இப்போது பயம் போயிருந்தது. அதற்குப் பதிலாக வெட்கப்பட ஆரம்பித்திருந்தான் மதுரன். மோகனனுக்கு முகம் கொள்ளாச் சிரிப்பு. அதோடு, சின்னவனைக் கொடுத்த நொடியே அங்கிருந்து ஓடியவளைக் கண்டும் சிரிப்புப் பொங்கியது.
‘சிட்டியையும் மடக்க முடியேல்ல. சிட்டிய காட்டித் தந்த இந்தக் குட்டியையும் மடக்க முடியேல்ல. முதல் குட்டி பிறகு சிட்டி’ என்று தன்னுடைய டாஸ்க்கை நிர்ணயித்தவன் நேராகப் போய்ப் பிரதீபனின் முன்னே நின்றான்.
“இந்தப் பெரிய மனுசிய கொஞ்ச நேரத்துக்கு என்னட்டத் தாங்க.” என்று, அவனுடைய மகளை வாங்கிக்கொண்டு வந்து மீண்டும் அமர்ந்தான்.
இப்போது தவழ ஆரம்பித்திருந்த அந்தக் குழந்தையும் இவனைக் கண்டு கைகளை அடித்துக் குதூகலித்தபடி, பொக்கை வாய் திறந்து சிரித்தாள்.
அதுவரை நேரமும் தன்னில் கவனமாக இருந்த சித்தப்பன் இன்னொருவரில் கவனம் செலுத்தவும், மதுரனின் முகம் சுருங்கிப் போயிற்று.
தகப்பனின் கழுத்துக்குள் முகத்தை மறைத்துக்கொண்டு இவனையே கள்ளக் கண்ணால் கவனித்தான்.
அண்ணனையும் அண்ணன் மகனையும் சீண்ட வேண்டும் போலிருந்தது மோகனனுக்கு. “செல்லம்மா என்ன செய்றீங்க? சிரிக்கிறீங்களோ? நீங்க எங்கட செல்லமோ? உங்களுக்கு கார் வாங்கித் தரட்டோ? ஓடுற பைக் வாங்கித் தரட்டோ? ஸ்பொஞ்ச் பொப்(Sponge Bob) வேணுமோ?” என்று மதுரனுக்கு விருப்பமானவற்றைக் கேட்டுக்கேட்டு, அவளுக்கு வயிற்றில் குட்டிக் குட்டியாய்க் கிச்சுகிச்சு மூட்டினான். அவளும், ‘கிக்கிக்கீ’ என்று அடக்கமாட்டாமல் சிரித்தாள்.
கூடவே பயந்துவிடாதபடிக்கு அவளைத் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாட்டுக் காட்டினான்.
மதுரனுக்குப் பொறுக்கவே முடியவில்லை. “அப்பா… தூங்குங்கோ…” என்றான் சிணுங்களாக.
கௌசிகனும் மகனைத் தூக்கிப்போட்டுப் பிடித்தான். என்ன, அதைக் கண்டு சிரிப்பார் யாரும் இல்லாமல் போக, சின்னவளின் சிரிப்பும் அவளைத் தூக்கி விளையாடியவனின் அளவுக்கதிகமான செல்லம் கொஞ்சலுமே மதுரனை இழுத்தன.
அவன் இன்னும் சிணுங்க, “என்னடா வேணும்? அதுதான் தூக்கிப்போட்டுப் பிடிக்கிறன்தானே?” என்று மகனையும் அதட்டினான் கௌசிகன்.
தகப்பனும் மகனும் படுகிற பாட்டைக் கண்டு, “எப்பவுமே பக்கத்து வீட்டு மல்லிகைக்குத்தான் அண்ணா வாசம் கூட.” என்றான் மோகனன் உதட்டுக்குள் அடக்கிய சிரிப்புடன்.
கௌசிகனுக்கு மோகனனின் சேட்டை புரிந்து போயிற்று. “டேய்! மரியாதையா என்ர மகனையும் தூக்கி விளையாடு!” என்று அதட்டினான்
“அஹான்! என்னவோ நான் மாட்டன் எண்டு சொன்ன மாதிரி என்னை அதட்டுறீங்க. உங்கட மகன என்னோட சேரச் சொல்லுங்க.”
“நீ பூச்சாண்டி கோலத்தில இருந்தா அவன் வருவானாடா? இந்தச் சாத்தான் தலை முடியையும் தாடியையும் வெட்டி எறிஞ்சுபோட்டு வா. அவன் வருவான்.”
சரியாக அந்த நேரத்தில் மதுரன் அருந்துவதற்குப் பாலோடு வந்தாள் ராதா. கௌசிகனின் பேச்சு அவள் காதிலும் விழுந்ததில் தன்னை அறியாமலேயே அவனைப் பார்த்தாள்.
கௌசிகன் சொன்னதற்கும் அவன் தோற்றத்துக்கும் இருந்த ஒற்றுமையில் அவளை அறியாமலேயே அவளிடம் சிறு சிரிப்பு முளைத்திருந்தது.
மோகனன் இதை எதிர்பார்க்கவே இல்லை. அவன் விழிகள் விரிந்துபோயிற்று. ‘கேவலமா பாத்தாலே தலை சுத்தும் எனக்கு. இதுல சிரிப்போட பாத்தா?’ மனதுக்குள் சில்லென்ற உணர்வு தாக்கிற்று.
பாலைக் கொடுத்துவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடிவந்த ராதாவுக்குச் சிரிப்பு அடங்குவேனா என்றிருந்தது. அந்தளவில், தலைமுடியின் பாதியைத் தூக்கிக் கொண்டையாக்கி மீதியை விரித்து விட்டிருந்தான் மோகனன்.
முன் பக்கம் அவனாக விட்டானா இல்லை அதுவாக வந்து விழுந்து கிடக்கிறதா என்று தெரியாமலேயே இரண்டு இழை மயிர்கள் சுருண்டு வழிந்தன. குளித்துவிட்டு வந்தவனுக்குத் தாடியை காயவைக்க நேரம் இல்லாமல் போயிற்று போலும். பப்பரப்பா என்று நெஞ்சில் பரப்பி விட்டிருந்தான்.
இதில் அவன் சிரிக்கிறபோதும் கதைக்கிறபோதும் அசைகின்ற அந்தத் தாடியின் அழகை என்னவென்று வர்ணிக்க? ராதாவுக்குச் சத்தமாகச் சிரித்துவிடுவோமோ என்று பயமாயிற்று. அதன்பிறகு வீட்டுக்கு வெளியே அவள் வரவே இல்லை.
ஒரு வழியாக இரவுணவு முடிந்தது. வந்தவர்களும் புறப்பட்டனர். பக்கத்து வீட்டினரும் இவர்களும் என்கிற அளவில் சுருங்கி வெளி முற்றத்தில் நிலவு வெளிச்சத்தில் அமர்ந்திருந்தனர்.
இவர்கள் எல்லோரும் வேறு பேசிக்கொண்டு இருக்க, சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ராதாவும் அவளின் நண்பியும் நிறைய நேரமாக அவர்களுக்குள்ளேயே என்னவோ பிடுங்குப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.
அதைக் கவனித்துவிட்டு, “என்னம்மா? ரெண்டு பேரும் கன நேரமா(நிறைய நேரமா) குசுகுசுக்கிறீங்க. என்ன எண்டு சொன்னா நாங்களும் கேப்பம்தானே.” என்றார் செல்வராணி.
“பேசாம இரு மஞ்சு!” என்று அவளை அதட்டிவிட்டு, “அது ஒண்டுமில்லை மாமி. சும்மா…” என்று சமாளிக்கப் பார்த்தாள் ராதா.
அவள் சொன்னதைக் கேட்காமல், “இல்லை ஆன்ட்டி, அடுத்த சனிக்கிழமை எங்கட பேட்ச் பெட்டைக்கு(பெண்ணுக்கு) வெட்டிங். கண்டில நடக்குது. அவள் இவளுக்கு கார்ட் அனுப்பி வாடி வாடி எண்டு ஆயிரம் தரம் கூப்பிட்டுட்டாள். நானும் போறன், ரெண்டு பேரும் ட்ரெயின்ல போயிட்டு வருவம் எண்டு சொன்னா கேக்கிறாளே இல்ல. இப்பிடித்தான் நாலு மாதத்துக்கு முதல் நடந்த ரீயூனியனுக்கும் வரேல்ல. எல்லாருக்கும் இவளில நல்ல கோபம். இதுக்காவது வரலாம் தானே.” என்று, இத்தனை நாட்களாக அவளைக் கேட்டு கேட்டுச் சலித்துப்போயிருந்த மஞ்சு, அனைத்தையும் அப்படியே கொட்டினாள்.
“போயிட்டு வாறதுதானேம்மா. ஏன் மாட்டன் எண்டு சொல்லுறாய்? கன காலத்துக்கு பிறகு எல்லாரையும் பாத்தா சந்தோசமா இருக்கும்தானே.” என்றார் செல்வராணி.
“நானும் அதைத்தான் சொன்னனான். அந்தப் பிள்ளை எனக்கும் எடுத்து, ‘அனுப்பிவிடுங்கோ ஆன்ட்டி. ஒரு பயமும் இல்ல. ஸ்டேஷனுக்கு ஆள் அனுப்பிக் கூட்டிக்கொண்டு வந்திட்டு திரும்ப அனுப்பிவைக்கிறது என்ர பொறுப்பு’ எண்டு சொல்லுறா. இவள்தான் கேக்கிறாள் இல்ல.” என்றார் ராதாவின் அன்னையும்.
“எக்ஸாம்ஸ் வருது. அதுதான்…” எல்லோருக்கும் முன்னும் இந்தப் பேச்சு வரவும் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள் ராதா.
“போயிட்டு வாவன். எக்ஸாம்ஸ் வந்தா என்ன? அதுக்கு ஏற்ற மாதிரி பிளான் பண்ணி வேலையப் பாக்கிறதுதானே?” அன்று அவளிடம் கோபப்பட்டுவிட்டு வந்த ரஜீவனும் சமாதான முயற்சியாகச் சொன்னான்.
அப்போதும் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள் ராதா.
அதுவரை நேரமும் நிலவொளியில் அவளிலேயே கவனமாக இருந்த மோகனன், “சனிக்கிழமை நான் கொழும்புக்குப் போகோணும். வெள்ளி பின்னேரம்(சாயங்காலம்) இஞ்ச இருந்து வெளிக்கிட்டுச் சனி அங்க போவன். பிறகு ஞாயிறு இரவு அங்க இருந்து வெளிக்கிடுவன். உங்கள் ரெண்டு பேருக்கும் ஓகே எண்டால் நானே கூட்டிக்கொண்டு போயிட்டுக் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றான்.
ரஜீவனுக்கும் ராதாவுக்கும் திக் என்றது.
“கண்டி போய்ப் பிறகு கொழும்புக்கு எண்டு உங்களுக்கு ஏன் வீண் அலைச்சல். அவே ட்ரெயின்லையே போய் வரட்டும்.” அவசரமாகச் சொன்னான் ரஜீவன்.
“நான் போகேல்ல எண்டு சொல்லுறன். நீங்க என்னத்துக்கு வீணா பயணத்தைப் பற்றிக் கதைக்கிறீங்க?” வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு சொன்னாள் ராதா.
“இந்தளவில போகவே வேண்டாம் எண்டு நிக்கிற அளவுக்கு என்ன இருக்கு ராதா?” என்றான் கௌசிகன். “உனக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும். பழைய ஃபிரெண்ட்ஸ பாக்கேக்க சந்தோசமாவும் இருக்கும்.”
“அப்பிடிச் சொல்லுங்கோ அண்ணா. இனி இப்பிடி ஏதாவது ஒரு சான்ஸ் அமையுமா எண்டே தெரியாது. வாடி எண்டா ஆகத்தான் லெவல் விட்டுக்கொண்டு இருக்கிறாள்.” இத்தனை பேர் சொல்லியும் அசைகிறாள் இல்லையே என்கிற கடுப்பில் சொன்னாள் மஞ்சு.
“போயிட்டு வா ராதா. மஞ்சுவும் வாறாள்தானே. மோகனனே கூட்டிக்கொண்டு போயிட்டு வரட்டும்.” என்று கடைசியாகப் பிரமிளாவே சொல்லிவிட, ராதாவினால் அதற்குமேல் மறக்கமுடியாமல் போயிற்று.


