இந்த ஒரு மாதத்தில் ஓரளவுக்குத் தேறியிருந்தார் பாலகுமாரன். இப்போதும் அவரைப் பார்த்துவிட்டால் ஏனடா இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்று நினைக்கிற அளவில் வார்த்தைகளை விசமாக வீசிவிடுவார் ஜானகி. அன்றைய நாள் முழுக்க மொத்தமாக ஒடுங்கிப்போவார் பாலகுமாரன்.
இப்போதெல்லாம் வீட்டின் மற்ற உறுப்பினர்களுக்கு ஜானகி மீது வெறுப்புப் படர ஆரம்பித்திருந்தது. அந்தளவில் மோசமான வார்த்தைகள். பாலகுமாரன் அதற்கெல்லாம் தகுதியானவர்தான் என்று நினைக்க முடியவில்லை. அந்த வீட்டில் அவர்கள் இருவரும் மட்டுமே இல்லையே. இளம்பிள்ளை கீர்த்தனா தொடங்கி வாழவந்த பிள்ளை சுவாதி வரை இருக்கிறார்களே.
யார் இருக்கிறார்கள், யார் இல்லை என்றெல்லாம் ஜானகி பார்ப்பதேயில்லை. அதில் சுவாதிக்கு ஜானகி மீது வெறுப்பும் பாலகுமாரன் மீது பரிதாபமும் உண்டாயிற்று.
இனிக் குழந்தை பிறக்கிற வரைக்கும் தொழிற்சாலைக்கு வர வேண்டாம் என்று சுவாதியிடம் சொல்லியிருந்தாள் இளவஞ்சி. ஜானகி அந்த வீட்டில் இருப்பதில் அவசியமற்று அங்குப் போவதைத் தவிர்த்துவிடுவாள் சுவாதி. அதுவும் ஒரு காரணமாகிப்போக சுவாதி அவரோடு ஒட்டிக்கொண்டாள்.
அவள் கண்முன்னே எதுவும் நடக்காததும், இளவஞ்சி அளவுக்கு நடந்தவை அவளைப் பாதிக்காததிலும் அவளுக்கு அது இலகுவாயும் இருந்தது.
அவரோடு எதையாவது பேசுவது, சந்திரமதியிடம் கேட்டு அவருக்கு ஏற்ற பத்திய உணவுகள் செய்வது, அதைத் தானும் சேர்ந்து சுவை பார்ப்பது, அவரோடு சேர்ந்து பழைய படங்கள் பார்ப்பது, ஏன் சில நேரங்களில் மாலைப்பொழுதில் சின்னதாக ஒரு நடை என்று இருவருக்குமே மிக நன்றாக ஒத்துப்போனதில் மிதுனுக்கும் மகிழ்ச்சியே.
அந்த இளம் கணவன் மனைவிக்கும் தடைகளற்ற தனிமை போதும் போதும் என்கிற அளவில் கிடைத்ததில் அவர்களுக்கிடையிலான நெருக்கமும் இன்னுமின்னும் அதிகரித்துப்போயிற்று. பெரும் பிரச்சனைகள் இருபக்க வீட்டிலும் நடந்ததில் இவர்கள் பிரச்சனை ஒன்றுமே இல்லை என்கிற அளவில் ஆகிப்போயிற்று. அதில் இருவரும் தப்பித்துக்கொண்டனர்.
நிலன், சக்திவேலின் பாதிப் பங்கை இவன் பெயருக்கு மாற்றிவிட்டதில் ஆரம்பிக்கப் போகிற தொழிற்சாலையின் பங்கு இனித் தனக்கு வேண்டாம் என்று இளவஞ்சியிடம் சொன்னான் மிதுன்.
அவள் அதற்குச் சம்மதிக்கவில்லை. என்னதான் இருந்தாலும் அவளை நம்பித் தன் மொத்தப் பங்கையும் மாற்றித் தருவதற்கு ஒப்புதல் தந்தவனுக்கு அதைச் செய்வதில் அவளுக்கு மகிழ்ச்சியே!
அதைவிட இதற்கு அவள் ஒப்புதல் கொடுத்தால் அங்கே ஜானகி இன்னொரு தாண்டவம் ஆடுவார் என்று தெரியும். செய்து பார்க்கலாமா என்று உள்ளே ஒரு குரல் உற்சாகமாகக் கேள்வி எழுப்பினாலும் கணவனுக்காக அதைச் செய்யப் போகவில்லை அவள்.
அதே நேரத்தில் ஆண்கள் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான அனுமதி அவளுக்குக் கிடைத்திருந்தது. சிலபல கவனிப்புகளோடும் நீக்குப் போக்குகளோடும் காய் நகர்த்தி, இத்தனை விரைவில் அனுமதி வாங்கியிருந்தாள்.
உடனேயே தொழிற்சாலைக் கட்டடம் எழும்பும் வேலையையும் ஆரம்பித்து, அதைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை மிதுனிடம் கொடுத்தாள்.
திரும்பவும் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் நிலன் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தான். அப்போதும் இளவஞ்சியை வந்து பார்த்துக்கொண்டு போனானே தவிர்த்து அவளோடு வந்து தங்கவும் இல்லை, என்ன முடிவு எடுத்திருக்கிறாய் என்று கேட்கவும் இல்லை.
செக்கப்பிற்கு வந்த அன்று, முற்றிலுமாக அவன் நெகிழ்ந்திருந்த அந்தப் பொழுதிலும், ‘நான் கூப்பிடாமல் வரமாட்டீர்களா’ என்று அவள் கேட்டதற்கு, அவள் முகம் பார்த்துச் சொல்ல முடியாமல், அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து வரமாட்டேன் என்று சொன்ன கணவன், தன் முடிவில் தெளிவாக இருக்கிறான் என்று இளவஞ்சிக்கும் தெள்ள தெளிவாகப் புரிந்துபோயிற்று.
இனி எதுவாகினும் அவள்தான் அவர்களின் உறவுக்கான அடுத்த அடியை எடுத்துவைக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறான்.
அவன் யாழ்ப்பாணம் வந்து ஒரு மாதம் கடந்த நிலையில் சக்திவேலின் வருடாந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
போன வருடத்தின் இலாப நட்டங்களைப் பற்றிப் பேசி, அடுத்த கட்டமாகச் சக்திவேல் தன் வளர்ச்சியை எந்தவகையில் கொண்டுபோக வேண்டும் என்பதைக் கலந்தாலோசிப்பர். கூடவே தொழிலாளரின் குறை நிறை தொடங்கி, முக்கிய பொறுப்பில் இருக்கிறவர்கள் கருத்துக்களைக் கேட்பது என்று அன்றைய நாளையே கிட்டத்தட்ட அதற்கென்று ஒதுக்கிவிடுவார்கள்.
இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய கூட்டம். இளவஞ்சியின் கைக்குப் பாதிப் பங்கு போனதில் சக்திவேலர் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருந்தார். கட்டாயமாக அவளை அழைக்க வேண்டும். அப்படித் தன் முழுமுதல் எதிரியை வைத்துக்கொண்டே சக்திவேலின் அடுத்தடுத்த திட்டங்களைப் பற்றியும் வளர்ச்சியைப் பற்றியும் எப்படிக் கதைப்பார்?
ஆனால் இப்போதோ ஜானகி அதற்கான அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்திருந்தார். அவருக்குச் சக்திவேலின் பாதிப் பங்கு இனித் தன் மகனுக்கானது என்பதை ஊருக்கு அறிவித்துவிடும் வேகம்.
என்றாவது ஒரு நாள் இதைச் சந்தித்தேயாக வேண்டும் என்பதில் பிரபாகரனும் இதை முடித்துவிடலாம் என்று பேசியதில், இளவஞ்சிக்கு முறையாக அழைப்பை அனுப்பியிருந்தான் நிலன்.
ஆனால், தொழில் வேறு வாழ்க்கை வேறு தான் சொன்ன வார்த்தையைக் காக்கிறவனாகத் தனிப்பட்ட முறையில் அதைப் பற்றி அவளிடம் பேசவே இல்லை.
அன்று ஒன்று கூடல் காலை பத்து மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. அவளுக்காக சக்திவேல் அலுவலகத்தின் வாசலிலேயே காத்திருந்தான் நிலன். அவள் கார் வந்து நின்றதும் வந்து அவள் பக்கக் கதவைத் திறந்தான்.
காரிலிருந்து இறங்கியவள் தோற்றம் அவனை அப்படியே கட்டிப்போட்டது.
எப்போதும் போன்று முழங்கை வரையிலான கை கொண்ட, சாம்பலில் வெள்ளை கலந்த கலம்காரி ஷர்ட் டிசைன் பிளவுஸ் அணிந்து, அதற்கு டார்க் மெரூன் பிளேன் கொட்டன் சேலை உடுத்தியிருந்தாள் இளவஞ்சி. முற்றிலுமாக மூடப்பட்டிருந்த அவள் முதுகுப்பக்கம் அவன் அனுமதியைக் கேளாமலேயே அவன் பார்வை சென்று வந்தது.
அதைக் கவனித்தாலும் வினையாற்றும் நிலையில் இல்லை அவள். அன்றைக்குப் பிறகு இன்றுதான் சக்திவேல் குடும்பத்தைச் சந்திக்கப் போகிறாள். அந்த இறுக்கம் அவளிடம்.
அவள் முகத்தைக் கவனித்துவிட்டு, “அங்க அத்தையும் இருக்கிறா. கட்டாயம் எதையாவது தேவையில்லாமக் கதைப்பா. நீயும் தேவை இல்லாம டென்சன் ஆகிறேல்ல சொல்லிப்போட்டன். வயித்தில குழந்தை இருக்கு வஞ்சி.” என்றான் எச்சரிப்பாக.
அதைப் போய் உன் அத்தையிடம் சொல்லு என்பதுபோல் அவனை முறைத்தாள் இளவஞ்சி.
இவர்களுக்குப் பின்னால் சற்றுத் தள்ளி வந்துகொண்டிருந்த விசாகனுக்கும் ஆனந்திக்கு கேட்காத குரலில், “இந்த முறைப்பு, கடுப்பு எல்லாத்தையம் குறை. பிறகு என்ர பிள்ளையும் உன்ன மாதிரித்தான் பிறப்பா.” என்றார் அவன் விளையாட்டுக் குரலில் சொல்ல, நின்று முறைத்தாள் அவள்.
“வஞ்சிம்மா, விளையாட்டுக்குச் சொன்னாலும் உண்மை அதுதான். நானும் விடமாட்டன். ஆனாலும் நீ இன்னும் கவனமா இருக்கோணும். எனக்கு இண்டையான் நிலமைல நீயும் பிள்ளையும்தான் முக்கியம்.” என்றபடி அவளை அழைத்துப்போனான்.
அங்கே அன்று அவளை அவன் மனைவியாக அறிமுகம் செய்த அதே ஒன்றுகூடல் மண்டபம். குறைந்தது முப்பது பேர் இருக்கக் கூடிய வகையில் நீண்ட மேசைகள் மூன்றினைத் தொடராகப் போட்டு, இரு பக்கமும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. எல்லோரையும் பார்ப்பதுபோல் நடுவில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார் சக்திவேல்.
ஒரு பக்கம் பாலகுமாரன், மிதுன், சுவாதி, ஜானகி என்று அமர்ந்திருந்தனர். இன்னொரு பக்கம் பிரபாகரன், கீர்த்தனா சந்திரமதி மூவரும் அமர்ந்திருந்தனர். வேறு யாரையும் காணவில்லை.


