நாட்கள் எப்படி நகர்ந்தது என்றே தெரியாமல் ஒருவாரம் கடந்திருந்தது. சுந்தரேசனும் லலிதாவும் திரும்பி வந்திருந்தனர். திருமணத்துக்குச் செல்ல என்று தயாரானவர்களின் பேச்சு, ஆர்கலிக்குப் பேச இருக்கும் பெடியனைப் பற்றியும் வர, கருப்பன் விசாரித்தார்.
“அந்தத் தம்பி எப்படி இருக்கிறான் சுந்தரண்ணா? பாத்துக் கதைச்சீங்களா?”
“நல்ல பெடியனாத்தான் தெரியிறான் கருப்பா. இனி ஆருதான் முடிவு சொல்லோணும். அவளுக்குப் பிடிச்சாத்தான் எதுவும்.” மகள்மீது யோசனையோடு படிந்தது அவர் விழிகள். அவளோ இவர்களின் அருகிலேயே இல்லை.
“குறிப்பும் பாத்திட்டோம். நல்ல பொருத்தம்! பண்பான அருமையான பெடியன். நல்ல உழைப்பு.” அவன் பெருமைகளை அடுக்கினார் லலிதா.
அந்தச் சாந்தன் வாட்டசாட்டமாக மகளுக்கு ஏற்ற வகையில் இருந்ததுமல்லாமல், அவன் வீட்டினரும் நல்லமாதிரி இருந்ததும், குறிப்புப் பொருந்தியதும் பெரும் நிறைவைக் கொடுத்திருந்ததில் உற்சாகமாகவே சொன்னார்.
“வெளிநாட்டுல இருக்கிறான். நல்ல உழைப்பு. ஆனாலும் ஒருத்தரையும் எதிர்த்துக் கதைக்கிறேல்ல. அவ்வளவு பணிவு! அருமையான பிள்ளை.”
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பிரணவன் தாயைத்தான் முறைத்தான். இது அவனுக்கான குட்டு என்று விளங்காதா?
‘ஒருத்தன் தேவையே இல்லாம பணிஞ்சு போறான் எண்டால் அங்க என்னவோ இருக்கு எண்டு அர்த்தம். இந்தச் சின்ன விசயம் விளங்கேல்ல, இதுல பெருமை!’ சினத்தில் அவன் உள்ளம் கொதித்தது.
அதோடு, இனம் தெரியாத ஒரு தவிப்பு. அங்கே தங்கைகளுடன் இருந்தவளைத் திரும்பிப் பார்த்தான்.
இந்த உலகத்துக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல, தனக்கான உலகத்தில் சிரிப்பும் பேச்சுமாக இருந்தாள் அவள். ‘புள்ளிமானைப் போலத் துள்ளித் திரியிறவளுக்கு பணிவான ஒருத்தன் எப்பிடிப் பொருந்துவான்? அவளை என்னாலயே சிலநேரம் சமாளிக்க முடியிறறேல்ல.’ அவன் மனம் நிலைகொள்ளாமல் அலைபாய்ந்தது.
அவளுக்கு ஒருவனை நிச்சயம் செய்யப் போகிறார்கள் என்பது அவனுக்கு எப்போதோ தெரியும்தானே. பிறகு எதற்கு இந்த அலைபாய்தல்? நிலைகொள்ளாத தவிப்பு? அவன் மனம் திடீரென்று ஏன் பிசைய வேண்டும்? இந்தப் பாடு பட வேண்டும்? ஒன்றும் விளங்கவில்லை பிரணவனுக்கு.
அவளுக்கும் இப்படி ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்தான். அவள் இவர்களின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்கவேயில்லை என்று தெரிந்தது. திவ்யாவுக்கு என்னவோ சொல்லி அடித்துவிட்டுச் சிரித்துக்கொண்டிருந்தாள்.
‘விசரி! எப்ப பாத்தாலும் சிரிப்பும் சேட்டையும்!’ ஏன் இந்தச் சினம் என்று தெரியாமல் பட்டென்று எழுந்து வெளியே வந்துவிட்டான். மூச்சு முட்டுவது போலிருந்தது.
‘குறிப்புப் பொருந்தியிருக்காம். பண்பான பெடியனாம். இந்தப் பண்பும் குறிப்புமா வந்து அவளத் தாங்கப்போகுது? மலை உச்சியில இருந்து சோ எண்டு கொட்டுற அருவி மாதிரி அவள். எப்பிடி விழுவாள் எங்க விழுவாள் எண்டே தெரியாது. பொறுமையாகப் பொக்கிஷமாகப் பாதுகாக்கத் தெரியோணும். அதப் பாக்கிறதை விட்டுட்டு குறிப்பாம் பண்பாம்!’
மனம் கிடந்து குமுற, காணியைச் சுற்றி நடந்துவிட்டு வந்தான். ஒரு வழியாக அந்தப் பேச்சு ஓய்ந்திருந்ததில் ஆசுவாசமாக மூச்சுவிட்டான்.
“ஆரு, இரவுக்கே வெளிக்கிடாணும். தேவையானதுகளை உன்ர பெட்டில எடுத்துவை. பிறகு அத மறந்துட்டன், இத விட்டுட்டு வந்திட்டன் எண்டு சொல்லுறேல்ல.” என்று லலிதா சொல்ல, “ஓகே லல்லு!” என்று குரல் கொடுத்தாள் அவள்.
“அங்க திருமணத்துக்கு என்ன போடப்போறாய்? சாரியா?” என்று கேட்டாள் துவாரகா.
“அம்மா சாரிதான் கட்டச் சொன்னவா. நான் சோளி கொண்டுவந்தனான். ஹேய்! சோளிய போட்டுக்காட்டவா?” சோகமாகச் சொல்லிக்கொண்டு வந்தவள் சட்டென்று தொற்றிக்கொண்ட ஆர்வத்துடன் கேட்டாள்.
“ஓமோம்! நாங்க வரமாட்டம் தானே. அப்ப போட்டுக்காட்டுங்கோ. எது நல்லாருக்கு எண்டு சொல்லுறம்!” என்று திவ்யாவும் சொல்ல, துள்ளிக்கொண்டு மேலே ஓடிப்போனாள்.
அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் களவாக நெஞ்சில் படம்பிடித்துக்கொண்டிருந்தவன், லலிதா நிற்பதால் அவளை நேராகப் பார்க்கக்கூட முடியாமல் திணறினான்.
சற்று நேரத்திலேயே மேலிருந்து படிகளில் இறங்கி வந்தவளைப் பார்த்தவன் சுவாசிக்கவும் மறந்து அப்படியே நின்றுவிட்டான்.
இரண்டு பட்டிகளின் முடிச்சில் மட்டுமே தோளிலிருந்து இறங்கிய ஆடை, இடைவரை அவளின் உடலை அப்படியே தழுவி, இடையிலிருந்து தரைவரை பரவிப் படர்ந்து நின்றது. கன்னம் தழுவி, காதோரம் மறைத்து மார்பில் விழுந்திருந்த முடிச்சுருள்கள் அவன் உயிரையே உசுப்பியது. கதைகளில் வரும் சிண்ட்ரெல்லாவேதான். ஆகாய நீலத்தில் தங்கக் கற்கள் நெஞ்சுப் பகுதி முழுவதையும் நிறைத்திருக்க, அவளின் நிறத்துக்குப் பொன்னென மின்னினாள் ஆர்கலி.
மகளைப் பார்த்த லலிதாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. “என்ர கண்ணே பட்டுடும் போலயிருக்கு!” என்று நெற்றி வழித்துவிட்டு, “நீ முதல் கோயில்ல தாலி கட்டேக்க சாரியைக் கட்டு. பிறகு கேக் வெட்டேக்க இதைப் போடு.” என்றார்.
“போங்கம்மா! என்னால சாரி கட்டேலாது. இது மட்டும்தான் போடுவன்!” அவள் சிணுங்க,
“இல்லை அம்மாச்சி! தாலி கட்டேக்க சாரி கட்டுறதுதான் நல்லம். பிறகு இதைப்போடு!” என்று அன்பாகப் புவனாவும் சொன்னார்.
“எனக்குச் சாரி கட்டத் தெரியாது மாமி! இது வரைக்கும் கட்டினதே இல்ல.”


