விட்டால் இடித்துவிடுவானோ என்று பயந்து பின்னுக்கு இரண்டடி நகர்ந்து நின்றாள் ராதா.
“அதெல்லாம் நடந்து முடிஞ்ச விசயங்கள். அதுக்குத் தண்டனையாத்தான் எட்டு வருசக் கொடுமைய அனுபவிச்சு இருக்கிறன். இன்னுமே ஆளாளுக்குக் குத்திக் காட்டிக்கொண்டேதான் இருக்கிறீங்க. காணாதா?” என்று சீறினான்.
“காணாது!” தன் பயத்தைத் தூக்கி எறிந்துவிட்டுத் திடமாகவே சொன்னாள் அவள். அவனுடைய கோபம் அவளுக்குச் சினமூட்ட ஆரம்பித்து இருந்தது.
ஒரு நொடி அதிர்ந்து பார்த்தாலும் அவனும் விடவில்லை. “அதாலதான் சொல்லுறன், என்னைக் கட்டுங்க. கட்டி நான் செய்த பிழைக்குக் காலம் முழுக்கத் தண்டனை தாங்க!” என்றான் உடனேயே.
அவளின் சினம் எல்லை மீறியது. அவனைத் தீ விழி விழித்தாள். “என்ன? கெட்டித்தனமா கதைக்கிறதா நினைப்போ? கன்றாவியா இருக்கு.” என்றாள் முகத்தைச் சுளித்துக்கொண்டு.
அவனும் இப்போது தன்னைச் சற்றே அடக்கினான். “ஆனா ராதா, நீங்க எனக்கு வேணும். உங்கள நான் இன்னொருத்தனிட்ட குடுக்க மாட்டன். அதேநேரம், என்னைக் காயப்படுத்தோணும் எண்டு சொன்னாலும் நீங்க சொன்னதில இருக்கிற உண்மை எனக்கும் விளங்குது. சோ, நடந்ததை எல்லாம் மறந்து என்னை நினைக்கிறதுக்குக் கொஞ்சக் காலம் எடுங்க. நான் காத்திருக்கிறன். அதெல்லாம் பிரச்சினை இல்ல. ஆனா நீங்க எனக்குத்தான்.”
அவளின் உதட்டோரம் வளைந்தது. “நீங்க மாறவே இல்லை எண்டுறதுக்கு இப்ப கதைச்சீங்களே, இதே போதும். அதால, நீதான் வேணும், உன்ன விடமாட்டன் எண்டு சின்னபிள்ளைத்தனமா கதைக்காம பாக்கிற வேலையப் பாருங்க, போங்க!” என்றாள் அலட்சியமாக.
பின்னே, எவ்வளவுக்குத்தான் அவளும் பொறுமையாகக் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் சொல்வது? அவள் அவனுக்குத்தானாமே. அவள் என்ன பொம்மையா?
“அண்டைக்குத் தீபாக்கா. இண்டைக்கு நான். உங்கட கண்ணுக்கு முன்னால எந்த இளம் பெட்டையும் வந்து நிண்டிட(நின்றுவிட) கூடாது, என்ன? உடனே காதல், கத்தரிக்காய், எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு எண்டு சொல்லிக்கொண்டு பின்னால வந்திடுவீங்க.” என்றாள் எரிச்சலோடு.
“ஓ…! உங்களையும் அந்தத் தீபாவையும் தவிர இன்னும் எத்தின பேருக்கு முன்னால இப்பிடி நான் போய் நிண்டு இருக்கிறன்? கணக்கு சொல்லுங்களன் பாப்பம்?” நக்கலோடு கேட்டான் அவன்.
அவள் அவனை முறைத்தாள். “உங்களோட விதண்டாதவாதமோ விவாதமோ செய்ய எனக்கு விருப்பம் இல்ல. எனக்கு உங்களைப் பிடிக்கேல்ல. நீங்க எனக்கு வேண்டாம். இத நான் தன்மையா, மறைமுகமா, நேரடியா எண்டு எல்லா வழிலயும் சொல்லிட்டேன். பிளீஸ், என்னை விட்டுடுங்க.” என்றாள் கடைசி முறையாக என்று எண்ணிக்கொண்டு.
அவனும் இப்போது நிதானமாகப் பேசினான். “விடத்தான் இவ்வளவு நாளும் முயற்சி செய்தனான் ராதா. முடிய இல்லையே. உங்களுக்குத் தெரியுமா, இஞ்ச இருக்கவே கூடாது எண்டு நினைச்சு வந்தவன் நான். ஆனா, என்னைத் தாண்டிப் போய்ப்பாரடா எண்டு நீங்கதான் சொல்லுறீங்க. அது விளங்கேல்லையா உங்களுக்கு? பிறகும் என்னை என்ன செய்யச் சொல்லுறீங்க?”
‘நல்லா பேசுறான் வசனம்…’ அலட்சியமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு பதிலே சொல்லாமல் நின்றாள் ராதா. மறுத்துப் பேசுவது ஒரு வகை என்றால் பேசாமல் நின்றே மறுப்பைக் காட்டுவதும் இன்னொரு வகைதானே.
“நான் உங்களுக்கு வேண்டாம் எண்டா நீங்க என்ர கண்ணில பட்டிருக்கக் கூடாது. பட்டுட்டீங்க. இனி…” என்றவன் அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான்.
இவன் என்ன மறை கழன்றவனா என்று பார்த்தாள் ராதா. எவ்வளவுதான் அவளும் சொல்லுவது? அவனுக்கும் அவள் நினைத்தது விளங்கியிருக்க வேண்டும். “இண்டைக்குத்தானே முதல் முறையா நாங்க கதைச்சிருக்கிறம். உடனேயே நீங்க ஓம் எண்டு சொல்லுறதில எனக்கும் விருப்பம் இல்லைதான். அதால வாங்க போவம்.” என்றுவிட்டு நடந்தான் அவன்.
ராதாவுக்கு அவனை எப்படி எடுப்பது என்றே தெரியாத குழம்பிய நிலை. அந்தளவில் அவளை ஒரு பாடு படுத்தியிருந்தான்.
கௌசிகனின் அருகில் சென்று அமர்ந்துகொண்டான் மோகனன். எதிர்பார்ப்புடன் கணவனும் மனைவியும் அவனைப் பார்த்தனர். அடுத்து ராதா வரவும் இருவரின் பார்வையும் வேகமாக அவளை நோக்கிற்று.
ராதா முற்றிலுமாகக் களைத்துச் சோர்ந்து தெரிந்தாள்.
நேரடியாகக் கதைத்துவிட்டால் ஒரு முடிவு கிடைத்துவிடும் என்று அனுப்பியது பிழையோ என்று தோன்றிவிட, “என்ன ராதா? ஏதும் பிரச்சினையா?” என்றாள் பிரமிளா அவளை நெருங்கியபடி.
“ஒண்டுமில்லை அக்கா. என்னால முடிஞ்சவரைக்கும் தெளிவா எனக்கு விருப்பம் இல்லை எண்டு சொல்லீட்டன். இனி என்ன சொல்லி விளங்கப்படுத்துறது எண்டு எனக்கு உண்மையா தெரியேல்ல. பிளீஸ், அவரை என்ன டிஸ்டப் செய்ய வேண்டாம் எண்டு சொல்லிவிடுங்கோ.” என்றவளின் ஓய்ந்த தோற்றம், தவறு செய்துவிட்டோமோ என்று கௌசிகனையும் பிரமிளாவையும் நினைக்க வைத்தது.
“வாறன் அண்ணா.” என்று கௌசிகனிடமும் சொல்லிக்கொண்டு மோகனனைத் திரும்பியும் பாராமல் அங்கிருந்து புறப்பட்டாள் ராதா.
“போதும் மோகனன். இனியும் அந்தப் பிள்ளைக்கு அரியண்டம்(தொல்லை) குடுக்காத. இதோட எல்லாத்தையும் நிப்பாட்டு!” என்றான் கௌசிகன் முடிவான குரலில்.
அதற்கு ஒன்றும் சொல்லாமல் விழிகளை மூடிக்கொண்டு சோபாவில் தலையைச் சரித்தான் மோகனன். அவனுக்குள்ளிருக்கும் ஒற்றை இதயம் படுகிற பாட்டை யாரிடம் என்று சொல்லுவான். நெருப்பில் குளித்து எழுந்தாலும் கூட அவன் செய்த பாவங்கள் அவனைத் தொடரும் போலவே.
“டேய், இப்பிடி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? நான் சொன்னது உனக்கு விளங்கினதா இல்லையா?” என்று அதட்டினான் கௌசிகன்.
ஒரு பெரு மூச்சுடன் நிமிர்ந்து, “நினைவு இருக்கா அண்ணா, ஒருத்தியக் கட்டி வாழு, அப்பத்தான் வாழ்க்கை எவ்வளவு அழகு எண்டு விளங்கும் எண்டு சொன்னீங்க. அந்த அழகான வாழ்க்கையை மனதுக்குப் பிடிச்சவளோடதானே அண்ணா வாழ ஏலும். அதுக்குத்தான் முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறன். ஆனா எல்லை தாண்டமாட்டன்.” என்றான் அவனும் சோர்ந்த குரலில்.
“நான் ஏதும் கதைச்சுப் பாக்கவா மோகனன்?” இருவரின் நிலையையும் பார்க்க முடியாமல் கேட்டாள் பிரமிளா.
“இல்ல அண்ணி. நீங்க கதைக்க வேண்டாம். உங்கட சொல்ல அவா மீறினாலும் எனக்குக் கவலையா இருக்கும். மீற முடியாம என்னைக் கட்டுறதிலயும் எனக்கு விருப்பம் இல்ல. காலமும் அவாவும் எங்கயும் போகேல்ல. என்ர கைக்கத்தான் இருக்கு. நான் பாக்கிறன் அண்ணி!” என்றுவிட்டுப் புறப்பட்டான்.
“சரி சரி. அதப் பிறகு பாப்பம். இப்ப சாப்பிட்டு போ!” என்று அவசரமாய் தடுத்தாள் பிரமிளா.
“இல்ல அண்ணி. வயிறும் மனமும் நிறைஞ்சு இருக்கு. அதுல பசி இல்ல.” என்றவன் அதற்குமேல் அங்கு நிற்கவில்லை.


