அந்தப் பூமுகம் கன்றிச் சிவந்திருப்பதைப் பார்க்க ஒரு வக்கிர திருப்தி லலிதாவுக்கு. உன்னுடைய இடம் எது என்று தெரிகிறதா என்பதுபோல் குறிப்புணர்த்தினார். அவரைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தார் புவனா.
“அவர் எப்பிடி இந்தப் பூமிக்கு வந்திருந்தாலும் எனக்கு அருமையான மனுசன். ஒரு குறையும் வைக்காம என்னைச் சந்தோசமா வச்சிருக்கிறார். எனக்கு அது போதும் லலிதாக்கா. நானே யோசிக்காததைப் பற்றியெல்லாம் நீங்க ஏன் யோசிக்கிறீங்க? அதோட, இனி நீங்க இவரைப் பற்றிக் கதைச்சா நான் சுந்தரம் அண்ணாவோட கதைக்கவேண்டி வரும்!” என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.
கோபப்படவில்லை, கத்தவில்லை, குமுறவில்லை. ஆனால், முகத்தில் அறைந்தாற்போல் பதிலடியை நிதானமாகக் கொடுத்துவிட்டிருந்தார் புவனா.
கோபத்தில் முகம் சிவக்க அப்படியே அமர்ந்துவிட்டார் லலிதா. ‘வக்கில்லாத கூட்டம். ஆனா என்னையே மிரட்டிப்போட்டுப் போறாள்.’ பூனைபோல ஒரு புன்னகையோடு எல்லாவற்றையும் கடப்பவள் இப்படித் திருப்பி அடிப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.
சுந்தரேசனிடம் இந்த விசயம் போனால் தான் தொலைந்தோம் என்று லலிதாவுக்கு நன்றாகவே தெரியுமே.
அதற்குப் பிறகு கருப்பனைப் பற்றிக் கதைக்காதபோதும், அவர்கள் அந்த வீட்டுக்கு வேலையாட்கள்தான் என்பதைக் கிடைக்குமிடத்தில் எல்லாம் உணர்த்தத் தவறுவதே இல்லை லலிதா.
சுந்தரேசனுக்கு அகரன் பிறந்து ஆறு மாதத்தில் கருப்பனுக்கு தமயந்தி பிறக்கும் வரைக்கும் நன்றாகத்தான் போனது அவர்களின் கூட்டுக் குடும்பம். லலிதாவுக்குப் பிள்ளை பிறந்த நேரம், அவருக்கான உதவிகள் அனைத்தையும் வயிற்றில் குழந்தையோடு செய்தார் புவனா.
அதேபோல் புவனா குழந்தை பெற்ற நாட்களில் லலிதா புவனாவையும் பார்த்து வீட்டையும் பார்ப்பார் என்று மனோன்மணி நினைக்க, இயல்பிலேயே சோம்பேறியான லலிதாவுக்கு அது முடியவும் இல்லை, விருப்பமும் இல்லை.
“வேலைக்காரிக்குச் சேவகம் செய்ய நானும் என்ன வேலைக்காரியே? இந்த வீட்டு மருமகள்!” என்று கணவரிடம் சீறினார்.
“அவள் என்ர தங்கச்சி! வேலைக்காரி இல்ல! மரியாதையில்லாம கதைச்சா என்னை மனுசனா பாக்கமாட்டாய் லலிதா!” என்று சுந்தரேசன் உறுமியும் அடங்கவில்லை.
“உங்கட அம்மாவும் கொஞ்சம் உதவி செய்யலாம்தானே? பிள்ளையப் பாப்பனா, வேலையப் பாப்பனா? எல்லாம் நானே செய்யோணும் எண்டால், எனக்கு என்ன ஆயிரம் கையே இருக்கு?”
“பிள்ளைக்குப் பசியாத்திறது மட்டும்தான் நீ. அகரனுக்கு மற்றது எல்லாம் செய்றது அம்மா. வீட்டு வேலையையாவது பார். புவனாவும் வயித்தில குழந்தையோட வீட்டையும் பாத்து வேலையும் செய்து உன்னையும் பாத்தவள்தானே. உனக்குச் செய்றதுக்கு என்ன?” என்று சுந்தரேசனும் கடிந்துவிட்டுப் போய்விட்டார்.
அன்று மாலை உறங்கி எழுந்த அகரனை மனோன்மணி மடியில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தார். அங்கே வந்த லலிதா, “பிள்ளையைத் தாங்க மாமி. என்னவோ குழந்தையை நீங்கதானாம் வளக்கிறீங்க எண்டு உங்கட மகன் சொல்லுறார்!” என்று கடினமான குரலில் சொல்லிவிட்டு, மகனைப் பிடுங்காத குறையாகப் பறித்துக்கொண்டு நடந்தார்.
“நில்லு லலிதா!” என்ற மனோன்மணியின் அதிகாரக் குரல் அடக்கியது!
அதிர்ந்து திரும்பினார் லலிதா. அந்தக் குரலில் அவ்வளவு கடுமை. இதுநாள் வரை ஒரு வார்த்தை கடிந்து பேசியதில்லை அவர். மகன் மீது அவ்வளவு பிரியம். அந்தப் பிரியம் மருமகள் மீதும் இருந்ததில், மாமியார் அதட்டுவார் என்று எள்ளளவும் எண்ணவில்லை லலிதா.
“பிள்ளையைக் கொண்டுவந்து மடில கிடத்து!” கட்டளையாக உத்தரவிட்டவரின் தொனியில் லலிதாவின் கைகள் தன்பாட்டுக்கு அதைச் செய்தன.
“வேலைக்கள்ளிக்குப் பிள்ளைச் சாட்டாம்! போய் வேலையைப் பார். மருமகள் எண்டு பாசமா நடத்தினா மரியாதையில்லாம நடக்கலாம் எண்டு நினைக்காத. நான் உன்ர மாமி! விளங்கினதா? இவ்வளவு நாளும் இந்த வீட்டை, உன்ன, எங்களை எல்லாம் அவள்தான் பாத்தவள். அப்ப நல்லாத்தானே இருந்தது உனக்கு. இண்டைக்கு அவளுக்குச் செய்யக் கசக்குதா? இன்னும் மூண்டு மாதத்துக்கு முழு வேலையும் நீதான் செய்யோணும். போ!” கண்டிப்பான குரலில் அழுத்தம் திருத்தமாக அவர் உத்தரவிட்டபோது, அவமானத்தில் முகம் சிவந்து கறுத்துப் போயிற்று லலிதாவுக்கு.
மாமியாரிடம் காட்ட முடியாத அந்தச் சீற்றம் சுந்தரேசனின் புறமாகத் திரும்பியது.
தொட்டதுக்கும் மகனிடம் முகம் கொடுக்காமல் சினந்துகொண்டு திரியும் அவளை மனோன்மணியும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.
லலிதாவுக்கு தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும். தன் சொல்படிதான் கணவன் ஆட வேண்டும். அதையெல்லாம் பார்த்து, ஆரம்பத்திலிருந்தே அவள்மீது அவருக்கு அதிருப்திதான்.
இதே புவனா இந்த வீட்டுக்கு வந்த அடுத்த நாளில் இருந்தே பொறுப்பாக எல்லாவற்றையும் எடுத்துச் செய்ய, இன்னுமே சுகமாக அதையெல்லாம் அனுபவித்தாரே தவிர, லலிதா கூடமாட உதவிகூடச் செய்யவில்லை. சரி, கொஞ்சக்காலம் போகப் பொறுப்புத் தானாக வரும் என்றுதான் காத்திருந்தார். ஒரு பிள்ளை பிறந்தபிறகும் சோம்பேறித்தனம் மாறவேயில்லை.
சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருந்தவர் நன்றாகச் சுடட்டும் என்றுதான் சொல்லிவிட்டார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த புவனா, எழுந்து வேலை செய்ய முனைய, ஒரே அதட்டலில் அடக்கி இருத்தினார் மனோன்மணி.
அன்றிரவு வீடு வந்த கணவனிடம் நடந்ததைச் சொல்லி, “உங்கட அம்மா அவளுக்கு முன்னால என்னைக் கேவலப்படுத்திப்போட்டா.” என்று கண்ணைக் கசக்கினார் லலிதா.
“அம்மா சொன்னதுல என்ன பிழை? நீயும் பிள்ளை பெத்த பொம்பிளைதானே. அந்த வலி வேதனை என்ன எண்டு உனக்கும் தெரியும். அப்பிடியிருக்க, அம்மா சொல்லாமையே எல்லாம் நீ செய்திருக்க வேணும். நன்றி கெட்டு நடக்காத லலிதா!” என்று கணவனும் கடிந்துவிட முகத்தைத் திருப்பிக்கொண்டு படுத்துவிட்டார் லலிதா.


