இத்தனை நாட்களாக மோகனனின் கோபத்தை, மனத்தின் அழுத்தத்தை, சீறிப்பாயும் ஆத்திரத்தை எல்லாம் தாங்கிக்கொண்ட பஞ்ச்பேக், முதன் முறையாக அவனுடைய சந்தோசத்தை, மகிழ்ச்சியை வாங்கிக்கொண்டிருந்தது.
நேரம் இரவு பத்தைத் தாண்டியிருந்தது. இருந்தும் விடாமல் குத்திக்கொண்டிருந்தான். அவனுக்கு உறக்கமே வரவில்லை.
சவுதிக்கே போய்விடலாம்; மிகுதிக் காலத்துக்குச் சலசலப்பில்லாத அந்த வாழ்க்கையே போதும்; இனி என் வாழ்க்கையில் யாரும் வேண்டாம் என்று முடிவுகளை எடுத்திருந்தாலும் மின்னி மறையும் கணப்பொழுது ஒன்றில் வெறுமை முகத்தில் அறைந்துவிட்டுப் போய்விடும்.
அந்த நேரங்களில் மிகவுமே தடுமாறிப் போய்விடுவான். ஒருவிதப் பயம் வந்து ஆட்கொள்ளும். இனி இந்தத் தனிமைதான் நிரந்தரமா என்று தவித்தும் போய்விடுவான். பிறகு அதிலிருந்து மீண்டுகொள்வான். இதுவரையில் இப்படித்தான் இருந்திருக்கிறது அவன் வாழ்க்கை.
இப்படி இருக்கையில்தான் அவன் முன்னால் வந்து நின்றாள் அவனுடைய தேவதைப் பெண். அவனை அவனுடைய அத்தனை சாபங்களில் இருந்தும் இரட்சித்துக்கொண்டாள்.
அவளின் நினைவு வந்ததும் அவனால் அதற்குமேல் குத்த முடியவில்லை. உதட்டோரம் முறுவல் அரும்ப, கையுறைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு ஜன்னலோரம் சென்று நின்றான். வெளிப்புறத்தில் தெரிந்த கும்மிருட்டு மிகுந்த அழகுடன் ஜொலித்தது.
அவள், அவளின் விரிந்த விழிகள், அவ்விழிகள் அப்படியே அவனைச் சுருட்டி தனக்குள் இழுத்துக்கொண்ட விதம், தாடியைப் பிடித்து இழுத்து அவள் தந்த முத்தம்… அதை நினைத்ததுமே அவன் உதட்டினில் அழகான முறுவல் ஒன்று மலர்ந்தது. நேரத்தைப் பாராமல் கைப்பேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான்.
“பார்ரா! ஒரு காலத்தில போடுற மெசேஜுக்கே பதில் வராதாம். இப்ப ஃபோனே வருது.” என்றபடிதான் அழைப்பையே ஏற்றாள் அவள்.
செவியினை மாத்திரமல்லாமல் மனத்தையும் நிறைத்த அவளின் பேச்சை ரசித்துச் சிரித்துவிட்டு, “என்ன செய்றீங்க?” என்று வினவினான் அவன்.
“உங்களை நினைச்சுக்கொண்டு இருக்கிறன்.”
“ம்ஹூம்!” என்றான் சந்தோசமாக.
“நீங்க என்ன செய்றீங்க?”
“இவ்வளவு நாளும் ஒருத்தி என்ர மனதுக்க இருந்து வண்டு குடையிற மாதிரி என்னைப் படாத பாடு படுத்தினவா. இண்டைக்கு என்ர கழுத்தக் கட்டிக்கொண்டு வேற ஆருக்கும் என்னை விட்டுத்தரமாட்டன் எண்டும் சொல்லிட்டா. அவாவை மறந்து எந்த வேலையும் பாக்கேலாம இருக்கு. அதுதான் என்ன செய்வம் எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்.” சன்னச் சிரிப்புடன் சொன்னான் அவன்.
ராதாவின் முகம் பூவாய் மலர்ந்து போனது. இந்த நொடியே அவனிடம் ஓடிவிடும் ஆசை எழுந்தது. அடக்கிக்கொண்டு, “இதெல்லாம் பொல்லாத நோய் மோகன். கெதியில வெளில வந்துடுங்க. இல்லையோ ஆபத்து உங்களுக்குத்தான்.” என்றாள் கலகல சிரிப்பை அடக்கிய குரலில்.
“சாகிற வரைக்கும் எனக்கு அவவிட்ட இருந்து விமோட்சனம் வேண்டாம் ராது. காலத்துக்கும் அவவின்ர கைக்க இருக்கத்தான் ஆசையா இருக்கு.” ஆழ்ந்த குரலில் சொன்னான் அவன்.
“உங்கள…” அதட்டப் போனவளுக்கு அது முடியாமல் விழிகளின் ஓரம் கண்ணீர் பூக்கள் பூத்தன. “அந்தளவுக்கு நான் ஒண்டுமே செய்யேல்ல மோகன்.” என்றாள் தழுதழுத்த குரலில்.
“ஒண்டும் செய்யேல்லையா?” என்று கேட்டுவிட்டு மெல்லிய சிரிப்பைச் சிந்தினான் அவன். “வெளில தைரியமா காட்டிக்கொண்டாலும் உள்ளுக்க நிறையப் பயந்திருக்கிறன் ராது. ஒரு வெறுமை, ஒரு தனிமை அது கொடுமை ராது. ஆனா இப்ப…” என்றவன் மேலே பேசாமல் அழுத்தமான முத்தம் ஒன்றை அவளுக்கு அனுப்பிவைத்தான்.
உதட்டைக் கடித்தாள் ராதா.
“ராது…”
“ம்…”
“எனக்கு?”
நேரில் கொடுத்தபோது வராத வெட்கம் இப்போது வந்தது. “ம்ஹூம்!” என்று மறுத்தாள் அவள்.
“எனக்கு வேணும்!”
“பிளீஸ் மோகன்.”
அவன் பதில் சொல்லாமல் நின்றான். ‘பிடிவாதக்காரன்!’ மனத்தில் செல்லமாய்த் திட்டிக்கொண்டு, பெரும் தயக்கத்துக்கு மத்தியில் ஒன்றை அனுப்பிவைத்தாள் அவள். அவன் தேகம் முழுவதும் அவளின் முத்தம் பரவிப் படர்ந்தது. “அங்க வரவா?” என்றான் ஆழ்ந்த குரலில்.
அவள் மிரண்டு போனாள். “என்னது? இந்த நேரமா?”
“நேரத்துக்கு என்ன?”
“நான் நாளைக்குப் பள்ளிக்கூடம் போறேல்லையா?”
அப்போதுதான் நேரத்தைப் பார்த்தான். இரவு பதினொன்றைத் தாண்டிக்கொண்டிருந்தது. “சொறிமா, நான் கவனிக்கேல்ல. நீங்க படுங்க.” என்று வைக்கப்போனவனை அவசரமாகத் தடுத்தாள் அவள்.
“மோகன்!”
“ம்.”
“இன்னும் கொஞ்ச நாள்தான். பிறகு எப்பவும் உங்களோடதான் நான் இருப்பன். அதுவரைக்கும் எதைப் பற்றியும் யோசிக்காம நல்லபிள்ளையா இருக்கோணும். சரியா?” ஆத்மார்த்தமான தன் அருகண்மைக்கு அவன் ஏங்குவதை உணர்ந்தவள் குழந்தைக்குச் சொல்வதுபோல் கனிவுடன் சொன்னாள்
“ம்ம்.”
“நாளைக்குக் கடைக்கு வருவீங்களா?”
“வராம?” என்றான் அவன்.
அவள் உதட்டினில் சிரிப்பு அரும்பியது.
“அண்டைக்கு என்னவோ நேரம் இல்லை எண்டு சொன்னீங்க?” மெல்லிய கேலி இழையோடியது அவள் குரலில்.


