அவளுரு வீட்டினுள் மறைந்த பின்னரே, தான் காரை விட்டிறங்காது அமர்ந்திருப்பதை உணர்ந்து கொண்டான், அவன். மின்னலாக உதடுகளை உரசிய முறுவலோடு இறங்கி வீட்டினுள் சென்றவன், அச்சதுரவடிவிலான கூடத்தின் ஒருபக்கத்தை ஆக்கரமித்திருந்த மெத்தென்ற இருக்கையில் தொப்பென்று புதைந்தான்.
“இலக்கி…இலக்கியா!” மிக மெதுவாக உச்சரித்தவன் இமைகள் மெல்ல மூடிக்கொள்ள, கைகள் இரண்டையும் தலைமாட்டால் பின்புறமாகப் போட்டுவிட்டு, கால்களை நீட்டிக்கொண்டு தளர்ந்து அப்படியே தலை சாய்த்து விட்டான்.
அவள் யார்? ‘சிலநாட்களுக்கு முதல் காதில விழுந்த பெயர், விழிகளைத் தீண்டிய உருவம் ரெண்டும் கொஞ்சமும் மறக்காமல் நினைவில இருக்குதே!’ அவன் எண்ணத்தில் ஆச்சரியம் மிகையாகக் கலந்திருந்தது.
‘இதில் இந்தளவுக்கு வியக்க என்ன இருக்குது?’ அவன் மனமேதான் முரணாகவும் கேள்வியெழுப்பியது.
‘பல நாள் அறிமுகம், நட்பு, உறவு எண்டு எதனுள்ளும் வராள் எண்டிருக்கையில ஆச்சரியம், வியப்புக்கு இடமில்ல எண்டு எப்பிடி நினைக்க ஏலும்?’ மனம் இராகம் இழுத்தது. அதோடிணைந்து, மனக்கண்ணில் மிகத் தெளிவாகவே அவளுருவும் பிரசன்னமாகிற்று!
சற்று முன்னர், சற்றே தூரத்தில் மங்கிய ஒளியில் தெரிந்த உருவல்ல அது. சில நாட்களுக்கு முன்னர், பிரமாண்டமான ஸ்காபரோ கடைத்தொகுதியில் தவறுதலாக அவன் கையைப் பற்றிவிட்டு அதேவேகத்தில் உதறிவிட்டுப் பதற்றமும் சங்கடமுமாக நின்றாளே, அவ்வுரு வந்து நின்றது.
எப்படி யோசித்துப் பார்த்தாலும் நிச்சயமாய் அன்றுதான் அவளை முதன் முதல் கண்டிருக்கிறான். அதுவும் அத்தனை சனநெருக்கடியான இடத்தில் அவளைத் தனியாக எப்படிக் கண்டான்? காண வைத்தாள் அவள்!
“என்ன வேகமா ஓடி வந்திருந்தா அப்பிடி மோதியிருப்பா?” முணுமுணுத்தான்.
நல்ல திடகாத்திரமான ஆண் அவன். அவனையே ஒருகணம் தடுமாற வைத்தாளே! இரண்டு மூன்று தரம் தான் உறிஞ்சியிருப்பான், அப்போதுதான் வாங்கிய சூடான கஃபே சிதறிப்போயிருந்தது. நல்ல காலமாக வேறு யாரிலும் படாது அருகில் வந்துகொண்டிருந்த அவன் நண்பனையே சுட்டுக் பொசுக்கிவிட்டு அவன் போட்டிருந்த வெள்ளைச் சேர்ட்டை பிரவுண் ஆக்கியிருந்தது.
“ஏய்… யூ…” என்று ஆரம்பித்து, “இடியட்!” என்றபடி தான் இருவருமே திரும்பியிருந்தார்கள். முட்டி மோதிவிட்டுக் கணம் கூட தாமதிக்காது சொல்கிறாளே!
அது பார்த்தால் அவளின் அந்தப் பதைபதைப்புக்குக் காரணம் மேலேறிக்கொண்டிருக்கும் நகரும் படிகளில் (எஸ்கிலேட்டரில்) கால் வைக்க எத்தனித்துக் கொண்டிருந்தது.
அச்சிறுவனை நினைக்கையில் இப்போதும் முறுவல் பூத்தது. இவன் மூத்த அக்காவின் மகனும் இப்படித்தான். பார்வை ஒரு கணம் வேறெங்கு போய்விட்டாலும் போதும், எக்குத்தப்பாக எதையாவது செய்துவிட்டு அப்பாவி போல் நிற்பான்.
நல்ல காலமாக அருகே வந்த பெண்மணி பிடித்துவிட்டார். என்ன மனநிலையில் ஓடி இருப்பாளென்று உணர்ந்ததால் அவள் இடித்ததைப் பெரிது படுத்தாது விட்டுவிட்டான். நண்பன் தான் சேர்ட்டை சுத்தம் செய்த பின்னும் அதன் கறை பல்லிளித்ததில் புறுபுறுப்போடு வந்தான்.
“இப்பிடி வெளில வரேக்க பிள்ளைகளக் கூட்டிக்கொண்டு வந்தா கவனமாப் பார்க்கத் தெரியோணும். அதுவும் துடியாட்டமான பிள்ளைகள் எண்டா கூடுதலாக் கவனிக்கிறேல்லையா? அத விட்டுட்டு ஃபோனையும் கடைகளையும் பே எண்டு பார்த்துக்கொண்டு வந்து பிள்ளையக் கண்டபடி ஓட விட்டுப்போட்டு, இப்பப் பார், நான் இப்பிடித் திரிய வேண்டிக்கிடக்கு. எனக்கு வார விசருக்கு…” என்று நின்றவனைச் சமாதானப்படுத்தித் திரும்பவும் கஃபே வாங்கும் எண்ணத்தில் சென்றால், அங்கும் வந்து நின்றாள்.
அதுவும் மிகத் தற்செயலான நிகழ்வே! ‘அதென்ன எங்களுக்கு மட்டுமான கடையா என்ன?’ என்றெண்ணினாலும், அப்போது அவளைச் சற்றே ஊன்றித் தான் பார்த்து நின்றான். அதையுணர்ந்து அவள் திரும்பி நோக்கவும் பார்வையை விலக்கிக் கொண்டவன் பின்னர் தான் வந்த வேலையைப் பார்க்கச் சென்றானென்று அதோடு போயிற்றா? இல்லையே!
கடைத்தொகுதியின் வரைபடத்தைப் பாக்கச் சென்ற இடத்தில் அவளை இவன் காணவும் இல்லை. தாம் போக வேண்டிய கடை, மாடியில் வலக்கோடியில் உள்ளதைக் குறித்துக்கொண்டு நகர முனைகையில் தான் அவள் கரம் இவன் கரத்தைப் பற்றியிருந்தது.
“திடுமெண்டு கையப் பிடிச்சது மட்டுமா? டொமி மேல இருக்கு வாங்கோ எண்டும் சொன்னாளே!” சொல்லிவிட்டு முறுவலித்தான்.
அப்போதுதான் அவள் விழிகளை உற்றுப் பார்த்திருந்தான். அவை தத்தளித்த தவிப்பும் இவனுள் புகுந்து அழுந்தப் படிந்திட்டு! கணத்தில் கரத்தைவிட்டுவிட்டு மீண்டும் மீண்டும் மன்னிப்பு வேண்டியபடி அவள் ஓடிச் சென்ற வேகம் இருக்கே…
ஹா…ஹா…வாய்விட்டே நகைத்தான் வேந்தன். யாருமில்லா வீட்டிலிருந்து கொண்டு சிரித்த சிரிப்பு எதிரொலிக்க, நிமிர்ந்தமர்ந்தான்.
அதன் பின்னரும், கடந்துவிட்ட சில நாட்களில் அவளை நினைத்துக்கொண்டெல்லாம் இருக்கவில்லை. அதற்கெல்லாம் நேரமும் இருக்கவில்லை. நிச்சயமான உண்மையிது! கவனிக்க வேண்டிய வேலைகள் பலதுகளும் இருக்கையில், இப்போது இங்கு வர வேண்டி வந்ததே தேனிலவுத் தம்பதிக்கு இந்த வீட்டின் ஒரு அறையை ஒழுங்கு செய்து கொடுக்கவேயாகும்.
பொதுவாகவே இந்த வீடு வெளியாட்கள் பாவனைக்கு விடப்படுவதில்லை. இது யாழ் ட்ராவல்ஸின் திருமணப் பரிசு! அருகில் கொட்டேஜில் இடமில்லாததில் இங்கு ஒழுங்கு செய்ய வேண்டி வந்துவிட்டது.
வந்த இடத்தில், நுழையும் போதே தமிழ்த் திரையிசை பலமாகவே செவிகளில் மோத, சந்தோசம் தானாகவே வந்தொட்டிக்கொண்டது.
தனுஷும் சாய்பல்லவியுமாக மாறி இளவட்டங்கள் ஆடுவதும் அவன் பார்வையில் விழுந்ததுதான். வரும் போதே கொட்டேஜ் விபரம் கேட்க, தமிழ்க் குடும்பம் மொத்தமாக நான்கையும் எடுத்திருப்பதாக சொன்னதும் நினைவில் வர, சாதாரணமாகத்தான் அவர்களை பார்த்துக்கொண்டு காரை நிறுத்தினான். அது பார்த்தால், அவர்களுள் அந்த மோதல் ராணியை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.
“மோதல் ராணி” மீண்டும் உதடுகள் முறுவலில் விரிய, தலையைக் கோதியபடி எழுந்தவன் கால்கள், அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைப் பார்க்கும் வண்ணம் அந்தப்புறமாக இருந்த யன்னலை நாடின.
அவள் எங்கு இருக்கிறாள் என்றெல்லாம் இனம் காணமுடியவில்லை. மூட்டிய நெருப்பின் செவ்வொளி மட்டுமே பரவியிருந்தது. எல்லோருமே நிழலாகத்தான் தெரிந்தார்கள்.
“ச்சே! வெளியில் சில லைட் போஸ்ட்கள் போட்டிருக்க வேணும்.” தன்னையும் மீறிச் சொல்லிவிட்டு, ‘உப்’ மூச்செடுத்து விட்டான்.
தன் மனம் பிறழ்கின்றதோ தடுமாறுகின்றதோ, அவனால் சட்டென்று அனுமானிக்க முடியவில்லை. ஆனால், அவளை, குறிப்பாக அவளை இயற்கையே மீண்டும் மீண்டும் சந்திக்க வைக்கின்றதோ என்ற எண்ணம் அந்த இயற்கையின் காதலனின் மனதுள் உறுதியாக விழுந்து விட்டிருந்தது.
அதற்காக, இப்படியே எவ்வளவு நேரம் நிற்பதாம்? வந்த வேலையை முடித்துவிட்டுத் தூங்கியெழுந்து, காலையில் நேரத்துக்கே புறப்பட வேண்டுமென்ற எண்ணம் அழைக்கவே, அங்கிருந்த பெரிய அறையைத் தேனிலவுத் தம்பதிக்கென்று ஒழுங்கு செய்து வைத்துவிட்டு, குளித்து முடித்து வந்து சிறிதுநேரம் ட்ராவல்ஸ் சம்பந்தமான வேலைகளில் மூழ்கிவிட்டான். இருந்தாலும், அருகிலிருந்து வந்த பாடலொலியும் அவர்களின் சந்தோச ஆரவாரவும் செவிகளில் விழுந்த வண்ணமேயிருந்தன.
‘நான்கு விடுமுறைக்கால வீடுகளையும் ஒரேயடியாக எடுத்திருக்கினம் எண்டா சினேகிதராச் சேர்ந்து வந்திச்சினமோ, சொந்தக்காரர்களோ!’ என்றெல்லாம் எண்ணமோடவும் செய்தது. அவர்களைப் பற்றி இன்னமும் அறிந்து கொள்ளும் ஆவல் வேறு எட்டிப் பார்த்தபடியிருந்தது. அதன் உந்துதலில் தான், அவர்கள் பதிவு செய்த விபரங்களை எடுத்துப் பார்த்தான்.
சுதர்சன் தான் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தியிருந்தார். ‘ஸ்ட்ரோஃபில்’ அவர் கொடுத்திருந்த முகவரியை மனதுள் குறித்துக் கொண்டவனுக்கு, அப்போதுதான் ஏறக்குறைய இரு கிழமைகளுக்குப் பின்னர், சாரதியோடு வாகனம் வேண்டுமென்று ஒருவர் கேட்டதென்று ட்ராவல்சில் சொன்னது நினைவிலாடியது. அதோடு, அவர்களே இந்த நான்கு வீடுகளையும் பதிந்துள்ளதாகவும் சொன்னதும்…
சட்டென்று ட்ராவல்ஸ் முன்பதிவுகளை எடுத்தாராய்ந்தான். சான்ஸ்பிரான்சிக்கோ வரையில் ரோட் ட்ரிப் செல்வதற்காக, 12 இருக்கைகள் கொண்ட ‘ஃபோர்ட் ட்ரான்சிட்’ வகையிலான காரொன்று சாரதியோடு முன்பதிவாகியிருந்தது. அதையே பார்த்திருந்தவன் முகத்தில் மீண்டும் முறுவல்.
*****


