அதன்பிறகு அவனைப் பற்றி அவளிடம் பேசவில்லை. அதோடு, அவளின் முகத்தில் கவலை, கண்ணீர், கோபம், பயம் என்று எதுவும் இல்லாததும் அவனை அமையாக்கிற்று.
பரிமளா கடைக்குப் போக வேண்டும் என்றதும், கூடவே சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தான்.
இதற்குள் ராதாவும் சமாதானம் ஆகியிருந்தாள். அதில், “உன்ர கலியாணத்தைப் பற்றி யோசிச்சியா?” என்று வினவினான் ரஜீவன்.
“அண்ணா பிளீஸ், ஏன் இப்பிடி எப்ப பாத்தாலும் அதைப் பற்றியே கதைக்கிறீங்க? நான் உங்களுக்குச் சுமையா இருக்கிறனா?” என்றாள் ராதா சலிப்புடன்.
திகைப்புடன் தங்கையைப் பார்த்தான் ரஜீவன். “இந்தளவுதான் நீ என்ன விளங்கி வச்சிருக்கிறாய் எண்டு நினைக்கக் கவலையா இருக்கு ராதா.” என்றவனின் பேச்சில் ராதாவுக்கும் ஒரு மாதிரி ஆகிற்று.
“சொறி அண்ணா!” என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில்.
அவளைத் தான் நெருக்கிறோம் என்று அவனுக்கும் புரியாமல் இல்லையே. சற்றுக்கு அமைதியாக இருந்தவன் ஒரு முடிவுடன் நிமிர்ந்தான்.
“எங்களுக்கு அப்பா இல்ல ராதா. நானும் உனக்கு முதல் கலியாணம் கட்டிட்டன். அது… பிழை செய்திட்டனோ எண்டு மனதில பாரமாவே இருக்கு. உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தந்து, நீ சந்தோசமா இருக்கிறதப் பாக்கோணும். அதாலதான் அவசரப்படுத்திறன்.” என்றவன் மோகனனைக் குறித்து வெகுவாகவே அஞ்சுவதை அவளிடம் சொல்லவில்லை.
அவன் ஏதாவது செய்துவிட முதல் அவளுக்கு ஒரு நல்லதைச் செய்துவிடத் துடித்தான். அதற்கென்று வற்புறுத்தவும் மனம் வரமாட்டேன் என்றது. பிடிக்காமல் ஒருவனை எப்படி மணப்பது? விருப்பமில்லாமல் மணவாழ்வுக்குள் புகுவதும்தான் எப்படி?
ஒரு அண்ணனாய்த் தன் கடமைக்கும் தங்கையின் நியாயமான எதிர்பார்ப்புக்கும் நடுவில் என்ன செய்வது என்று தெரியாது அல்லாடினான்.
அவளுக்கும் மனம் கரைந்து போனது. தமையனின் நிலையும் புரிந்தது. அவன் கரத்தைப் பற்றிக்கொண்டு, “நீங்க எந்தப் பிழையும் செய்யேல்ல அண்ணா. உங்கட கலியாணத்துக்கு முதல் எனக்குத்தானே பாத்தீங்க. நான் வேண்டாம் எண்டு சொன்ன பிறகுதானே உங்களுக்கு நடந்தது. மூண்டு வருசம் இல்ல, இன்னும் கொஞ்ச நாள்… ம்… ஒரு ஆறுமாதம் பொறுங்கோ. பிறகு பாருங்கோ. நான் கட்டுறன், சரியா?” என்றாள் இதமான குரலில்.
ரஜீவனுக்கும் மனம் நெகிழ்ந்து போயிற்று. “உனக்குக் கோவம் ஒண்டும் இல்லையே?” என்று கேட்டான்.
“ஏன் கோவிக்க. அதெல்லாம் ஒண்டும் இல்ல.” என்று சந்தோசமாகவே அவனை அனுப்பிவைத்தாள் ராதா.
அவள் திருமணத்துக்குச் சம்மதம் சொல்லிவிட்ட போதிலும், அதன்பிறகு வந்த நாட்களில் ராதா தங்களின் வீட்டுக்கு வருவதுபோல் வைத்துக்கொள்ளவில்லை ரஜீவன்.
தினமும் வீட்டுக்கு அவனே வந்தான். அவ்வப்போது யாழினியையும் கூட்டிக்கொண்டு வந்தான்.
ராதாவும் மோகனனைப் பார்க்க முயலவில்லை. எப்போதாவது பார்க்கக் கிடைத்தால் மன்னிப்பைக் கேட்டுவிட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.
அவனும் இவளைப் பார்க்கவோ, பேசவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவனுக்கு வீட்டு வேலைகள் தலைக்கு மேலே இருந்தன.
அவன் அந்தத் துறைக்குப் புதிது என்பதில், ஏமாற்றப் பார்க்கிறவர்கள், விலை வைத்து விற்க முயல்கிறவர்கள், திறமையான வேலையாட்களை இனம் காண்பது என்று அனைத்திலும் கவனமாக இருந்தான்.
*****
யாழினிக்கு நாள் தள்ளிப் போயிருந்தது. செல்வராணிக்கு மிகுந்த ஆனந்தம். பெரும் நம்பிக்கையுடன் வைத்தியரிடம் அழைத்துச் சென்றபோது, அவரும் குழந்தைதான் என்று உறுதிப்படுத்தினார்.
எல்லோருக்குமே மிகுந்த சந்தோசம். ரஜீவனைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. யாழினியை ஆயிரம் முத்தங்களால் அர்ச்சித்தான். இருவருக்குள்ளும் கண்ணுக்குத் தெரியாமல் இழையோடிக்கொண்டிருந்த ஊடல் காணாமல் போயிற்று.
ஒருவரின் அணைப்பில் மற்றவர் இருந்து, தாம் பெற்றோராகப் பதவியேற்ற அந்த நிமிடத்துளிகளை அனுபவித்துக்கொண்டு இருந்தனர்.
செய்தி அறிந்ததும் மனைவி பிள்ளைகளோடு வந்து தங்கையைப் பார்த்துவிட்டுப் போனான் கௌசிகன்.
அன்று மாலையே அன்னையையும் அழைத்துக்கொண்டு வந்தாள் ராதா.
மர நிழலில் நின்றிருந்த கார், மோகனனும் அங்கேதான் நிற்கிறான் என்று சொன்னது. அவனைப் பார்ப்போமா என்கிற ஆவலோடு வந்தவளின் மனதுக்குள் இப்போது மெல்லிய பரபரப்பு.
“அண்ணி!” என்று அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தாலும் விழிகள் அவனைத்தான் தேடிற்று.
அவர்கள் இருவரும் பார்த்துப் பேசிக் கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்திருந்தது. மதம் பிடித்துப்போய் இருக்கும் அந்த யானையை இன்றாவது குளிரவைத்துவிடப் பிரியப்பட்டாள் அவள்.
“ராது! வாவா! வாங்கோ மாமி!” அவர்களை வரவேற்றபடி வந்தாள் யாழினி. களைப்பும் சோர்வும் தெரிந்தாலும் அதையும் தாண்டிக்கொண்டு அவளின் முகம் பூரித்து மலர்ந்திருந்தது.
“அண்ணி, எவ்வளவு வடிவா இருக்கிறீங்க தெரியுமா? மாமி, இண்டைக்கு நீங்க அண்ணிக்கும் அண்ணாக்கும் கட்டாயம் சுத்திப் போடுங்கோ. என்ர கண்ணே பட்டிருக்கும்.” என்றபடி, தன் சந்தோசத்தைப் பகிர்கிறவளாக யாழினியை இறுக்கிக் கட்டிக்கொண்டாள் ராதா.



