கௌசிகன், பிரமிளா இருவரையும் கண்டுவிட்டு ஒருகணம் தேங்கியபோதும் அவள் நடை நிற்கவில்லை. அவர்களைக் கடந்து வீட்டுக்குள் வேகமாக வந்தவளின் விழிகள், அங்கிருந்த ராஜநாயகம், செல்வராணி, மோகனன் என்று சுழன்று கடைசில் யாழினியில் வந்து நிலைத்தது.
எதற்கு வந்திருக்கிறாள் என்று அனுமானிக்க முடியாதபோதிலும் அவள் விழிகளைச் சந்திக்க முடியாமல் தடுமாறினாள் யாழினி.
“நீங்க இப்பிடிச் செய்வீங்க எண்டு நான் எதிர்பாக்கவே இல்ல அண்ணி!” என்றாள் கசப்புடன்.
யாழினியின் விழிகள் கலங்கிற்று. “நான் அவரைப் போகச் சொல்லிச் சொல்லேல்ல ராது.” என்றாள் கரகரத்த குரலில்.
“ஆனா, போக விட்டுட்டீங்களே அண்ணி. தடுத்திருக்க வேண்டாமா? உங்கட அண்ணாக்குத் தங்கச்சியா நிண்ட நீங்க என்ர அண்ணாக்கு மனுசியா நிக்காம போயிட்டீங்களே. அவர் அப்பிடி என்ன பிழை செய்தவர் எண்டு உங்கட அண்ணாக்கு முன்னால வச்சு அவரை நியாயம் கேட்டீங்க?”
‘போக விட்டுட்டீங்களே அண்ணி’ என்று அவள் சொன்னதிலேயே நிலைகுலைந்து போயிருந்தாள் யாழினி. உண்மைதானே. அவனை அவள் போக விட்டிருக்கக் கூடாது தானே. ராதாவுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவள் உள்ளமும் சேர்ந்து அழுதது இப்போது.
“உங்கட அண்ணாக்கள் ரெண்டுபேருமே சேர்ந்து என்ர அண்ணாக்கு என்ன எல்லாம் செய்தவே எண்டு மறந்து போச்சா உங்களுக்கு? அவ்வளவு பட்டவர் பயப்படாம என்ன செய்வார்? அது ஏன் உங்களுக்கு விளங்காம போனது? கூடப்பிறந்த அண்ணாக்கு முன்னால போடி எண்டு சொன்னதுக்கே உங்களுக்குக் கோபம் வந்திருக்கு. ஆனா, உங்கட அண்ணாக்கு முன்னால நிக்க வச்சு நீங்க கேள்வி கேப்பீங்க. என்ர அண்ணா உங்களுக்கு அடங்கிப் பதில் சொல்லியிருக்க வேணுமா? என்ன கேக்கிறதா இருந்தாலும் தனியா கூட்டிக்கொண்டு போய்க் கேட்டிருக்கலாமே. இல்ல, உங்கட வீட்டில வந்திருக்கிறதால தன்மானம், சுயமரியாதை எதுவும் அவருக்கு இல்லை எண்டு நினைச்சீங்களா?” என்றவளுக்கு மனம் அமைதியடையவே மாட்டேன் என்றது.
எப்போதுமே, அங்கிருக்கிற எல்லோரையும் மதித்து, பணிந்து நடக்கிறவள் அவள். இன்றைக்கு யாரைப் பற்றியும் யோசிக்கும் நிலையில் இல்லை. அந்தளவில் தமையனின் துயர் அவளைக் கொதித்து எழ வைத்திருந்தது.
முகமெல்லாம் செத்துச் சுண்ணாம்பாகி வீடு வந்த தமையன், எதையும் சொல்ல மறுத்ததும், பயந்து பதறி அன்னை கண்ணீர் வடித்ததில் அவன் உடைந்ததும் என்று மனக்கண்ணில் எல்லாம் வலம்வர, அவள் உள்ளம் துடித்தது. அதுவும், ‘நீயே இப்பிடி உடைஞ்சுபோனா எங்களுக்காகக் கதைக்க ஆர் அப்பு இருக்கினம்?’ என்று அன்னை அழுததுதான் அவளை இங்கே வரவழைத்திருந்தது.
“ராதா, விடம்மா. இதெல்லாம் நடந்திருக்கக் கூடாதுதான். எதிர்பாராம நடந்து போச்சம்மா. ஆர்ல சரி பிழை எண்டு கதைக்காம இதை முடிக்கிறதுதானே நல்லம்.” என்று தன்மையாக எடுத்துச் சொல்லி, அவளைச் சமாளிக்க முயன்றாள் பிரமிளா.
“இல்லை அக்கா, இது கதைக்காம ஒரு நாளும் தீராது. அதுவும் நான் கதைக்காம தீராது. என்ர அண்ணா எனக்கு அண்ணா மட்டும் இல்ல. அப்பாக்குச் சமன். சின்ன வயசில இருந்து எனக்கு எல்லாம் செய்து வளத்தது அவர்தான். உங்களுக்கே அது தெரியும். அவர் என்னைப் பற்றிக் கவலைப்படுறதில என்ன பிழை இருக்கு. தன்ர பயம் என்ன எண்டு இவரிட்ட நேராத்தானே கதைச்சவர்.” என்று மோகனனைக் கைகாட்டிச் சொன்னவள்,
“அண்ணாவும் தங்கச்சியுமா சேர்ந்து முடிவை நான்தான் சொல்லோணும் எண்டு சொல்லிச்சினமாமே. இன்னும் எத்தினை தரம்தான் நானும் முடிவு சொல்லுறது?” என்று கேட்டவள், விறுவிறு என்று மோகனனின் முன்னே சென்று நின்றாள்.
எல்லோருக்கும் நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. விரும்பத்தகாத ஒன்று நடக்கப்போவதை அவர்களின் மனமே சொல்லிற்று.
இறுகிப்போய் அமர்ந்திருந்தான் மோகனன். அவன் நெஞ்சின் அழுத்தம் கூடியதில் உதடுகள் கோடாக அழுந்தின. பார்வை தன் முன்னே நிற்பவளில் அசையாமல் நிலைத்தது.
“எனக்கு நீங்க வேண்டாம் எண்டு உங்களுக்கு நான் நேரடியாவே சொல்லிட்டனா இல்லையா? இன்னும் எப்பிடிச் சொல்லவேணும்? எப்பிடிச் சொன்னா ஏற்பீங்க? ஊரக் கூட்டிச் சொல்லோணுமா, இல்ல நடுச்சந்தில நிண்டு கத்திச் சொல்லோணுமா?” என்று கேட்டவளின் விழிகளையே பார்த்தான் மோகனன்.
சலனமே அற்றுத் தன்னை நோக்கும் அந்த விழிகளை விடவா அவள் தன் மறுப்பை இன்னுமொருமுறை தெளிவாகச் சொல்லிவிடப் போகிறாள்? அவன் உதட்டோரம் வறட்சியாய் வளைந்தது. “இதே போதும்!” என்றான் வெற்றுக் குரலில்.
“போதுமா அண்ணி! இனி என்னை வச்சு என்ர அண்ணாவோட சண்டைக்குப் போகாதீங்க.” என்றாள் யாழினியிடம்.
யாழினியால் சுவாசிக்கக் கூட முடியாமல் போயிற்று. அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு சின்ன தமையனையே பார்த்தாள்.
அனைத்துமே கையை மீறிப் போயிருந்தது. எல்லோரின் பார்வையும் இயலாமையுடன் மோகனனிலேயே குவிந்தது. யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், தொடைகளில் கைகளை ஊன்றித் தலைகுனிந்து அமர்ந்திருந்தான் அவன்.
அப்போது, ரஜீவனின் பைக்கும் வந்து நின்றது.
‘கடவுளே… இன்னும் என்ன?’ செல்வராணியின் நெஞ்சு அரற்றியது.
அவனே திரும்பி வருவான் என்று எதிர்பாராத யாழினி விழிகளில் அதிர்வும், நீருமாக அவனையே பார்த்தாள். பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி வீட்டுக்குள் வந்தவன், நேராக ராஜநாயகம் செல்வராணி இருவரின் முன்னே போய் நின்றான்.
“சொறி மாமா மாமி, என்னை நம்பித்தானே உங்கட மகளை நீங்க எனக்குக் கட்டி வச்சீங்க. பிள்ளையும் வந்திருக்கிற இந்த நேரம் அவளைச் சந்தோசமா வச்சிருக்க வேண்டியது என்ர கடமை; பொறுப்பு. அதை யோசிக்காம அவசரப்பட்டு வெளில போயிட்டன். இனி இப்பிடி நடக்காது மாமா.” என்றவன் யாழினியிடமும் திரும்பி, “சொறி யாழினி!” என்றுவிட்டு அவர்களின் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
விக்கித்து நின்றாள் யாழினி. கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்ற வந்திருக்கிறானா அவளின் கணவன்? அப்போ காதல்?
தன் வாழ்க்கையை மாத்திரமல்லாமல் தமையனின் வாழ்க்கையையும் சேர்த்துச் சிக்கலாகிவிட்டிருக்கிறோம் என்று புரிந்தது. சிந்திக்கும் சக்தியைக் கூட இழந்தவளாக அப்படியே அமர்ந்திருந்தாள்.


