நிலனின் அறையை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் இளவஞ்சி. அந்தளவில் முன்னர் மிதுனின் அறையாக இருந்த பக்கத்துக்கு அறைக்கும் இவன் அறைக்கும் நடுவில் ஒரு கதவை வைத்து, அந்த அறையைக் குழந்தைகளுக்கு ஏற்ற அறையாக மாற்றியிருந்தான்.
அதுமட்டுமல்லாது பிரிக்கப்பட்டிருந்த பால்கனியையும் ஒன்றாக்கி, அவள் அறையின் பால்கனியில் இருக்கும் கண்ணாடி அறைபோலவே இங்கேயும் ஒன்றை உருவாக்கியிருந்தான்.
அதனுள்ளே அவளுடையதைப் போலவே ஒரு கூடை நாற்காலி. அதைக் கண்டதும் சின்ன முறுவலோடு சென்று அமரப்போனவளை விடாமல் தன் கையில் ஏந்திக்கொண்டு சென்று, தான் அமர்ந்து தன் மடியில் அவளை அமர்த்திக்கொண்டான் நிலன்.
அதற்கே அவளுக்குத் தலையைச் சுற்றிவிட்டது. அவன் தோளை இறுக்கிப் பற்றித் தன்னைச் சமாளித்தாள்.
“அச்சோ சொறி சொறி!” என்றான் அவன் அவசரமாக. “இத வாங்கிப் போட்ட நாளில இருந்து உன்னோட இதில இருக்கோணும் எண்டுறது நான் ஆசைப்பட்ட விசயம். நீ மட்டும் இருக்க வரவும் யோசிக்கேல்ல.” என்றான் மன்னிப்பை வேண்டும் குரலில்.
“தனியா போவம் எண்டு சொன்னீங்க?” என்றாள் அவன் முகம் பார்த்து.
உண்மையில் அந்த எண்ணம் இருந்திருந்தால் இதையெல்லாம் ஏன் செய்தான் என்கிற கேள்வி அவள் கேள்வியின் பின்னே தொக்கியிருப்பதை அறிந்து, “சொன்னனான்தான். நீ இண்டைக்கு வராட்டி உன்னைக் கூட்டிக்கொண்டு கட்டாயம் தனியாப் போயிருப்பன்தான். ஆனா எத்தின நாளைக்கு? மிஞ்சி மிஞ்சிப் போனா பிள்ளை பிறக்கிற வரைக்கும்தான் அது சரியா வரும். நீயும் தொழிலைப் பாக்கோணும். நானும் தொழிலைப் பாக்கோணும். பிறகு பிள்ளையை ஆரு பாக்கிறது? இல்லாட்டியுமே நீ எல்லாத்தில இருந்தும் வெளில வாற வரைக்கும் தனியா இருந்தா போதும் எண்டுதான் நினைச்சனான்.” என்று விளக்கினான் அவன்.
அவனுடைய ஒற்றைக் கை அன்றுபோல் இன்றும் அவள் வயிற்றை வருடிற்று. என்னவோ தெரியவில்லை, அப்படி அவன் செய்தால் மட்டும் அவளுக்கு மொத்த தேகமும் கூசும். அவன் கரம் பற்றி அவள் நிறுத்தப் பார்க்க, சிறு சிரிப்புடன் அவளைப் பார்த்தான் நிலன்.
“இப்பிடி ஒரு இரவு இண்டைக்கு எனக்குக் கிடைக்கும் எண்டு நினைக்கவே இல்ல வஞ்சி.” என்றான் தன் அணைப்பை இறுக்கியபடி.
அவளும்தான் நினைக்கவில்லை. அவன் தனியாகப் போகப்போவதாகச் சொன்னது முதலில் மகிழ்ச்சியைத் தந்ததுதான். ஆனால், ஒன்றிரண்டு நாள்களிலேயே அவன் சொன்னது போன்று அது நிரந்தரத் தீர்வன்று என்று புரிந்துபோயிற்று.
கூடவே, சக்திவேலர், பாலகுமாரன், ஜானகி மூவரையும் நேருக்கு நேர் எதிர்கொள்வதை விட்டுவிட்டு, எதற்கு அவள் தனியாகச் சென்று இருக்க வேண்டும் என்கிற கேள்வியும்.
இப்படி இருக்கையில்தான் அன்று காலையில் சக்திவேலில் வைத்து அந்த வீட்டில் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு வந்து அழைத்துப்போகிறேன் என்று நிலன் சொன்னான். அப்போதே இங்கு வருவதைப் பற்றி முடிவு செய்துவிட்டாள். இதோ அவனிடம் வந்து அவன் கைவளவுக்குள் இருக்கிறாளும் கூட.
அந்த நினைப்புத் தந்த நிறைவுடன் அவன் தோளில் சாய்த்தபோதுதான், அங்கே ஒரு பக்கமாக மீன் தொட்டி ஒன்றினுள் நீந்திக்கொண்டிருந்த மீன்களைக் கண்டாள்.
“உனக்கு மீன் வளக்கப் பிடிக்கும் எல்லா?” என்றான் அவன் அவள் பார்வையைக் கவனித்து.
அவளின் அப்பம்மாவுக்குப் பிடிக்கும். அதுவே அவளுக்கும் பிடிக்க ஆரம்பித்ததில் தையல்நாயகியில், அவளின் அலுவலக அறையில், கண்ணாடிக் குடுவை ஒன்றினுள் நீர் விட்டு, அதற்குள் ஒரு சோடி மீன்களை நீந்தவிட்டதோடு சேர்த்து, மணிபிளாண்ட்டினை அந்த நீரினுள் மிதக்கவிட்டிருந்தாள். அதன் வேர்கள் அந்தக் குடுவையினுள் நீருடன் சேர்ந்து இலேசாக அசைந்தாடுவதைப் பார்க்க அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்.
அவள் குறித்தான எந்த விடயங்களும் அவன் கவனத்திற்கு வராமல் போகாது போலும். திரும்பி அவன் முகம் பார்த்துவிட்டு அவன் தாடையில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள்.
இலேசாக வளர்ந்திருந்த தாடி அவள் உதட்டினைக் காயம் செய்ய, “இண்டைக்கு மீட்டிங் இருந்தும் இந்தத் தாடியை சேவ் செய்யேல்லையா நீங்க?” என்றாள்.
“ஏன் நல்லா இல்லையா? லைட்டா ட்ரிம் பண்ணிப்போட்டுப் பாக்க நல்லா இருந்த மாதிரி இருந்தது.” என்றான் தன் தாடையைத் தடவிவிட்டபடி.
“நல்லாத்தான் இருக்கு. ஆனா எனக்குக் குத்துதே.” என்றாள் அவள்.
“குத்தட்டும். இவ்வளவு நாளும் என்னை விட்டுட்டு இருந்ததும் நல்லா குத்தட்டும்.” என்று அவள் உதட்டின் மீது தன் கன்னத்தைக் கொண்டுபோய் வைத்து இலேசாக உரசினான்.
அந்த இலேசான உரசல் இத்தனை நாளாக அடக்கி வைத்திருந்த தாபத்திற்கு தூபமிட்டுத் தீனி போடு என்று தூண்ட, அவன் அணைப்பு இறுகிற்று.
அவள் கழுத்தோரமாகப் புதைந்து, “ஏலுமா? பயமில்லையா?” என்றான் கிசுகிசுப்பாக.
கணவனின் ஆசையின் அவன் கைகளும் சேர்ந்து சொல்ல, “நான் முதல் குளிக்கோணும் நிலன். இப்ப எல்லாம் எனக்கு நிறைய வேர்க்குது.”என்றாள் அவள் முணுமுணுப்பாக.
ஹார்மோன் மாற்றங்களால் என்று விளங்க, “வா!” என்று அழைத்துக்கொண்டு அறைக்குப் போனான். மாற்றுடை எடுக்க அவள் தன் பையைத் திறக்கப் போகவும், “இஞ்சயே இருக்கு.” என்று அலமாரியின் இரண்டு கதவுகளைத் திறந்து காட்டினான்.
அங்கே அவளுக்கான சேலைகளோடு சேர்த்து ஒரு பக்கமாக அவள் அணியும் வகையிலான நைட்டிகளும் பல நிறங்களில் தொங்கிக்கொண்டிருந்தன.
ஒரு நைட்டியை எடுத்து, அதன் கோர்ட்டை தனியாக எடுத்துத் தன் தோளில் போட்டுக்கொண்டு, “அண்டைக்கு நான் இருக்கிறன் எண்டு கோர்ட் எடுத்துப் போடுறாய் என்ன? தைரியம் இருந்தா இண்டைக்குப் போடு பாப்பம்.” என்று மற்றையதை மட்டும் அவளிடம் நீட்டினான்.
“இதப் போட்டு மட்டும் எத மறைக்கப் போறன்.” என்று அவன் தந்ததை அவன் மீதே எறிந்துவிட்டு அவள் குளியலறைக்குள் நுழைந்துவிட, “அடியேய்!” என்று அவன்தான் வாயில் கையை வைத்திருந்தான்.


