தலையைக் கோதிக்கொண்டு மெலிதாகச் சிரித்தான் அவன். அது அவளின் செவிகளில் வந்து விழக் கன்னங்கள் கதகதத்தன. “அப்ப, அங்க பாப்பம் சரியா? குட் நைட்!” அவனிடம் விடைபெற்று அழைப்பைத் துண்டித்துவிட்டுத் தலையணையில் முகம் புதைத்தவளின் முகம் செக்கச் சிவந்து போயிருந்தது.
*****
இனி வருகிற ஒற்றை நாளினைக் கூடத் தேவையற்று வீணடிக்க மோகனன் தயாராகவே இல்லை. எல்லோருமே வேலைக்குச் செல்லும் பரபரப்பில் இருக்கும் காலைப்பொழுதில் நிறுத்தி நிதானமாகப் பேச முடியாது என்பதில், அன்று மாலையே வேலை முடிந்து வந்ததுமே ரஜீவனைப் பேச அழைத்தான்.
தங்கையின் மனத்தை உணர ஆரம்பித்த நாளிலிருந்தே இதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தான் ரஜீவன். அவன் சந்திக்க விரும்பாத ஒரு சூழ்நிலை. அதேநேரம், தவிர்க்க முடியாத பேச்சு வார்த்தை. எதையும் காட்டிக்கொள்ளாமல் அன்று போலவே இன்றும் இருவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்துகொண்டனர்.
எக்காரணம் கொண்டும் அவர்கள் இருவரின் நடுவில் புகுந்துவிடக் கூடாது என்கிற அனுபவப் பாடத்தில், அன்னையை அழைத்துக்கொண்டு அறைக்குள் புகுந்திருந்தாள் யாழினி. ஆயினும் அன்னை மகள் இருவரின் கவனம் இங்கேயே குவிந்திருந்தது.
ரஜீவனைப் பார்த்தான் மோகனன். தன் பார்வையை நேரே சந்தித்தவனிடம் பேச வார்த்தைகள் வருவேனா என்றது. “வாழ்க்கையில முதன் முதலா திணறுது ரஜீவன்.” என்றான் சிறு சிரிப்புடன்.
ரஜீவனுக்கு அது ஏதோ ஒரு வகையில் திருப்தி அளித்தது. எதையும் காட்டிக்கொள்ளாமல் அவனையே பார்த்தான்.
“என்ன கதைக்கப்போறன் எண்டு ஓரளவுக்கு ஊகிச்சு இருப்பீங்க.” என்று ஆரம்பித்தான்.
ரஜீவனுக்கு மட்டுமல்ல அறைக்குள் இருந்த பெண்களுக்குக் கூட அவன் என்ன கதைக்கப்போகிறான் என்று தெரிந்துதான் இருந்தது. நெஞ்சு நடுங்க ஒருவர் மற்றவரின் கையைத் துணைக்குப் பற்றியபடி அமர்ந்திருந்தனர். அப்போதும், தன் பார்வையில் கூட எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தான் ரஜீவன்.
‘நானும் இலேசுப்பட்டவன் இல்லை’ என்று சத்தமே இல்லாமல் காட்டும் ரஜீவனை எண்ணி உள்ளூரச் சிரித்துக்கொண்டான் மோகனன். ஒருமுறை தன் கேசத்தை இரண்டு கைகளாலும் கோதிவிட்டான். பின் நிமிர்ந்து, “உங்கட தங்கச்சிய எனக்குப் பிடிச்சிருக்கு ரஜீவன்.” என்றான் நேரடியாக.
ரஜீவனின் முகம் இறுகியது. அந்த மேசையில் குட்டிப் பிரம்புக்கூடை ஒன்றினுள் இருந்த மாம்பழத்தை எடுத்துக் கையினில் உருட்டினான்.
கேட்பதற்கு அவன் எவ்வளவு தயங்கினானோ அதற்குச் சிறிதும் குறையாமல் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறினான் ரஜீவன்.
இதே வீட்டில் வைத்து, ஒருமுறை இதைப் பற்றிப் பேசி, உண்டான பிரச்சனைகள் வேறு பெரும் பாடமாய் மறக்காமல் இருக்கையில் கவனமாக வார்த்தைகளைக் கோர்க்க முயன்றான். முடியவே இல்லை.
“ஏன் இவ்வளவு யோசனை ரஜீவன்?” கேட்கிற வரைதான் மோகனனுக்குத் தடுமாற்றம். கேட்டுவிட்ட பிறகு அவனை அழுத்திக்கொண்டிருந்த அழுத்தம் வெளியேறி இருந்தது. இப்போது தெளிவாய் அவன் முகம் பார்த்தே கதைதான்.
“உங்களுக்கு என்னைப் பிடிக்காது எண்டு தெரியும். என்னில நல்ல எண்ணம் இல்லை எண்டும் தெரியும். அதுக்கு ஒரு காலத்தில நடந்த கசப்பான விசயங்கள் காரணம் எண்டும் தெரியும். ஆனா, அதையெல்லாம் தாண்டித்தான் யாழிய விரும்பிக் கலியாணமும் கட்டி இருக்கிறீங்க. அதேதான் எனக்கும் நடந்திருக்கு.” என்றுவிட்டு ரஜீவனின் முகம் பார்த்தான்.
சொல்லி முடி என்பதுபோல் அமர்ந்திருந்தான் அவன்.
“இதையெல்லாம் நானும் எதிர்பார்க்கேல்ல. திட்டம் போட்டுச் செய்யவும் இல்ல. நீங்க நம்புவீங்களா தெரியாது, ஆரம்பம் இது சரியா வராது எண்டு விலகித்தான் போனனான். ஒரு கட்டத்தில ஏலாம போயிற்று. அவா இல்லாம எனக்கு எதுவும் இல்லை எண்டுறது விளங்கினது. அதை, முறையா உங்களிட்டக் கதைக்கிறதுதான் சரி எண்டு வந்திருக்கிறன்.” என்று, தன்னை அவனுக்கு விளக்கினான்.
அவன் இவ்வளவு சொன்ன பிறகும் தான் அமைதியாக இருப்பது சரியாய் வராது என்று ரஜீவனுக்கும் புரிந்தது. அதில், “எனக்கு உங்களப் பிடிக்காதுதான். உங்களில நல்லபிப்பிராயம் இல்லைதான். அதுக்காக நான் மறுக்கேல்ல. எனக்கு ராதா நல்லாருக்கோணும். சந்தோசமா வாழவேணும். அந்த நம்பி…” என்றவனை மேலே தொடர விடாது,
“அவா என்னட்ட மட்டும்தான் சந்தோசமா இருப்பா ரஜீவன். நம்புங்க.” என்று, அடுத்த நொடியே பதில் சொன்னவனை மெல்லிய அதிர்ச்சியோடு பார்த்தான் ரஜீவன்.
தங்கை சம்மதம் சொல்லாமல் அவன் இப்படி நேரடியாகத் தன்னிடம் வரப்போவதில்லை என்று தெரியாமல் இல்லை. அதுவே அவனை என்னவோ செய்ய ஆரம்பித்து இருந்தது. அதை இன்னும் கூட்டுவதுபோல் இருந்தது அவனுடைய திடமான பதில்.
முன்னர் போன்று அவசரப்பட விரும்பவில்லை அவன். வார்த்தைகளை விடவும் முயலவில்லை. உள்ளே இருக்கும் பெண்களும் படபடக்கும் நெஞ்சோடு காதைத் தீட்டிக்கொண்டு காத்திருக்க, சற்று நேரத்துக்கு நெற்றியை அழுத்திவிட்டபடி யோசித்தான். பின், தன் கைப்பேசியை எடுத்து ராதாவுக்கு அழைத்து, மைக்கையும் அழுத்தினான்.
இதை மோகனன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டான். அந்தப் பக்கம் அழைப்பை ஏற்ற ராதா, “அண்ணா!” என்றாள்.
உள்ளே இருந்த செல்வராணி பெரும் கலக்கத்துடன் யாழினியைப் பார்த்தார். அவள் அவரின் கையைத் தட்டிக்கொடுத்தாள். “ராதா மறுக்கமாட்டாள். நீங்க பயப்படாதீங்க.” என்றாள் நம்பிக்கையோடு.
“என்னம்மா செய்றாய்? அம்மா எங்க.” என்று வினவினான் ரஜீவன்.
“அம்மா டிவி பாக்கிறா அண்ணா. நான் சாறி அயர்ன் பண்ணிக்கொண்டு இருக்கிறன்.”
“சாப்பிட்டாச்சா?”
“ஓ…! அது எப்பவோ முடிஞ்சுது. நீங்க என்ன செய்றீங்க? அண்ணி சுகம்தானே.” என்று தானும் விசாரித்தாள் ராதா.
“ஓம் மா.” என்றவன் அமைதியானான். அவனுக்கு இதை எப்படித் தங்கையிடம் கேட்பது என்று தெரியவில்லை.
அவனுடைய அந்த மௌனம் அவன் வேறு என்னவோ பேசப் பிரியபடுகிறான் என்று ராதாவுக்குச் சொல்லிற்று. என்ன என்று அவளுக்கும் தெரியும்தானே.


