கௌசிகனுக்குப் போதும் போதும் என்றாயிற்று. “ஏன்டா இப்பிடி என்ர பிள்ளைகளை அழ வச்சுக்கொண்டு இருக்கிறாய்.” என்றான் கோபமாக.
மோகனனுக்குப் பிள்ளைகளோடு திணறும் தமையனைப் பார்க்கையில் சிரிப்புப் பொங்கியது. இப்போது சிரித்தால் இன்னுமே பேசுவான் என்று அடக்கிக்கொண்டான்.
மொத்த வீடுமே மிதுனாவைத் தேற்ற முடியாமல் தோற்றுப்போனது. கடைசியில் அவளருகில் சென்று அமர்ந்த மோகனன், வலுக்கட்டாயமாக அவளைத் தூக்கி தன் மடியில் இருத்தினான்.
அப்போதும், “என்னை விடுங்கோ. நான் உங்களோட கோவம். கதைக்கமாட்டன்!” என்று அவனிடமிருந்து விடுபடத் திமிறியவளை விடாமல் மடியிலேயே இருத்தியபடி, “முதல்ல இருந்து வளத்தா அவ்வளவு பெரிய தாடி எப்பிடி வந்தது எண்டு எங்கட மிதுக்குட்டிக்குத் தெரியவரும் எண்டுதான் வெட்டினான். கொஞ்சம் கொஞ்சமா வளரேக்க எங்கட மிதுக்குட்டி பாப்பா, ஃபோட்டோ எடுத்து வைப்பா, எத்தின மாதத்தில வளந்தது எண்டு அவவுக்குத் தெரிய வரும் எண்டு நினைச்சன். இதெல்லாம் வேண்டாமோ? அப்ப, இனி சித்தப்பா திரும்ப வளக்க வேண்டாமா?” என்று, அவளின் காதுக்குள் அவன் ஓராயிரம் சமாதான வார்த்தைகள் சொல்லச் சொல்லத்தான் அவளின் அழுகை மெல்ல மெல்லக் குறைந்தது.
எவ்வளவோ நேரத்துக்குப் பிறகு கண், மூக்கு, முகம் எல்லாமே அழுததில் சிவந்து போயிருக்க, மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தை நன்றாகப் பார்த்தாள்.
மனம் கனிந்து போனது சிறிய தகப்பனுக்கு. “சித்தப்பான்ர செல்லம் இப்பிடித்தான் அழுறதா? ம்? முகமே வீங்கிப் போச்சு.” என்று, தன் கைகளாலேயே அந்தப் பிஞ்சு முகத்தைத் துடைத்துவிட்டான்.
“நீங்க ஏன் சித்தப்பா தாடியை வெட்டினீங்க?” எனும்போதே மீண்டும் கண்கள் இரண்டும் குளமாகி, கன்னத்தில் கண்ணீராய் ஓடவும் அவனுக்குத் தாங்கவே இல்லை.
அவளைத் தன் மார்போடு சேர்த்தபடி, “இல்ல செல்லம். இனி சித்தப்பா வெட்ட மாட்டன், சரியோ? இன்னும் நீளமா வளப்பம். எங்கட குஞ்சு எல்லோ. அழக் கூடாது!” என்று அவளைத் தேற்றி முடிப்பதற்குள் அங்கிருந்த எல்லோருக்குமே போதும் போதும் என்றாயிற்று.
ராதாவுக்கும் கவலையாயிற்று. இந்தளவுக்கு அழுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. வேகமாக வந்து அவளருகில் அமர்ந்து தானும் அவள் முகத்தைத் துடைத்துவிட்டாள். பின் அவளை இழுத்துத் தன் மடிக்குக் கொண்டுவந்து, அவளின் காதில் ரகசியமாக, “உங்கட சித்தப்பான்ர முகம் தாடியோட பாத்தா காடு மாதிரியே இருக்கும். சித்திக்கு அதப் பாத்தா பயம். அதுதான் வெட்டச் சொன்னனான். சொறி செல்லம்.” என்றாள்.
உன்னிப்பாகக் காது கொடுத்துக் கேட்டவள் அவள் காடு மாதிரி இருக்கும் என்று சொன்னதும் மோகனனைப் பார்த்துக் கிளுக் என்று சிரித்தாள்.
“என்னவாம் உங்கட சித்தி?” என்றான் மோகனன் அவளின் சிரிப்பை ரசித்தபடி.
அவன் மடிக்கு வேகமாகத் தாவி, “உங்கட முகம் தாடியோட காடு மாதிரி இருக்காம். அது சித்திக்குப் பயமாம்.” என்றாள் அவன் காதுக்குள்.
பொய்யாக ராதாவை முறைத்துவிட்டு, “சித்தப்பாவை முதல் முதல் பாக்கேக்க எங்கட செல்லத்துக்குப் பயமா இருந்ததா?” என்று வினவினான் அவன்.
அவன் மடியில் இரண்டு பக்கமும் கால்களைப் போட்டு அவனைப் பார்ப்பதுபோல் அமர்ந்திருந்தவள் குட்டிச் சிரிப்புடன் இல்லை என்று தலையை அசைத்து மறுத்தாள்.
“பாத்திங்களா? உங்கட சித்தி ஒரு பயந்த கோழி. அதுதான் பயந்திருக்கிறா.” என்றான் அவன் இப்போது அவளின் காதுக்குள் ரகசியமாக.
அவளும் ஓடிப்போய் ராதாவின் காதுக்குள், “நீங்க பயந்த கோழியாம்.” என்றாள்.
“பின்ன? யோசிச்சுப் பாருங்கோ, காட்டுல நிக்கிற சிங்கம் மாதிரியே முன்னுக்கும் முடி பின்னுக்கும் முடி எண்டு சிலுப்பிக்கொண்டு வந்தா பயம் வருமா இல்லையா?” என்று முகத்தையும் பயந்தவள் போல் வைத்துக்கொண்டு ராதா சொல்ல, அவளுக்கு அடக்க முடியாத சிரிப்பு.
அதை ஓடிப்போய் அவன் காதுக்குள் போட்டுக்கொடுக்க, அவன் இவளைப் பார்த்து முறைத்தான். அவளோ பொங்கி பொங்கிச் சிரித்துக்கொண்டிருந்தாள். பாத்திருந்த எல்லோர் முகமும் மலர்ந்து போயிற்று.
“ஒரு தாடிக்கு எவ்வளவு பெரிய பிரச்சினை?” மிதுனாவுக்குக் கேட்காத குரலில் சிரிப்புடன் சொல்லி அலுத்துவிட்டு அப்போதுதான் சமையல் கட்டுக்கு நடந்தார் செல்வராணி. பின்னே, சின்ன மருமகளுக்கு என்று செய்துவைத்த முறுக்கு இருக்கிறதே.
ஒரே ஒருவனுக்கு மட்டும் பொறுக்கவே இல்லை. சித்தப்பா தன்னைக் கவனிக்க மறந்ததில் அவனுக்குச் சினம் பொங்கிற்று. தாயையும் தகப்பனையும் இருக்க நிற்க விடாமல் சினுங்க ஆரம்பித்தான். என்ன செய்தும் அவனைச் சமாளிக்க முடியாமல் போக, “ஏன்டா? உன்னை ஆரடா தாடிய எடுக்கச் சொன்னது?” என்று அதட்டினான் கௌசிகன்.
மோகனனுக்கோ சிரிப்பை அடக்கவே முடியவில்லை. “நீங்கதானே அண்ணா எடு எடு எண்டு பேசிக்கொண்டு இருந்தீங்க? இப்ப இப்பிடிக் கேட்டா?” என்றான் வேண்டுமென்றே.
“அதுக்குச் சொல்லாம கொள்ளாம எடுப்பியா? இனி உன்ர உடம்பில என்ன செய்றதா இருந்தாலும் என்ர பிள்ளைகளிட்டக் கேட்டு, அனுமதி வாங்கிச் செய்.” என்றவனின் பேச்சில் வாய்விட்டுச் சிரித்தபடி வந்து மதுரனைத் தூக்கிக்கொண்டான்.
அப்போதும் தகப்பனிடம் போக அவன் சினுங்க, “சித்தப்பாவப் பாத்து என்ன சிணுக்கம்? ம்?” என்றவன் மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து அவனைச் சிரிக்க வைத்தான். அவன் வயிற்றில் வாயை வைத்து ஊதி கிச்சு கிச்சு மூட்டினான். அப்படியே சின்னவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று ஐஸ்கிறீம் வாங்கிக்கொடுத்து அழைத்து வந்தான்.
மதுரனைக் கையில் வைத்துக்கொண்டு ராதாவின் அருகிலேயே சென்று அமர்ந்துகொண்டான். அதைப் பார்த்த கௌசிகன், “ராதா, நீ வாம்மா! வந்து மன்னிப்பைக் கேளு.” என்று மோகனனை வம்பிழுக்க ஆரம்பித்தான்.
தமையனை ஒருமுறை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் மதுரனில் கவனம் செலுத்தினான் மோகனன்.
ராதா என்ன செய்வது என்று தெரியாது கௌசிகனையும் மோகனனையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“டேய்! அவள் உனக்கு முன்னால மன்னிப்புக் கேக்கப் பயப்பிடுறாள் போல. சொல்லு.” என்றான் மீண்டும் கௌசிகன்.
“அவா மன்னிப்புக் கேக்க மாட்டா எண்டு அண்டைக்கே சொல்லிட்டன்.” என்றான் அவன்.
“சரி, என்னட்டக் கேக்க வேண்டாம். அம்மா அப்பாட்டக் கேக்கத்தானே வேணும்.”
அதைக் கேட்டு ராதாவுக்கு ஒரு மாதிரி ஆகிற்று. உண்மைதானே அவள் செல்வராணியிடம் அன்றைய நாளுக்குச் சிறு விளக்கம் கூடக் கொடுக்கவில்லையே. தவிப்புடன் மோகனனை பார்க்க, “அம்மா, உங்களிட்ட அவா மன்னிப்புக் கேக்கோணுமா?” என்றான் அவன் நேரடியாக.
“என்ன கதை இது? அவள் முதல் என்ன பிழை செய்தவள் மன்னிப்பு கேக்க.” என்றார் அவர்.
தமையனிடம் புருவங்களை உயர்த்தினான் அவன்.
“என்ன பார்வை? முதல் அவளைக் கதைக்க விடு. உனக்குப் பயத்தில வாயே திறக்கிறாள் இல்ல. இப்பவே இப்பிடி எண்டா கலியாணத்துக்குப் பிறகு அவள் கதைக்கவே மறந்திடுவாள் போலயே.” என்றான் கௌசிகன்.
“ஆரு? இவா எனக்குப் பயப்பிடுறாவோ? இங்கதான் வாயத் திறக்கிறா இல்ல. என்னட்ட திறக்கிற வாய மூடுறதே இல்ல. ஓமா இல்லையா எண்டு கேளுங்க.” என்றவனின் தோளில் ஒரு அடியைப் போட்டாள் ராதா. “அவர் சும்மா அண்ணா!” என்றாள் மெல்லிய கூச்சத்துடன்.
அவ்வளவு நேரமாக அங்கேயே அமர்ந்திருந்தாலும் அமைதியாக இருந்து தங்கையையும் மோகனனையும்தான் கவனித்துக்கொண்டிருந்தான் ரஜீவன்.
இருவரும் பேசிப்பழகிப் பார்த்ததில்லை. பிறகு எப்படி அவர்களின் மனங்கள் இரண்டரக் கலந்தன என்கிற கேள்வி, அவனுக்குள் இருந்துகொண்டே இருந்தது. இப்போதோ, அவன் பெரிதும் மதிக்கும் தமையனிடம் விளையாட்டுக்குக் கூட ராதாவை விட்டுக் கொடுக்காத மோகனனின் செய்கை, ரஜீவனை மிகவுமே ஆற்றுப் படுத்தியது. அவர்களுக்குள் இருந்த அந்நியோன்யமும், மிகைப்படுத்தல் இல்லாத நேசமும் கண்களை நிறைத்தன.
தங்கை சந்தோசமான வாழ்க்கை ஒன்றை வாழ்வாள் என்பதைக் கண்ணால் கண்டு நிறைவு கொண்டான்.


