய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் பேசிவிட்டு வருவதற்காக அங்கேயே காத்திருந்தான்.
அது ஒரு விருந்தினர் அறை. அதோடு சேர்த்து நீள்சதுரத்தில் அமைக்கப்பட்டிருந்த டெரசை, பால்கனி போன்று உருவாக்கியிருந்தான் கௌசிகன்.
மழைக் காலத்தில் கூட அங்கு நிற்கக்கூடிய வகையில் மேலே பிளாட் இழுத்து, தரைக்குச் சிமெந்து போட்டு, சுற்றவர அரைச்சுவர் எழுப்பி இருந்தான்.
அங்கிருந்தே தோட்டத்துக்குச் செல்வதற்கு ஏதுவாக இடுப்பளவிலான குட்டி கேட்டும் இருந்தது. திறந்துகொண்டும் போகலாம். மோகனனைப் போன்றவர்கள் அந்த அரைச்சுவரை தாண்டிக் குதித்தும் போகலாம்.
அந்த டெரசில் குட்டி வட்ட மேசையும் இரண்டு நாற்காலிகளும் ஒரு மூலையாகப் போடப்பட்டிருந்தன. அந்த நாற்காலிகளில் ஒன்றை அவளுக்குக் காட்டிவிட்டு, அவளைப் பார்த்துப் பேசும் வகையில் அந்த அரைச் சுவரில், கைகளைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றான் மோகனன்.
அவன் காட்டிய இருக்கையில் அமராமல் நின்றபடியே, “சொல்லுங்க, என்ன கதைக்கோணும்?” என்று கேட்டாள் ராதா.
அவன் அங்கு நிற்பான் என்று எப்படி அவள் எதிர்பாக்கவில்லையோ அப்படித்தான் அவள் வருவாள் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. இப்படிப் பேச அழைக்கவும் நினைத்திருக்கவில்லை.
கிடைத்துவிட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அழைத்து வந்துவிட்டவனுக்கு என்ன பேச என்று தெரியவில்லை. அவள் ஒருவிதப் பிடிவாதத்துடன் வெளியே மட்டுமே பார்த்தபடி நின்றாள்.
அவன் பார்வை யோசனையுடன் சற்றே அதிகமாக அவளில் தங்கிவிட, நிமிர்ந்து நின்று அவனை நேராகப் பார்த்து, “என்னவோ கதைக்கோணும் எண்டு சொன்னீங்க.” என்றாள் மீண்டும்.
அதாவது, பார்ப்பதை நிறுத்திவிட்டுப் பேசு என்கிறாள். அவன் கண்ணோரங்கள் சிரிப்பில் சுருங்கின. பிறகும் சட்டெனப் பேசிவிடவில்லை அவன்.
இருபக்கத் தாடையையும் தடவியபடி சற்றுக்குச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு, “உங்கட முடிவில ஏதாவது மாற்றம் இருக்கா?” என்று வினவினான்.
மறுப்பாகத் தலையை அசைத்தபடி, “இல்ல.” என்றாள் அவள்.
“ஏன்?”
அவள் புருவங்களைச் சுளித்தாள். “ஏன் எண்டால் என்ன சொல்லுறது? என்னால உங்கள அப்பிடி யோசிக்கேலாது.” என்றாள்.
“வேற ஆரையும்…” என்று இழுத்து, அன்று தமையனைக் கொண்டு கேட்ட கேள்வியை இன்று அவனே கேட்டான்.
“அப்பிடி இருந்தா மட்டும்தான் உங்களை வேண்டாம் எண்டு சொல்லோணுமா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
இப்போது அவன் கண்களோடு சேர்ந்து உதடுகளும் அளவான சிரிப்பைச் சிந்தின. அதில், அவன் நெஞ்சில் பரந்து கிடந்த தாடியும் மெல்லிய அசைவைக் காட்டிற்று. கழுத்தில் கிடந்த சில்வர் செயினின் டாலரை எடுத்து உதட்டில் பொருத்தினான்.
இத்தனை நாட்களில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது இல்லை. நல்லமுறையில் அறிமுகமானதும் இல்லை. பிறகும் எப்படி அவள் அவனை ஈர்த்தாள் என்று கேட்டால் அவனிடம் பதில் இல்லை. ஆனால், இன்று தன்னுடைய நிதானமான பேச்சினாலும், அமைதியான குணத்தினாலும் அவனை இன்னுமின்னும் கவர்ந்தாள். இவளை எப்படி அவனால் தவறவிட இயலும்?
“எனக்கு உங்களப் பிடிச்சிருக்கே. நான் என்ன செய்ய?” என்று அவளிடமே கேட்டான் அவன்.
திகைப்புடன் ஒருகணம் விழிகளை அகலவிரித்து அவனைப் பார்த்தவள் அதைவிட வேகமாகப் பார்வையைத் தோட்டத்தின் புறமாக நகர்த்தினாள்.
அவன் மெல்லச் சிரித்துக்கொண்டான்.
“எனக்கு நீங்க இன்னும் பதில் சொல்லேல்ல.” சற்றுப் பொறுத்துப் பார்த்துவிட்டுச் சொன்னான் அவன்.
“அது உங்கட பிரச்சினை.” என்றாள் இப்போதும் அவனைப் பாராது.
அவன் பார்வையும் தோட்டத்தின் புறம் நகர்ந்தது. பிடறிப் பக்கத்தைத் தடவிவிட்டுக்கொண்டான். சற்று நேரம் இருவருமே அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்.
மீண்டும் அவளிடம் திரும்பி, “எனக்கு நீங்க உண்மையான காரணத்தைச் சொல்லலாமே. சொன்னா, விளக்கம் தர ஈஸியா இருக்கும்.” என்று தன்மையாகக் கேட்டான் அவன்.
ராதாவின் புருவங்கள் நொடிநேரம் யோசனையில் சுருங்கின. பின், பேசிவிடுவதுதான் சரி என்பதுபோல் நெடிய மூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு அவன் புறமாகத் திரும்பினாள்.
“உங்களைப் பற்றின நல்லெண்ணம் எனக்குக் கொஞ்சம் கூட இல்ல. இருந்தாலும், தேவை இல்லாம உங்களை நோகடிக்க வேண்டாம், மறுப்பை மட்டும் சொன்னா காணும், விளங்கிக்கொள்ளுவீங்க எண்டும் நினைச்சன். ஆனா இப்ப…” என்று ஒருகணம் தயங்கிவிட்டு மீண்டும் அவனை நேராகவே பார்த்துப் பேசினாள் ராதா.
“உங்களப் பாக்கிற நேரமெல்லாம் எனக்கு நீங்க தெரியிறேல்ல. மேகசின்ல பிரமி அக்கான்ர கேவலமான போட்டோ ஒண்டை போட்டீங்களே அது, தீபா அக்காக்குச் செய்தீங்களே கேவலமான வேல அது, அண்ணாவ அடி அடி எண்டு அடிச்சு, கிழிஞ்ச புடவ மாதிரி வீசி இருந்தீங்களே அது எண்டு, இதெல்லாம் சேர்ந்த மொத்த உருவமாத்தான் நீங்க எனக்குத் தெரியிறனீங்க. பிறகு எப்பிடி வெறுப்பு வராம இருக்கும்? என்னளவில மருந்துக்கும் மதிக்காத ஒருத்தரை எப்பிடி வாழ்க்கைத் துணையா யோசிப்பன்?” என்று அவனிடமே கேட்டாள் அவள்.
அவன் முகம் கறுத்தது. தாடை இறுகிற்று. வேகமாகப் பார்வையை விலக்கிக்கொண்டான். கழுத்து நரம்புகள் புடைப்பது அவளுக்கே தெரிந்தது. கழுத்தில் கிடந்த செயினை அறுத்துவிடுகிறவன் போன்று பிடித்து இழுத்தான். அச்சத்துடன் அவள் நோக்க, ஒருமுறை விழிகளை இறுக்கி மூடித் திறந்தவன் வேறு பேசாமல், “வாங்க போவம்!” என்றுவிட்டு வேகமாக நடந்தான்.
நொடியில் அவனிடம் உண்டான மாற்றத்தில் ராதா சற்றுப் பயந்துதான் போனாள். ஆனால், வேறு வழியில்லை. உடைத்துப் பேசினால்தான் விளங்கிக்கொள்வேன் என்பவனை என்ன செய்வது?
இனியாவது தொல்லை தராமல் இருந்தால் போதும் என்று எண்ணிக்கொண்டு அவன் பின்னால் இரண்டு அடிதான் எடுத்து வைத்திருப்பாள். போனதை விடவும் வேகமாக வந்து அவள் முன்னே நின்றான் அவன்.


