ஆனால், வரும்போது இன்னொருவனுக்கு உரியவளாக வருவாளே! அவன் புன்னகை அந்தக் காற்றில் கரைந்து போயிற்று! நிதர்சனம் உரைக்க உறைந்து நின்றான்.
எட்டாக்கனி மீது கொண்ட காதல் எப்படிக் கைகூடும்? நிறைவேறவே முடியாத காதல்! காயங்களை மட்டுமே பரிசளிக்கப் போகிறதா? வலியோடு கண்களை இறுக்கி மூடிக்கொண்டான்! கேசத்தைக் கோதிவிட்டுக் கலகலவென்று சிரித்தாள் அவனது காதலி. அவள் இல்லையா அவனுக்கு?
இந்தக் காதலை அவன் உணராமலேயே இருந்திருக்கலாம்.
உயிர்வரை வலித்தது. சின்ன பூ முகம் நெஞ்சுக்குள் நின்று அவனை வதைத்தது.
‘உன்ன நான் பாக்காமையே இருந்திருக்கலாம் பொம்மா!’ இனி எப்படி அவன் நாட்கள் நகரப்போகின்றன? அவனுக்குத் தெரியவில்லை.
அவளின்றி அவளின் சிரிப்பின்றி எப்படி? எப்படி முடியும் அவனால்? நெஞ்சு முழுக்க வலியைச் சுமந்துகொண்டு எவ்வளவு நேரம் அங்கேயே நின்றானோ தெரியாது. தமயந்தி அழைக்க, மனமெங்கும் வெறுமை சூழ எழுந்து சென்றான்.
இங்கே லலிதா மகளை மகளைப் பார்த்தார். அவள் கைப்பேசியை நோண்டிக்கொண்டிருப்பது சினத்தை வரவழைத்தது.
எதேற்சையாக அவளும் நிமிர்ந்து பார்க்க, கண்ணால் சயந்தனோடு கதைக்கச் சொன்னார். அவள் தோளைக் குலுக்கிவிட்டுப் பேசாமலிருந்தாள்.
சுந்தரேசன் மனைவியை உணர்ந்தவராக, “ரெண்டுபேரும் ஏன் இங்கயே இருக்கிறீங்கள். வெளில போய்க் கதைங்கோவன்!” என்று சொன்னார்.
அவள் எழுந்து அவனைப் பார்க்க அவனும் எழுந்து வந்தான். அமைதியாகவே நடந்தாள் ஆர்கலி. அவனது செண்டின் வாசனை மூக்கை அளவுக்கு அதிகமாகவே துளைத்தது. அவனுக்கும் அவளுக்குமான இடைவெளியைச் சற்றே அதிகரித்தாள்.
“வைஸ் து வாஸ்?” என்று அவன் ஆரம்பிக்க, ஒன்றும் விளங்காமல் விழித்தாள் ஆர்கலி.
“ஓ சொறி! உனக்கு டொச் விளங்காது என்ன?” உலகின் மிக அற்புதமான மொழியை நீ அறிந்திருக்கவில்லை என்பது போன்றதொரு பாவனையை அவன் கொடுத்தபோது, ‘டேய் ஆங்கிலீஸ்ல நான் அடிச்சுவிட்டா நீ தாங்குவியாடா?’ என்று கேட்க வேண்டும் போலிருந்தது.
இதுவே பிரணவனாக இருந்திருக்கக் கேட்டிருப்பாள். அவனை ஒருவழியாக்கி இருப்பாள். இவன் பாவம் பிழைத்துப் போகட்டும். பிரணவன் வேறு சொல்லி அனுப்பி இருந்தானே, ‘நல்ல பிள்ளையா இரு, உன் சேட்டைகளைக் காட்டக் கூடாது!’ என்று.
அவளும் நல்லபிள்ளையாக ஒரு சிரிப்பை மட்டுமே அவனுக்குக் கொடுத்தாள்.
“நீ நல்ல வடிவா இருக்கிறாய்.” என்றான், ஆர்வமாக அவளைப் பார்த்தபடி.
அவனது ஆரம்ப உரையை அவ்வளவாக ரசிக்கவில்லை அவள்.
“உனக்குத் தெரியுமா? பதினாறு வயசிலேயே நான் அங்க போய்ட்டன். இருபத்திரெண்டு வயசில சொந்தமா வீடு வாங்கிட்டன். அங்க இருக்கிற ஆக்கள் எல்லாருக்கும் பொறாமை. கல்யாணம் கட்ட முதலே அங்க வீடு வாங்கின ஆள் நான் ஒருத்தன்தான். கிட்டத்தட்ட அரைவாசிக்கு மேல வீட்டுக்கடன் அடச்சாச்சு. சுவிஸ் நஷனலிட்டி இருக்கு. நீ இங்கிலாந்து சிட்டிசன்தானே? எங்கயும் இருக்கலாம். கார் இருக்கா உனக்கு? இல்லாட்டி பிரச்சனை இல்ல. கம்பனில இருந்து சைபர் கிலோமீட்டர்ல இறக்குவம்.”
இப்படி நிறைய நிறையச் சொன்னான். எதிர்காலத் துணையாக அல்ல, அவளின் எதிர்வீட்டுக்காரனாக வருவதற்கு கூடத் தகுதியில்லாதவன் என்று அந்தச் சொற்ப நேரத்திலேயே அவளுக்குப் புரிந்துபோயிற்று!
அளந்து கதைக்கும் பிரணவன் கண்முன்னால் வந்தான். அவனோடு கதைக்க வேண்டும் போலிருந்தது. பக்கத்தில் நடந்துவருகிற அரை லூசைப் பற்றிச் சொல்லிச் சிரிக்க வேண்டும். அவனும் விழுந்து விழுந்து சிரிப்பான்.
அவளின் விருப்பம் என்னவென்று அறியாமலேயே தன்னைப் பற்றிய பெருமைகளை மாத்திரம் அடுக்கிக்கொண்டே போனான் அவன். அவனைவிட்டு ஓடுவதற்கு அது ஒன்றே அவளுக்குப் போதுமாயிருந்தது!
“நேரமாச்சு! அம்மா அப்பாவே தேடப்போறீனம். வாங்க போவம்!” என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் திரும்பி நடந்தாள்.
“உன்ர நம்பர் சொல்லு!” மிகவும் ஸ்டைலாக பத்தாவது ஆப்பிளை அவன் வெளியே எடுத்தான்.
ஏவாளாக மாறி அதனைக் கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
“இங்க நான் நம்பர் போடேல்ல. நீங்க உங்கட நம்பரை அப்பாக்கு வாட்ஸ் அப் செய்து விடுங்கோ. நான் வாங்குறன்!” என்றவள் வேகமாகச் சென்று பெற்றவர்களுடன் அமர்ந்துகொண்டாள்.
‘ஷப்பா!’ அவன் அடித்த வேப்பிலையில் தலையெல்லாம் கிறுகிறுத்தது அவளுக்கு.
“அந்தத் தம்பியப் பிடிச்சிருக்காம்மா?”
ஹோட்டலுக்குத் திரும்பியதும் மனைவியின் கண்ணசைவில் விசாரித்தார் சுந்தரேசன்.
“ப்ச்! தெரியாப்பா!” தொப்பென்று அங்கிருந்த குஷனுக்குள் புதைந்துகொண்டு சலிப்புடன் சொன்னாள் ஆர்கலி.
உண்மையிலேயே சலிப்பாகவிருந்தது அவளுக்கு. மனத்தைக் கவரும் பேச்சோ, செயலோ அவனிடமிருப்பதாய் அவள் உணரவில்லை.
அவளை அவன் ஈர்க்கவில்லை. தலை சுற்றிப்போக வைக்கவில்லை. ஆர்வமாய்ப் பார்க்கத் தோன்றவில்லை. அவனறியாமல் அவனை ரசிக்க வேண்டும் போலிருக்கவில்லை. அவனோடு கதைக்க வேண்டும் போலிருக்கவில்லை. கனவுகளில் மிதக்க விடவில்லை. எப்போதடா அவனிடமிருந்து தப்பித்து வருவோம் என்றுதானிருந்தது.
முக்கியமாக அவன் அவளின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி அறிய முனையவேயில்லை.
“அவளுக்கு என்ன தெரியும் எண்டு கேக்குறீங்க? அவள் சின்ன பிள்ளை. நல்லது கெட்டது பாத்து நாங்கதான் செய்து வைக்கோணும்.” உடை மாற்றிக்கொண்டு வந்த லலிதா சிரிப்புடன் சொன்னார்.
“பிறகு ஏனம்மா சின்ன பிள்ளைக்குக் கல்யாணம் பேசுறீங்க? பேசினா கேக்கோணும்!” இருந்த விசருக்கு வெடுக்கென்று சொன்னாள் மகள்.
அந்த வீட்டில் இருந்த நேரம் முழுவதும் அவளால் அவளாக இருக்கவே முடியவில்லை. எப்போதும் ஏதோ இரண்டு கண்கள் எங்கோ ஒரு மூலையிலிருந்து அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அவதானித்துக்கொண்டிப்பது போன்றதொரு தோற்றம் சினம்கொள்ள வைத்திருந்தது.
“பாத்தீங்களா வாய? எல்லாம் நீங்க குடுக்கிற இடம்!” என்றவரைப் பார்வையாலேயே அடக்கிவிட்டு மகளிடம் திரும்பினார் சுந்தரேசன்.
“ஏனம்மா அப்பிடிச் சொல்லுறாய்? பாக்கப் பேச நல்ல மாதிரித்தானே தெரியிறார்.”
“ஓம் அப்பா. நானும் குறை சொல்லேல்லையே. ஆனா என்னவோ ஒரு ஈடுபாடு வரேல்ல. பத்தோட பதினொண்டு! எனக்கு அவரிட்ட என்ன கதைக்க எண்டே தெரியேல்ல. அவருக்கு அவரின்ர நல்ல வேலை, சம்பளம், கார், வீடு இதத் தாண்டிக் கதைக்கிறதுக்கு ஒண்டுமில்ல. பெருமை பாடிக்கொண்டு இருக்கிறார்.” என்றாள் ஆர்வமற்று!


