“நீங்க வெளில கூட்டிக்கொண்டு போய்ப் பழக்கியிருக்கச் சொல்கேட்டு வருவானோ சித்தி.” குட்டிச் சகோதரனைப் பாசமாகப் பார்த்தபடி சொன்னாள், இலக்கியா.
“நல்லாச் சொன்னீர் போம். இப்பிடித்தான் அங்க ஒருக்காக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போக, நல்ல பிள்ளை போலத்தான் வந்தவன், கண்ண மூடித் திறக்கிறதுக்குள்ள பெரிய சோஸ் போத்தலத் தூக்கித் தொப்பென்று போட்டுட்டான். எடுக்க வேணாமெண்டு சொல்லிக்கொண்டு எட்டிப் பிடிக்கிறதுக்குள்ள உடைச்சே இருந்தான் தெரியுமா? அண்டையோட இவன இப்பிடிக் கடைகளுக்குக் கூட்டிக்கொண்டு போறதில்ல இலக்கியா. தகப்பனோட எண்டா ஒரு மாதிரி இருப்பான்.” அலுத்தபடி வந்தாள், அஜி.
அஜி, இலக்கியாவின் கடைசிச் சித்தப்பா மாறனின் மனைவி, நெதர்லாந்திலிருந்து கோடை விடுமுறைக்காக கணவன், மகனோடு கனடா வந்திருந்தாள். வந்த அடுத்தடுத்த நாளே ‘ஸ்காபரோ மோல்’க்கு வந்திருந்தார்கள். ஆறு கிழமைகள் விடுமுறையென்று வந்திருந்தாலும் நிறைய இடங்களுக்குப் போகும் திட்டத்தோடிருந்ததால் நிமிடத்தையும் வீணாக்கும் எண்ணமின்றி ஒவ்வொன்றையும் செய்தார்கள்.
முதலில் இலக்கியாவும் அஜியும் தனியாகத்தான் புறப்பட்டார்கள். அதுவரை, ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளோடு விளையாடிக்கொண்டிருந்த கவினுக்கு, தாய் புறப்பட்டு வரவும் அப்படியொரு கவலை வந்து தொலைத்துவிட்டது.
“அம்மா கவினும் வரப் போறன். அக்காக்கள், அண்ணாக்கள் என்னச் சேர்த்து விளையாடீனம் இல்ல. நான் சின்னப் பிள்ளையாம்!” சிணுங்கியபடி வர, “இல்ல இல்ல …கவின், குட்டியப்பர் அப்பம்மாவோட இருங்க; அம்மா போயிட்டுக் கெதியா வந்திருவனாம்.” என்றுதான் சொன்னாள், அஜி.
ஒரே தெருவில் கவினுடைய மூன்று பெரியப்பாமார் வசிக்கிறார்கள். ஒரு பெரியப்பா வீட்டில் கவினுடைய அப்பம்மாவும் இருக்கிறார்.
“அப்பம்மா வீட்டில தான் அப்பாவும் நிக்கிறார். வாங்க கூட்டிக்கொண்டு போய் விடுறன்.” மகனைக் கொஞ்சியபடி தூக்க, அவனோ, திமிறி இறங்கி அப்படியே நிலத்தில் படுத்துவிட்டான்.
“அம்மா கவினும் வாறான், கார்ல போவம்.” கையையும் காலையும் உதைக்க, “இந்தப் பிடிவாதம் தான் வேணாம் எண்டு சொல்லியிருக்கிறன், கெதியா எழும்பலாம்.” அஜி அதட்டல் போட, ஓடிவந்து தூக்கிவிட்டாள், இலக்கியா.
“நீ வாடா செல்லம் அக்கா கூட்டிக்கொண்டு போறன்.” அழைத்து வந்திருந்தாள்.
“அந்த ஆன்ட்டி மட்டும் பிடிக்கேல்லையோ சரி!” இப்படி, கதைத்தபடியே வந்து டிம் ஹொட்டனில் நீண்டிருந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டாள், இலக்கியா.
“கவின், அம்மாட்ட வாங்க, அக்கா வாங்கிக்கொண்டு வருவா.” தள்ளி நின்ற அஜி அழைக்க, அவனோ, ‘மாட்டன்’ என்று, பலமாக தலையாட்டியபடி தமக்கையின் கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு நின்றான்.
“சித்தி உங்களுக்கும் எனக்கும் ஐஸ் கஃபே வாங்கிறன்.” என்று சொல்லி, மினி டோனட் என்னென்ன சுவைகளில் விருப்பமென்று கவினிடம் கேட்டுக்கொண்டே நகர்ந்தவள், யாரோ தன்னைப் பார்ப்பது போலுணர்ந்து பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே, அவளுக்கருகில் போய்க்கொண்டிருந்த வரிசையில் ஒருவன் நின்றிருந்தான், இவளையே பார்த்தபடிதான். இவள் பார்த்ததும், வெகு நிதானமாகப் பார்வையை விலக்கிவிட்டான்.
இலக்கியாவின் நெற்றி சுருங்கியது. ‘அறிஞ்சவன் தெரிஞ்சவனோ!’ சிலவினாடிகள் யோசனையும் ஓடியது, அவன் பார்வை யோசிக்க வைத்தது. மீண்டும் பார்க்க, அவனோ, மறுபுறம் நின்ற இன்னொருவனோடு கதைத்துக்கொண்டு நின்றான். அதன் பிறகு அதைப்பற்றி யோசிக்கச் சந்தர்ப்பமில்லாது, சொல்லியிருந்தவை வரவே வாங்கிக்கொண்டு நகர்ந்தார்கள்.
குடுகுடுவென்று நடந்த கவினுக்கு ஈடு கொடுத்து வெளியில் வந்து, சற்றுத் தள்ளியிருந்த இருக்கையிலமர்ந்து, கவின் சாப்பிடும் வரை கதைத்துக் கொண்டிருந்தார்கள். அதிகநேரம் அவர்களைக் காத்திருக்கவிடவில்லை, அவன். அவர்கள் கஃபே குடிக்க முதலே சாப்பிட்டு விட்டான்.
“வீட்டில செய்து குடுக்கிற சாப்பாடுகள் எண்டா உள்ள போக எவ்வளவு திண்டாட்டமா இருக்கும்! இப்பப் பார், ஒரே முச்சில முடிச்சிட்டார்.” என்றபடி, மகன் வாயில் ஒட்டியிருந்த சொக்லேட்டைத் துடைத்துவிட்ட அஜி, கைப்பையிலிருந்த தண்ணீர்ப் போத்தலையெடுத்துக் கொடுக்க, இரண்டு மிடறு விழுங்கியவன், “வாங்க போவம்…மூவிங் ஸ்டெப்ல போவம்!” காரியத்தில் கண்ணாகத் துள்ளியிறங்கினான்.
“இங்க பாரும் கவின், போறது சரி, சொல்லுறது கேட்க வேணும். இல்லையோ வீட்ட கூட்டிக்கொண்டு போயிருவன். இனிமேல் எங்கயும் கூட்டிக்கொண்டு வரவும் மாட்டன். விளங்குதோ!” பொய்க் கோபத்தோடு அதட்டினாள், இலக்கியா. சிறுவன் முகம் சுருங்கிப் போயிற்று! மறுநொடியே, பற்றியிருந்த அவள் கையை உதறி விடுவித்துக்கொண்டு தாயின் கரத்தைப் பற்றினான், முறைப்போடு!
“பாருங்கவன் சித்தி, பெரிய மனுசனுக்குக் கோபம் எல்லாம் வருது!” என்றபடி, அவனைக் கட்டிப்பிடித்துத் தூக்கி கன்னத்தில் அழுந்தக் கொஞ்சினாள்.