குழந்தையைப்போல் தன் முகம் பார்த்துச் சிரித்த அப்பாவின் அந்தச் சிரிப்பை நிலைக்க வைத்தே ஆகவேண்டும் என்கிற வைராக்கியம் மனதில் சூழ வெளியே வந்து நித்திலனுக்கு அழைத்தாள் சஹானா.
போகவே இல்லை. சலிப்புடன், “எங்கயடா இருக்கிறாய்? அப்பா ஹொஸ்பிட்டல்ல இருக்கிறார். இந்தநேரம் நீயும் இல்லாட்டி எப்பிடி நித்தி? மாமா மாமி பற்றி ஏதாவது தெரிஞ்சதா?” என்று அனுப்பிவிட்டு நிமிர, கணவருக்கானவற்றைச் செய்துவிட்டு வந்தார் யாதவி.
“அப்பாக்கு என்னம்மா கவலை? ரட்ணம் மாமா எங்க? நித்திலனும் ஃபோன் எடுக்கிறான் இல்ல. என்ன நடந்தது?”
“அதுதானம்மா ஒண்டும் தெரியேல்ல. டூர் போன மனுசருக்கு என்னவோ எண்டு பாத்தா, நித்திலனையும் காணேல்ல.” கெட்டித்தனமாக அவள் கேட்ட முதல் கேள்வியைத் தவிர்த்துவிட்டிருந்தார் யாதவி.
“இனி என்னம்மா செய்றது?” அதே கேள்விதான் அவரின் உள்ளத்திலும். பதில்தான் தெரியவில்லை.
“வீட்டுக்கு என்ன நடந்தது?”
“அப்பாட எக்கவுண்ட்ல இருந்த காசு எல்லாம் போய்ட்டுதாம். மைனஸ்ல வேற நிக்குதாம். இதுல போட்(Boat) வாங்குறதுக்கு வந்த லோன் காசு அப்பிடியே எடுத்தாச்சாம். வீட்டு லோனும் மூண்டு மாதம் கட்ட இல்லையாம். இப்ப அடுத்த மாதமும் தொடங்கிட்டுது. அதால எக்கவுண்ட் தடை(block) செய்து இருக்கிறாங்கள். இவ்வளவு நடந்திருக்கு அப்பா எங்களுக்கு ஒண்டும் சொல்லேல்ல.” வேதனையோடு தனக்குத் தெரிந்தவற்றை மகளிடம் பகிர்ந்துகொண்டார் யாதவி.
‘ரியல் எஸ்டேட்’ தான் பிரதாபனின் தொழில். ஒருமுறை கையிருப்பு எல்லாமே போகும். இன்னொருமுறை அளவுக்கதிகமாக வரும். இது வழக்கம் தான். இரண்டு மாதத்துக்கு முதல் தான் இருந்த கையிருப்பை எல்லாம் போட்டு ஒரு நான்குமாடிக் கட்டடத்தை வாங்கிப்போட்டார். அதைக் கொஞ்சம் திருத்தினால் இரண்டு மடங்குக்கு விற்கலாம் என்றும் சொல்லியிருந்தார். கூடவே, இரண்டு வாரங்களுக்கு முதல் வங்கியில் இருக்கும் நகை லாக்கரின் திறப்பையும் வாங்கியிருந்தார். அங்கே பணமும் வைத்து எடுப்பதில் ஏன், எதற்கு என்று கேட்காமல் கொடுத்திருந்தார் யாதவி. அவர் நினைப்பது சரியாக இருந்தால், இந்த இக்கட்டை இருந்த பணம் எல்லாவற்றையும் போட்டுச் சரிசெய்ய முயன்றிருக்க வேண்டும். அப்படியும் சமாளிக்க முடியாமல் போனபோதுதான் அவரால் தாங்க முடியாமல் போயிருக்கிறது.
ஒன்றைக்கூடச் சொல்லவே இல்லையே?
“நாங்க கவலைப்படுவோம் எண்டு சொல்லியிருக்க மாட்டாரம்மா.” தாயிடம் தகப்பனுக்காகப் பரிந்துவந்தாள் மகள்.
அப்படித்தான் என்று அவருக்கும் தெரியும்தானே. “அதால ஏதாவது நல்லது நடந்திருக்கா சொல்லு? மனதில இருக்கிறதைப் பகிர்ந்து இருந்தா பாரம் குறைஞ்சு இருக்கும். இப்பிடி நோய்வாய்ப்பட்டு இருக்கமாட்டார். தெம்பா நிதானமா எல்லாத்தையும் கையாண்டு இருப்பார். ஆனா இப்ப?” அவருக்குத் தொண்டை அடைத்துப்போயிற்று.
“சரியம்மா. இனி என்ன செய்றது?அதைச் சொல்லுங்கோ.” நடந்தது நடந்துவிட்டது, அடுத்தது என்ன என்று கேட்டாள் அவள்.
“வீட்டத்தான் விக்கவேணும். வித்து எல்லாப் பிரச்சனையையும் முடிச்சுவிட்டா அவர் நிம்மதியா இருப்பார்.”
“வீட்டை வித்தா அப்பா கவலைப்படுவாரே அம்மா.”
“அவர் உன்ன நினைச்சுத்தான் யோசிக்கிறார்.”
“எனக்கு ஒரு கவலையுமில்ல!” பட்டென்று பதில் சொன்னாள் அவள். காணி வாங்கி அவளுக்குப் பிடித்த மாதிரியே கட்டிய வீடுதான். ஆனால், அப்பாவுக்கு முன்னே வீடெல்லாம் தூசு!
அப்போது யாதவியின் தமையன் அரவிந்தன் இலங்கையிலிருந்து அழைத்தார்.
கவலையோடு பிரதாபனைப் பற்றி விசாரிக்கவும், நடந்ததைச் சொன்னார். “இவ்வளவு காலமும் சொந்த வீட்டில இருந்திட்டு சஹி என்னெண்டு வாடகை வீட்டுல போய் இருப்பாள் எண்டு கேக்கிறார். ரட்ணம் அண்ணாவையும் காணேல்ல. எல்லாத்தையும் விட ஊர் நினைவுதான் அவரைப்போட்டு வாட்டுது.” என்று தன்கவலை முழுவதையும் கொட்டினார் யாதவி.
“இங்க என்ர வீட்டை வித்துக் காசு தரவாம்மா?” அரவிந்தன் யாதவிக்குச் சீதனமாக எதுவுமே கொடுத்ததில்லை. இவர்கள் புறப்பட்ட காலத்தில் கொடுக்கிற நிலையிலும் அவர் இல்லை. பிரதாபனும் அந்தப் பேச்சுக்கே இடம் தரவில்லை. இன்று தங்கை இக்கட்டான நிலையில் இருக்கையில் தன் கடமையைச் செய்ய முன்வந்தார்.
“உங்களுக்கு எண்டு இருக்கிறதே அந்த வீடு ஒண்டுதான். அதையும் வித்துப்போட்டு என்ன அண்ணா செய்வீங்க? அப்பிடி ஒண்டும் வேண்டாம். முதல் எவ்வளவு வேணும் என்ன எண்டு இன்னும் ஒண்டும் தெரியாது. இனித்தான் பேங்க்ல போய்க் கதைக்கவேணும்.”
“பிரதாபனுக்குச் சேரவேண்டிய காணி, சொத்துப்பத்து இங்க இருக்குத்தானே யது. அதைப்போய் நான் கேக்கவா?” இக்கட்டான நேரத்தில் கோபதாபம் பார்ப்பதிலோ மானவமானம் பார்ப்பதிலோ அர்த்தமில்லை என்று எண்ணினார் அரவிந்தன்.
“வேண்டாம் அண்ணா. அப்பிடிக் கேக்கிறது இவருக்கு அவமானம் எல்லோ. எங்களுக்கு அந்தச் சொத்து தேவையே இல்ல. சொந்தம் சேர்ந்தா போதும். ஆனா யார் அவயலோட(அவர்களோடு) கதைக்கிறது? நீங்க போனா திரும்பவும் கேவலப்படுத்தித்தான் அனுப்புவீனம்.” அந்த நிலையிலும் தன் கணவரின் கௌரவத்தை விட்டுக்கொடுக்க மறுத்தார் யாதவி. கூடவே, பணப்பிரச்சனை இங்கே ஒரு காரணியாகிப்போனாலும் கணவரின் இந்த நிலைக்கு உண்மையான காரணம் உறவுகளைப் பிரிந்து அவர் வாழ்வதே என்று தெளிவாகப் புரிந்ததில் அதற்கான வழியை யோசித்தார்.
ஒருமுறை, சஹானா பிறந்த நேரத்தில் பிரதாபன் வீட்டினரோடு அரவிந்தன் சமாதானம் பேசப்போய் வாயே திறக்கவிடாமல் அவமானப்படுத்தி அனுப்பியிருந்தார்கள். அதன்பிறகும் எங்கேயாவது பார்க்கிறபோதும் பேச முயன்றபொழுதுகளிலும் இதுதான் நடந்திருக்கிறது. அப்படியிருக்க, சொத்தினைக் கேட்டுப்போனால் என்னாகும்?
“நான் அங்க போறன் அம்மா.” அதுவரை அவர்களின் உரையாடலைக் கேட்டிருந்த சஹானா அவசரமாக இயம்பினாள். அன்னை பணப்பிரச்சனையை இலகுவாகவே சமாளிப்பார் என்கிற நம்பிக்கை அவளுக்கு மலையளவுக்கு இருந்தது. உறவுச் சிக்கலைத் தீர்க்க அவள் தயாரானாள்.
“பேசாம இரு பிள்ளை! இருக்கிற பிரச்சனைகள் போதாது எண்டு சின்னப்பிள்ளை மாதிரி கதைக்கிறேல்ல. கொஞ்சம் பொறுப்பா இருக்கவேணும்!” அதட்டினார் யாதவி.
“நான் ஒண்டும் சின்னப்பிள்ளை கதை கதைக்கேல்ல. அப்பாவோ நீங்களோ போனாத்தானே சண்டைக்கு வருவினம்(வருவார்கள்)? மாமாவும் கதைக்கேலாது. நான் அவேன்ர பேத்திதானே. நான் போகலாம் தானே? அதைத்தான் சொல்லுறன்.” அழுத்தம் திருத்தமாக விளக்கினாள் அவள்.


