ஓ ராதா 33 – 2

நிச்சயமாக இன்னும் வெறுத்து ஒதுக்கியிருப்பாள். திரும்பியே பார்த்திருக்க மாட்டாள். அதனால்தான் எல்லோர் முன்னும் வைத்து தன் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறான். கிடைக்கிற சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு அவனைப்பற்றிய பிம்பத்தை அவள் மனதில் மாற்றியும் அமைத்திருக்கிறான். கள்ளன்! அவள் மனத்தைக் களவாடியே விட்டானே! உதட்டினில் குட்டியாய் சிரிப்பு அரும்ப, அவன் தாடியைப் பற்றி, அவனைத் தன்னை நோக்கி இழுத்தாள்.

விழிகளில் வியப்புடன் அவளது இழுவைக்கு இசைந்தான் அவன். எம்பி அவன் நெற்றியில் தன் உதடுகளை மெதுவாய் ஒற்றி எடுத்தாள் ராதா. விழிகளை மூடி அவள் தந்த முத்தத்தின் இனிமையை முழுமையாய் உள்வாங்கினான் மோகனன். அந்த விழிகளிலும் தன் இதழ்களை ஒற்றி எடுத்தாள் ராதா.

“ராது!” அவன் உதடுகள் அவளின் பெயரை முணுமுணுக்க, கைகள் இடையை வளைத்தது.

என்னவோ தெரியவில்லை அவளுக்குக் கூச்சமும் வரவில்லை, வெட்கமும் வரவில்லை. அவனுடைய கூர் மூக்கைப் பிடித்து ஆட்டியபடி, “கோபம் வந்தா வச்சுச் சாதிக்கிறது இந்த மூக்குத்தானே? எவ்வளவு சமாதானம் செய்தாலும் இறங்கி வராது, என்ன?” என்றாள்.

அவன் சந்தோசமாகச் சிரித்தான். சிரிக்கும் அந்த உதட்டினில் தன் இதழ்களை வைத்து அழுத்தினாள் ராதா. இதை எதிர்பாராதவனின் விழிகள் மின்னியது. தன் அணைப்பையும் இறுக்கினான். அவளும் விலகவில்லை. “இந்தத் தாடிக்காரன எனக்கு நிறைய நிறையப் பிடிச்சிருக்கு. இனி இவர் எனக்குத்தான். கெஞ்சிக் கேட்டாலும் ஆருக்கும் குடுக்கமாட்டன்!” என்றாள், அவன் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு.

அவன் முகம் மலர்ந்தது. அவள் மூக்கோடு மூக்கை உரசியபடி, “உண்மையாவா?” என்றான்.

“ஓ! அப்ப உங்களுக்கு தெரியாது? தெரியாமத்தான் நான் குடிச்சிட்டு வச்ச தேத்தண்ணிய எடுத்து குடிச்சீங்க போல! இதுல இவர் லிப்ஸ்டிக் கறைய வேற பாத்தாராம்!” என்று அவன் கையிலேயே ஒரு அடியைப் போட்டாள் ராதா.

வாய்விட்டுச் சிரித்தான் அவன். “வெறுப்பா பாக்கிற இந்த ரெண்டு கண்ணும் ஆசையா பாத்தா கண்டு பிடிக்க மாட்டனா? அதுதான் ஆசையா சீண்டிப் பாத்தனான்.” என்றான் அவன்.

“அண்டைக்கு அவ்வளவு வடிவா இருந்தீங்க மோகன். வச்ச கண்ண எடுக்கவே ஏலாம இருந்தது.” என்றபடி அவன் கழுத்தை இன்னும் தன்னுடன் இறுக்கியவள், “அச்சோ மோகன்! இந்தத் தாடி குத்துது.” என்றபடி அதைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். அது மீண்டும் வந்து அவன் மார்பிலேயே விழுந்தது.

“கண்றாவி!” என்று அவள் முகத்தைச் சுளிக்க, வாய்விட்டுச் சிரித்தான் அவன். “அப்ப மீசை?” என்று கேட்டவனின் உதடுகள் வேண்டுமென்றே அவளின் கன்னத்தில் உரசின.

“மோகன்! என்ன செய்றீங்க?”அவன் உதட்டின் உராய்வு அவள் கன்னங்களைக் கதகதக்க வைத்தது.

“என்ன செய்றனாம்? நான் ஒண்டும் செய்ய இல்லையே? செய்தது எல்லாம் நீங்கதான்.” அவன் விரல் ஒன்று சிவந்திருந்த கன்னங்களின் அழகை ஆசையோடு வருடிப் பார்த்தது.

உதட்டைப் பற்றியபடி அவன் மார்பிலேயே தன் முகத்தை மறைத்தாள் ராதா. அவனும் அவளை மிக மிக மென்மையாய் அணைத்தபடி, சுவரில் சாய்ந்துகொண்டான்.

நீண்ட நெடிய வருடங்களாய் அமைதியற்று ஓடிக்கொண்டு இருந்த அவனுடைய ஓட்டம், இதோ அவன் கைகளுக்குள் இருக்கிறவளின் அணைப்புக்குள் அமைதியடைந்திருந்தது. அவளின் தலையை மென்மையாய் வருடிவிட்டான். அவனால் நடப்பதை நம்பவே முடியவில்லை. ஆனந்தத்தின் உச்சியில் இருந்தான். உண்மைதானா என்று உணர தன் அணைப்பை சற்றே இறுக்கினான்.

“மோகன்..” அவன் மார்புக்குள் இருந்தே சிணுங்கினாள் அவள்.

“என்னம்மா? நோகுதா?” குனிந்து அவள் முகம் பார்த்து வினவினான் அவன்.

“ம்..”

“எனக்கு இன்னும் இறுக்கமா உங்கள கட்டிப்பிடிக்கோணும் மாதிரி இருக்கே.”

“சரி, கட்டிப்பிடிங்க.” அவளும் தன் அணைப்பை இறுக்கியபடி சொன்னாள்.

ஆசைதீர அவளை இறுக்கி அணைத்து அவளின் உச்சியில் தன் தாடையைப் பதித்தான். அதன் பிறகான நொடிகள் சுகமாய்க் கரைந்துகொண்டிருந்தன. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பேசிக்கொள்ளத் தோன்றவில்லை. ஒருவரின் அணைப்பே மற்றவருக்குப் போதுமாய் இருந்தது.

வெளியே இருள் கவ்வ ஆரம்பிப்பதைக் கவனித்துவிட்டு, “இப்பிடியே எவ்வளவு நேரம் நிக்கிறதா உத்தேசம்?” என்று கேட்டான் அவன்.

“கோட்டைக்குக் கூட்டிக்கொண்டு போறன் எண்டு சொன்னீங்க?” அவனிடமிருந்து விலகாமல் முகத்தை மாத்திரம் உயர்த்திக் கேட்டாள் அவள்.

“இப்ப இருட்டிட்டுது. இன்னொரு நாளைக்குக் கூட்டிக்கொண்டு போகவா?”

“எனக்குத் தெரியாது. எனக்கு இன்னும் உங்களோட இருக்கோணும். எங்கயாவது கூட்டிக்கொண்டு போங்க மோகன்!” சிறு விலகளைக் கூடக் காட்டாது, உரிமையுடன் தன்னிடம் சிணுங்குகிறவளின் அந்த இயல்பு அவனை ஈர்த்தது. அதற்காகவே அவளின் ஆசையை நிறைவேற்றத் துடித்தான். இருந்தும், வீட்டில் கதைக்காமல் யாரின் கண்ணில் படுவதும் அவனுக்குச் சரியாகப் படவும் இல்லை.

“சும்மா லோங் டிரைவ் ஒண்டு போவமா?”

“ம்ஹூம்! கார்ல இப்பிடி கட்டிப்பிடிக்கேலாது. எனக்கு இப்பிடி வேணும்!”

அவன் உதட்டின் சிரிப்பு விரிந்தது. “அப்ப இங்கயேதான் இருக்கோணும்.” என்றான் அவளை ஆசையோடு பார்த்தபடி.

அவனை நிமிர்ந்து முறைத்தாள் ராதா. “என்ன, வெளில கூட்டிக்கொண்டு போகப் பயமா இருக்கா?” என்றவளுக்கு அப்போதுதான் அதுவரை அவன் ஒரு முத்தம் கூடத் தரவில்லை என்பதே புரிந்தது.

“பாக்கத்தான் சாமியார் மாதிரி எண்டு பாத்தா ஆளும் சாமியார் தான் போல!” என்றாள் முறைப்புடன்.

அதைக்கேட்டு நகைத்தான் மோகனன். “ஏன் இந்தக் கேள்வி?”

“போடா டேய்!” தனக்கு இருக்கும் ஆசையில் கொஞ்சம் கூட அவனுக்கு இல்லையா என்கிற கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு கடுகடுத்தாள் அவள்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock