பொழுது முற்பகலை நெருங்கியிருந்தது. எல்லோருக்கும் குளிர்பானம் தருவித்திருந்தான் மோகனன். அதில் ஒன்றை எடுத்து அவளுக்கும் கொடுத்தான்.
அமைதியாகவே இருவரும் பருகினர். வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்த போதிலும், பலாமரம் அவர்களுக்கான குளிர்மையைக் குறைவின்றிக் கொடுத்துக்கொண்டிருந்தது.
பேச நினைக்கிற பொழுதுகளில் எல்லாம் வார்த்தைகள் வந்துவிடுவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் மொட்டவிழ்வது போல்தான் உள்ளமும் திறந்துகொள்ளும். அப்படியான நிகழ்வுதான் சற்றுமுன் ராதாவுக்கு நிகழ்ந்தது. தன் கோபம், ஆதங்கம், கவலை, பயம் அனைத்தையும் தன்னையறியாமல் அவனிடம் கொட்டி முடித்திருந்தாள்.
இப்போதோ மெல்லிய பதற்றம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. என்ன நினைக்கிறானோ, என்ன சொல்வானோ என்று அவன் முகத்தை ஆராய்ந்தாள்.
அந்த அடர்ந்த காட்டுக்குள் இருந்து அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கையில் இருந்த குளிர்பானத்தின் மீது அவன் பார்வை குவிந்திருந்த போதிலும், சிந்தனை அதில் இல்லை என்று மட்டும் புரிந்தது.
சற்று நேரத்தில் அவன் விழிகள் உயர்ந்து அவள் பார்வையைச் சந்தித்தது. மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது அவளுக்கு. அப்போது, “எல்லாருக்கும் முன்னால வச்சு அவமானப்படுத்தினதால வந்த அனுதாபமா இது?” என்று நிதானமாக வினவினான் அவன்.
ராதாவின் விழிகள் அகன்றன. இவ்வளவு நேரமாக அவள் என்ன சொன்னாள். இவன் என்ன கேட்கிறான்?
அவள் பதிலற்று நிற்க, “நான் உங்களிட்டக் கேட்டது வேற ஒண்டு. இந்த அனுதாபத்தையோ பரிதாபத்தையோ இல்லை, விளங்கினதா? இது எனக்குத் தேவையும் இல்ல. சோ… ” என்றவனின் புருவங்களும் விழிகளும் ஒன்றாக அசைந்து வாசலைக் காட்டின.
நடையைக் கட்டு என்கிறானா, இல்லை எழுந்து போ என்கிறானா? ஆத்திரத்திலும் அவமானத்திலும் அவள் முகம் செக்கச் சிவந்து போயிற்று. இனியும் ஒரு நொடிகூட அவன் முன் இருக்கக் கூடாது என்று மனது சொல்லிவிட, அடுத்த கணமே எழுந்து விறுவிறு என்று ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள்.
போனவள் போன வேகத்திலேயே வந்து அவன் முன் நின்று, “எனக்கு வாற ஆத்திரத்துக்குக் கோழின்ர கழுத்த திருகிற மாதிரியே உங்கட கழுத்தையும் திருகோணும் மாதிரி இருக்கு. தடிமாடு மாதிரி எல்லாப் பக்கத்தாலயும் வளந்து நிக்கிற உங்களை நான் பரிதாபம் பாக்கிறேனா? கேக்கவே சிரிப்பா இல்ல? இராட்சசன் மாதிரி உடம்ப வளத்து வச்சிருந்தாலும் அந்த உடம்புக்குள்ளயும் ஒரு மனது இருக்கும், அந்த மனத என்ர பேச்சுக் காயப்படுத்தி இருக்கும் எண்டுதான் மன்னிப்புக் கேக்க வந்தனான். அவ்வளவுதான் விளங்கிச்சா! இனி… இனி ஏதாவது கதைச்சுக்கொண்டு வந்தீங்க எண்டு வைங்க… என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது. அனுதாபமாம் பரிதாபமாம். போடா டேய்!” ஆத்திரத்தில் பல்லைக் கடித்தபடி பொரிந்துவிட்டுப் போனாள் அவள்.
அவள் புறப்படுகிற வரைக்கும் அவன் அசையவே இல்லை. அவள் மறைந்ததும் அவன் உதடுகள் மென்சிரிப்பில் மெல்ல விரிந்தன.
‘நான் வேணாமா உங்களுக்கு? அதையும் பாப்பமே!’ அவன் இதயம் சொல்லிக்கொண்டது.
*****
நேரம் இரவு ஒன்பதைத் தாண்டி இருந்தது. எல்லோரும் சாப்பிட்டாயிற்று. ராஜநாயகம் உறங்கியே இருந்தார். மோகனன் மட்டும் இன்னும் வீடு வந்து சேரவில்லை.
செல்வராணிக்கு அவனை எண்ணி மிகுந்த கவலை. அன்றிலிருந்து இன்றுவரை அவன் வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் சபிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றியது. ஒரு காலத்தில் அவனே அவன் வாழ்க்கையை அலங்கோலமாக்கிக்கொண்டான் என்று பார்த்தால் இப்போது அதை வைத்து மற்றவர்கள் அவனைப் பந்தாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் எப்படிச் சீர் செய்யப்போகிறார்? ஒரு வழியும் புலப்பட மாட்டேன் என்றது. அப்போது, அவன் காரின் சத்தம் கேட்டது. அவனிடம் திறப்பு இருந்தாலும் வேகமாக எழுந்துபோய்க் கதவைத் திறந்தார்.
“இவ்வளவு நேரமா அப்பிடி என்னப்பு வேல? கொஞ்சம் நேரத்துக்கே வந்தாத்தான் என்ன சொல்லு?” அவன் முகத்தில் தெரிந்த அதீத களைப்பு அவரின் ஆதங்கத்தைக் கொட்ட வைத்தது.
“முடிக்கவேண்டிய வேலைகளை முடிச்சிட்டுதானேம்மா வரேலும்.”
“இப்பிடியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் சொல்லு தம்பி!” என்று சலித்தவர், அவன் பசியில் இருப்பான் என்று உணர்ந்தவராக, “சரிசரி, போய் உடுப்பை மாத்திக்கொண்டு வாப்பு. சாப்பாட்ட போடுறன்.” என்றபடி அடுப்படிக்கு நடந்தார்.
நன்றாகக் களைத்து, வியர்த்துப் போயிருந்த உடலுக்கு இதமாக, அங்கேயே கிணற்றில் அள்ளிக் குளித்துவிட்டுத்தான் வந்தான். அவனுக்கும் நல்ல பசி. உடையை மாற்றிக்கொண்டு வந்து மேசையில் அமர்ந்தான்.
அவனுக்காகவே நல்லெண்ணையில் செய்திருந்த முட்டை போட்ட இடியப்பக் கொத்தினைப் பதமான சூட்டில் பரிமாறினார் செல்வராணி.
“எல்லாரும் சாப்பிட்டாச்சாம்மா?” உணவில் கையை வைத்தபடி கேட்டான் அவன்.
“இவ்வளவு நேரமாகியும் ஏன் சாப்பிடாம இருக்க? நீயும் கொஞ்சம் நேரத்துக்கே வந்து சாப்பிடு தம்பி. வாழத்தான் உழைக்கிறது. அப்பா, பிள்ளைகள் எல்லாரும் உழைக்கிறதுக்காகவே வாழுறீங்க.” எல்லாமே போதும் என்கிற அளவுக்கு இருந்தும் ஏன் இப்படி ஓட என்பது அவருக்கு.
“இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் அம்மா. வீட்டு வேல முடிஞ்சபிறகு ஃபிரீதான்.”


