அழகென்ற சொல்லுக்கு அவளே 42 – 2

“ஏன் அந்தளவுக்கு என்ன முடமாகிப்போனாவோ? நல்லாத்தானே இருக்கிறா. சும்மா ஓடிப்போய் ஆஸ்பத்திரில படுத்துப்போட்டு வந்து நடிச்சா சரியா?” என்றதும் சட்டென்று கண்ணீர் பூத்துவிட்டது சந்திரமதிக்கு.

அவரா நடிப்பவர்? இளவஞ்சி பிடித்துவைக்கும் அவசியமே இல்லாமல் தொய்ந்து அமர்ந்துவிட்டார்.

“அத்த, நானும் கதைச்சுச் சண்டை பெருசாக வேணாம் எண்டு நினைச்சா கண்டபாட்டுக்கு கதைப்பீங்களா?” என்று சீறினான் நிலன்.

“இவ்வளவு காலமும் நீங்க எல்லாரும் குடுத்த இடம்தான் இப்பவும் அவாவை இப்பிடி கதைக்க வைக்கிறது.” என்று அவனிடம் சொல்லிவிட்டு,

“இவ்வளவு காலமும் நடிச்சது நீங்க. இத்தின வருசமா சும்மா இருந்து சாப்பிட்டதும் நீங்கதானே. இனி நீங்களே பாருங்க!” என்றதும் சினத்தில் கதிரையைத் தள்ளிக்கொண்டு எழுந்துவிட்டார் ஜானகி.

“ஆரடி சும்மா இருந்து சாப்பிட்டது? நான் இந்த வீட்டு ராணி. என்னைக் கேள்வி கேப்பியா நீ?” என்றவரின் ஆக்ரோசம் கண்டு அவள் அலட்டிக்கொள்ளவே இல்லை.

“நீங்க இந்த வீட்டுக்கு ராணி கிடையாது. உங்கட வீடு பக்கத்துவீடு. இது என்ர வீடு. இஞ்ச இருக்கிறவே என்ர குடும்பம். இந்த வீட்டில இருந்துகொண்டு அதிகாரம் செய்ற வேலை எல்லாம் இஞ்ச காட்டக் கூடாது விளங்கினதா? உங்களுக்கு ராணியா இருக்கோணும் எண்டா உங்கட வீட்டுக்கு நடவுங்க. வேணுமெண்டா உங்கட அப்பாவையும் கூட்டிக்கொண்டு போங்க!” என்றதும், “வஞ்சி!” என்றான் நிலன்.

“என்ன வஞ்சி? இனி மாமி ஒரு வேலை செய்ய மாட்டா. நாளைக்கே எல்லா வேலைக்கும் ஆக்களைப் போடுறீங்க. அதே மாதிரி இந்த வீட்டில அவா தொடந்து இருக்கிறதா இருந்தா மாமிய மதிச்சு இருக்கோணும். இல்லையா நான் சொன்ன மாதிரி அவான்ர வீட்டுக்கு நடையக் கட்டச் சொல்லுங்க!” என்றுவிட்டு மாடியேறப் போனவள் அங்கே வந்த சக்திவேலரை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனாள்.

“பாத்தீங்களா அப்பா, என்ன எல்லாம் சொல்லிப்போட்டுப் போறாள் எண்டு. நீங்க இருக்கேக்கையே எனக்கு இந்த நிலமை எண்டா நாளைக்கு நீங்க இல்லாத காலத்தில?” என்றவரை, “நீங்க திருந்தவே மாட்டீங்களா அத்த?” என்று சினந்தான் நிலன்.

“வஞ்சி கதைச்ச விதம் கொஞ்சம் கடுமையா இருந்தாலும் அவள் சொன்னது சரிதான் அப்பப்பா. இத்தின வருசமா எங்களை எல்லாம் பாத்தா மனுசியப் பாத்து நடிக்கிறா எண்டு சொன்ன பிறகும் கதைக்கிறதுக்கு ஒண்டும் இல்ல.” என்றுவிட்டு மேலே போனான் நிலன்.

“இருங்க மாமா. நீங்களும் இருங்க மச்சாள்.” மனதே விட்டுப்போயிருந்தாலும் குடும்பமாயிற்றே என்று சமாளிக்க முயன்றார் சந்திரமதி.

“போதும் அண்ணி நடிச்சது. இனியும் இந்த வீட்டில ஒரு வாய் சாப்பிட்டா, அது நஞ்சாத்தான் என்ர உடம்பில சேரும்.” என்றுவிட்டுத் தன் வீட்டுக்கு நடந்தார் ஜானகி.

அங்கே சுவாதியை அழைத்துக்கொண்டு வெளியே போயிருந்தான் மிதுன். தனியாக அகப்பட்ட பாலகுமாரனை வார்த்தைகளாலேயே குத்திக் கிழிக்க ஆரம்பித்தார் ஜானகி.

இங்கே சக்திவேலருக்கு உணவைப் பரிமாறிய சந்திரமதி, “இவ்வளவு காலத்தில உங்களிட்ட ஒண்டுமே நான் சொன்னது இல்லை மாமா. ஆனா இப்ப…” என்றவர் ஒரு கணம் தயங்கினாலும், “பிள்ளைகள் வளந்திட்டினம். மருமக்களும் வந்தாச்சு. நாளைக்குப் பேரப்பிள்ளைகளும் பிறக்கப்போயினம். அப்பிடி இருக்கேக்க இப்பிடி ஒவ்வொரு நாளும் சண்டை சச்சரவு எண்டு இருந்தா எப்பிடி மாமா? மச்சாளிட்ட நீங்க ஒரு வார்த்த சொல்லுங்கோ. வஞ்சி மற்ற பிள்ளைகள் மாதிரி இல்ல. முகத்துக்கு நேரா கதைக்கிறவா. பிறகு அண்டைக்கு சொன்ன மாதிரி தம்பி உண்மையாவே தனியா போய்ட்டான் எண்டா என்னால தாங்கேலாது.” என்றார் விழிகள் கலங்கிவிட.

சந்திரமதியிடம் எதுவும் சொல்லாதபோதிலும் அவரும் இளவஞ்சியைக் குறித்துத்தான் யோசித்துக்கொண்டிருந்தார்.

காலம் காலமாகத் தையல்நாயகியிலும் இளவஞ்சி மீதும் அவருக்குள் படிந்துபோன வெறுப்பு இன்னும் அப்படியேதான் இருந்தது. ஆனாலும் கூட அவர் ஒரு கை தேர்ந்த வியாபாரி. இலாப நட்டங்கள் பார்த்து இயங்கியே பழகியவர்.

விருப்பமே இல்லாதபோதும் தொழிலுக்காக, தொழில் முன்னேற்றத்துக்காக என்று முடிவுகளை எடுத்துக் காய் நகர்த்துபவர்.

அப்படியானவரால் பிடிக்காதபோதிலும் சக்திவேல் தொழிற்சாலை சம்மந்தமான எந்த முடிவிலும் தலையிடமாட்டேன் என்று எழுதியே தந்ததும், சொத்து பற்றிய பேச்சில் பங்குகொள்ளாமல் எழுந்துபோனதும் சேர்ந்து இளவஞ்சி என்கிறவள் எப்படியானவள் என்று கணிக்க வைத்திருந்தன.

அடுத்தது அவர் பேரன். ஆசைப்பட்டு மணந்தவளைக் கூட அன்று இங்கிருந்து போ என்று சொன்னவன் அவன். அப்படியானவனின் வாழ்க்கையும் அவருக்கு முக்கியமே. ஆக எல்லாவற்றுக்கும் நல்ல முடிவு அவளை நல்லபடியாக இங்கே வைத்திருப்பது.

இன்றைய நிலையில் அதற்கு பிரச்சனையாக இருப்பது ஜானகி. அதில் உணவை முடித்துக்கொண்டு ஜானகியைக் காண அவர்களின் வீட்டுக்குச் சென்றார்.

அங்கே விறாந்தையில் முகமெல்லாம் வெளிறி, காயப்பட்ட வலியைச் சுமந்த விழிகளோடு எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தார் பாலகுமாரன்.

அவரைப் பார்த்தாலும் பார்க்காததுபோன்று நடந்தார் சக்திவேலர். ஆனால், அவரின் ஊன்றுகோல் சத்தமிட்டு பாலகுமாரனின் மோனத்தைக் கலைத்துப்போட்டது.

திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு, “நில்லுங்க மாமா!” என்றார் தன்னை மீறி.

இப்படி ஒரு காலமும் தன்னை மரித்துப் பேசியிராத பாலகுமாரனின் இன்றைய நடத்தை ஏதோ ஒரு வித்தியாசத்தைக் காட்ட நின்று திரும்பினார் சக்திவேலர்.

“உங்களுக்கு நினைவிருக்கா தெரியாது. ஆசைப்பட்டவளையே கட்டுறன் மாமா, என்னை விட்டுடுங்கோ எண்டு உங்களிட்ட அழுது கெஞ்சியிருக்கிறன். நீங்க விடேல்ல. உங்களுக்குப் பயந்து அவளை நான் விட்டுட்டன். அதுக்குப் பிறகும் ஜானகியோட கலியாணம் வேண்டாம், இப்பிடியே இருக்கிறன் எண்டு சொன்ன நேரமும் நீங்க கேக்கேல்லை. தனிப் பொம்பிளையா நிண்ட அம்மாவைக் காட்டியே கட்டி வச்சீங்க. அப்பிடித்தான் வாழவும் வச்சீங்க. இண்டைக்கு இருந்து என்ர வாழ்க்கையைத் திரும்பிப் பாத்தா நீங்க மட்டும்தான் இருக்கிறீங்க. நானோ என்ர ஆசையோ, என்ர சந்தோஷமோ எதுவுமே இல்லை.” என்றபோது அந்த மனிதரின் விழிகளில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்தோடிற்று.

“ஆனா இப்ப முழுக் கெட்டவனா நான் நிக்கிறன். உங்கட மகள் வார்த்தையால என்னை வதைக்கிறா. சாத்தியமா செத்திடோணும் போல இருக்கு. எனக்கு வாழ விருப்பமே இல்லைதான். ஆனா சாகிற வரைக்கும் நிம்மதியாவது வேணும் எண்டு நினைக்கிறன். உங்கட மகளிட்ட இருந்து விடுதலை வாங்கித் தாங்க மாமா. இதையாவது எனக்குச் செய்ங்க. எனக்கு ஒண்டும் வேண்டாம். என்னை இந்த வீட்டில இருந்து விடுதலையாக்கி விட்டுடுங்க போதும்.” என்றவரை அதிர்ந்துபோய்ப் பார்த்தவர் ஏதோ விழுந்த சத்தத்தில் திரும்பிப் பார்க்க அங்கே அவருக்கு இணையான அதிர்ச்சியோடு நின்றிருந்தார் ஜானகி.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock