“என்னை அத்தை ஆக்கி இருக்கிறீங்க அண்ணி. எனக்குச் சந்தோசமா இருக்கு. மதுக்குட்டி மாதிரி ஒரு மருமகன்தான் வேணும், சரியோ?” என்றவளின் உற்சாகம் அங்கிருந்த எல்லோருக்குமே தொற்றிக்கொண்டது.
ரஜீவனுக்கும் அவளை அப்படிப் பார்க்கையில் மனத்துக்கு நிறைவாக இருந்தது. பரிமளாவும் மருமகளை உச்சி முகர்ந்து, நலன் விசாரித்து, பக்குவம் சொல்லித் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
“கதைச்சுக்கொண்டு இருங்கோ. தேத்தண்ணி கொண்டுவாறன்.” என்றபடி எழுந்தார் செல்வராணி.
“நீங்க இருங்கோ மாமி, நான் ஊத்திக்கொண்டு வாறன். ஹொஸ்பிடல் எல்லாம் போய் வந்து களைச்சுப்போய் இருப்பீங்க.” என்று அவரைத் தடுத்துவிட்டுத் தான் சென்றாள் ராதா.
அவளின் அந்தப் புரிந்துணர்வுடன் கூடிய பாசத்தில் மனம் கனிந்து போனது செல்வராணிக்கு. ஒருவரை உணர்ந்து நடக்கிற இந்த அருமையான குணத்தினால்தானே அவளையும் தன் மருமகளாக்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது நடக்காமல் போன வருத்தத்தில் மற்றவர்கள் அறியாமல் பெருமூச்செறிந்தார்.
யாழினிக்குத் தேநீர் வேண்டுமா அல்லது வேறு ஏதும் அருந்தப் போகிறாளா என்று கேட்க எண்ணிச் சமையல் கட்டிலிருந்து வெளியே வந்த ராதா, எதிரில் வந்த மோகனனைக் கண்டு அப்படியே நின்றுவிட்டாள்.
அதுவும், அணியவேண்டிய டீ- ஷர்ட்டினை தோளில் போட்டுக்கொண்டு, தினவெடுத்து நிற்கும் தேகத்தை அப்படியே காட்டிக்கொண்டு வந்தவனைக் கண்டு அவள் உதட்டினில் சிரிப்பு அரும்பிற்று.
அவனும் அவளைத் திடீரென்று அங்கு எதிர்பார்க்கவில்லை போலும். ஒரு நொடி நடை நின்றுவிட, மிக வேகமாய் மீண்டும் அறைக்குள் புகுந்துகொண்டிருந்தான்.
ராதாவின் உதட்டு முறுவல் விரிந்து போயிற்று. ‘பரவாயில்ல, கொஞ்சம் கூச்ச நாச்சமும் இருக்கு.’ என்று எண்ணியபடி சென்று யாழினியை விசாரித்தாள். அப்படியே, “மாமி, நீங்களும் டீ குடிக்கப் போறீங்களா? இல்ல, அண்ணியோட சேர்த்து உங்களுக்கும் ஜூஸ் போடவா?” என்று வினவினாள்.
“ஜூஸே போடாச்சி. இண்டைக்குப் போதும் போதும் எண்டு தேத்தண்ணி குடிச்சாச்சு.”
அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அவள் கிட்சனுக்கு வந்தபோது, அங்கே நின்றிருந்தான் அவன். வியப்புடன் புருவங்களை உயர்த்தினாள் ராதா. சற்றுமுன் அவன் தோளில் கிடந்த டீ- ஷேர்ட் இப்போது அவன் உடலைக் கவ்வியிருந்தது.
அவன் பால்தேநீர் ஊற்றுவதற்குத் தயாராவது தெரிந்தது.
“விடுங்க, நான் செய்றன்.” என்றாள் ராதா.
அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வேலையில் கவனமாய் இருந்தான் அவன். அவளின் முகம் சுருங்கியது.
“மாமிக்கும் அண்ணிக்கும் ஜூஸ்.” என்றுவிட்டு, அங்கிருந்த தோடம்பழங்களை(ஒரேஞ்ச்) எடுத்து வெட்டினாள். அவற்றின் தோலையும் விதைகளையும் நீக்கினாள். விறு விறு என்று ஒரு கேரட்டை எடுத்துத் தோலைச் சீவி, சிறு சிறு துண்டுகளாக அதையும் நறுக்கினாள்.
அவனும் அடுப்பில் சட்டியை வைத்து அதற்குள் பாலை ஊற்றினான்.
இருவருமே அருகருகே நின்று வேலை பார்த்தனர். ஆனால், அடர்த்தியான மௌனத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவளைத் தள்ளி நிறுத்தினான் அவன்.
அது ராதாவுக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்ய வைத்தது. பார்க்காமல் இருக்கையில் கூடத் தெரியவில்லை. பக்கத்தில் நின்றும் அவன் காட்டும் இந்த அப்பட்டமான விலகல் தவிக்க வைத்தது.
“எப்பிடி இருக்கிறீங்க?” என்றாள் மெல்ல.
அவன் பதில் சொல்லவில்லை. மூன்று கப்புகளை எடுத்து வைத்துவிட்டு, அடுப்பில் கொதிக்க ஆரம்பித்த பாலுக்கு ஏலக்காய், போதுமான அளவு சீனி, தேயிலை சேர்த்து இன்னும் கொதிக்க விட்டான்.
அதற்குமேல் ராதாவால் முடியவில்லை. நெஞ்சுக்குள் இருந்து அழுத்தம் ஒன்று இதோ வெடிக்கிறேன் என்று பொங்கிக்கொண்டு வந்தது.
கைவேலையை அப்படியே நிறுத்திவிட்டு, “அண்டைக்கு நான் அப்பிடி நடந்திருக்கக் கூடாது. அதுவும், ரெண்டுநாள் உங்களோடயே இருந்தும் சந்தேகப்பட்டது பிழைதான். உண்மையா சொறி.” என்று, மெய்யான வருத்தத்தோடு அவன் முகம் பார்த்துச் சொன்னாள்.
அப்போதும் அவன் அவள் புறமாய்த் திரும்பவே இல்லை. உடைந்துபோனாள் ராதா. விழிகள் குளமாகின. “கதைக்கவே மாட்டீங்களா? கோவமா?” என்றாள் அழுகையை அடக்கிய குரலில்.
அவன் அடுப்பை அணைத்துவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“நான் ஏன் கோவப்பட? நீங்க சந்தேகப்பட்டதில பிழை இல்லையே. நான் அப்பிடியானவன்தானே.” என்றான் வெறுமையான குரலில்.
அவன் தன்னைக் குறித்துத்தான் சொன்னான். ஆனால், ராதா துடித்துப்போனாள். “பிளீஸ் பிளீஸ்! இப்பிடியெல்லாம் கதைக்காதீங்க. அதுதான் நான் சொறி சொல்லிட்டனே.” என்றவளின் விழிகளிலிருந்து கண்ணீர் இறங்கிற்று.
ஒரு நொடிதான் அவளின் முகத்தைப் பார்த்தான். அடுத்த கணமே, “முதல் அழுறதை நிப்பாட்டுங்க. எனக்கு ஏறிக்கொண்டு வருது!” என்று சீறினான்.
அவள் பயந்துபோனாள். அச்சத்தில் விரிந்த விழிகளோடு அவனைப் பார்த்தாள்.
“என்ன பாக்கிறீங்க? உங்களுக்கு எப்பவுமே என்னில நல்ல அபிப்பிராயம் இருந்ததே இல்ல. என்ன, இவ்வளவு நாளும் நீ கேவலமானவன்டா எண்டு பார்வையால சொன்னீங்க. இந்த முறை அத வெளிப்படையா செயலில காட்டி இருக்கிறீங்க. அவ்வளவுதான். அதுக்கு ஏன் புதுசா கவலை எல்லாம் பட்டு மன்னிப்பு கேக்கிறீங்க?”
ஒரு கணம் திகைத்தாள். அவன் சொன்னதில் இருந்த அப்பட்டமான உண்மை வேறு சுட்டது. “சொறி! அந்த நேரம் எனக்கு உங்களத் தெரியாதுதானே.” என்றாள் கரகரத்த குரலில்.
“இப்ப?” என்றான் கண்களில் கூர்மையுடன்.
‘அதுதானே’ திகைத்தாள் ராதா.
“இப்பவும் உங்களுக்கு என்னைத் தெரியாதுதான்!” என்றுவிட்டுப் போனான் அவன்.



