மஞ்சள் வெயில் மறைந்துவிட்ட அழகிய மாலைப்பொழுது. காற்றுத் தாலாட்டிக்கொண்டிருக்க, மரங்களெல்லாம் சுக மயக்கத்தில் மெல்ல அசைந்தாடிக்கொண்டிருந்தன.
கிளிநொச்சியில் ஆனந்தபுரத்தில் அமைந்திருந்தது அந்த வீடு. மூன்று அறைகளோடு ஒரு விறாந்தை, சமையலறை என்று அடக்கமாக இருந்தாலும், எதிர்காலத்தில் மிக நல்லதொரு வீடாக உருமாறுவேன் என்று சொல்வதுபோல, இன்னுமே வெளிப்பூச்சுப் பூசப்படாமல், முன் ஜன்னல்களில் ஒன்று மட்டுமே போடப்பட்டு, மற்றையது கார்ட்போர்ட் மட்டையால் அடைக்கப்பட்டிருந்தது.
அதன் முன்னே பெரிய முற்றம், அந்த முற்றத்தை வரையறுப்பதுபோல ‘ஜாம்’ மரம் நின்று நிழல் பரப்பிக்கொண்டிருந்தது.
அதன் கீழிருந்த வாங்கிலில் அமராமல் வீட்டுக்கும் வாசலுக்குமாகப் பொறுமையற்ற நடை நடந்துகொண்டிருந்தார் கருப்பன். அவரோடு சேர்ந்து அவரை விடவும் ஆர்வமாகவும், அவசரமாகவும் நடைபயின்றுகொண்டிருந்தது அலெக்ஸ்.
“எங்க இந்தப் பெடியன இன்னும் காணேல்ல!” என்று சலித்தார்.
அவரின் அவசரத்துக்கு மகன் வரவில்லையே என்கிற அலுப்பில், “தமயா! என்ன நேரமம்மா? இன்னும் உன்ர தம்பியக் காணேல்ல!” என்று மூத்த மகளுக்குக் குரல் கொடுத்தார்.
தமயந்திக்குத் தகப்பனின் அவசரத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்தது. “அவன் வர இன்னும் பத்து நிமிசம் இருக்கப்பா. வருவான், பொறுமையா இருங்கோ. தேத்தண்ணி தரட்டா?” என்று வினவியபடி வாசலுக்கு வந்தாள் தமயந்தி.
படலையால் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பிய கருப்பன், காலுக்குள் நின்ற அலெக்சில் மோதி, சமநிலை இழந்து விழப்பார்த்தார். ஒரு வழியாகச் சமாளித்து நின்றபோதும் அலெக்சில் சினம் பொங்கிற்று!
“நானே அவனைக் காணேல்ல எண்டு விசர்ல இருக்கிறன். நீ வேற! போ அங்கால!” இருந்த கடுப்பில் கையை விசுக்கினார்.
“நானும் அவனுக்குத்தான் வெயிட்டிங்!” என்பதுபோல வள் என்று ஒருமுறை அவர் மீது பாய்ந்துவிட்டு வீதிக்கு இறங்கிவிட்டது அலெக்ஸ்.
“இதுக்கு இருக்கிற திமிரப் பாரன்!”
“அது அவன்ர நாயப்பா! அவனைப் போல அடங்காமாத்தான் இருக்கும்!” என்று சிரித்தாள் தமயந்தி.
கருப்பன் இன்று மகளின் பகிடியில் பங்குகொள்ளும் மனநிலையில் இல்லை. மகனைக் காணவில்லையே என்று மீண்டும் வீதியை எட்டிப்பார்க்க, வந்துகொண்டிருந்தான் பிரணவன்.
‘எக்ஸ்பெர்ட்’ என்று அவன் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட முழுநீள நீலநிற வேலை உடையில், புதுவகை மோட்டார் வண்டியில் ஆரோகணித்து வந்துகொண்டிருந்தவன் தகப்பனின் அருகில் வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தினான்.
அவனுக்குப் பின்னால் ஏறி, முன்னிரு கால்களையும் அவன் தோளில் வைத்து நின்றிருந்த அலெக்ஸ், கருப்பனைப் பார்த்து இன்னுமே சத்தமிட்டது. காப்பதற்கு உயிர்த்தோழன் இருக்கும் இறுமாப்பு அதனிடம்.
“ஒரு நாளைக்கு என்னட்ட இது நல்லா வாங்கிக் கட்டப் போகுது தம்பி!” என்று முறையிட்டுவிட்டு, “ஓடிப்போய்க் குளிச்சிட்டு ஓடிவா! சுந்தரண்ணா வந்திட்டாராம்!” என்று பரபரத்தார் அவர்.
“வந்திட்டாரா? எப்பயப்பா?” அவரின் முகம் பார்த்துக் கேட்கவிடாமல் அவனில் பாய்ந்து, உரசி, ஒட்டி, அவன் முகத்தில் இழைந்து என்று தன் பிரிவாற்றாமையைத் தீர்த்துக்கொண்டிருந்தது அலெக்ஸ்.
உள்ளூர் நாய்தான் என்றாலும் பிரணவனின் கவனிப்பில் நல்ல உயரத்தில் கறுப்பும் வெள்ளையும் கலந்து பெரிய அளவில் திடகாத்திரமாய் இருந்தது.
“இண்டைக்கு மத்தியானம் வந்திட்டினமாம். என்ர காதுக்கு இப்பதான் செய்தி எட்டினது. விளையாடிக்கொண்டு நிக்காம கெதியா ஓடிப்போய்க் குளிச்சிட்டு வா!” என்று விரட்டினார் கருப்பன்.
“ஓகே ஓகே இந்தா வாறன்!” என்றபடி வண்டியிலிருந்து இறங்கி, ஜாம் மரக்கிளையில் வைத்திருந்த அலெக்சின் பந்தை எடுத்துப் பின் காணிப்பக்கம் எறிந்தான். அதுவும் அதை எடுக்க ஓடியது.
“அக்கா ஒரு தேத்தண்ணி!” என்றபடி மாற்றுடையை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் ஷவரின் கீழே நின்றுவிட்டு வந்தான்.
“வாங்கப்பா போவம்!” தமக்கை கொடுத்த தேநீரை வேகமாகப் பருகிவிட்டு, அவரையும் தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு பிரணவன் புறப்பட, அவன் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவனைப் பின் தொடர்ந்தது அலெக்ஸ்.
“எவ்வளவு காலமாச்சு அண்ணயப் பாத்து!” மகனின் பின்னால் அமர்ந்திருந்தவர் தன்போக்கில் சொன்னார்.
உள்ளமெங்கும் பழைய நினைவுகள். நீண்ட காலப் பிரிவின் பின் சற்று நேரத்தில் கண்டுவிடப்போகிறோம் என்கிற உணர்வு கொடுத்த நெகிழ்வில் தடுமாறிக்கொண்டிருந்தார் கருப்பன்.
அவர் அறிந்த அவரின் சொந்தம் சுந்தரம் குடும்பம் மட்டும்தான். கருப்பன் இந்தப் பூமிப்பந்துக்குச் சமூகமளித்து ஐம்பது வருடங்களுக்கு மேலாகிறது. ஆனபோதிலும், யாரைக்கொண்டு இங்கு வந்தார் என்று அவருக்கும் தெரியாது, யாருக்கும் தெரியாது.
ஒருநாள் நல்லூர் கோவில் வாசலில் நின்று அழுத மூன்று வயதுச் சிறுவனைக் கண்ட யாரோ கோவிலில் சேர்ப்பித்தனர். அழுதழுதே காய்ச்சல் வந்துவிட்டதில் தன் வீட்டிலேயே வைத்துப் பார்த்துக்கொண்டார் நல்லூர் கோவில் ஐயா.
அந்த வருடம் நல்லூர் கோயில் திருவிழாவுக்குச் சென்ற சுந்தரேசனின் அப்பா மகேந்திரம், ஒரே மகனாகிப்போன சுந்தரேசனுடன் சிரித்து விளையாடிய அந்தச் சிறுவனின் கதையைக் கேட்டுவிட்டு மனமிறங்கிப்போனார்.
மகனுக்குத் துணையாக இருக்கட்டும் என்று அவனைத் தன்னுடனேயே கிளிநொச்சிக்கு அழைத்து வந்துவிட்டார்.


