ஆர்கலிக்கு தாயின் நடவடிக்கைகள் எதுவுமே பிடிக்கவில்லை. வீட்டுக்கு அழைத்து விருந்தோம்பியவர்களிடம் இப்படியா நடப்பது? அதுவும் அவனுடைய வீட்டிலேயே மரத்தில் தனியாக அவன் அமர்ந்திருந்த காட்சி மிகவுமே பாதித்திருந்தது.
முத்தமிட்டதைச் சொல்லிச் சிரிக்க வைத்துவிட்டு வந்தாலும் மனமே சரியில்லை அவளுக்கு. தாயிடம் முகம் கொடுக்கவுமில்லை. வீட்டு வாசற்படியை மிதித்ததுமே திசைக்கொன்றாக ஷுக்களைக் கழற்றி எறிந்துவிட்டு விடுவிடு என்று மாடிப்படி ஏறி, தன் அறைக்குள் புகுந்து கதவடைத்துக்கொண்டாள்.
சுந்தரேசனும் கோபத்தை அடக்கிக்கொண்டுதானே வந்திருந்தார்.
“உனக்குக் கதைக்கப் பேசவே தெரியாதா லலிதா? தமயந்தியை வச்சுக்கொண்டே கலியாணம் ஆகேல்ல எண்டு சொல்லுறாய். ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர மனத்தை நோகடிச்சு அப்பிடி என்ன சந்தோசம் காணப்போறாய்?”
“நான் என்ன பொய்யா சொன்னனான்? உண்மைதானே. சும்மா வக்கில்லாத உங்கட நண்பர் குடும்பத்துக்காக சப்போர்ட்டுக்கு வராதீங்க.”
லலிதாவின் எள்ளல் பேச்சில் ஆத்திரம் உண்டாயிற்று சுந்தரேசனுக்கு.
“அதுகளுக்கு என்ன வக்கில்ல? சொந்த வீடு இருக்கு. உழைப்பு இருக்கு. உதவி எண்டு கேட்டு ஒருத்தரிட்டப் போகேல்ல. என்னட்ட கூட ஒரு உதவி வாங்காம தாங்களே உழைச்சு தங்கட காசில கௌரவமா வாழுற குடும்பம் அது. இல்லாட்டி, ‘பிரணவனை அனுப்பு, லண்டனுக்கு எடுத்துவிடுறன்’ எண்டு நான் சொன்ன நேரமே ஓம் எண்டு அனுப்பி இருப்பான். அவனுக்கும் தெரியும், மகன் வெளிநாட்டுக்குப் போனா இன்னும் நல்ல வசதியா வாழலாம் எண்டு. ஆனாலும் விடேல்ல. ஏன் தெரியுமா?” என்றவர் அந்த நொடியில் லலிதாவை முற்றிலுமாக வெறுத்தார்.
“கஞ்சியோ கூழோ குடிச்சிட்டுக் குடும்பமா சந்தோசமா வாழோணும் எண்டுறதுக்காக. வயசான தாய் தகப்பன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்ல எண்டு மனுசனை இழுத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடின உனக்கெல்லாம் இது விளங்காதுதான்!” என்றார் தன் மனத்தின் வெறுப்பை முகத்திலும் காட்டி.
திகைத்துப்போய் நின்றுவிட்டார் லலிதா. இப்படி எப்பவோ நடந்ததைச் சொல்லிக்காட்டுவார் என்று சற்றேனும் எதிர்பார்க்கவில்லை. முகம் கறுத்துக் கண்களும் கலங்கிப் போயிற்று.
சுந்தரேசனும் இப்படிப் பேச நினைக்கவில்லைதான். ‘குடும்பத்தைக் கொண்டு ஓட வேண்டும்’ என்கிற எண்ணத்தோடு இத்தனை நாட்களையும் வெளிநாட்டில் வாழ்ந்து முடித்திருந்தார்.
ஆனால், இலங்கைக்கு வந்ததிலிருந்து பெற்றவர்களோடு வாழ்ந்த நாட்கள் நினைவில் வந்து தாக்கியது. தோழனாய் தோள் தட்டிக்கொடுத்த தந்தை, தன் சந்தோசத்தையும் நிம்மதியையும் மட்டுமே முதன்மையாகக் கொண்டு பாசம் பொழிந்த அம்மா என்று மனம் பெற்றவர்களின் அண்மைக்காக ஏங்கிப் போயிற்று!
இப்போது அவர் ஏங்குவதைப் போலத்தானே அவர்கள் தம் மகனுக்காக ஏங்கி இருப்பார்கள். தன்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த தாய் தகப்பனோடு இருக்கவில்லையே, வயதான காலத்தில் கூட இருந்து பார்த்துக்கொள்ளத் தவறிவிட்டேனே, எல்லாம் இவளால் என்கிற ஆத்திரம் அவரைப் பேச வைத்திருந்தது.
“அப்படிப் போனதாலதான் இண்டைக்கு இவ்வளவு வசதியா இருக்கிறீங்க. அதுக்கு நீங்க எனக்கு நன்றி சொல்லோணும். இல்லாட்டி அந்தக் குடும்பம் மாதிரி ஒரு ஏசி வாங்கக்கூட காசில்லாம இருந்திருப்பம்!” தன்னைச் சமாளித்துக்கொண்டிருந்த லலிதா கணவரின் மனநிலையை உணர்ந்துகொள்வதாக இல்லை.
“ஓமோம்! பிறந்ததில இருந்து ஏசில வாழ்ந்த உனக்கு அது பெரிய குறையாத்தான் இருந்திருக்கும்!” நக்கலாகச் சுந்தரேசனும் மொழிந்துவிட அவமானத்தில் முகம் சிவந்து சிறுத்துப் போயிற்று லலிதாவுக்கு.
திருமணத்துக்கு முன்னான வாழ்க்கையின் வறுமையை நினைத்துக்கூடப் பார்க்க விரும்பாதவர் லலிதா. அதையே அவர் குத்தியபோது, “பிறக்கேக்க இல்லாட்டி அது சாகும் வரைக்கும் இருக்கக் கூடாதா? லண்டன் போய் நீங்க என்ன கெட்டா போனீங்க? அங்க நாலுபேரும் எவ்வளவு சந்தோசமா இருந்தோம் சொல்லுங்கோ பாப்பம். இஞ்ச வந்த முதல் நாளே சண்டை. நிம்மதி இல்ல. சந்தோசம் இல்ல. அதுக்காகத்தான் கூட்டிக்கொண்டு போனனான்.” என்று அவரும் தன் தரப்பை நியாயப்படுத்த, படார் என்று கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள் ஆர்கலி.
“ரெண்டுபேரும் உங்கட சண்டையைக் கொஞ்சம் நிப்பாட்டுறீங்களா!”
அவளின் அதட்டலில் தாய்க்கும் தகப்பனுக்கும் முகம் கன்றிப்போயிற்று. பிள்ளைகள் வளரத்தொடங்கிய பிறகு இப்படி ஒரு நிலமை இங்கிலாந்தில் அமைந்ததேயில்லை. லலிதா சொன்னதுபோலச் சந்தோசமாகத்தான் வாழ்ந்தார்கள்.
இன்று மகள் கேட்கும்படிக்கு வாய்த்தர்க்கம் செய்தது குன்றலாகப் போய்விடவே அமைதியாக ஆளுக்கொரு அறைகளுக்குப் போய்விட்டனர்.
இரவு முழுக்க உறக்கமேயில்லை ஆர்கலிக்கு. பிரணவனே நினைவுகளில் நின்றான். அதைவிட முகம் கையெல்லாம் கடித்தது. எப்போதும்போல இரவு குளித்து, கிறீம் நன்றாகப் பூசிக்கொண்டுதான் படுத்தாள்.
ஆனாலும், காலையில் எழுந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, முகத்தில் ஆங்காங்கே சிவப்புச் சிவப்பாகச் சிவந்திருந்தது. அந்த இடமெல்லாம் ஒரே எரிவு. கையில் இருந்த கொப்பளங்கள் வேறு இன்னுமே எரிந்தது.
சோர்ந்துபோய் முகமெல்லாம் சிவந்து வீங்கி வெளியே வந்த மகளைக் கண்டதும் பயந்துபோனார் சுந்தரேசன். “என்னம்மா இது? இரவு நல்லாத்தானே இருந்தாய்?”
சோர்வோடு இறங்கிவந்து சோபாவில் சாய்ந்துகொண்டாள் ஆர்கலி.
“இரவு முழுக்கக் கடிச்சது அப்பா. இப்ப பாக்க எல்லாம் சிவந்துபோயிருக்கு. நேற்று கருப்பன் மாமா வீட்டுக் காணிமுழுக்கச் சுத்தினதாலயோ தெரியா!” சோர்வுடன் அவள் சொல்ல, உள்ளிருந்து வந்த லலிதாவுக்குப் பொறுக்கவில்லை.
“பாத்தீங்களா? அந்த வீட்டு ஆக்களும் எங்களுக்குச் சரிவராது. அந்த வீடும் சரிவராது!” என்றார் பட்டென்று.


