சற்றுத் தூரத்தில் அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றவனின் விறைத்த தேகம் கோபத்தைச் சொல்லிற்று. அதற்கு அவள் என்ன செய்ய? இருந்தும், யாரையும் தேவையற்று நோகடிக்க விரும்பாத ராதாவுக்கு ஏனோ நெஞ்சைப் பிசைந்தது.
என்ன செய்வது? அவனிடம் போய்ப் பேசுவதா? என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டு நின்றாள் அவள்.
சற்று நேரத்தில், “போவமா?” என்று கேட்டுக்கொண்டு அவனே திரும்பி வந்தான்.
அவன் முகத்தை ஆராய்ந்தாள் ராதா. அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அவன் தன்னைப் பார்ப்பதைத் தவிர்க்கிறான் என்று மட்டும் தெரிந்தது.
மலையேறி, நடந்து, சுற்றிப் பார்த்ததில் களைத்தே போனார்கள். அங்கிருந்த குழாய் பைப்பில் தண்ணீர் அடித்து, கை, கால், முகங்களைக் கழுவிக்கொண்டனர்.
மலை இறங்கியபோது நன்றாகவே பசித்தது. சாப்பிடுவதற்கு அருகிலேயே இருந்த ஒரு இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனான் மோகனன்.
அங்கே கீழே கேண்டீன் போல ஒன்று இருக்க, அதன் அருகிலேயே பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில், கயிற்றில் தடிகள் வைத்துக் கட்டப்பட்டிருந்த படிகள், ஏணி போன்று மேலிருந்து தொங்கியது.
அங்கிருந்த பெண்ணிடம் ஏதோ கதைத்துவிட்டு வந்த மோகனன், “ஏறுங்கோ!” என்றான் கயிற்று ஏணியைக் காட்டி.
இதிலா? பெண்கள் இருவரும் பயத்துடன் மரத்தை அண்ணாந்து பார்த்தனர்.
உச்சியில் குடில் போன்று ஒன்று இருந்தது. அதைப் பார்க்கும் ஆர்வம் உண்டாயிற்று. ஆவலும் மெல்லிய பயமும் கூடவே கவனத்துடனும் ஏறினர். அங்கே பார்த்தால், மரப்பாலம் போன்று மரத்தைச் சுற்றி அமைத்து, அதன்மீது மேசை நாற்காலிகள் போட்டிருந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு பால்கனி போன்ற அமைப்பு. “வாவ்! சூப்பர் ஐடியா! இந்த இடத்தையெல்லாம் எப்பிடி அண்ணா கண்டுபிடிச்சீங்க?” இடுப்பளவில் கட்டப்பட்டிருந்த தடுப்பைப் பற்றிக்கொண்டு கீழே பார்த்தபடி கேட்டாள் மஞ்சு.
“கூகிள்லதான். ஆக்களையும் விசாரிச்சனான்.” என்றவன் அவர்கள் இருவருக்கும் இரண்டு நாற்காலிகளை இழுத்துப் போட்டுவிட்டு, ரொட்டிக்கும் சம்பலுக்கும் சொன்னான்.
அதில் அமர்ந்துகொண்டு எதிரில் இருந்தவனிடம், “சாப்பாடு இப்பவே வருமா. இல்ல லேட்டாகுமா? பசிக்குது.” என்று, சமாதான முயற்சியாகப் பேச்சை ஆரம்பித்தாள் ராதா.
“அஞ்சு நிமிசத்தில வரும் எண்டுதான் சொன்னவா அந்த அக்கா.” எந்த உணர்வுகளையும் காட்டாத குரலில் பதிலிறுத்தான் அவன்.
மஞ்சு பக்கத்திலேயே நின்றதில் அதற்குமேல் இருவராலும் வேறெதுவும் பேச முடியவில்லை.
காற்றுப் பலமாக வீசுகையில் மரம் ஆடியது. மரத்தோடு சேர்ந்து இவர்களும் அசைந்தார்கள். அடி நெஞ்சுவரை நடுங்கினாலும் மிக மிக வித்தியாசமான அனுபவமாய் இருந்தது அது.
அதைவிட, கடைக்காரப் பெண்மணி கொண்டுவந்து பரிமாறிய ரொட்டியும், உள்ளி, இஞ்சி சேர்த்து உரலில் இடித்த காரமான தேங்காய்ச் சம்பலும் வெகு சுவையாய் உள்ளே இறங்கிற்று.
உணவு முடிந்ததும் ஏதோ பூவிதழ்களில் தயாரித்த தேநீர் என்று சிரட்டையில் ஊற்றிக் கொண்டுவந்து தந்தார் அவர். கீழே எட்டிப் பார்த்தபோது விறகடுப்பில் பெரிய பானை ஒன்றை வைத்து அவர் அதைத் தயாரிப்பது தெரிந்தது.
அருந்திப் பார்த்தபோது உள் நெஞ்சுவரை தித்தித்தது. இன்னுமொருமுறை கேட்டு வாங்கிப் பருகினர்.
மீண்டும் அவர்கள் கீழே வந்தபோது, அந்தப் பெண்மணியின் மகன் பத்துப் பதினைந்து ஆட்டுக்குட்டிகளை மேய்ச்சலுக்கு அழைத்துக்கொண்டு வந்தான். அத்தனையும் அவ்வளவு அழகு.
“அண்ணா அண்ணா, நான் இந்தக் குட்டியத் தூக்குறன். என்னை ஃபோட்டோ எடுங்க, பிளீஸ்.” என்றபடி ஓடிப்போய் ஒன்றைத் தூக்கிக்கொண்டு நின்றாள் மஞ்சு.
மற்றவைகள் அவளைக் கண்டு சிதறி ஓடின. அந்தத் தம்பி இவளை முறைத்துவிட்டு மீண்டும் அவற்றை ஒன்றாக இணைக்கும் வேலையில் இறங்கினான்.
அதையெல்லாம் தூசாகத் தட்டிவிட்ட மஞ்சு, அவளிடமிருந்து விடுபடப் போராடிய குட்டியோடு ஆயிரம் ஃபோஸ்களை கொடுத்துக்கொண்டிருந்தாள்.
மோகனனும் சிறு சிரிப்புடன் அவள் விரும்பியதுபோலவே அனைத்தையும் கைப்பேசியில் அடக்கிக்கொண்டு இருந்தான்.
“விடடி காணும். அந்த ஆட்டுக்குட்டி அழுது பார்!” ராதாவுக்கே பொறுக்க முடியாத அளவில் அந்தக் குட்டியைக் கதறவிட்டாள் மஞ்சு.
“ஓகே ஓகே! எங்கட செல்லம் இனி நீங்க போகலாம். சரியா?” என்று அதன் உச்சியில் முத்தமிட்டு அவள் இறக்கிவிட, அதையும் கைப்பேசியில் அடக்கினான் மோகனன்.
அப்போதுதான், ஆட்டோடு மல்லுக்கட்டிய மஞ்சுவின் மேல் சட்டை விலகியிருப்பதைக் கவனித்த ராதா பதறிப்போனாள்.
ஓடிப்போய் அவளை மறைத்தபடி நின்றுகொண்டு, “எடுத்தது காணும், விடுங்க!” என்றவள், “எருமை மாதிரி வளந்தும் உனக்கு எல்லாத்துலயும் விளையாட்டு!” என்று மஞ்சுவையும் அதட்டினாள்.
“என்னடி? ஆட்டுக்குட்டியைத் தூக்கினது ஒரு குற்றமா? சும்மா கத்தாத!” என்றவளின் கை இயல்பாய் அணிந்திருந்த டொப்பை சரி செய்தது. அதன் பிறகுதான் விலகினாள் ராதா.
இருந்தும் ஒருவித எரிச்சல் அவளுக்குள் எழுந்துகொண்டு இருந்தது. “நேரமாகுது காருக்கு நட!” என்று எரிந்து விழுந்தாள்.
அவளுக்கு இப்போது அவன் கைப்பேசியைப் பார்க்க வேண்டும். அவன் எடுத்த புகைப்படங்களைப் பார்க்க வேண்டும். என்ன செய்யலாம்?


