அன்றிலிருந்து சுந்தரேசனின் வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டைகளும், முகத் திருப்பல்களும் அடிக்கடி நடக்க ஆரம்பித்தன.
லலிதா முகத்தை நீட்டிக்கொண்டு திரிய, சுந்தரேசனின் முகத்தில் களைப்பு, சோர்வோடு சேர்த்து விரக்தியும் தெரிய ஆரம்பித்தன.
மனோன்மணி அதைக் கவனித்துவிட்டுச் சிடுசிடுக்க என்று அந்த வீட்டின் நிம்மதி மெல்ல மெல்லக் குலைவதை உணர்ந்த புவனா, கணவனிடம் நாம் தனியாகப் போவோமா என்று மெல்லக் கேட்டார்.
இதென்ன புதிதாக என்று பார்த்தார் கருப்பன்.
தான் கேட்டதைத் தன் கணவர் விரும்பவில்லை என்பதை உணர்ந்த புவனா, வீட்டில் நடப்பதைக் கணவருக்குத் தெரியப்படுத்தினார்.
“நாங்க இருக்கிறதாலதான் அம்மாக்கும் லலிதாக்காக்கும் அவ்வளவா ஒத்து வருதில்ல. அம்மாவும் அடிக்கடி புவனாவைப் பாத்துப் பழகு எண்டு சொல்ல சொல்ல அவவுக்குக் கோவம்தான் கூடுது. என்ன இருந்தாலும் இந்த வீட்டு மருமகள் அவா. அம்மா என்னையும் சொந்த மகள் மாதிரி நடத்துறது லலிதாக்காக்குப் பிடிக்கேல்ல போல. சுந்தரம் அண்ணாட முகத்தைப் பாத்தீங்களா? முந்தி இருந்த களை, சந்தோசம் ஒண்டையும் காணேல்ல. நாங்க ஆருக்கும் இடைஞ்சலா இருக்க வேணாம்.” என்று எடுத்துச் சொன்னபிறகே கருப்பனும் கவனித்தார்.
சுந்தரேசன் உற்சாகமின்றித்தான் தெரிந்தார். லலிதாவும் கணவனிடம் இன்முகமாகப் பேசுவதில்லை. மனோன்மணி அம்மாவும் அடிக்கடி லலிதாவைக் கண்டித்துக்கொண்டிருந்தார்.
கருப்பனும் மகேந்திரமும் அதிகாலையிலேயே விவசாயத்தைப் பார்க்க என்று போய்விடுவார்கள். இருட்டிய பிறகுதான் வீடு திரும்புவது. தென்னந்தோட்டம், மாந்தோட்டம், இதைவிட வயல்காணி, மிளகாய்த்தோட்டம் என்று அவர்களுக்குப் பார்க்க ஆயிரம் வேலை.
சுந்தரேசன் தனியார் நிறுவன உத்தியோகத்தர் என்பதில் எட்டுக்குப் போய் நான்குக்கு வரும் வேலை. ஆனாலும் அவர் முகத்தில் நிறைவில்லை.
உண்மை என்ன என்று கண்டறிந்த பிறகும், “அம்மாவும் அப்பாவும் என்ன நினைப்பீனம்?” என்று அவர் தயங்க, புவனா மனோன்மணியிடம் பேசினார்.
மறுக்கப் போகிறாரோ, கோபிக்கப் போகிறாரோ என்றெல்லாம் அஞ்சிக்கொண்டு புவனா மெல்லச் சொன்னபோது, உடனேயே சம்மதித்தார் மனோன்மணி.
புவனாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. கனிவோடு அவர் முகத்தை வருடிக்கொடுத்தார் மனோன்மணி. “அவன் எங்களிட்ட வந்த நாளில இருந்து மாடா உழைக்கிறான். அதுக்குப் பதிலா நாங்க செய்தது ஒண்டுமே இல்ல. இந்த வீட்டுல வச்சுச் சாப்பாடு குடுத்தது மட்டும்தான்.” என்றவரிடம்,
“அதுக்கு எவ்வளவு பெரிய மனது வேணும் அம்மா. என்னவோ சின்ன காரியம் செய்த மாதிரிச் சொல்லுறீங்க.” என்று இதமான புன்னகையோடு சொன்னார் புவனா.
“அவனுக்கு ஏற்ற மாதிரியே நீயும் அமைஞ்சிருக்கிறாய் பிள்ளை.” என்று மனமாறச் சொல்லிவிட்டு, மறுத்துத் தலையசைத்தார் மனோன்மணி.
“அவன் கடுமையான உழைப்பாளி புவனா. எங்க இருந்தாலும் பிழைச்சிருப்பான். நாங்க கூட்டிக்கொண்டு வந்தது கூடச் சுந்தரத்துக்குத் துணையா இருக்கட்டும் எண்டுதான். அவனுக்காக இல்ல. இண்டு வரைக்கும் தன்ர உழைப்புக்கு எண்டு ஒரு காசு வாங்கேல்ல அவன். அதுக்காக நாங்க அப்படியே விடுறதா சொல்லு? உன்ர அப்பா அவனுக்கு மாதம் மாதம் சம்பளம் மாதிரி பாங்கில போட்டு வச்சிருக்கிறார். உங்கட திருமண நேரம் அவன்ர பெயருக்குத் தென்னந்தோப்பை எழுதப்போக வேண்டவே வேண்டாம் எண்டுபோட்டான். பாங்கில இருக்கிற காசை எடுத்துக் காணி வாங்குங்கோ. பிறகு ஒரு வீட்டையும் கட்டினாச் சரிதானே. அப்பதான் நீங்களும் உங்களுக்கு எண்டு ஒரு காணி, வீடு, வாழ்க்கை எண்டு வாழலாம்.” என்றார் கனிந்த குரலில்.
சொந்த மருமகளுக்கு மனம் விசாலமில்லை. இப்படியே இருந்தால் அவர்கள் கூட்டிக்கொண்டு வந்த பாவத்துக்கு, அவர்களுக்குப் பிறகும் லலிதாவுக்குச் சேவகம் செய்தே கருப்பன் குடும்பம் வாழவேண்டியதுதான்.
அது கூடாது. கருப்பனும் நன்றாக வாழ வேண்டும். அவனுடைய பிள்ளைகள் நன்றிக்கடன், விசுவாசம் என்று எந்தத் தழைகளும் இல்லாமல் சுதந்திரமாக வளர வேண்டும் என்று உணர்ந்தார் அனுபவமிக்க அந்தப் பெண்மணி.
“நான் இப்பிடிக் கேட்டதால கவலையாம்மா?” அவரின் காலடியில் அமர்ந்திருந்து கேட்டவரின் தலையை வருடிக்கொடுத்தார் மனோன்மணி.
“பக்கத்தில தானேம்மா போகப்போறீங்க. பாக்கோணும் மாதிரி இருந்தா நாங்க வரப்போறம், இல்லாட்டி நீ வரப்போறாய். அவ்வளவுதானே. வேலையும் ஒண்டுதானேம்மா. பிறகு என்ன கவலை?” என்றவர், சொன்னதுபோலவே, கணவரைக்கொண்டு அவர்களுக்கு அண்மையிலேயே வந்த காணியை வாங்கி, ஒரு மண் வீடும் போட்டுத் தனியாக அனுப்பிவைத்தார்.
“எங்களுக்கும் ஒரு வீடு கட்டித்தரச் சொல்லுங்கோ. ஒண்டுமே இல்லாத மனுசருக்கே திடீரெண்டு இவ்வளவு காசு வந்திருக்கு எண்டால் இந்த வீட்டு மகனுக்கு வராதா?” கணவர் இருக்கும் தைரியத்தில் சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார் லலிதா.
கருப்பன் குடும்பம் தனியாகப் போய்விட்டதால் வீடே வெறிச்சோடிப்போய், கை உடைந்த மாதிரி இருந்த மனோன்மணிக்கு லலிதாவின் பேச்சு பெரும் கோபத்தைக் கொடுத்தது.
“நீ கொண்டுவந்த சீதனக் காசு ஏதும் இருந்தா அதுல கட்டிக்கொண்டு போ! இது என்ர மனுசனும் நானும் உழைச்ச சொத்து. ஆருக்குக் குடுக்கிறது எடுக்கிறது எண்டு நாங்கதான் முடிவு செய்யவேணும். இந்த வீட்டுக் காசுக்காகத்தான் இவனைக் கட்டிக்கொண்டு வந்தனியே? தாலி கட்டுர வரைக்கும் ஊமைக்கோட்டான் மாதிரி இருந்துபோட்டு இப்ப வாய்!” என்றவரை, “பேசாம இரப்பா!” என்று மகேந்திரம் அடக்கியும் அடங்கவில்லை அவர்.
அவ்வளவு கோபம்! என்ன இருந்தாலும் சந்தோசமாக இருந்த குடும்பம் இரண்டாகக் காரணம் லலிதானே என்கிற ஆத்திரம்!
“எங்க இருந்தடா பிடிச்சனி இவளை? அவனும்தானே ஆசைப்பட்டுக் கட்டினவன். அவள் எவ்வளவு அருமையான பிள்ளை எண்டு பார். படிக்காதவன் அவனுக்கே ஆக்களை இனம் காணத்தெரியுது. நீ படிச்சு எந்தப் பிரயோசனமும் இல்லை. போய்ப் பிடிச்சிருக்கிறாய் கண்டறியாத பொம்பிளையை!” என்று இருந்த கோபத்துக்கெல்லாம் ஒரு வாங்கு வாங்கிவிட்டார்.
“எப்பிடிக் குத்திக் காட்டுறா பாத்தீங்களே உங்கட அம்மா? இவ்வளவையும் கேட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறீங்க? உங்களை நம்பித்தானே வந்தனான். சீதனம் கொண்டு வரேல்ல எண்டு சொல்லுறா. சீதனம் வாங்கிக் கட்ட நீங்க என்ன வக்கில்லாத ஆம்பிளையே?”
கோபத்தில் என்ன கதைக்கிறோம் என்று தெரியாமல் லலிதாவும் ஆங்காரமாகச் சொல்லிவிட, ஓங்கி அறைந்துவிட்டார் சுந்தரேசன்.
மனோன்மணியே இதை எதிர்பார்க்கவில்லை எனும்போது, லலிதா? கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அப்படியே நின்றுவிட்டார்.
“அம்மா சொன்ன மாதிரி தெரியாமத்தான் உன்னக் கட்டிப்போட்டன்!” என்றவர் விருட்டென்று அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
“இப்ப சந்தோசமா?” கண்ணீர் பொங்கி வழிய மனோன்மணியிடம் கேட்டுவிட்டு லலிதாவும் அறைக்குள் ஓடிவிட, “இதெல்லாம் என்ன மனோ?” என்றார் மகேந்திரம் ஆதங்கமாக.
மனோன்மணியின் கண்களும் கலங்கித்தான் போயிற்று. வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாமோ என்று இப்போது நினைத்தார்.
“சரி பிழை எண்டுறதை விட, வேலைக்குப் போயிட்டு வாற ஆம்பிளைக்கு வீட்டுல நிம்மதி வேணும் மனோ. வந்த மருமகள் சரியில்லாட்டி நாங்க கொஞ்சம் சமாளிச்சுப் போகவேணும். இப்ப பார் அவனை, நிம்மதியில்லாம வாழப்போறான்.” கவலையோடு எடுத்துரைத்தார் மகேந்திரம்.


