நெதர்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட இராட்சசப் பறவை ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சஹானாவைத் தரையிறக்கியது. விமானத்தின் மெல்லிய குளிருக்கு சுகமாய் அவளைத் தழுவியிருந்த டெனிம் கோர்ட், லங்காபுரியின் தலைநகரில் வீசிய வெம்மைக்கு வியர்வைச் சுரப்பிகளைத் திறந்துவிடுவது போலிருக்க அதனைக் கழற்றி ட்ரொல்லியின் மீது போட்டுக்கொண்டாள்.
மேலே வெண்ணை நிறத்திலான முழுக்கை புல்லோவர் அணிந்து, கருப்புநிற ‘பொடி பிட்’ காற்சட்டைக்கு வெண்ணை நிறத்திலேயே அளவான ஹீல் கொண்ட ஷூவுடன், ஒற்றைக்கையில் பற்றியிருந்த ட்ரொல்லி அவளின் பின்னே துள்ளிவர, ஆர்வமாய் விழிகளைச் சுழற்றியபடி வெளி வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
அங்கிருந்த அத்தனை இளவட்டங்களின் பார்வையும் அந்த மெழுகுப் பொம்மையின் மீது பிரமிப்புடன் படிந்தது. அப்படியான நிறம் அவளுக்கு. கரிய கூந்தலை குதிரைவாலாக உயர்த்திவிட்டிருக்க, அளவான முக அலங்காரத்துடன் ஹீல் கொடுத்த நளின நடைக்கு ஏற்ப குதிரைவால் அங்குமிங்கும் ஆடி, இளமனங்களையும் அசைத்துப்பார்க்க, அதையெல்லாம் கவனிக்காமல், வெளிவாசலை எட்டினாள்.
விழிகளைச் சுழற்றமுதலே, “சஹி! மாமா இங்க நிக்கிறன்!” என்றபடி விரைந்து வந்தார் அரவிந்தன்.
“மாமா..! அத்தை! நான் வந்திட்டேன்.” கொண்டுவந்த ட்ரொல்லியையும் விட்டுவிட்டு ஓடிவந்து
இருவரையும் சந்தோசமாகக் கட்டிக்கொண்டாள் சஹானா.
உயிர்த்தோழியின் மகளை முதன் முதலாகப் பார்க்கும் பரவசத்தில், “வாடா செல்லம்! வாவாவா!” என்று, பாசம் பொங்க அணைத்து உச்சி முகர்ந்தார் ராகவி.
அரவிந்தனின் கண்கள் பனித்துப் போயிற்று. கிட்டத்தட்ட இந்தப் பருவத்தில் தான் தங்கையைக் கொண்டவனோடு வழியனுப்பி வைத்தார். அந்த நினைவுகள் மனதில் சூழ பாசமாய்த் தலையைத் தடவிக்கொடுத்தார்.
“அப்பா மாதிரியே செய்றீங்க மாமா!” தன்னிலும் கூடத் தகப்பனின் சாயலைத் தேடியவளின் உள்ளம் கண்டு நெகிழ்ந்து போனார் அரவிந்தன்.
ராகவியின் விழிகள் தன் தோழியின் சாயலை பூரிப்புடன் மருமகளில் தேடித் தேடி அலைந்தது. “பயப்படாம வந்தியாம்மா?” அரவிந்தன் வரச் சொல்லிவிட்டாலும், அவள் வந்து சேர்கிற வரைக்கும் ராகவிக்குப் பெரும் பதைபதைப்பாகவே இருந்தது.
“என்ன அத்தை பயம்? அங்க அம்மா ஏத்திவிட்டவா. இங்க உங்களிட்ட வந்து இறங்கி இருக்கிறன். அவ்வளவுதானே?” கைகளை விரித்துச் சிரித்தவளைப் பார்த்து அவருக்கும் சிரிப்புப் பொங்கியது.
“கதைக்க மாட்டீங்களா அகிலன் மச்சான்?” என்று அவர்களின் மகனையும் பேச்சுக்குள் இழுத்தாள் சஹானா.
அவனோ அவளின் ட்ரொல்லியைப் பிடித்துக்கொண்டு சின்னச் சிரிப்போடு நின்றிருந்தான்.
அதற்குள் அழைத்த அன்னையிடமும் சுகமாக வந்து சேர்ந்துவிட்டதைத் தெரிவித்து அவரது பதட்டத்தை அகற்றி, அப்பாவின் நலனைப்பற்றி விசாரித்துவிட்டு, யாழ்ப்பாணம் நோக்கி நால்வருமாகப் புறப்பட்டார்கள்.
நெதர்லாந்தின் தூய்மையான காற்று, துப்பரவு, ஒழுங்குமுறைகளுக்கு முற்றிலும் மாறாக, ஒரே பேச்சுச் சத்தத்தோடு மனிதத் தலைகள் நிறைந்து வழிந்த பரபரப்பான அந்த நகரம் அவளுக்குள் ஒருவிதப் பரவசத்தை மட்டுமே விதைத்துக் கொண்டிருந்தது.
வீதியை ஊடறுத்துப் போய்க்கொண்டிருந்த வாகனத்துக்கு எதிராக வீசிய காற்று, புழுதியைக் கொண்டுவந்து தேகம் முழுக்க அப்பிவிட்டுப் போனபோதிலும், ஆசையோடு பார்த்துக்கொண்டு வந்தாள்.
‘இங்கேதான் அப்பாவின் நிம்மதியும் சந்தோசமும் புதைந்து கிடக்கிறது!’
வீதிகளில் இருந்த சின்னச் சின்னத் தேநீர் கடைகள், அங்கே வெறும் சாரத்தோடு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த மனிதர்கள், கீழே லுங்கி மாதிரி அணிந்து மேலே சாரி பிளவுஸ் போன்ற ஒன்றை மட்டுமே போட்டு இடை அசைய நடை பயின்ற சிங்களப் பெண்கள், சைக்கிளில் மனைவி நான்கைந்து பிள்ளைகளை அடக்கியபடி கம்பீரமாக ஆரோகணிக்கும் ஆண்கள், வீதியோரங்களில் பாய்களை மட்டுமே விரித்துப் பழங்கள் விற்றுக்கொண்டிருந்த பெண்கள் என்று எல்லாமே அவளுக்குள் ஆச்சரியத்தைப் பரப்பின.
A9 வீதியினூடாக அனுராதபுரத்தை எட்டி, மதவாச்சி கடந்து வவுனியாவைத் தொட்டு ஓமந்தையூடாகப் பயணித்து முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் சென்று நிறுத்தினார்கள்.
A9 வீதியினூடு வரும் எந்தப் பயணிகளும், எந்த வாகனமும் முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் நின்று, வழிபட்டே செல்வார்கள். இது காலம் காலமாக நடக்கும் பாரம்பரியம். தம் பயணத்துக்கோ தமக்கோ எந்த ஆபத்தும் வராது என்கிற நம்பிக்கை. அதேபோல அங்கு விற்கும் கச்சானின்(நிலக்கடலை) சுவையும் தனியே! சாதாரண நாட்களில் கூடப் பத்துக்கும் மேற்பட்ட கச்சான் கடைகள் அங்கிருக்கும்.
சுவாமி கும்பிட்டுவிட்டு, கச்சாணும் வாங்கிக்கொண்டு ஒருவழியாகச் சாவகச்சேரியை வந்து அடைந்தார்கள்.
நீண்ட பயணத்தில் முற்றிலுமாகக் களைத்துப் போயிருந்தாலும் அவளின் கண்களில் இருந்த உயிர்ப்பு வற்றவேயில்லை. ஒரு மாடியும் அதற்கு மேலே மொட்டை மாடியுடனும் சுற்றிலும் சோலையாய்க் காட்சி தந்த அவர்களின் வீட்டை மிகவுமே பிடித்துப் போயிற்று.
“என்ர அப்பாட வீடு இங்க இருந்து தூரமா மாமா?” வீட்டுக்கு வந்ததுமே அவள் கேட்ட முதல் கேள்வி அதுதான்.
“பெரிய தூரமில்லை. கிட்டத்தான்.” கனிவாய்ச் சொன்னவருக்கு அவளின் ஏக்கம் புரிந்தது.
அடிக்கடி ராகவியைச் சந்தோசத்தில் அணைத்துக்கொள்வதும், ஆண்பிள்ளைக் கூச்சத்துடன் ஒதுங்கிப்போகும் அகிலனைக்கூட விட்டுவைக்காமல் கதைக்குள் இழுப்பதும், மாமா, அத்தை, மச்சான் என்று வார்த்தைக்கு வார்த்தை உறவை சொல்லிச் சொந்தம் கொண்டாடிக்கொள்வதும் என்று சொந்தங்களைக் கொண்டாடி மகிழ ஆசைப்படுகிறாள் என்று விளங்கிற்று!
ஆனால் அவர்கள்? எழுந்த பெருமூச்சை அடக்கிக்கொண்டார்.
மத்தியான உணவை முடித்துவிட்டு நன்றாக உறங்கி எழுந்தாள் சஹானா. உற்சாகத்துடன் கீழே இறங்கப்போனவள், அங்கே யாரோ வந்திருந்து மாமா அத்தையுடன் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டுவிட்டு, ஃபோனை எடுத்துக்கொண்டு திரும்பி மொட்டை மாடிக்கு இரண்டிரண்டு படிகளாகத் தாவினாள்.
அங்கே நின்றிருந்தான் அகிலன்.
எதிர்பாராமல் இவளைக் கண்டதும் உண்டான அதிர்ச்சியை வேகமாக மறைத்துக்கொண்டான். ஒரு சின்னப் புன்னகையைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கீழே இறங்கப் போகவும், “உங்களுக்குச் சிரிக்க மட்டும் தான் தெரியுமா அகில் மச்சான்?” என்று கண்களில் குறும்பு மின்னக் கேட்டாள் சஹானா.
“இல்ல.. அப்பிடி இல்ல..” சின்னச் சங்கடச் சிரிப்புடன் அவன் தேங்க, “எப்ப பாத்தாலும் ஒரு சிரிப்போட ஓடிப்போறீங்க. கதைக்கிறீங்களே இல்ல. வெக்கமோ?” என்று, தலையைச் சரித்துக் கேலியாய் கேட்டுவிடவும் உதட்டில் மலர்ந்துவிட்ட சிரிப்புடன் முறைத்தான் அவன்.
“நான் என்ன பெட்டையே வெக்கப்பட? இங்க கேர்ள்ஸ்ஸோட போய்ஸ் பெருசா கதைக்க மாட்டீனம்.”
“நான் உங்கட மச்சாள். சந்தோசமா சைட் அடிப்பீங்க எண்டு பாத்தா கதைக்கவே மாட்டோம் எண்டு சொல்லுறீங்க?” அவளின் கேள்வியில் ஒருகணம் அதிர்ந்தாலும் சட்டென்று சிரித்துவிட்டான் அகிலன்.
“சும்மா ஃபிரியா விடுங்க பொஸ்! அதுசரி, என்ன களவு செய்ய மேல வந்தீங்க?” தரையிலிருந்து பார்த்தபோது ஓங்கி உயர்ந்து தெரிந்த முருங்கைமரம் மொட்டை மாடியில் அவளின் உயரத்துக்கு நிற்க, அதன் இலைகளைத் தன் முகத்தில் தடவியபடி கேட்டாள்.
“களவா? என்ன கள..வு?” அவனது தடுமாற்றத்திலேயே அவனைப் பிடித்துவிட்டாள் சஹானா.
“பொய் சொல்லாதீங்க அகில். இதா இல்ல இதா?” என்று குடிப்பது போலவும் புகைப்பது போலவும் அவள் செய்துகாட்ட, மாட்டிக்கொண்டதில் சமாளிப்பாய்ச் சிரித்தான் அவன்.


