“நீங்க என்ன சொன்னாலும் நான் அங்க வரமாட்டன்!”
‘இவளுக்கு எவ்வளவு சொன்னாலும் எருமை மாட்டுக்கு மேல பெய்த மழைதான்’
“நீ இப்ப வந்து வாங்கோ எண்டு சொல்லுறாய்! விளங்கினதா?” இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு அவர் நடக்க, கருப்பன் என்று வந்துவிட்டால் தன் கணவனை எந்த வகையிலும் வளைக்க முடியாது என்பதை இருபத்தியொரு வருடங்கள் கழித்து மீண்டும் உணர்ந்தார் லலிதா.
அதுவே அவர் மீது இன்னுமே வெறுப்பை மூட்டிவிட்டது. சிரிப்பில்லாமல் மலர்ச்சியும் இல்லாமல் வாசலுக்கு வந்து, “வாங்கோ!” என்றவருக்குக் கருப்பனைப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது.
கருப்பனுக்குச் சற்றே பயத்தை வரவைக்கும் தோற்றம். அவர் ஒரு காட்டுச் செடி. உயரமான பெருத்த மனிதர். அதற்கு ஏற்றதுபோலவே அடர்ந்த கருப்பு நிறம். பெரிய கண்கள். அடர்ந்த மீசை. தடித்த உதடுகள். காலில் செருப்பே போடாத கரடுமுரடான மனிதன்.
உள்ளம் மட்டும் பலாப்பழம் போன்று அவ்வளவு இனிப்பு. அவரோடு ஒன்றிப் பழகியவரால் மட்டுமே அதன் சுவையையும் இனிமையையும் உணர முடியும்.
“சுகமா இருக்கிறியா தங்கச்சி?” என்றும் மாறாத மனிதர் இன்றும் அதே பாசத்துடன் விசாரிக்க, அவரின் ஒருமைப் பேச்சில் சுர் என்று ஏறியது லலிதாவுக்கு.
முகத்தைச் சுளித்து, “ம்ம்…!” என்றார்.
கள்ளமில்லாத மனிதரின் அன்பு நிறைந்த கண்களுக்கு அவரின் பார்வையில் இருந்த பேதம் விளங்கவேயில்லை. ஆனால், சுந்தரம் அப்படியில்லையே. அவர்கள் அறியாமல் முறைத்தார்.
அதைப் பொருட்படுத்தாமல் அலட்சியத்தோடு பார்வையைத் திருப்பியபோதுதான் பிரணவனைக் கவனித்தார் லலிதா. கண்ட கணத்தில் பெரும் அதிர்ச்சி தாக்கியது. அந்த நாட்களில் ஒரு நோஞ்சான் போல இருந்தவன் இன்று இப்படி மாறிப்போயிருப்பான் என்று கனவிலும் நினைத்தாரில்லை.
தகப்பனைக் காட்டிலும் உயரமாக, மண்வெட்டி பிடித்த உடம்பாக, உயரத்துக்கு ஏற்ற கட்டுக்கோப்புடன் இருந்தான் பிரணவன்.
அதைவிட அவனது அழகுதான் கண்ணைக் குத்தியது. வெறுப்பைச் சுமந்திருந்தவரின் விழிகளையே ஈர்க்கும் வல்லமை கொண்ட வசீகரமிருந்தது பிரணவனிடம்.
பார்க்கக் கூடாது என்று கடுத்த மனத்தோடு நினைத்தாலும், விழிகள் அடிக்கடி அவனிடம் ஓடி அவனை ஆராய்ந்து அளந்தன.
நல்ல நிறம். அடர்ந்து நீண்ட புருவங்கள். அதன் கீழே நீளமான இமைகளுடன் வசீகரமான நீண்ட காந்தக் கண்கள். கூர்மையான நாசி. கருத்தடர்ந்த மீசையின் கீழ் புன்னகைக்கும் சிவந்த உதடுகள்.
பெண்ணாகப் பிறந்திருந்தான் என்றால் ஒருத்தன் கூட விட்டுவைத்திருக்க மாட்டான். அப்படி இருந்தான் பிரணவன். அவர்களின் மூத்த பெண் தமயந்தியை அவருக்குத் தெரியும். அவள் கூட இவ்வளவு அழகில்லை.
சின்ன வயதிலேயே அவருக்கு அவனைப் பிடிக்காமல் போகக் காரணமே, பெண் குழந்தைகளுக்கு இருக்கவேண்டிய அந்த அழகு அவனிடம் கொட்டிக்கிடந்ததுதான்.
அதோடு, ஆண்பிள்ளைகளுக்கு இருக்கும் வெகுவான சுட்டித்தனமும் குவிந்து கிடந்து, யார் என்ன என்றில்லாமல் எல்லோரையும் கவர்ந்திழுப்பான் பிரணவன்.
தகப்பனின் கேள்விக்கு வெறுப்போடு பதில் சொன்னவரின் பார்வை, தன் மீதும் வெறுப்போடும் ஆராய்ச்சியோடும் படிவதைப் பிரணவனும் உணர்ந்துகொண்டான். அவர் காட்டிய திமிரில் உள்ளுக்குள் கடுகடுத்தாலும், சுந்தரேசனுக்காக அப்படியே அமர்ந்திருந்தான்.
“நாங்களும் நல்லாருக்கிறம் தங்கச்சி. அருமையான நாலு பிள்ளைகள். வீட்டுப் பாரத்த என்னோட சேர்ந்து சுமக்க ஒரு ஆம்பிளைப் பிள்ளை. நிம்மதியா சந்தோசமா இருக்கிறனம்மா.” கேட்காத கேள்விக்கு வெள்ளை மனத்தோடு சொன்னவரிடம் அப்படியா என்றுகூடிக் கேட்டுக்கொள்ள மனமில்லை லலிதாவுக்கு.
“எங்க ஆர்கலி?” சுந்தரம் மனைவியிடம் கேட்டார்.
‘அந்த எலிசபெத்தைக் கூப்பிட மாமா இன்னொருக்கா உள்ளுக்குப் போகோணும்!’ நக்கலாய் எண்ணியவனுக்கு இன்னுமே ஒருமுறை கூடப் பார்த்திராதவளின் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாமல் போயிற்று!
“அவளுக்கு வெயில் ஒத்து வருதே இல்ல. இப்பதான் சூடு குறைஞ்சு இருக்கு எண்டு குளிக்கப் போனவள். அவளின்ர அறைல ஏசி வேலை செய்யுது இல்ல. ஆரையாவது பிடிச்சுப் பாக்கோணும்.” என்று கணவரிடம் சொன்னார் லலிதா.
“ஆரும் என்னத்துக்கு? பிரணவன் செய்வான். தம்பி என்ன எண்டு பார் ஒருக்கா!”என்று சொல்லவும், “எந்த அறை மாமி?” என்றபடி எழுந்தான் அவன்.
அவனிடம் அந்த உதவியைக் கேட்டது லலிதாவுக்குப் பிடிக்கவில்லை என்று முகத்திலேயே தெரிந்தது. மாமி என்று அழைத்தது அதைவிடப் பிடிக்கவில்லை.
அவனுக்கு அது விளங்காமலில்லை. ‘உங்கட விருப்பத்துக்கெல்லாம் நாங்க வளையேலாது!’ தனக்குள் சொல்லிக்கொண்டான் அவன்.
அறையைக் காட்டாமல், “மேல!” என்றுவிட்டு அவனோடு கூடவே மாடி ஏறினார் லலிதா. நடை, உடை, பாவனை, பார்வை முதற்கொண்டு அங்க அசைவு அனைத்திலும் ஒரு திமிர்.
அறை வாசலில் நின்று இதுதான் என்று காட்டிவிட்டு அகலவேயில்லை. அவனை நம்பாத அவரின் செயலில் அவன் உடல் இறுகியது. ‘எவனாலையும் திருத்த முடியாதபடி ஏஸியைப் பிடுங்கிவிட்டுப் போவோமா?’ என்றுதான் வந்தது. சுந்தரம் மாமாவுக்காக அடக்கிக்கொண்டான்.
என்ன பிரச்சனை என்று அவன் ஆராய்ந்து முடிப்பதற்குள், “செய்யத் தெரியாட்டிச் சொல்லிப்போடும். விலையான பொருள், விளையாட்டு இல்ல.” என்றார் லலிதா.
பதிலும் சொல்லாமல், திரும்பியும் பாராது தன் வேலையிலேயே கவனமாக இருந்தான் பிரணவன்.
‘மரியாதை தெரியாதவன்!’ என்று லலிதாவுக்குச் சினமேறியது.
சின்னதாக ஒரு அடைப்புத்தான். வேகமாகச் சரி செய்துவிட்டு, “இனி வேலை செய்யும்!” என்று அந்தச் சுவருக்கே சொல்லிவிட்டு வெளியேறினான் பிரணவன்.
‘பிச்சைக்காரக் கூட்டம். திமிருக்கு மட்டும் குறையில்லை!’ மனதுக்குள் சிடுசிடுத்துக்கொண்டார் லலிதா.
தகப்பனருகில் சென்று மீண்டும் அமர்ந்துகொண்டான் பிரணவன். லலிதாவின் பிரசன்னம் அதோடு மறைந்துபோயிற்று!
“வாவ்!” சற்று நேரத்திலேயே ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
“தேங்க்ஸ் பா! குளிச்சிட்டு வாறதுக்கிடையில ஏசிய வேலை செய்ய வச்சிட்டிங்க!” துள்ளலாகப் படிகளில் இறங்கும் காலடி ஓசையோடு கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குரல் அவர்களைச் சமீபித்துக்கொண்டிருந்தது.
அப்பாவை மதிக்காத லலிதாவின் மகளைப் பிரணவனுக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. அவள் காட்டப்போகிற திமிரை வேறு பார்ப்பதா? உடனேயே எழுந்து, “ஒரு ஃபோன் கதைச்சிட்டு வாறன்!” என்று வெளியே வந்துவிட்டான்.


