வீடு வந்த ராதா மனதாலும் உடலாலும் மிகவுமே களைத்துப் போயிருந்தாள். அன்னையின் விசாரிப்புகளுக்குப் பதில் சொன்னாலும், அவளின் சிந்தனை முழுக்க மோகனனிலேயே நின்றது.
பயணக்களை போகத் தலைக்கு அள்ளி முழுகி, எடுத்துச் சென்ற உடைகளை எல்லாம் அலசிப்போட்டாள்.
உணவையும் முடித்துக்கொண்டு, “கொஞ்ச நேரம் படுத்து எழும்பப் போறன், அம்மா. அலுப்பா இருக்கு.” என்றுவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டாள்.
கிடைத்த தனிமை அவளின் தவறை இன்னும் உறக்கச் சொல்லிற்று! அவள் அப்படி நடந்திருக்கக் கூடாது! அவனைச் சந்தேகப் பட்டிருக்கவே கூடாது! எவ்வளவு கவனமாக அவர்களைக் கவனித்துக்கொண்டான். அவனைப்போய்…
கட்டிலில் விழுந்தவளின் மனம் திரும்பத் திரும்ப இதையேதான் சொல்லிக்கொண்டு இருந்தது.
மனத்தில் பாரத்தோடு, அவள் அனுப்பிய மெஸேஜைப் பார்த்துவிட்டானா என்று கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். அதற்கான அறிகுறியே அங்கில்லை. கடைசியாக அவன் அனுப்பிவிட்ட, ‘உங்கள் சித்தப்படியே மகாராணி!’ கண்ணில் பட்டது.
எத்தனை மணிக்கு வர என்று கேட்டு, சொன்ன நேரத்துக்கு வந்து நின்று, அவர்களை மகிழ்விக்க எண்ணி பொற்கோவிலுக்கு அழைத்துச் சென்று என்று, அன்றைய நாளை என்றுமே மறக்க முடியாத நாளாக மாற்றித் தந்தவனுக்கு அவள் செய்தது மிக மிக அநாகரீகமான காரியம்.
மனத்தால் வருந்தியவள் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவனுக்கு அழைத்தாள். அவன் ஏற்கவே இல்லை. இரண்டாம் முறைக்குமேல் முயல முடியாமல் தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
மன்னிப்புக் கேட்க அவள் எடுக்கும் இந்த முயற்சி, அவன் காத்திருக்கும் ஒன்றுக்கான நம்பிக்கையாக மாறிவிடுமோ என்று வேறு பயந்தாள். கூடவே, ஒரு மன்னிப்பைக் கேட்கவிடாமல், அவளைக் குற்ற உணர்ச்சியிலேயே வைத்திருக்கிறவனின் மீது கோபமும் சேர்ந்துகொண்டது.
அதற்குப் பிறகு அவள் அவனுடன் பேச முயற்சிக்கவில்லை.
இங்கே, மஞ்சுவையும் இறக்கி விட்டுவிட்டு மோகனன் வீட்டுக்கு வந்தபோது ரஜீவனும் அங்குதான் இருந்தான். பயணத்துக்கு எடுத்துச் சென்ற ட்ராவலிங் பாக்கை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு அவனின் அறைக்கு நடந்தவனின் முகத்தின் இறுக்கம், ஏதோ சரியில்லை என்று ரஜீவனுக்கு உணர்த்திற்று.
அதைவிட, இருவரும் முட்டிக்கொள்வார்கள்தான். ஒருவருக்கு மற்றவரைப் பிடிக்காதுதான். ஆனாலும் நேரில் கண்டால் சின்ன தலையசைப்பு ஒன்று இருவரிடமும் நிச்சயம் இருக்கும். இன்று, இவன் இருப்பதை அவன் கவனிக்கவே இல்லை.
என்னவாயிற்றோ என்ற அவனுடைய யோசனையை அறைக்குள் போன வேகத்திலேயே திரும்பி வந்த மோகனன் இன்னுமே கூட்டினான். அதுவும், ட்ரெயினிங் செட் ஒன்றில் இருந்தவன் வீட்டு வாசலைத் தாண்டியதும் வேகமெடுத்து ஓட ஆரம்பித்திருந்தான்.
தினமும் அதிகாலையில் ஓடுவான் என்று தெரியும். ஆனால், இந்த நேரத்தில், அதுவும் வந்ததும் வராததுமாக ஓடவேண்டிய அவசியம் என்ன? ஏதும் பிரச்சனையோ?
அதற்குமேலும் தாமதிக்காமல் யாழினியிடம் சொல்லிக்கொண்டு தாய் வீட்டுக்குப் புறப்பட்டான்.
அவன் வந்தபோது ராதா உறங்கி எழுந்திருந்தாள். மேலோட்டமாகப் பயணம், திருமண வீடு பற்றி விசாரித்தான். ராதாவும் பதில் சொன்னாள்.
மறைமுகமாக எவ்வளவோ தூண்டித் துருவியும் அவளிடமிருந்து எதையும் அவனால் வெளிக்கொண்டுவர முடியவில்லை.
அவனுடைய பொறுமை ஒரு கட்டத்தோடு தீர்ந்துபோனது. “மோகனன் ஏதும் பிரச்சினை தந்தவரா?” என்று நேரடியாகவே கேட்டான்.
மனம் ஒருமுறை திடுக்கிட்டாலும், “இல்லையே அண்ணா. ஏன் கேக்கிறீங்க?” என்றாள் ராதா.
ரஜீவனுக்குக் கோபம் வந்தது. தங்கை எதையோ மறைக்கிறாள் என்று உறுதியாக நம்பினான். இல்லாமல், இவளை இறக்கிவிட்டு வந்த மோகனனின் முகம் ஏன் அப்படி இறுகி இருக்க வேண்டும்?
“இல்ல, சும்மா கேட்டனான். அவர் அப்பிடியான ஆள்தானே. உன்ன அனுப்பிப்போட்டு நீ திரும்பி வாறவரைக்கும் எனக்கு நிம்மதியே இல்ல. அக்காவே நேரடியா சொல்லிப்போட்டா. இல்லாட்டி விட்டே இருக்க மாட்டன்.”
எப்போதுமே இப்படி மோகனனைப் பற்றித் தமையன் சொன்னால் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொள்வாள் ராதா. ஆனால், இன்றைக்கு மனம் முரண்டியது.
“அப்பிடி ஏதும் எண்டால் சொல்லு பிள்ளை. வீட்டை வரேக்க உன்ர முகமும் சரியில்லாமத்தானே இருந்தது.” ரஜீவனைப் போல மகளை மோகனனோடு அனுப்பிவிட்டுப் பயந்துகொண்டு இருந்த பரிமளாவும் சொன்னார்.
அது போதுமே ரஜீவனுக்கு. “மறைக்காமச் சொல்லு ராதா. நாளைக்குப் பெருசா ஏதும் நடந்தபிறகு எல்லாருமா இருந்து அழ ஏலாது. எனக்கு அவனைப் பற்றி நல்லா தெரியும். கேடு கெட்டவன்!” என்றான் பல்லைக் கடித்தபடி.
ராதாவுக்குத் தமையன் மீது சினம் உண்டாயிற்று. “ஏன் அண்ணா, தேவையே இல்லாம இந்தளவுக்கு அவரில வெறுப்பை வளத்து வச்சிருக்கிறீங்க? ஒரு காலத்தில் அவர் செய்தது எல்லாம் பெரிய பிழைகள்தான். ஆனா இப்ப திருந்திட்டார் எண்டுதான் நினைக்கிறன். கிடடத்தட்ட ரெண்டு நாள் அவரோட இருந்திருக்கிறம். ஒரு தவறான செய்கை இல்ல; பார்வை இல்ல. வரேக்க பொற்கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போனவர். எவ்வளவு கவனமா எங்களைப் பாத்தவர் தெரியுமா? உங்களுக்கு அவரைப் பிடிக்காது எண்டுறதுக்காகவே மோசமா கதைக்காதீங்க!” தன் தவறும் சேர்ந்து தமையனின் புறம் கோபமாய்த் திரும்பிவிடப் படபடவென்று படபடத்திருந்தாள் ராதா.
“அவன் நடிச்சிருப்பான். கள்ள ராஸ்கல்!” தங்கை அவன் புகழ் பாடியது ரஜீவனின் இரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டது.
“நாள் முழுக்கக் கொஞ்சம் கூடப் பிசகாம நடிக்க நல்ல நடிகனால கூட ஏலாது அண்ணா. அதைவிட, எனக்கு ஆக்களை எடை போடவே தெரியாது எண்டு சொல்லுறீங்களா?” என்றவளின் நிதானத்தில் சட்டென்று உசாரானான் ரஜீவன்.
“விடு! உனக்கு ஏதும் பிரச்சினையோ எண்டுதான் நான் பயந்தனான். அப்பிடி ஒண்டும் இல்லை எண்டா என்னத்துக்குத் தேவை இல்லாம அவரைப் பற்றி நாங்க கதைக்க?”



