ரோசி கஜனின் இயற்கை – 3(2)

  அவன் தூங்கிக்கொண்டிருந்த அறையின் பக்கமாக மிக அருகில் தான் அந்த விசாலமான ‘காயமந்த்’ ஏரி (Lac-Cayamant) ஓடிக்கொண்டிருந்தது. 

  அன்று, அதிகாலையிலிருந்து சற்றே பலமாகவே காற்று வீசத் தொடங்கியிருந்ததில், ஏரியின் சலசலப்பும் ஏரிக்கரையில் நீண்டு வளர்ந்திருந்த மர இலைகளின் கலகலப்பும் கலந்து, ஒருவிதமான இன்னிசை நாதமாகத் தழுவி வேந்தனை விழித்தெழச் செய்திருந்தன.

  முதல் நாளிரவு சற்றே நேரம் சென்றுதான் உறங்கச் சென்றிருந்தான். பார்க்கவென்று வந்த வேலைகளை விட, வந்த இடத்தில் பார்த்தவளைப் பற்றியதான சிந்தனைகள் அதிகமாக இருந்ததில் நேரம் போனதும் தெரியவில்லை.  

  ஏதோ ஒருவகையில் வாழ்வின் முக்கிய, தனக்கே தனக்கான பிரத்தியேகப்  புள்ளியொன்றைத் தொட்டுவிட்ட உணர்வு, அவனுக்கு. இது அவனுக்கே வெகு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், அவன் வாழ்வில் அவனோடு கூட வரப்போகும் பெண் இவளாக இருந்தால் என்றது வரை சிந்தனை சென்றுவிட்டதே!   

  அவன் ஒன்றும் விடலைப்பையன் அல்ல. இருபத்தியெட்டு வயது ஆண்மகன். பொறுப்பானவன். இரு அக்காக்களுக்குத் தம்பியாகப் பிறக்காதிருந்தால் சிலவேளை இப்போது திருமணம் முடித்தும் இருக்கலாம். சிறிய தமக்கையின் திருமணம் பிந்திப் போனதும், இவன் திருமணமும் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. இருந்தும், தாய் தந்தை, சகோதரிகள், நெருங்கிய உறவுகளென்று எல்லோரும் கை கட்டிக்கொண்டும் இருக்கவில்லை.  

  இந்த சிலவருடங்களாகவே, அப்பப்போது  தமக்கு விருப்பமான மணப்பெண்களை கை காட்டத்தான் செய்தார்கள்.  ‘நல்ல குணமான பிள்ள, நமக்குப் பொருத்தமான இடம், வடிவான பொம்பள, நல்லாப் படிச்சிருக்கிறா!’ என்று சொல்லிக் காட்டிய போதெல்லாம் அவர்கள், ‘எனக்கே எனக்கானவள் இவள்’ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கவில்லையே! 

   “உங்கள் எல்லாருக்கும் பிடிச்சிருந்தாலும் எனக்குப் பிடிக்க வேணும்; அப்பத் தான் என்ர கலியாணம்.”  முடிவாகச் சொல்லித் திரிந்தவன், இன்றுதான், இவள் தான் என்றளவுக்கு வந்திருக்கிறான். 

  அப்பவும் ‘முன்னப் பின்ன அறியாத தெரியாத பிள்ள; நான் மட்டும் நினைச்சாச் சரியா?’ என்ற எண்ணமும் எழுந்ததுதான். ‘அவள் மனம் வேறோருவருக்குரியதாகவிருந்தால்…சாத்தியம் இல்லையா என்ன?’ விசமம் பிடித்த உள்ளம் இப்பிடியும் சீண்டிப்பார்த்தது. தொடர்ந்து செல்லமுயன்ற எதிர்மறையான சிந்தனைக்கு உடனடித் தடாவே போட்டுவிட்டான், வேந்தன். அதுவே, அவள் புறமிருந்து விருப்பை அறிய என்ன செய்ய வேண்டுமென்று சிந்திக்கவும் வைத்தது.  சாதகங்களைத் தொட்டுப் பற்றி பிடித்துவிடவும், பாதகங்கள் ஏதுமுண்டோ என்றறிந்து களைந்தெறிந்துவிடவும் மனதுள் பரபரத்துப் போகவும் வைக்கின்றது.

  இத்தனைக்கும் மத்தியில் ஆழ்ந்து உறங்கியிருந்தான். அதுவே, துளியும் சோம்பலோ தூக்கக் கலக்கமோ இன்றித் தெளிவோடு எழுந்தமர வைத்தது.    கண்களைத் தேய்த்து, தலையைக் கோதி நிமிர்ந்தமர்ந்தவன், நேரம் பார்த்தான். 

  “அடடா! கொஞ்சம் வெள்ளனவே வெளிக்கிட்டுப் போக வேணும் எண்டு நினச்சனே. ட்ராஃபிக்கில மாட்டினா பிறகு எல்லாம் போச்சு!”  சட்டென்று தொத்திய அவசரத்தில் குளியலறை நோக்கி நகர்ந்தவன், கணத்தில் மனதை மாற்றிக்கொண்டான். வேகமாக வெளியே வந்து, வரவேற்பறை யன்னல் திரைச்சீலையை விலக்கி இலக்கியா ஆட்கள் தங்கியிருக்கும் வீட்டை நோட்டம் விட்டான்.

  அங்கு ஆளரவமே இருக்கவில்லை. எரிந்த மரக்குற்றிகள் கருகிச் சோம்பலோடு கிடந்தன. வட்டம் கலைந்து அங்குமிங்குமாகக் கிடந்தன, பிளாஸ்டிக் கதிரைகள்; அவற்றில் சிலவற்றில் விரித்துக் கிடந்தன, துவாய்கள். அருகில் கிடந்த மர  மேசையில், சில சிறு கிண்ணங்கள், தட்டுகள், அடிமட்டத்தில் நீரோடு தண்ணீர்ப் போத்தல்கள், படுத்துக்கிடந்த காலியான பழபழச்சாறுப் பெட்டிகள்  என, அவ்விடம் கூட உயிர்ப்பின்றி இருப்பதாகத் தோன்றியது. 

   இப்போது புறப்பட்டுப் போய்விட்டால், அவர்கள் இங்கிருக்கையில் வரும் சந்தர்ப்பம் கிடைக்காது. இந்த வீட்டையும் ஒருகிழமைக்குத் தேனிலவுத் தம்பதிகளுக்கெனக்  கொடுக்கப் போவதால்,  வந்து போகலாமென்று நினைக்கவும் முடியாது. போக முதல் அவளை ஒரு தரம் பார்க்கக் கிடைத்தால்?

   ஆவலும் தடுமாற்றமுமாக அலைந்தன, விழிகள். புதுவகையான உணர்விது வேந்தனுக்கு! மனம் கிடந்து பரபரக்க மெல்லச் சிரித்துக்கொண்டான், தன்னை நினைத்தே!  யாரோ ஒருத்தி இப்படியெல்லாம் பாடாய்ப் படுத்துகின்றாளே!

   நேற்று இதேநேரம், இப்படி, ஒரு பெண்ணின் காட்சிக்காக ஏக்கத்தோடு அதுவும் பற்கள் கூடத் துலக்காது காத்துக்கிடப்பானென்று ஒருகணம் கூட யோசித்துப் பார்க்கவில்லையே!

   உதடுகளில் ஒட்டி நின்ற முறுவல் நன்றாகவே விரிய, அவன் முகத்தில் தனிக் களை தெரிந்தது. இருக்கரங்களாலும் சிகையை வருடிக்கொண்டே மீண்டும் ஒருதடவை அந்த வீட்டை விழிகளால் துழாவினான்.

   “ம்ம்…” ஏக்கம் மூச்சாக வெளியேறத்  திரும்பியவன், சரேலென்று, மீண்டும் யன்னல் புறமே திரும்பினான். ஆனால், வீட்டைப் பார்க்கவில்லை.

   

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock