சாப்பாட்டு மேசையில் எல்லாவற்றையும் தமயந்தியும் புவனாவுமாகக் கொண்டுவந்து வைத்தனர். பசுமதிச் சோறு நெய்யில் பளபளக்க, கோழியிறைச்சிக் குழம்பு காமகமத்தது.
நண்டினைப் பிரட்டி, இராலினைப் பொரித்து, கத்தரிக்காயில் பால்கறி, கரட்டில் சம்பல், கோழிமுட்டை அவித்து, கோழிக்கால் பொறித்து என்று ஒரு விருந்தே படைத்திருந்தார் புவனா.
“மருமகளுக்கு எண்டதும் மாமியார் எப்படிச் சமைச்சிருக்கிறா பார்.” தாயைக் கண்ணால் காட்டி வம்பிழுக்க ஆரம்பித்தாள் திவ்யா.
தாயின் கண்களில் தெரிந்த கண்டிப்பில், “ஓகே ஓகே! விளங்குது விளங்குது! ஆனா, மருதாணி எல்லாம் வந்து போகுதாம். நீங்களும் கொஞ்சம் கவனிங்க புவனா.” என்று வாய்க்குள் முணுமுணுத்தாள் திவ்யா.
கருப்பனின் அருகிலும் ஆர்கலியின் அருகிலும் ஒவ்வொரு கதிரை இருந்தது. கையைக் கழுவிக்கொண்டு வந்த பிரணவன் தகப்பனின் அருகில் அமரப்போக, “அங்க மாமி இருக்கட்டும். நீங்க இங்க வாங்க!” என்று தன்னருகில் அழைத்தாள் ஆர்கலி.
பிரணவன் சட்டென்று தாயைத்தான் பார்த்தான் பாவமாக. துவாரகாவும் திவ்யாவும் நடக்கட்டும் நடக்கட்டும் என்று விசமத்துடன் கண்ணால் சிரித்தனர். ‘மனுசன் படுற பாத்துக்க இவளவை ஒருபக்கம்!’ சின்னவளின் தலையில் குட்டிவிட்டு வந்து அமர்ந்தான் பிரணவன்.
“அம்மா! அண்ணா அடிக்கிறார்!” பெருங்குரலில் திவ்யா கத்த,
“நீ முதல் வாய மூடிக்கொண்டு இருக்கப்பழகு!” என்று அங்கிருந்தே பதில் சொன்னார் புவனா.
தன்னருகில் அமர்ந்தவனுக்கு தட்டினை ஆர்கலி எடுத்துவைத்தாள். அதைக் கவனித்துவிட்டு, “ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு… ஓ… பெண்ணே…!” என்று பாடத்தொடங்கிய திவ்யா தமயன் பார்த்த பார்வையில், நல்லபிள்ளையாக மாறி, “ஐயோ பச்…சிக்குது பச்…சிக்குது ஓ… அம்…ம்மா!” என்று மாற்றினாள்.
தமயந்திக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை. “வாயை மூடிக்கொண்டு சாப்பிடு கிழடு” என்று அதட்டினாள்.
ஆர்கலிக்கு முதலில் போடுவதற்காகப் புவனா வர, “மாமாக்கும் உங்கட மகனுக்கும் போடுங்கோ மாமி!” என்றாள் அவள்.
“பாத்தியா அவளை? அப்பாக்கும் அண்ணாக்கும் முதல் போடச்சொல்லுறாள். நீ பசிக்குது எண்டு கத்துறாய்.”
“மருமகள் எண்டால் சும்மாவா?”
“பின்ன! அதுவும் மிஸ்டர் கருப்ஸ்க்கு நான் மருமகள். என்ன மாமா?” அவளின் இரட்டை அர்த்தப் பேச்சுகள் விளங்காமல் கேட்டாள் ஆர்கலி.
“பின்ன, நீ சாப்பிடு அம்மாச்சி!” என்றார் அவர் பாசத்தோடு.
“சூப்பரா இருக்கு மாமி!” என்றபடி ஆசையாக உண்டாள் ஆர்கலி.
உழைத்த களைப்புக்கு அகோரப் பசியில் இருந்த கருப்பன் முதலே சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட, “கொஞ்சம் படுங்கோவன். வெயில் இறங்கப் போகலாம்.” என்றார் புவனா.
அவருக்கும் உண்ட களை மயக்கியதுதான். மாமரத்தின் கீழே ஈசிச் சேரைக் கொண்டுபோய்ப் போட்டுவிட்டுச் சரிந்துகொண்டார்.
ஆர்கலி நண்டுத் துண்டுடன் போராடிக்கொண்டிருப்பதை பார்த்தவனுக்குச் சிரிப்பாயிருந்தது. “நான் உடைச்சுத் தரவாம்மா?” புவனாவும் பார்த்துவிட்டுக் கேட்டார்.
“இல்லையில்லை. எனக்கு உடைக்கத் தெரியும்.” என்றுவிட்டு மற்றக் கையையும் எடுத்துப் பிடிக்கப் போக, சட்டென்று தட்டிவிட்டான் அவன்.
முகத்தைச் சுருக்கி அவனை முறைத்துவிட்டு மீண்டும் நண்டுடனான அவளின் போராட்டம் தொடர்ந்தது.
‘வாய் மட்டும்தான். சாப்பிடவும் தெரியாது!’ மனதுக்குள் திட்டிக்கொண்டாலும், எல்லோரின் கண்களையும் சுற்றிவிட்டு தன் நண்டிலிருந்து தசைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து அவளுடைய தட்டில் போட்டுவிட்டான்.
அவள் விழிகள் விரியப் பார்க்க, “சாப்பிடு!” என்று உதடுகளை அசைத்தான்.
அவள் ஆசையாகச் சோற்றோடு சேர்த்துச் சாப்பிடுவதை பார்க்கத் திருப்தியாக இருந்தது.
முடிந்ததும், “உங்கட நண்டு முழுக்க எனக்குத் தந்துட்டீங்க. என்ர நண்ட நீங்க சாப்பிடுங்க!” என்று அவனது தட்டில் போட்டுவிட்டு எழுந்துபோனாள் ஆர்கலி.
அதிர்ந்து, மற்றவர்களிடம் மாட்டிக்கொண்டு முழித்தான் பிரணவன். அவனைக் கண்டு வெடித்த சிரிப்பில், புரையேறிப்போய் இருமிக்கொண்டு சிரித்தாள் திவ்யா.
புவனா மகனைக் கண்டிப்புடன் பார்த்தார். அவனோ மும்முரமாக நண்டை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான்.
‘இவளை வச்சுக்கொண்டு களவா ஒரு காரியம் செய்திட்டாலும்!’ தாயின் கண்களை எதிர்கொள்ளவே முடியவில்லை அவனால்.
மெல்ல நிமிர்ந்தபோது அதுவரை சமையலறை வாசலில் நின்றவள் பின்பக்கமாகச் சரிந்து அவனைப் பார்த்துக் குறும்புடன் கண்ணைச் சிமிட்டிவிட்டுப் போனாள்.
‘அடிப்பாவி! அப்ப தெரிஞ்சேதான் ஆப்பு வச்சியா!’ பிரணவனுக்கு உதட்டினில் மலர்ந்துவிட்ட சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘இந்தக் குட்டிப் பிசாசுக்குப் போயும் போயும் உதவி செய்தியேடா!’ தன்னையே நொந்துகொண்டான்.
அடுத்த செட் சிரிப்பை அவளும் அவனுடைய தங்கைகளும் சிதறவிட்டுக்கொண்டிருந்தனர்.
மாலையானதும் தலைக்குக் குளித்துவிட்டு வந்தவளைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. தோளிலிருந்து நடு முதுகுவரை ‘ஸ்டெப் கட்’ டில் இழை இழையாகத் தொங்கிய முடியைக் கண்டு துவாரகா வியக்க, “உனக்கும் வெட்டி விடவா? சும்மா என்னத்துக்கு இவ்வளவு நீளமா வளத்து வச்சிருக்கிறாய்? வெட்டினா வடிவா இருக்கும்.” என்றாள் ஆர்கலி.
“இல்ல வேண்டாம்!” அரை மனதாய் மறுத்தாள் துவாரகா.
“உனக்கு என்ர ஹேர் ஸ்டைல் பிடிச்சிருக்குத்தானே. பிறகு என்ன? வா! நான் நல்ல அழகா வெட்டுவன்.” என்று அவள் அழைக்க அங்கே வந்த பிரணவனிடம், “அண்ணா, நானும் ஆர்கலி மாதிரி முடி வெட்டட்டா?” என்று தயக்கத்தோடு கேட்டாள் துவாரகா.
திவ்யாவும் ஆர்வமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆர்கலியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அதெல்லாம் தேவையில்லை. போய் வேற வேலையைப் பார்!” என்றான் அவன்.
“ஏன் ஏன் ஏன்? ஏன் தேவையில்லை? ஒருக்கா வெட்டினா என்ன? அவளுக்கு விருப்பமா இருக்கு எல்லோ.” என்று நியாயம் கேட்டாள் ஆர்கலி.
“அந்த வெட்டு எல்லாம் அவளுக்குச் சரிவராது.”
“ஏன் சரிவராது? அவளின்ர முகத்துக்கு அது நல்லாருக்கும். நீட்டு முடிதான் வேணுமெண்டால் பிறகும் வளரும்தானே.”
“வேண்டாம் எண்டால் வேண்டாம். அவ்வளவுதான்!” அவனுடைய தங்கைகளே அவன் இறுக்கிச் சொன்னால் மறுபேச்சுப் பேசமாட்டார்கள். அவர்கள் முன்னிலையில் இவள் வாயாடிக்கொண்டிருந்தாள். அவனுக்கு மெல்லக் கோபம் எட்டிப்பார்க்கத் துவங்கியது.
“அதை அவள் சொல்லவேணும். நீங்க என்ன சொல்லுறது? அவளின்ர உரிமையில நீங்க தலையிடவேண்டாம். உங்களுக்கு நீட்டு முடி விருப்பம் எண்டால் நீங்கதான் வளர்க்க வேணும்! அவள் இல்ல. நான் வெட்டத்தான் போறன்!”
அவனோடு சரிக்குச் சரியாக நின்று மல்லுக்கட்டும் அவளைத் திவ்யா குறுகுறு என்று பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு சினம் வந்தது அவனுக்கு.


