ஓ ராதா 34 – 3

கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன. அயர்ன் செய்வதை நிறுத்திவிட்டு, வயரையும் கழற்றிவிட்டு, கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

“ஏதாவது கதைக்கோணுமா அண்ணா?” தயங்கிய குரலில் மெல்லக் கேட்டாள்.

“ம்ம்… நீ மோகனனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” அந்தக் கேள்வியில் மோகனனின் உதட்டோரம் அழுந்தியது. வேகமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டு அவளின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

“அண்ணா…” ராதாவின் குரல் மெலிதாகக் கரகரத்தது.

“சொல்லம்மா…” ரஜீவனுக்குள்ளும் மிகப்பெரிய போராட்டம்தான்.

தங்கையின் மனத்தை நோகடிக்கவும் தைரியம் இல்லை. அதே நேரம் அவள் சம்மதித்துவிடக் கூடாது என்றும் பரிதவித்தான்.

“அண்ணா, அது… எனக்கு… அவரைப் பிடிச்சிருக்கு. அவருக்கும்.”

அதுவரை தனக்குள் எதற்கோ போராடிக்கொண்டிருந்த மோகனன் ஒருமுறை விழிகளை அழுத்தி மூடித் திறந்தான். ஆழ்ந்த மூச்சு ஒன்று அவனை மீறியே வெளியேறியது. மேசையில் கோர்த்து இருந்த தன் கரங்களிலேயே பிடிவாதமாகப் பார்வையை நிலைக்கவிட்டபடி அமர்ந்திருந்தான்.

ரஜீவனின் பார்வை மோகனனில்தான். “ஆனாம்மா அவர் முந்திச் செய்ததை எல்லாம்…” எனும்போதே வேகமாக இடைமறித்தாள் அவள்.

“அண்ணா பிளீஸ்! அண்டைக்கே நான் உங்களுக்குச் சொன்னனான். பழசை மனதில வச்சுக்கொண்டு அவரைப் பாக்காதீங்க எண்டு. அதெல்லாம் எப்பவோ நடந்தது. அவர் இப்ப அப்பிடி இல்லை அண்ணா. நல்லவர். செய்ததுக்குப் போதுமான அளவுக்குப் பட்டுட்டார். திருந்தி இருக்கிறவரை அதையே சொல்லி சொல்லி நோகடிக்கக் கூடாது. அவருக்கும் வலிக்கும். நீங்க அவரைப் பற்றி இப்பிடிக் கதைச்சா எனக்கும் வலிக்குது அண்ணா.” எனும்போதே அதற்குமேல் அவன் முன்னால் இருக்க முடியாமல் எழுந்துபோனான் மோகனன்.

போகிறவனின் முதுகையே பார்த்தபடி, “ஆனா, எனக்குப் பயமா இருக்கேம்மா. நீ நல்லா இருக்கோணும். நான் அத மட்டும்தான் பாக்கோணும். விளங்குதா உனக்கு? நீ ஆசைப்படுறதைச் செய்யத்தான் எனக்கும் ஆசையா இருக்கு. ஆனா…” அதற்குமேல் பேசமுடியாமல் அவனுக்கும் வார்த்தைகள் திக்கின.

“எனக்குத் தெரியும் அண்ணா. அதே மாதிரி உங்களைத் தாண்டி நானும் போகமாட்டன். எனக்கும் என்ர அண்ணான்ர சந்தோசமும் நிம்மதியும் முக்கியம்.” நெகிழ்ந்த குரலில் மென்மையாய் எடுத்துரைத்தாள் ராதா.

ரஜீவன் நிலைகுலைந்து நின்றான். நெஞ்சு தங்கையின் பாசத்தில் நெகிழ்ந்துபோயிருந்தது.

நேசிக்கும் நெஞ்சம் தன் துணையின் கை சேர்ந்துவிட வேண்டும் என்று எந்தளவுக்குப் பரிதவிக்கும் என்று காதலித்து மணந்த அவன் உணரமாட்டானா?

அவள் ஆசைப்படும் ஒன்றை இந்த நொடியே இந்தா பிடி என்று தூக்கிக் கொடுத்துவிடத்தான் அவன் நெஞ்சமும் பரபரத்தது. ஆனால்… ஆனால்… திரும்பி மோகனனைப் பார்த்தான். வீட்டின் வாசலில் இறுகிய தேகத்தோடு இவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தான் அவன்.

“அதே மாதிரி நீங்க பயப்பிடுறதும் எனக்கு விளங்குது அண்ணா. அது தேவை இல்லை எண்டுதான் சொல்லுறன். இப்ப நீங்க அவரோடதானே வேலை செய்றீங்க. ஒரே வீட்டிலதானே இருக்கிறீங்க. அவர் ஏதாவது பிழையா நடந்து பாத்தீங்களா? எப்பவோ நடந்த ஒண்டுக்காக அவரை வெறுக்கிறது சரியா அண்ணா?”

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மோகனனின் நிலைதான் இன்னுமின்னும் மோசமாகிக்கொண்டே போயிற்று.

அவன் என்னவோ ரஜீவனோடு கதைத்துச் சம்மதம் வாங்கத்தான் பேச அழைத்தான். இப்போதோ அது அப்படியே மாறி, அவனுடைய தேவதைப்பெண் அவனுக்காகப் பேசிச் சம்மதம் வாங்க முயன்றுகொண்டிருக்கிறாள்.

அவன் உணர்வுகளை வடிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நொடியே அவளின் கைகளுக்குள் புகுந்துகொள்ள உடலும் உள்ளமும் துடித்தன.

அவளின் கேள்விகளில் இருக்கிற நியாயம் ரஜீவனின் அறிவுக்குப் புரியாமல் இல்லை. இந்த மனம்தான் ஏதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு முரண்டியது. அதில், “நான் சம்மதிக்காட்டி?” என்று வினவினான்.

“காலத்துக்கும் உங்களுக்குத் தங்கச்சியா மட்டும் இருப்பன். அவரும் உங்களை மீறி என்னை வா எண்டு கூப்பிட மாட்டார்.” எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் சொன்னாள் அவள்.

“கடைசி வரைக்கும் நான் சம்மதிக்காட்டி?”

“எப்பவும் நான் உங்கட தங்கச்சி மட்டும்தான்!”

“ஏன் ராது?” என்றான் அவள் பாசத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல்.

அவள் அவனுக்குத் தங்கைதான். என்றாலும் வளர்ந்தவள். என் முடிவு இதுதான் என்று அறிவித்திருக்கலாம். இவரைத்தான் மணக்கப் போகிறேன் என்று அவளே அவனைக் கொண்டுவந்து இவனின் முன்னே நிறுத்தியிருக்கலாம். குறைந்த பட்சமாகக் கௌசிகன் மூலமாவது இதை முன்னெடுத்திருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டுத் தன் சம்மதத்தைக் கேட்டுக்கொண்டு நின்றவளின் பாசத்தில் முற்றிலுமாகக் கரைந்து போயிருந்தான் ரஜீவன்

“தெரியேல்ல அண்ணா. உங்கள நோகடிச்சிட்டுப் போய் என்னால அவரோட சந்தோசமா வாழ ஏலாது. நான் அப்பிடிப் போகவும் மாட்டேன். அதேமாதிரி அவரில்லாம எனக்கு ஒரு வாழ்க்க இல்லை. என்னை அவரிட்டயே குடுத்திடுங்கோ அண்ணா, பிளீஸ்.”

அவள் அழுகிறாள் என்று அவளின் குரலே சொல்லிற்று. மோகனனின் தேகம் விறைத்து நிமிர்ந்தது. இந்த நொடியே அவளைத் தன் கைகளுக்குள் பொத்திக்கொள்ள வேண்டும் போல் எழுந்த வேகத்தை அடக்க முடியாமல் நின்றான்.

அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “சரி ராது, நான் உன்னோட பிறகு கதைக்கிறன். நீ வேலைய பார்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் ரஜீவன்.

அடுத்த கணமே அவன் முன்னே வந்து நின்று, அவனின் கையைப் பற்றினான் மோகனன், “அவவ என்னட்டயே தந்திடுந்த ரஜீவன், நீங்க பயப்பிடுற மாதிரி எதுவும் நடக்காது!” என்றான் அவன் விழிகளையே பார்த்து.

ரஜீவன் நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை. தன் கையை அழுத்தமாகப் பற்றியிருந்த அவன் கரத்தில் ஓடிய மெல்லிய நடுக்கம் அவன் மனத்தை அப்படியே சொன்னது.

அவனைப் பார்த்தான். ஒருவர் மற்றவருக்காக இவ்வளவு துடிக்கும்போது அவன் எதற்கு நந்தியாய் நிற்க? என்னவோ தங்கையின் அன்பின் முன்னே கண்முன்னே நிற்கிறவன் கூட அடங்கித்தான் போவான் என்று உள்மனது சொல்ல, தலையைச் சரி என்பதுபோல் அசைத்தான்.

நம்பமாட்டாமல் ஒருகணம் திகைத்தாலும் அடுத்த கணமே அவனை ஆரத்தழுவிக்கொண்டான் மோகனன். “நன்றி! நன்றி ரஜீவன். இந்த முடிவ எடுத்ததுக்காக எண்டைக்கும் நீங்க கவலைப்பட மாட்டிங்க. அதுக்கு நான் பொறுப்பு.” என்றான் மனத்திலிருந்து.

அதற்குள் பெண்கள் இருவரும் விறுவிறு என்று வெளியே வந்து நின்றிருந்தனர். சந்தோசத்தில் திக்குமுக்காடினர். ஆனந்தக் கண்ணீர் பெருகி வழிய ஆரம்பித்திருந்தது.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock