பதில் சொல்லாமல் அவன் பார்க்க, “என்னாலையும் ஏலாது.” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
அம்மா வீட்டுக்குச் சென்று, அவர்களோடு சேர்ந்து காலை உணவை முடித்துக்கொண்டு கல்லூரிக்குச் சென்றாள். அவள் போனபோது கௌசிகனின் கார் இன்னும் அங்கே வந்திருக்கவில்லை.
ரெஜிஸ்டரில் தன் வரவைப் பதிவதற்காக நடந்தவளைக் கண்டுவிட்டு சக ஆசிரியர்கள் சிலர் வந்து நடந்த திருமணத்துக்கு மனதார வாழ்த்துத் தெரிவித்தனர்.
திருநாவுக்கரசும் கண்டுவிட்டு சுக நலன்களை இரண்டொரு வார்த்தையில் விசாரித்துக்கொண்டார்.
அப்போதுதான் வந்த சசிகரனும், “மிஸஸ் கௌசிகன்!” என்று குறும்புடன் அழைத்து இன்முகமாகப் பேசினான். இருவருமாக ரெஜிஸ்டரில் பதிந்துவிட்டு ஆசிரியர்களுக்கான அறைக்குள் நுழைந்தனர்.
அங்கிருந்தவர்களின் பார்வை அவள் மீது குவிந்தது. உச்சியில் இருந்த குங்குமப் பொட்டைத் தொட்டு, கழுத்தை வருடித் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக்கொண்டனர்.
“இனி நீங்க வரமாட்டீங்க எண்டு நினைச்சோம் மிஸ்.” என்றார் அங்கிருந்த ஆசிரியை ஒருவர்.
அவள் கேள்வியாகப் பார்க்க, “இந்தப் பள்ளிக்கூட நிர்வாகிக்கே நீங்கதான் நிர்வாகி. போதாததுக்குச் செல்லமுத்து நகைமாடத்தின்ர மருமகள். உழச்சுச் சம்பாதிக்க வேண்டிய தேவை இனி உங்களுக்கு இல்லை எல்லா?” என்று சாதாரணக் கேலிபோல் குத்தினார் அவர்.
இதற்குத்தானே பயந்தாள். நேற்றிலிருந்தே என்னவெல்லாம் கேட்கவேண்டி வருமோ என்று குழம்பிக்கொண்டே இருந்தாள். சுடுகின்ற மாதிரி எதையாவது சொல்ல நினைத்தாலும் அடக்கிக்கொண்டாள்.
அவளின் கோபம் அவர்களுக்கு வெற்றியைத்தான் கொடுக்கும். இன்னுமின்னும் உற்சாகமாக வம்பு பேசுவார்கள். அவர்களின் உட்குத்துப் புரியவேயில்லை என்பதுபோல் பொதுவான ஒரு சிரிப்புடன் கைப்பையையும் புத்தகங்களையும் தனக்கான மேசையில் வைத்தாள்.
சசிகரனுக்கும் அவளின் அமைதி ஏன் என்று புரிந்தது. அங்கிருந்து அவளை வெளியேற்ற எண்ணி, “எக்ஸாம் பேப்பர் ரெடியாயிற்று மிஸ். ஆன்சர்ஸ் ஒருக்கா நீங்களும் பாக்கிறீங்களா?” என்று அவளை வெளியே அழைத்துக்கொண்டு போனான்.
பாத்திருந்த மற்றைய ஆசிரியர்களுக்கு மனது அடங்கவே இல்லை. போராட்டத்தின்போது நிர்வாகத்தின் பக்கம் நின்றதற்காக அவர்களை எல்லாம் என்ன பாடுபடுத்தினாள்.
என்னவோ பணத்துக்காகக் கைக்கூலிகளாக மாறியது போலப் பள்ளிக்கூடத்துக்குள் வரவிடாமல் செய்து, தங்களைக் கெட்டவர்களாக்கி, சுயநலவாதிகள் போல் சித்தரித்துத் தான்தான் உலகத்திலேயே இல்லாத நல்லவள் போன்று பேட்டி கொடுத்துக் கேவலப்படுத்தினாளே. கடைசியில் அந்த நிர்வாகத்தின் தலைவனான புளியங்கொம்பையே அல்லவா கைப்பிடித்துவிட்டாள்.
“இப்பிடி அவரை வளைக்கிறதுக்குத்தான் போராட்டம் அது இது எண்டு அந்தப் பிள்ளைகளைத் தூண்டி விட்டிருக்கிறா. என்ன சொல்லுங்க இவ்வளவு கெட்டித்தனம் எங்களுக்கு இல்ல. இல்லாட்டி ஒரு ஸ்கூலையே குழப்பிவிட்டு, படிக்கிற பிள்ளைகளுக்கு அடிவாங்கிக் குடுத்து, காயம்பட வச்சு அவரின்ர கண்ணில என்னவோ நல்லவள் மாதிரிப் பட்டு வளைச்சு போட ஏலுமா?” வெறுப்புடன் அவர்கள் பேசிக்கொள்வது யன்னல் வழியாக அவள் காதிலும் எட்டியது. இரத்தமெனச் சிவந்துவிட்ட முகத்துடன் அப்படியே நின்றுவிட்டாள் பிரமிளா.
யாராவது மானத்தை விற்று மணம் புரிவார்களா? இதைச் சொன்னால் நம்பவா போகிறார்கள். மனத்தில் வெறுப்பும் கசப்பும் மண்டிற்று.
“மிஸ்…” என்று ஆரம்பித்த சசிகரனிடம், “பிளீஸ் சசி சேர். இப்ப எதுவும் கதைக்க வேண்டாமே.” என்றுவிட்டு தன்வழியே நடந்தாள்.
“உன்னட்ட நான் இத எதிர்பாக்கேல்ல.” என்றான் எதிரில் வந்த கௌசிகன்.
இப்போது அவனோடு பேசுகிற மனநிலையிலேயே இல்லை அவள். இருந்தும் புரியாமல் புருவங்களைச் சுருக்கினாள்.
“ஒரு அபாண்டமான பழியைக் கேட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு வந்திருக்கிறாய். திருப்பிக் குடுக்க வேண்டாமா?”
என்னவோ நல்லவன் போன்று கேட்டவனின் மீதுதான் முழுக்கோபமும் திரும்பிற்று. இதற்கெல்லாம் இவன்தானே காரணம்!
“உயிருக்கும் மேல மதிக்கவேண்டிய என்ர மானம் போனதுக்கே என்னால ஒண்டும் செய்ய முடியேல்லையாம். இதுக்குத் திருப்பிக்குடுத்து மட்டும் என்ன காணப்போறன்?” என்று கேட்டுவிட்டுப் போனாள் அவள்.
அதன் பிறகான அந்த நாளே பிரமிளாவுக்குக் கெட்டுப் போயிற்று. மனத்தைக் கவ்விக்கொண்ட சஞ்சலம் அகலவே இல்லை. தந்தையின் தலை வருடலோ, தாயின் மடியோ கூட ஆறுதல் தர மறுத்தது. அவர்களின் அறைக்குப் புதிதாக வந்திருந்த புத்தகங்கள் அடுக்கும் ஷெல்பும் சுழல் நாற்காலியும் இன்னும் எரிச்சலைத்தான் உருவாக்கிற்று.
அன்று இரவும் அவளை நெருங்கினான் அவன். ‘ச்சேய்! என்ன நடந்தாலும் வந்துவிடுவான்!’ மனதில் வெறுப்பு மண்ட அடுத்து நடக்கப்போவதற்கு விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு தயார் நிலையிலிருந்தாள் அவள்.
ஒரு நொடி தயங்கிய அவன் கரம் அவளின் இடையை வளைத்தது. தன்னை நோக்கித் திருப்பியது. அப்படியே அவளைத் தன் மார்பில் சேர்த்துக்கொண்டது. அவனின் கரமொன்று அவளின் முதுகை வருடிக்கொடுக்கத் திகைப்புடன் அவனைப் பார்த்தாள் பிரமிளா.
அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். வெகு கூர்மையான பார்வை. அவளின் மனத்தையே அலசுவது போலிருக்க விழிகளை மீண்டும் வேகமாக மூடிக்கொண்டாள். அவளின் இதயம் தடதடக்கும் ஓசை அவளுக்கே கேட்டது.
அவனின் அரவணைப்பில் மனம் அமைதிகொள்ள மறுத்து முரண்டியது. ஆற்றவே முடியாத காயத்தைத் தந்துவிட்டு மருந்திட முயல்வதில் என்ன பிரயோசனம்? அந்தக் கல்லூரியில் மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் பவனி வந்தவள் அவள். இன்றைக்கு என்ன நிலைக்குக் கொண்டுவந்துவிட்டான்.
வகுப்பில் பாடமெடுக்கும் போதெல்லாம் மாணவிகளின் பார்வை தன் மீது குவிந்தாலே ஊசியால் குத்துவதுபோல் உணர்ந்தாளே. அவர்களுக்குத் துரோகம் இழைத்து விட்டதுபோல் குமைந்தாளே. “வாழ்த்துகள் மிஸ்.” என்ற அவர்களின் வாழ்த்து கூடக் குத்தியதே.
தவறே செய்யாதவளைத் தப்புச் செய்துவிட்டோமோ என்று நினைக்க வைத்துவிட்டானே. வெறுப்புடன் அவனிடமிருந்து விலக முயன்றாள். அவன் விட மறுத்தான். மற்றைய நாட்களைப் போல அமைதியாகப் போகாமல் அவள் பிடிவாதமாக விடுபட முயன்றாள்.
“பேசாம படு!” என்று அதட்டினான். அதற்கும் அடங்காமல் திமிறியவளை என்ன நினைத்தானோ அவளின் விருப்புக்கே விட்டுவிட்டான்.
வேகமாக விலகி முதுகு காட்டிப் படுத்தவளுக்கு அப்போதுதான் சற்றேனும் புழுக்கம் அடங்கிற்று!


