உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டாள் இளவஞ்சி. நிலனுக்கு அவளை அனுப்ப மனமே இல்லை. தன்னுடனேயே வைத்திருக்க வேண்டும் ஆசைப்பட்டான். அதற்கு வழியில்லை என்று பார்த்தால் அவளோடு போகவும் முடியாது.
அன்றைய நாள் முழுக்க மீட்டிங்கிலேயே கழிந்துவிடும். கட்டாயம் அவன் நின்றேயாக வேண்டும். அதில், “என்னோட ஒருக்கா வா!” என்று அழைத்துக்கொண்டு தன் அலுவலக அறைக்கு நடந்தான்.
அங்கே அவன் பிரத்தியேகமாக ஆடைகளை வடிவமைக்கும் சின்ன அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றியதும் முதல் வேலையாக அவளை அணைத்துக்கொண்டான்.
என்னவோ அந்த நொடியில் அவள் அண்மை அவனுக்கு மிக மிக அத்தியாவசியமானதாகப் போயிற்று. அந்தளவில் உணர்ச்சிவசப்பட்டிருந்தான்.
அவள் முகம் முழுக்க ஈர முத்தங்களை வேக வேகமாகப் பதித்தான். அது அவனுக்குப் போதவில்லை. கடைசியாக அவள் இதழ்களிலும் ஆழ்ந்த முத்தமொன்றைப் பதித்த பிறகே கொஞ்சமாவது கட்டுக்குள் வந்தான்.
அவள் முகம் தாங்கி, “உன்னை விட்டுத் தள்ளி இருக்கிறது ஈஸியாவே இல்ல வஞ்சி. உன்ர வஞ்சிதானேடா, அவளிட்ட உனக்கு என்ன பிடிவாதம் எண்டு அடிக்கடி மனம் சொல்லும். ஆனாலும் அவளுக்காக இவ்வளவு உருகிறியே, அவள் உனக்காகச் சின்னதா ஒரு காலடி எடுத்து வைக்கமாட்டாளா எண்டும் இருக்கும். அடேய் முட்டாள் காலம் முழுக்க எனக்கு நீ வேணுமடா எண்டு எவ்வளவு வடிவா சொல்லிட்டாய்?” என்றான் கண்கள் இலேசாகப் பனித்திருந்த போதிலும் சிரித்த முகமாக.
சில கணங்களுக்கு அவனையே பார்த்த வஞ்சி, “அப்பிடி ஒண்டும் நான் சொல்லேல்ல.” என்றாள்.
“நீ சொல்லிட்டாய்.” என்று சிரித்தான் அவன்.
“இல்ல. நான் சொல்லேல்ல.”
“இந்தத் திமிர்தான்டி உனக்குப் பின்னால சுத்த வைக்கிறது.” என்று அவள் நெற்றி மூட்டிவிட்டு, “நான் சந்தோசமா வாழுறதுக்கும், நிம்மதியா வாழுறதுக்கும் வாழ்க்கை பூரா எனக்கு இந்தத் திமிர் பிடிச்சவள் வேணும். வாறியா என்னோட வாழ?” என்றான் ஆசையாக அவள் முகம் பார்த்து.
அவள் விழிகள் இலேசாகக் கலங்கிப்போயின. அவனையே பார்த்தாள்.
“வஞ்சிம்மா?”
“நீங்களும் லேசுப்பட்ட ஆள் இல்ல என்ன? இத்தின நாளும் என்னட்ட வரேல்லத்தானே. வயித்தில குழந்தையோட இருக்கிறவள் உங்களைத் தேடுவாள் எண்டு நினைக்கவே இல்லையா?” என்றாள் ஆத்திரமா ஆதங்கமா என்று பிரித்தறிய முடியாக் குரலில்.
விழிகள் பனித்துவிட, “நீ மட்டும்தான் என்னைத் தேடுவியா? நான் உன்னைத் தேட மாட்டனா?” என்று கேட்டான் அவனும்.
“தேடி இருந்தா வந்திருப்பீங்க.”
“நான் வந்தனான் வஞ்சி.”
“நீங்க என்ன விசிட்டரா அப்பப்ப வந்து என்னைப் பாத்துக்கொண்டு போறதுக்கு?” என்று சீறினாள் அவள்.
“அப்ப நான் ஆர் உனக்கு?”
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு முகம் திருப்பினாள் அவள். அதற்கு விடாமல் அவள் முகம் பற்றித் தன்னைப் பார்க்க வைத்து, “வஞ்சி பதில் சொல்லு! என்ர வாழ்க்கை மொத்தத்துக்கும் இந்தப் பதில் வேணும். உனக்கு என்னைப் பிடிக்கும் எண்டு தெரிஞ்சாலும் பல நேரம் கலங்கி இருக்கிறன். என்ர எண்ணம் பொய்யோ, உனக்கு என்னைப் பிடிக்கேல்லையோ, நீ என்னோட…” என்றவனை வேகமாக இடையிட்டு, “உங்களுக்கு என்ன விசரா?” என்றாள் கோபத்தோடு.
“அப்ப நான் உனக்கு ஆர் எண்டு சொல்லு?” விடாமல் கேட்டவன் அவள் விழிகளையும் கலங்க வைத்தான்.
அதன் பிறகு தாமதிக்கவில்லை அவள். அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்து, “நீங்கதான் எனக்கு எல்லாம். என்ர அப்பம்மாவும் நீங்கதான். அம்மா அப்பாவும் நீங்கதான். நீங்க சின்னதா விலகினாலும் எனக்கு உயிரே போற மாதிரி வலிக்குது. அதான் மொத்தமா விலகு…” என்றவளை இப்போது அவன் பேச விடவில்லை.
அவள் முகம் நிமிர்த்தி, இதழ்கள் மீது ஒற்றை விரலை வைத்துச் சொல்லாதே என்பதுபோல் தலையை அசைத்தான். அவன் விழிகளும் கலங்கிப்போயிருந்தன.
அதைப் பார்த்தவள் விழிகளிலும் கண்ணீர். அவன் விழிகளைத் தானே துடைத்துவிட்டு எம்பி அந்தக் கண்களில் தன் இதழ்களைப் பட்டுப்போல் ஒற்றி எடுத்தாள்.
இதை எதிர்பாராத நிலன் முகத்தில் விரிந்த புன்னகை. அவளைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து, “நீ இளவஞ்சி குணாளனாத்தான் இருக்கோணும். அதுதான் மாமாக்குச் செய்ற மரியாதை. அது எனக்கு விளங்காம இல்ல. ஆனாலும் உன்ர மனுசனா என்ர வஞ்சி எப்ப இளவஞ்சி நிலனா மறுவாள் எண்டுற ஏக்கம் எனக்கு இருந்தது வஞ்சி. ஆனா இண்டைக்கு…” என்றவன் தன் மகிழ்ச்சியைச் சொல்கிறவனாக அவள் முகமெங்கும் மீண்டும் முத்தமிட்டான்.
“எதைப் பற்றியும் யோசிக்காத. இந்த மீட்டிங் முதல் முடியட்டும். அண்டைக்கு ஒரு நாள் உன்னக் கூட்டிக்கொண்டு போனனே, அந்த வீட்டில எல்லா ஒழுங்கையும் செய்துபோட்டுச் சொல்லுறன். நானும் நீயும் போய் அங்க போய் இருப்பம் சரியா?” என்றான் அவளிடம்.
அதற்கு ஒன்றும் சொல்லவில்லை அவள். அவன் அணைப்பில் அடங்கி நின்றிருந்தாள். ஆனால், நிலனால் நெடுநேரம் அங்கே நிற்க முடியாது. வேலைகள் இருந்தன. “போகோணும் வஞ்சி.” என்றான் மனமே இல்லாமல்.



