ஆதார சுதி 1 – 1

ஆதார சுதி – நிதனிபிரபு

அத்தியாயம் 1

மின்னல் வேகத்தில் அந்த வைத்தியசாலை வளாகத்துக்குள் காரைத் திருப்பிப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஓடிவந்தாள் சஹானா. அகன்ற வாயைத் திறந்து உள்வாங்கிக்கொண்ட மின்தூக்கியினுள் தன்னைத் திணித்துக்கொண்டு இலக்கம் எட்டினை அழுத்திவிட்டு நின்றவளின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

பயத்தில் தேகமெங்கும் வியர்வை. அவளின் அப்பாவுக்கு மாரடைப்பாம். அம்மா அழைத்துச் சொன்ன நிமிடத்திலிருந்து நெஞ்சு பதை பதைத்துக்கொண்டிருந்தது.

அதுவும் இரண்டாவது முறையாம். எப்போதும் சிரித்த முகத்தோடும் கனிவோடும் அவளைக் கொஞ்சும் அந்த இதயத்துக்கு அப்படி என்ன அழுத்தம் வந்திருக்கும்? எந்தப் பாரத்தைச் சுமக்க முடியாமல் மூச்சுத் திணறியது? கலங்கிப் பழக்கமில்லாத விழிகள் கரித்தன.

அதைவிட ரட்ணம் மாமா குடும்பமே எங்கு என்று தெரியவில்லையாம். அதுதான் காரணமோ? வேகமாக ஜீன்ஸின் பின் பொக்கெட்டில் இருந்த கைபேசியை எடுத்து நித்திலனுக்கு அழைத்தாள். அப்போதும் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகத்தான் தகவல் வந்தது.

‘இந்த நேரம் பாத்து எங்கயடா போய்ட்டாய்? எனக்குப் பயமா இருக்கு. அப்பாக்கு ஹார்ட் அட்டாக்காம்.’ என்று செய்தி அனுப்பிவிட்டாள்.

மின்தூக்கி எட்டாவது தளத்தில் அவளைத் தள்ளிவிட்டு மேலே நகர, தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி விரைந்தாள்.

நடுங்கிய கைகளால் மெல்லக் கதவைத் திறந்தாள்.

“வீட்டை பேங்க் எடுக்கிறது எண்டா எடுக்கட்டும் பிரதாப். நீங்க சுகமா இருந்தா இன்னும் எத்தனையோ வீடு வாங்கலாம். சும்மா மனதைப் போட்டுக் குழப்பாம இருங்கோ.” அவளின் அம்மா யாதவி கவலை தோய்ந்த கண்ணீர் குரலில் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆனால் அவளின் அப்பா, அவர் இருந்த கோலம்? செயற்கைச் சுவாசம் பூட்டப்பட்டிருக்க, என்னென்னவோ இயந்திரங்கள் அவரைச் சுற்றியிருந்து பயமுறுத்த மொத்தமாய்த் துவண்டு முகமெல்லாம் காய்ந்து யாரோ போலிருந்தார். அவரை அப்படிக் காணமுடியாமல் அவளின் உதடுகள் நடுங்கின!

“சஹிக்கு அந்த வீடு எண்டால் உயிர். பிள்ளை பாவம், தாங்கமாட்டாள். எல்லாம் என்னால..” இதைச் சொல்லி முடிப்பதற்குள் மூச்சிறைத்தது அவருக்கு.

வேரோடு சாய்ந்த மரமாகக் கிடப்பவரா காலையில் அவள் தலையைத் தடவி கனிவாய்ச் சிரித்தவர்?

“உங்களை விட சஹிக்கு அந்த வீடு பெருசு இல்ல பிரதாப். வீடு போனாப் போகட்டும். உங்களுக்கு ஒண்டு எண்டால்(என்றால்) தான் அவள் தாங்கமாட்டாள்.” என்ன நடந்தது என்று முழுமையாக யாதவிக்குமே தெரியாது. காலையில் எப்போதும்போல் தொழிலைப் பார்க்கப் புறப்பட்ட மனிதருக்கு ஹார்ட் அட்டாக்காம் என்று அழைப்பு வந்ததும் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்திருந்தார். அவரைத் தேற்றும் விதமாக யாதவி என்ன சொல்லியும் அவர் சமாதானமாகவில்லை. குழம்பிய மனநிலையில் இருந்தவரின் உள்ளம் நிம்மதியிழந்து அலைபாய்ந்துகொண்டு இருந்தது.

“என்ர பிள்ளை போய் வாடகை வீட்டுல இருக்கிறதா? கடவுளே, நம்பி ஏமாந்துபோய்ட்டனா?” நம்பமுடியாத அதிர்வு தாக்கியதில் அவருள்ளம் குழம்பித் தவித்துக்கொண்டிருந்தது.

“அப்பிடி ஒண்டும் நடக்காது பிரதாப். உங்களை நம்பி இருக்கிற என்னையும் சஹியையும் யோசிங்கோ. எங்களுக்கு உங்களை விட்டா யார் இருக்கினம்?” எப்படியாவது பிழைத்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தை அவரின் மனதில் விதைக்க முனைந்தார் யாதவி.

“இப்பிடித்தானே அம்மா அப்பா என்னை நம்பினவே(நம்பினார்கள்). பிரதியும்.. ஐயோ சிவா..” அந்த நேரத்தில் அந்தப் பேச்சை எதிர்பாராத யாதவி அதிர்ந்துபோனார்.

“நான் செய்தது நம்பிக்கைத் துரோகம் யது. பெரிய துரோகம். அப்பா என்னை நம்பினவர். பிரதியும் நம்பினவள். அம்மா..” ஏற்கனவே சிரமத்துடன் பேசிய மனிதர் முடியாமல் நிறுத்திவிட்டார். அவரின் முகம் வேதனையில் கசங்கிப் போயிற்று!

யாதவி துடித்துப்போனார். சஹானாவின் கண்களில் அருவி. “என்ன பிரதாப் இது? நீங்க எந்தப் பிழையும் செய்யேல்ல. வேற வழி இல்லாமத்தானே. அதைவிட, அதெல்லாம் பழைய கதை. சும்மா கண்டதையும்..”

“அம்மா அப்பாவை பாக்காம, அவேற்ற(அவர்களிடம்) மன்னிப்புக் கேக்காம போய்டுவனோ எண்டு பயமா இருக்கு யது. என்ர பிள்ளைக்குச் சொந்தம் எண்டு ஒருத்தரும் இல்ல. நான் செய்த பாவம் அவள் தனியா நிக்கப்போறாள். என்னோட சேர்ந்து அவளும் அவமானப்படப் போறாள் எண்டு ஊருக்குப் போகாம இருந்து.. கடைசில.. அவளுக்கு நீயும் நானும் மட்டும் தான். நானும் இல்லாம போனா.. கடவுளே.. எல்லாரையும் பாக்கவேணும் போல இருக்கு. எப்பயாவது சந்திப்பம் எண்டு நம்பிக்கொண்டு இருந்தனே..” அவர் பாட்டுக்கு என்னென்னவோ புலம்ப, கேட்டுக்கொண்டிருந்தவள் அதிர்ந்துபோனாள்.

அவரின் சந்தோசம் அவள் என்றால், நிம்மதியும் சுகமும் ஊரில்! இது இத்தனை நாட்களாக அவளுக்குத் தெரியாது!

இன்னுமின்னும் சுயநினைவு இல்லாமல் அரற்றிக்கொண்டிருந்தார் பிரதாபன். தான் உயிராய் நேசிக்கும் மகள் தன் ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டுத் தனக்குள் இடிந்துகொண்டிருக்கிறாள் என்று அறியவில்லை.

சுயத்தில் இருந்திருக்கத் தன் கவலைகளைச் சொல்லியே இருக்கமாட்டார். அப்படித் தனக்குள் போட்டுப் புதைத்துப் புதைத்துத்தான் அப்பாவின் இதயம் கனத்துப் போனதோ? அதனால் தான் முடியாமல் அதிர்ந்து போனதோ? ‘அப்பா…’ வெடித்த விம்மலை வாயைப் பொத்தி அடக்கினாள்!

“இப்படியெல்லாம் சொல்லாதீங்கோப்பா. எனக்குப் பயமா இருக்கு. உங்களுக்கு ஒண்டும் ஆகாது. நீங்க சுகமாகி வாங்கோ, நாங்க இலங்கைக்கு ஒருக்கா போய் வருவோம். இல்ல அங்கேயே போய் இருக்கிறது எண்டாலும் சந்தோசம் தான். சஹிக்குச் சொந்தம் எல்லாத்தையும் காட்டலாம். அவளுக்குப் பிடிச்சா சொந்தத்திலேயே கட்டிவச்சு, நாங்க விட்ட பிழையையும் சரி செய்யலாம்.” கடைசி வாக்கியத்தில் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தமர்ந்தது.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock