“பொய் பொய் பொய்! அண்ணா சொல்லுறது முழுக்கப் பொய் அம்மா. இந்த வீடு முடிஞ்சதும் இன்னொரு வீடு எண்டு ஆரம்பிப்பார், பாருங்கோ!” என்றபடி தங்கள் அறையிலிருந்து வந்தாள் யாழினி.
சிறு சிரிப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “நீ இன்னும் படுக்காம என்ன செய்றாய்?” என்று வினவினான் அவன்.
“நித்திரை வரேல்ல அண்ணா. நாளைக்கு ஞாயிறுதானே. அதுதான் ஃபோனை நோண்டிக்கொண்டு இருக்கிறன்.” அவன் எதிரில் வந்து அமர்ந்தபடி சொன்னாள் அவள்.
“எங்க ரஜீவன்?”
“வெக்கைக்கு அவியுதாம் எண்டு குளிக்கப் போய்ட்டார்.” என்று அவள் சொல்லும்போதே, அவனும் குளித்துவிட்டு வந்தான்.
“உங்களோட கொஞ்சம் கதைக்கோணும். டைம் இருக்கா ரஜீவன்?” அவனைப் பார்த்துக் கேட்டான் மோகனன்.
பெண்கள் இருவருக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டது. இவர்கள் இருவரும் பேச ஆரம்பித்தாலே அது பிரச்சனையில் தானே முடியும். இன்றைக்கு என்ன பூதம் கிளம்பப் போகிறதோ என்று பயந்தனர்.
ரஜீவனும் இதை எதிர்பார்க்கவில்லை. அன்றைய நாளுக்குப் பிறகு இருவருமே மற்றவரின் முகம் பார்ப்பதைக் கூடத் தவிர்த்து வந்தனர். ஒருவர் இருந்தால் மற்றவர் அந்த இடத்தில் இருந்து விலகிவிடுவர்.
இதில், ராதாவிடம் பேசியது இது எல்லாவற்றையும் தாண்டிய அதிர்ச்சியை ரஜீவனுக்கு உண்டாக்கியிருந்தது. தங்கையின் மனம் எப்படி இவன் புறம் சாய்ந்தது என்கிற கேள்வி, அழுத்தமாய், ஏமாற்றமாய், நம்ப முடியாததாய் அவனுக்குள் சுழன்றுகொண்டே இருந்ததில் இன்னுமே அவனைத் தவிர்க்க ஆரம்பித்திருந்தான்.
அப்படி இருந்தும், ‘இப்ப இருக்கிற மோகனனைக் கண்ணத் திறந்து பாருங்கோ அண்ணா’ என்று ராதா சொன்னது, அவனை அறியாமலேயே இவனைக் கூர்ந்து கவனிக்க வைத்தது. கூடவே, எதற்காக இவனை ராதாவுக்குப் பிடித்தது என்கிற ஆராய்ச்சியும் அவனுக்குள் நடக்க ஆரம்பித்திருந்தது.
இதையெல்லாம் அறியாத மோகனனோ மீண்டும் பேச அழைத்தான். தவிர்க்க முடியாமல், “சொல்லுங்கோ.” என்றபடி யாழினியின் அருகே வந்து அமர்ந்தான் ரஜீவன்.
“உங்கட அம்மா வீட்டுக்குப் பக்கத்து வீடு விக்க வந்திருக்கு. ஆக்களை விட்டு விசாரிச்சுப் பாத்தனான். காசு கொஞ்சம் கூடச் சொல்லுற மாதிரி இருக்கு. நீங்க ஒருக்கா கேட்டுப் பாக்கிறீங்களா?”
என்ன பேசப்போகிறானோ? அது எதில் போய் முடியப்போகிறதோ என்கிற சிந்தனையில் இருந்த
ரஜீவன், அவனுடைய இந்தக் கேள்வியில் இலகுவானான்.
“எந்தப் பக்கத்து வீடு? பேரின்பநாதன் அங்கிள் வீடா?” அவர்களின் ஏரியாவில் வீடு விற்கிற அளவுக்கு யாரும் இல்லையே என்கிற யோசனையுடன் கேட்டான்.
“பெயர் சரியா தெரியேல்ல எனக்கு. ஆனா, ஒரு அம்மாவும் ஐயாவும் மட்டும்தான் இருக்கினம் போல. அவேயும் லண்டன்ல இருக்கிற மகனோட நிரந்தரமா போயிருக்கப் போகினமாம். அதில வீட்டை விக்கினமாம் எண்டு கேள்விப்பட்டனான்.”
“அப்ப அவேதான்.” என்று உறுதிப்படுத்திவிட்டு, “நல்ல மனுசர்தான். கதைச்சுப் பாக்கலாம். நாளைக்கு அம்மா வீட்டை போறம். அப்ப கேட்டுட்டுச் சொல்லுறன்.” என்றவன், எவ்வளவு விலை சொன்னார்கள், அந்த ஏரியாவில் என்ன விலை பெறும் என்பதைப் பற்றி அவனோடு கலந்துரையாடினான்.
பெண்கள் இருவரும் இதை எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் இருவரும் தம் இறுக்கம் தளர்ந்து உரையாடியது கண்ணுக்கு நிறைவாய் இருந்தது.
கூடவே, இது தொடர வேண்டும், இருவருக்குமிடையில் சுமூகமான உறவு ஒன்று உருவாகிவிட வேண்டும் என்றும் விரும்பினர். மேசையில் இருந்த ஆப்பிளை எடுத்து வெட்டி, ஒரு தட்டில் போட்டு அவர்களுக்கு நடுவே வைத்தாள் யாழினி.
உணவை முடித்துவிட்டு அதில் ஒரு துண்டை எடுத்துக் கடித்தவாறே, “இப்ப நான் திருத்திக்கொண்டு இருக்கிற வீட்டுக்கு எலக்ட்ரிக் வேலையும் கொஞ்சம் கிடக்கு. அதையும் வந்து பாக்கிறீங்களா?” என்று வினவினான் மோகனன்.
தன் வியப்பைக் காட்டிக்கொள்ளாமல் மோகனனைப் பார்த்தான் ரஜீவன். வீட்டையாவது தன்னைக்கொண்டு விலையைக் குறைத்துப் பேசி இலாபத்துக்கு வாங்க நினைக்கிறான் என்று சொல்லலாம். ஆனால், ஒரு வேலையைத் தன்னிடம் தரவேண்டிய அவசியம் என்ன? அதுவும் திடீர் என்று.
இந்த மாற்றம் எதனால் என்று கணிக்க முடியாதபோதும், “நாளைக்கு அப்பிடியே அங்கேயும் வந்து பாக்கிறன்.” என்று சம்மதித்தான்.
அதன் பிறகு அவனுடைய எதிர்பார்ப்பு என்ன என்று மோகனன் சொல்ல, அதை எப்படியெல்லாம் செய்யலாம் என்று ரஜீவன் விவரிக்க என்று, இருவருமே தம்மை மறந்து வேலை பற்றிய பேச்சில் மூழ்கிப்போயிருந்தனர்.
செல்வராணிக்குப் பார்க்கப் பார்க்க மனம் நிறைந்து போனது. ‘கடவுளே… ரெண்டுபேரும் இப்பிடியே இருந்துடோணும்.’ என்று அவசரமாகக் கடவுளை மனமுருகி வேண்டிக்கொண்டார்.
யாழினியின் நிலையைச் சொல்லவே முடியவில்லை. இன்னுமே அவளுக்கும் ரஜீவனுக்கும் எதுவும் சுமூகமாய் இல்லை. அவளின் தாய்மை நிலையும், மீண்டும் ஒரு சண்டை வரக் கூடாது என்கிற கவனமும் இருவரின் வாயையும் கட்டிப்போட்டிருந்தன.
கூடவே, இருவர் மனத்திலும் இருக்கிற காயம் அவர்களுக்குள் இருந்த இடைவெளியை அப்படியே பிடித்து வைத்திருந்தது. ஆனாலும் அண்ணாவையும் அவனையும் எப்படி இணைக்கப் போகிறோம் என்கிற கேள்வியும், அதனால் உண்டான கவலையும் அவளை அரித்துக்கொண்டுதான் இருந்தன.
இன்றோ அதற்கெல்லாம் பதில்போல் தமையன் சமாதான உடன்படிக்கையை முன்னெடுக்கவும், சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போய் அமர்ந்திருந்தாள்.
அவர்கள் இருவரும் பேசிமுடித்து எழுந்துகொண்ட பிறகும், கலங்கப் பார்த்த விழிகளைத் தடுத்துப் பிடித்தபடி, நன்றியோடு தமையனையே பார்த்தாள் யாழினி.
விழிகளை மூடித்திறந்து அவளை அமைதிப்படுத்திவிட்டு அறைக்கு நடந்தான் மோகனன்.
அவனும் இன்றைக்கே பேசிவிட எண்ணியிருக்கவில்லை. சந்தர்ப்பம் அமைந்ததும் பற்றிக்கொண்டான். ஆரம்பம் சற்றுச் சிரமமாக இருந்தாலும் பேச்சின் மும்முரத்தில் அது அகன்றுபோயிருந்தது.
இப்போது அவனுக்கும் மனத்துக்கு இதமாயிருந்தது. அதுவும், சந்தோசமும் நெகிழ்ச்சியுமாகப் பார்வையாலேயே தன்னிடம் நன்றி தெரிவித்த தங்கையின் பாவம், இதை அவனைச் செய்யத் தூண்டியவளை நினைவூட்டியது.
கைப்பேசியில் அவள் அனுப்பியதை எடுத்துப் பார்த்தான். ‘எனக்கு உங்களைப் பாக்கோணும்’ என்ற வரி இப்போதும் மனத்துக்குள் புகுந்து என்னென்னவோ செய்தது.
இப்போது அவனுக்கு அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. மார்பை நீவி விட்டான். அவள் துடைத்து மருந்திட்டுவிட்ட இடத்தைத் திரும்பிப் பார்த்தான். என்ன உரிமையில், ‘போடா டேய்!’ என்று சொல்லிவிட்டுப் போனாளாம்? இதில், அவன் வேண்டாமாம் அவளுக்கு.
‘நான் வேணாமா உங்களுக்கு? அதையும் பாப்பமே!’ திரும்பவும் சொல்லிக்கொண்டான்.


