அவன் முகம் இறுகிற்று. உணவை மேசையில் வைத்துவிட்டு எழுந்துபோய்க் கையைக் கழுவிக்கொண்டு வந்தான். ஷர்ட்டை எடுத்து அணிந்து பட்டன்களைப் பூட்டத் தொடங்கினான்.
ஒரு மாதிரி ஆகிப்போயிற்று பிரமிளாவுக்கு. பசியோடு உணவில் கைவைத்தவனைச் சாப்பிட விடாமல் செய்துவிட்டாளா? என்ன இருந்தாலும் அது தவறாயிற்றே. பசித்த வயிறோடு புறப்படுகிறவனைப் பார்க்கக் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.
“சாப்பிட்டுப் போங்கோ.” அடைத்த குரலில் சொன்னாள்.
“நீ சொன்ன பதிலேதான். வயித்தில பசி இருந்தாத்தான் சாப்பிடேலும். எனக்கு இப்ப வயிறும் மனமும் தொண்டை வரைக்கும் நிறைஞ்சுபோயிருக்கு. அதே போதும்!” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
உதட்டைக் கடித்து அழுகையை அடக்கினாள் பிரமிளா. வேகமாகக் கைப்பேசியைத் தேடி எடுத்து அவனுக்கு அழைக்க எடுக்கவேயில்லை. “பிளீஸ் கோல் மி!” என்று அனுப்பிவிட்டாள்.
பாத்துவிட்டான் என்று காட்டியது. ஆனாலும் பதில் இல்லை.
பிடிவாதக்காரன். அவளுக்குத் தெரியும். பதில் சொல்லமாட்டான். அன்று முழுக்க எந்த வேலையும் பார்க்க முடியாமல் அல்லாடினாள் பிரமிளா. அடுத்த நாள் பள்ளிக்கூடத்திலும் அவனைக் காணவில்லை. சோர்ந்துபோய் வீட்டுக்கு வந்தவள் படுத்துவிட்டாள்.
உறங்கியும் போனாள்.
கௌசிகனுக்கும் மனம் ஆறவேயில்லை. எப்படியாவது அவளை அழைத்துக்கொண்டு வந்துவிட வேண்டும் என்றுதான் போனான். அவளோ திரும்பவும் ஒரு சண்டையை உருவாக்கி அவனைத் தனிமையில் தள்ளிவிட்டாளே.
அன்று முழுக்க வேண்டுமென்றுதான் கண்ணில் படாமல் இருந்தான். ஒருவிதக் கையாலாகாத கோபம். கண்ணில் படாமல் இருந்தாலாவது தன்னைத் தேடுவாளா என்கிற எதிர்பார்ப்பு. அந்தப் பொல்லாதவளோ ‘கோல் மீ’ என்று முதல்நாள் அனுப்பியதற்குப் பிறகு அழைக்கவே இல்லை.
அது சரி! அடி மனத்திலிருந்து வெறுக்கிறவள் ஏன் அவனைத் தேடப்போகிறாள். மனது கசந்து போயிற்று!
அவள் மீதான இத்தனை அதிருப்தியையும் தாண்டி மாலையானதும் அவளைப் பார்க்க மனம் அரிக்கத் தொடங்கிவிட்டது. ‘என்னப் போட்டு என்ன பாடு படுத்திறாள்’ கோபம் கூட வந்தது அவனுக்கு. அதற்குமேல் முடியாமல் புறப்பட்டான்.
மாமனார் மாமியாருடன் பெயருக்கு இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு அவளின் அறைக்குள் நுழைந்தான். நேற்றுப்போலவே அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் அவள். கல்லூரிக்கு அணிந்து சென்றிருந்த சேலையைக் கூட மாற்றவில்லை.
‘நான் இஞ்ச உன்ன மறக்கேலாம படாத பாடுபட நீ நிம்மதியா படுக்கிறியா?’ செல்லக் கோபமொன்று அவனுக்குள் முகிழ்த்தது.
நேற்றுப்போலவே சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு நெருங்கிப் படுத்து வயிற்றில் கையைப் போட்டுக்கொண்டான்.
நல்ல உறக்கத்தில் இருந்தவள் திடீரென்று கிடைத்த வெப்பத்திலும் கரமொன்று வயிற்றைத் தடவியதிலும் உறக்கம் கலைந்தாள். சோம்பலுடன் புரண்டவள் அவனைப் பார்த்ததும் பார்த்தபடி இருந்தாள்.
அவனோ ஒருமுறை அவள் முகத்தைப் பார்த்துவிட்டு இன்னும் வாகாக அவளோடு ஒன்றிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.
“சாப்பிட்டிங்களா?”
“இல்ல… பசிக்குது.” என்றான் கண்களைத் திறக்காமலேயே.
பளார் என்று அவன் கன்னத்தில் ஒன்று விழுந்தது.
கௌசிகன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு ஒருவர் அறைவதா? அதிர்ச்சியில் விழிகள் விரியத் தலையைத் தூக்கிப் பார்த்தான்.
அவள் கண்களில் அப்போதும் கோபம்தான் மிகுந்திருந்தது. மனது அந்த விழிகளில் மயங்க அதன் மீது முத்தமிட்டான்.
“மனுசனுக்கு அடிக்கிறது எல்லாம் ஒரு செயலா டீச்சரம்மா?”
“ஒரு அறையோட விட்டிருக்கிறன் எண்டு சந்தோசப்படுங்கோ! உங்களையெல்லாம் கட்டிவச்சு வெளுக்கோணும்!” என்றவளுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. பின்னே, நேற்றிலிருந்து அவளை என்ன பாடுபடுத்திவிட்டான்.
அவளின் உதட்டினில் தன் உதடுகளை அழுத்தமாக ஒற்றி எடுத்துவிட்டு, “நீ உன்ர புருசனை சரியா கவனிக்காம விட்டுட்டு என்னை எதுக்கடி அடிக்கிறாய்?” என்று பொய்க்கோபம் காட்டினான் அவன்.
“என்ர புருசன் என்ர சொல்லுக் கேக்கிறேல்ல. அவர் நினைச்சதுதான் சரி எண்டு நடக்கிற ஆள். மனுசி கவலைப்படுவாளே, கண்ணீர் வடிப்பாளே எண்டெல்லாம் யோசிக்காத கல் நெஞ்சுக்காரன்.” என்றவளுக்குக் குரல் கமறிக்கொண்டு வர, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
ஏன் இப்படி அலைபாய்கிறோம் என்று அவளுக்கு விளங்கவேயில்லை. அவனைப் பிடிக்காது. அவனுடைய செய்கைகளை அறவே வெறுக்கிறாள். அவனோடான வாழ்க்கையைத் தனக்கான பெரும் தண்டனையாகத்தான் நினைக்கிறாள். இருந்தும் கடந்த இரண்டு நாட்களாக அவள் அவள் வசமில்லை. அவனின் நினைவுகளோடேயே அல்லாடுகிறாள்.
குழந்தை காரணமோ? அல்லது அவன் தந்த ஆழ்ந்த முத்தங்களும், ஆரத் தழுவிய தழுவல்களும் உடலை ஊடுறுவி உள்ளத்துக்குள் அவளே அறியாமல் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். இல்லாமல் அவன் மீது எப்படி இப்படி ஒரு சலனம் அவளுக்குள் உருவாகியிருக்க முடியும்?
ஒரு நிமிடம் அவனிடமும் அசைவில்லை. மனைவியின் வார்த்தைகள் மனத்தை என்னவோ செய்தன.
“இவனை ஏனடா கட்டினோம் எண்டு யோசிக்கிறியா?” என்றான் வறண்ட குரலில்.
“அப்பிடி நினைக்கேல்ல. ஆனா எதிரும் புதிருமான ரெண்டுபேரை ஏன் இந்தக் கடவுள் இணைச்சவர் எண்டு நினைச்சனான். ஆனா, அதக் கடவுள் செய்யேல்ல நீங்கதான் செய்தனீங்க!” என்றவளின் விழிகள் இப்போதும் அவனைத்தான் குற்றம் சாட்டின.


