“நான் என்னத்துக்கு இருக்கிறன்? அதெல்லாம் நான் கட்டிவிடுவன். இப்ப இதைக் கழட்டிக் கவனமா பெட்டிக்க எடுத்துவை.” பிரணவனும் அங்கிருக்கிறான் என்கிற ஆபத்துமணி அப்போதுதான் அடிக்க, மகளை அனுப்புவதில் மும்முரமானார் லலிதா.
அதை உணராதவளோ, “பொறுங்கம்மா, திவிக்கும் துவாருக்கும் காட்டிக்கொண்டு வாறன்!” என்றுவிட்டு அவர்களிடம் நடந்தாள்.
எதிரில் நின்றவனிடம் கண்ணால் தன்னைக் காட்டி, ‘எப்படி இருக்கு?’ என்று அவள் புருவங்களை உயர்த்திக் கேட்டபோது அவன் உள்ளத்தில் அப்படியொரு சந்தோசம்.
தன் மனம் மயங்கி நிற்பதை எப்படிச் சொல்ல என்று தெரியாமல் சட்டென்று கண்ணடித்தான். அவள் உதட்டில் சிரிப்பு முளைத்துவிட கண்களோ பொய்யாக முறைத்தது. அவன் உதட்டிலும் சிரிப்பு. சட்டென்று திரும்பி நின்று கேசம் கோதியவனின் உதட்டுச் சிரிப்பை மறைக்கவே முடியவில்லை.
அன்றிரவே கிளம்புகிறார்கள் என்றதும், “தம்பி, காருக்குச் சொல்லிட்டியா? மறக்காமச் சொல்லிவிடு!” என்றார் கருப்பன்.
“சொல்லியாச்சு அப்பா. இரவு எட்டுமணிபோல வரச் சொன்னனான் மாமா. ஏசி உள்ள கார். ஓகேதானே.” சுந்தரேசனிடம் தகவல் சொன்னான்.
“அதோட மாமா, அங்க யாழ்ப்பாணத்தில ஒரு ஹோட்டல்ல ஏசி ரூம் ரெண்டு புக் பண்ணி இருக்கிறன். எனக்குத் தெரிஞ்சவர்தான். நீங்க நிக்கிறவரைக்கும் நிக்கலாம்.” ஏசி இல்லாமல் அவள் சமாளிக்கமாட்டாள் என்று யோசித்துச் செய்திருந்தான் அவன்.
“நான் அங்க போய் யாரையாவது கேப்பம் எண்டு நினைச்சனான் பிரணவா. கெட்டிக்காரன், முதலே யோசிச்சு நடந்திருக்கிறாய். எங்களுக்கே அங்க சமாளிக்க முடியேல்ல. ஆருக்கு இன்னும் கஷ்ட்டமா இருந்திருக்கும்.” என்று பாராட்டினார் சுந்தரேசன்.
லலிதாவுக்கு அது பிடிக்கவில்லை. “சயந்தனும் ஹோட்டல் புக் பண்ணுறன் எண்டு சொன்னவர். இனி அவருக்குச் சொல்லோணும் வேணாம் எண்டு!” என்று, அவன் தேவையில்லாத உத்தியோகம் பார்த்துவிட்டதுபோலச் சொன்னார்.
சட்டென்று புவனா மகனை அழைத்தார்.
“தம்பி, ஓடிப்போய் ஏதாவது கறி பாத்து வாங்கிக்கொண்டு ஓடிவா. அவே வெளிக்கிடுறதுக்கு முதல் சமைச்சா சாப்பிட்டுட்டு வெளிக்கிடுவினம்.” என்று சொல்ல, பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான் பிரணவன்.
புவனாவுக்கு மகனையும் லலிதாவையும் சமாளிப்பதே பெரிய வேலையாக இருந்தது.
உணவை முடித்துக்கொண்டு எல்லோருமாகப் புறப்பட்டனர். அதுவரை அவர்களுக்குத் தனிமை கிட்டவேயில்லை. தவிப்புடன் அவளை அவளையே பார்த்தபடி அமைதியில்லாமல் அலைந்துகொண்டிருந்தான் பிரணவன்.
‘இவளாவது தேடிவந்து கதைக்கிறாளா. அதுவும் இல்லை.’ அவளுக்குத்தான் அவனுடைய தங்கைகள் இருந்தால் அவனைக் கண்ணுக்கே தெரியாதே.
ஒரு வழியாக வாகனமும் வந்துவிட, பெட்டிகளை ஏற்றினான் பிரணவன்.
“அப்பா, என்ர பெட்டியை வந்து எடுக்கிறீங்களா? பாரமா இருக்கு?” மேலிருந்து குரல் கொடுத்தாள் ஆர்கலி.
சுந்தரேசனும் மேலே ஏறப்போக, தடுத்தான் பிரணவன். “நீங்க இருங்க மாமா, நான் எடுத்துக்கொண்டு வாறன்.” தாவி ஏறிச் செல்லக் கால்கள் துடித்தாலும் நிதானமாகப் படியேறிப் போனான்.
அறைக்குள் போனதும், “இதுதான் பிர…ணவன்.” என்று காட்டினாள் ஆர்கலி.
“அப்ப மேடம் பயணத்துக்கு ரெடி!”
“எஸ்ஸு!” கட்டிலில் அமர்ந்திருந்து ஷு மாட்டியபடி அவனைப் பார்த்துச் சொன்னாள் அவள்.
“கலியாணவீட்டுக்கு என்ன போடுறது எண்டு முடிவு செய்தாச்சா?”
“சாரிதான் கட்டோணுமாம். நீங்களும்தானே கேட்டுக்கொண்டு நிண்டீங்க.”
“சாரியெல்லாம் உனக்கு நல்லாருக்காது. கட்டாத. கொஞ்சத்துக்கு முதல் போட்டியே அந்தச் சட்டையையே போடு.” நெஞ்சறிந்து பொய் சொன்னான் பிரணவன்.
ஆச்சரியமாகப் பார்த்தாள் அவள்.
“அது சட்டையில்ல சோளி.” கேலியாக அவள் சொல்ல,
“ஏதோ ஒண்டு. அதை மட்டும் போடு.” என்றான் அவன்.
“அம்மா சாரி கட்டச் சொல்லுவா. மாமியும் அப்பிடித்தானே சொன்னவா.”
“ப்ச்! காட்டாத எண்டா காட்டாத பொம்மா!”
“ஏன்?”
‘நீ முதல் முதல் கட்டிக்கொண்டு தேவதை மாதிரி வாறத அவன் பாத்து ரசிக்கவோ…’ நினைவே வேப்பங்காயாய்க் கசந்தது.
“அதுதான் வடிவில்ல எண்டு சொல்லுறன் எல்லோ. காட்டுறேல்ல சொல்லிப்போட்டன்!” முடிவாகச் சொன்னான்.
ஏன் இந்தக் கோபம்? அவனுக்கே விளங்கவில்லை. மனம் தடுமாறியது. எப்போதும்போலக் கேசத்தைக் கோதிக்கொடுத்தான்.
“இதென்ன உங்கட கால்ல என்னவோ பட்டிருக்கு” திடீரென்று அவள் சொல்ல, என்ன என்று குனிந்து பார்த்தான் அவன்.
“சும்ம்மா!” என்றபடி சட்டென்று எட்டி அவன் தலையைக் கலைத்துவிட்டுச் சிரித்தாள் ஆர்கலி.
‘இவளை…’ திட்டக்கூட மனமின்றிக் கேசத்தை கோதிக்கொடுத்தவனின் விழிகள் அவளிடத்திலேயே இருந்தன.
“ஆரு கெதியா வாம்மா! நேரமாகுது.” கீழிருந்து குரல் கொடுத்தார் சுந்தரேசன்.
லலிதாவுக்கு மகள் மீது பயங்கரக் கோபமே வந்தது. ‘அவனையும் ரூமுக்க வச்சுக்கொண்டு இப்பதான் பெட்டி அடுக்கிறாள்.’ என்று தனக்குள் கடுகடுத்தபடி நின்றார்.
“வாறனப்பா!” என்றபடி வாசலுக்கு விரைந்தவளின் மென் காரத்தைப் பற்றி நிறுத்தினான் பிரணவன்.
அவள் திரும்பிப் பார்க்க, “கவனம் பொம்மா!” என்றான் ஆழ்ந்த குரலில்.
“வெயிலுக்க திரியாத. இஞ்ச மாதிரி அங்கேயும் சின்ன பிள்ளை மாதிரி விளையாடுறேல்ல. என்ர நம்பர் இருக்குதானே. ஒவ்வொரு நாளும் எனக்கு மெசேஜ் பண்ணோணும்.” ‘அவனோட கதைக்காத…’ வாய்வரை வந்த வார்த்தைகளை அடக்கினான்.
அவளோ அவனை நன்றாக முறைத்தாள்.
“அப்பாவ மாதிரி ஒரே புத்தி சொன்னீங்க எண்டு வைங்க குரல் வளையை எட்டி நசுக்கி விட்டுடுவன்!” என்று அவனை நோக்கி வந்தவளை, “எங்க நசுக்கு பாப்பம்!” என்றான் அவன் உதட்டில் முளைத்துவிட்ட சிரிப்புடன்.
“என்ன வளந்து கெட்டவனுக்கு அவ்வளவு திமிரா? கட்டில்ல ஏறி நிண்டு நசுக்குவன்!” என்றவளின் தலையில் குட்டிவிட்டு, “போடி!” என்றான் செல்லமாக.
“நீ போடா!” என்றுவிட்டு இறங்கி ஓடிவிட்டாள் அவள்.
‘இவள் இல்லாம… இவளின்ர சேட்டை இல்லாம என்னெண்டு இருக்கப் போறனோ தெரியா…’ கேசத்தைக் கோதிக்கொண்டவனுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.


