பெரியவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்க, சின்னவர்களை நோக்கிக் கையசைத்தாள் ஆர்கலி.
“ஹாய்!” சத்தம் வராமல் உதடுகள் மட்டும் அசைந்தது.
“ஹாய்!” அவர்களும் அவளைப்போலவே கையசைத்து வாயசைத்தாலும் தங்களுக்குள் கள்ளச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டனர்.
ஆர்கலி வந்த நேரத்திலிருந்து இதுதான் நடந்துகொண்டிருந்தது. குறுகுறு என்று அவளைப் பார்ப்பதும் சிரிக்கும் கண்களால் தங்களுக்குள் எதையோ பரிமாறிக்கொள்வதுமாக இருந்தவர்கள் ஆர்வத்தைக் கிளப்ப, “என்ன விசயம்? என்னைப் பாத்து பாத்துச் சிரிக்கிறீங்க?” என்று அவர்களை நெருங்கிக் கேட்டாள்.
“இல்ல… சும்மாதான்.” அப்படிக் கேட்பாள் என்று எதிர்பாராததில் தடுமாறி இருவரும் தமயந்தியைப் பார்க்க, அவள் கண்களால் அதட்டுவது தெரிந்தது.
“அது…” என்று திவ்யா ஆரம்பிக்க, பட்டென்று துவாரகா அவளின் கரத்தைப் பற்றிக்கொண்டாள்.
“அது சும்மா உங்களைப் பாத்தோம். நீங்க நல்ல வடிவா இருக்கிறீங்க. அதுதான்.” என்று சமாளித்தாள்.
“இது அழகை ரசிக்கிற பார்வையாத் தெரியேல்லையே?” யோசனையாக இழுத்துவிட்டு,
“சரி விடுங்கோ! நாங்க வெளில போவமா? பெரியாக்களின்ர அரசியல் ஒண்டும் விளங்குதில்லை.” என்று, பெற்றவர்களைக் கண்ணால் காட்டிச் சிரித்தவளை அவர்களுக்கு நிரம்பவும் பிடித்துப் போயிற்று.
“ம்ம் வாங்கோ!” என்று மூவரும் வெளியே வர, சரியாக அந்த நேரம் பார்த்துப் பிரணவனின் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது. பின்புறத் தோளில் தொற்றியிருந்த அலெக்ஸோடு அவன் வந்த காட்சி அவ்வளவு அழகாய்த் தெரிந்தது.
லாவகமாய் மரநிழலின் கீழே வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தியவனையே ஆர்கழியின் விழிகள் தொடர்ந்தன.
வண்டியிலிருந்து இறங்கியவனும் அப்போதுதான் அவளைக் கண்டான். “ஹாய்!” என்று உற்சாகமாய்க் கையசைத்தாள்.
பளிச்சிடும் அந்த விழிகளைச் சந்தித்தவனின் விழிகள் ஒருமுறை தடுமாறிப் பின் விலகின. “ஹாய்!” அவளைப் பாராமல் சொல்லிவிட்டு, அலெக்சோடு அவன் வீட்டின் பின்பக்கம் விரைந்துவிட, குழம்பிப்போனாள் ஆர்கலி.
அன்று அவ்வளவு நட்பாக உரையாடியவன் இன்று எதற்காக இப்படி ஓடுகிறான். அவள் விழிகளைச் சந்திக்க அப்படி என்ன தடுமாற்றம்? ஒன்றுமே விளங்காமல் திரும்ப, அவனையும் அவளையும் குறுகுறு என்று பார்த்திருந்த துவாரகாவினதும் திவ்யாவினதும் முகங்களில் ரகசியச் சிரிப்பு.
“என்னப்பா நடக்குது இங்க? உங்கட அண்ணா ஓடி ஒளியிறார். நீங்க ரெண்டு பேரும் ரகசியமாச் சிரிக்கிறீங்க? என்ன விசயம்?”
“ஒண்டுமில்ல ஒண்டுமில்ல. வாங்க, நாங்க எங்கட தோட்டத்தைக் காட்டுறோம்.” என்று விழுந்தடித்துச் சொல்லிவிட்டு, அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.
வீட்டின் பின்பக்கம் செழிப்பான நல்ல தோட்டம் இருந்தது.
அங்கிருந்த மாமரம் ஒன்றில் எட்டி மாங்காய் பறித்த திவ்யா, “சாப்பிட்டுப் பாருங்கோ!” என்று நீட்ட, “ஒரு துண்டு மட்டும் தா.” என்றாள் ஆர்கலி.
அந்த மரத்திலேயே மாங்காயைக் குத்திப் பிளந்து ஒரு துண்டைக் கொடுத்தாள்.
“வெட்டிக் குடுக்கோணும் திவி!” என்று துவாரகா சொல்ல, “தேவையில்லை. ஆனா கழுவு!” என்றாள் ஆர்கலி.
“கழுவினா சத்துப் போயிடும்!”
“அப்ப சரி! நமக்குச் சத்து முக்கியம்!” என்றபடி வாயில் போட்டுக்கொண்டு நடந்தார்கள் மூவரும்.
நெல்லிக்காய் மரம், பாக்கு மரம், தோடம்பழம், தேசிக்காய் மரங்கள் என்று எல்லாவகையும் இருந்தன.
சற்றே பின்னுக்காக ஒரு பக்கம் மாட்டுக் கொட்டகை. அதற்குள் மூன்று மாடுகள்.
“ஹேய் மாடும் வளக்கிறீங்களா?”ஆர்கலி ஆர்வமாக அதனருகே போனாள்.
“மாடு எண்டு சொல்லக் கூடாது. அண்ணாக்குப் பிடிக்காது. அங்க பாருங்கோ, ஒருத்தி நிலத்தில சுகமா இருந்து வாயை அரைக்கிறா. அவா பெரியாச்சி. வயசு போயிட்டுது. இன்னொருத்தி, அங்க பாருங்கோ வயித்தத் தள்ளிக்கொண்டு நிக்கிறா அவா சின்னாச்சி. இந்தக் கிழமை அல்லது வாற கிழமைக்குள்ள குட்டி போடும். பின்பக்கத்தை ஆட்டிக்கொண்டு நிக்குது பாருங்கோ குட்டி, அது சிலுக்கு!” திவ்யா சொல்ல சொல்ல ஆர்கலிக்குச் சிரிப்பு விரிந்துகொண்டே போயிற்று.
“இந்தப் பெயரெல்லாம் ஆரு வச்சது?”
“எங்கட அண்ணாதான்!” என்று சொல்லும்போது, மீண்டும் சிரிப்புடன் அவர்களின் கண்கள் வேகமாகச் சந்தித்து மீண்டன.
சற்றுத் தள்ளிப்போனால் கோழிக்கூடு. அது தமயந்திக்குச் சொந்தமானதாம். ஐம்பது கோழிகள் இருந்தன.
இன்னொரு பக்கம் வீட்டுத் தோட்டம். கொஞ்சம் மரவெள்ளி, ஐந்து மிளகாய்க் கன்றுகள், கொஞ்சம் தக்காளிக் கன்றுகள், கீரைப் பாத்தி, இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குத் தேவையானவைகள் இருந்தன.
“அது அம்மாட வீட்டுத் தோட்டம். சமையலுக்கு எண்டு வச்சிருக்கிறா.”
இயற்கையோடும் இயற்கை உணவுகளோடும் ஒன்றி வாழும் அவர்களின் வாழ்க்கையை மிகவுமே ரசித்தாள் ஆர்கலி.
“நீங்க ரெண்டுபேரும் என்ன வளக்கிறீங்க?”
“நாங்க எங்களை வளக்கிறதே பெரிய விசயம். இதுல இன்னுமொண்டை வளக்க நேரமில்லை!” கண்ணடித்துச் சொன்னாள் துவாரகா.
“எல்லாரும் வளக்கிறதைச் சாப்பிடுறதுதான் எங்கட வேலை!”
சொன்ன திவ்யாவின் முதுகிலேயே ஒன்று போட்டாள் ஆர்கலி.
“சோம்பேறித்தனத்தை எவ்வளவு கெத்தா சொல்லுறீங்க!”


