ரோசி கஜனின் இயற்கை – 4(1)

 

   வழமை போலவே காலையில் விழிப்புத் தட்டிவிட்டது, இலக்கியாவுக்கு. 

   மூடியிருந்த தடித்த திரைச்சிலை நீக்கலால் கசிந்து வந்த வெள்ளொளி நன்றாக விடிந்து விட்டதோ என்ற சந்தேகத்தை வேறு கிளப்பிவிட, சோம்பலோடு, போர்த்தியிருந்த மெல்லிய குயில்ட்டை விலத்தியவள் பார்வை பக்கவாட்டில் சென்றது.

  அந்த இரட்டைக்கட்டிலில் அவளருகில் கிடந்த தமக்கை கவியோ ஆழ்ந்த துயிலில் இருந்தாள். “கும்பகர்ணி!” மெல்ல முணுமுணுத்தாள். கவி எப்போதுமே இப்படித்தான்; விடுமுறை நாட்களென்றால் நெடுநேரம் கழித்து உறங்குவதும் மறுநாள் மதியம், அதுவும் உருட்டிப் பிரட்டிப் பெரும்பாடு பட்டால் தான் எழுந்தும் கொள்வாள். 

   படுக்கையை விட்டெழாது  அருகிலிருந்த சிறு அலுமாரியின் மீது வைத்திருந்த கைபேசியை உயிர்ப்பித்து மணி பார்க்க, அப்போதுதான் ஐந்தரை கடந்திருந்தது.

  “ஓ! அப்பிடியொண்டும் பெரிசா நேரம் போகேல்ல.” மீண்டும் முணுமுணுத்தாலும், இனியும் நித்திரை வருமென்ற நம்பிக்கை அவளுக்கில்லை. படுக்கையில் கிடந்து புரள்வதைப்  போன்றதொரு அலுப்பும் வேறெதுவும் இல்லை. எழுந்துவிட்டாள். 

  சத்தம் செய்யாது குளியலறைக்குள் புகுந்தவள் அடுத்த இருப்பதாவது நிமிடங்களில் வெளியே வருகையில் புத்துணர்வோடு வந்தாள்.  இதமான நீரில் கழுவித் துடைத்ததில் புத்தம் புது மலராய் மலர்ச்சியோடிருந்தது, அவள் வதனம்!

  மீண்டுமொருமுறை முகத்தைத் துவாயால் ஒற்றியெடுத்தாள். காதோரமாக, அடங்கா ஆசையோடு ஒட்டிநின்ற நீர்த் துளிகள் மாயமாகியிருந்தன. அங்கிருந்த கதிரையின் பிடியில் துவாயை விரித்துவிட்டு சமையல் பகுதிக்குள் நுழைந்தவள், சுடுநீர் கேற்றிலில் நீரை அளவாக நிரப்பி வைத்து விசையைத் தட்டிவிட்ட வேகத்தில் அணைத்துவிட்டாள்.

   மூளையில் ஆசை பளிச்சிட்டது! ‘இப்போதைக்கு ஒருத்தரும் எழும்பிற சிரமனே இல்ல. இப்பிடியொரு சந்தர்ப்பம் பிறகு கிடைக்காமலும் போகலாம். அப்பிடி இருக்கேக்கக் கிடைச்சத விடுறதா?’ அடுத்த சிலநொடிகளில், பதுமையாக அடியெடுத்து வைத்து வெளியேறிய கால்கள் ஓட்டமெடுத்தன, ஏரிக்கரை நோக்கி.

துள்ளலோடு சென்றவள், வழியிலிருந்த சிறு தடுப்புக்குள் நுழைந்து இரு துடுப்புகளும் எதற்கும் இருக்கட்டுமென்று லைஃப்  ஜக்கட்டையும் எடுத்துக் கொண்டோடி, ஆங்கில ‘டி’ வடிவில் மரத்தால் அமைத்திருந்த அச்சிறு இறங்குதுறையின் மீது நின்றாள்.

அவள் மீது தரித்து நின்றது, வேந்தன் பார்வை! றோஸ் நிற இரவுடையும் மேலே ஒரு வெள்ளை லேஸ் கோட்டுமாக நின்றவள், தானொருவனின் மனதைக் கட்டிப்போட்டுவிட்டதை சற்றும் அறியவில்லை. கம்பிக்கற்றையாகத் தொங்கிய கூந்தல் கற்றையோ, உச்சியில் ஒரு பாண்டினுள் அகப்பட்டுத் திமிறிக்கொண்டிருந்தது, வீசும் காற்றுக்கு. இவன் உள்ளமோ, மகிழ்வில் சேர்ந்தாடியது. 

  வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். அவளைக் காணவில்லையே என்ற ஏக்கம் மறைந்தே போயிருக்க நின்றவனும் அவர்களிருந்த வீட்டைத் திரும்பிப் பார்த்தான். 

   ‘அவே  ஆருக்கும் தெரியாமப்  போறாளோ!’ மனம் சந்தேகித்தது. 

  அவளோ, “எல்லாரும் நல்லாத் தூங்குங்க பிள்ளைகளா! இலக்கியா ஒரு அரைமணித்தியாலம் தன்னந்தனியா இப்படியே கொஞ்சத்தூரம் போயிட்டு வாறன்.” வாய்விட்டே சொன்னபடி, பார்வையைச் சுழற்றினாள்.

  இருமருங்கிலும்  கண்ணுக்கெட்டிய தூரம் வரை  ‘ லேக் காயமன்ந்’ பரந்து நீண்டு கிடந்தது. 

  முதல் நாள்  காலையில் புறப்பட்டிருந்தாலும் கியூபெக்  வந்து சேர எடுக்கும் ஆறு ஏழு மணித்தியாலங்கள் கடந்து, ஆங்காங்கே நின்று நின்று இடங்கள் பார்த்துக்கொண்டு வந்ததில் பொழுது சாய்கையில் தானே வந்து சேர்ந்திருந்தார்கள். வந்த களையிலும் சாய்ந்து விட்ட பொழுதிலும் முழுதுமாகக் கருத்தில் படாத ஏரியின் இரம்மியம் புதிதாகப் புலர்ந்த பொழுததில் கொள்ளை அழகோடு காட்சியளித்தது. 

   ஏரியின் இருபக்கமும் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல்! சற்றே அதிகமாகக்  காற்று வீசியதில் ஓங்கி நின்ற மரங்கள் ஒரே பக்கமாய் சரிந்து வளைந்திருந்தது கூட வெகுவாய் அழகு சேர்த்ததெனலாம்.

    இணையத்தில் பார்க்கையில் அமைதியாக, நீலவண்ணத்திலிருந்த  ஏரியோ சாணிப்பச்சைக்கு மாறி, அந்த அமைதி தொலைத்துக் காற்றோடு பலத்த கைகலப்பில் ஈடுபட்டிருந்தது. 

  ‘இண்டைக்கு நீந்திறத  நினைச்சும் பார்க்கேலாது  போல இருக்கே!’    அந்தக் கவலையும் சேர்ந்துகொண்டது. 

  “அய்யோ! இதில நிண்டு ரசிச்சுக்கொண்டிருந்தா இப்ப ஆராவது எழும்பி வந்து மறிச்சுப் போடுவினமே!”  தன்னைத்தானே கடிந்து கொண்டவள், அந்த மரத்திலான சிறு இறங்குதுறையின் இருமருங்கிலும் பார்வையை ஓட்டினாள்.

   இரு பெரிய பிளாஸ்டிக் வள்ளங்களும் ஐந்தாறு கானோப் படகுகளும் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அசைந்தோடித் திரிந்த ஏரி நீரின் தாலாட்டில் அப்படியும் இப்படியும் அசைந்தபடி இவளின் ஆவலைத் தூண்டி விடவும் செய்தன. சில கானோ  இருவருக்கானது. இரண்டே இரண்டுதான் தனியாக ஒருவர் செல்லக் கூடியது. 

 அதிலும், முதலாவதாகக்  கட்டப்பட்டிருந்த சிவப்பு நிறக் கானோ, பார்த்ததும், ‘என்னோடு வாயேன்’ என்றழைத்தது. முன்னேறினாள், இலக்கியா.

   விறுவிறுவென்று சென்று துடுப்புகளை  வைத்துவிட்டு லைஃப் ஜக்கட்டையும் உள்ளே போட்டவள் கயிற்றை அவிழ்த்துப் பிடித்தபடியே ஏற, “ஏய் பார்த்து…” இங்கிருந்து கூவியிருந்தான், வேந்தன். அந்தளவுக்கு, அப்படியும் இப்படியும் தடுமாறிவிட்டு ஒரு மாதிரி அமர்ந்து கொண்டாளவள்.

     அந்த இறங்குதுறையோடு ஏரியின் இரு கரைகளிலும் அல்லியும் வெண்தாமரையும் குவியலாகப் படர்ந்திருக்க, வீசிய காற்றுக்கு இவள் வலிக்காமலேயே அதனுள் சென்றது, கானோ.

  “ஏய்! என்ன நீ? ஏறியிருந்தோன்ன இப்பிடி ஆட்டம் காட்டினா எப்பிடியாம்?”   கானோவைக் கடிந்தபடி  மாறி மாறித்  துடுப்புகளைப் போட்டவள்  கொஞ்சநேரம் நன்றாகவே தடுமாறினாள். முன்னால்  போக நினைத்து வலிக்க, அது பின்னால் போனது. காற்று வேறு பலமாகப் பிடித்துத் தள்ளியது. கானோவை நகர்த்துவது பெரும் சவாலாகவே இருந்தது.

    ‘ம்ம்… பேசாமல் இறங்கிருவமா? இது சரிவராது போலக் கிடக்கே!’     அதுவரையும் இருந்த ஆவல் சற்றே ஆட்டம் கண்டதில் உள்ள நிலையைப் படம்பிடித்த மனம் எச்சரித்தாலும், முன்வைத்த காலை பின் வைப்பதா என்றிருந்தது அவளுக்கு. ஒத்தூதிய கரங்கள் வலிப்பதை நிறுத்தவில்லை. 

அவளையே பார்த்து நின்ற வேந்தன் உதடுகளில் அவள் படும் பாடு புன்முறுவலைப் படர வைத்தது.  

  ‘இவள் என்ன செய்யப் போறாள்?’ யோசனையோடு நின்றவன், வெளிவாயில் நோக்கிச் சில அடிகளை எடுத்து வைத்துவிட்டு நிதானித்தான்.

    ‘அவள் என்ன குழந்தையா? லைஃப் ஜக்கட் போடாததில இருந்தே நீச்சல் தெரிந்தவள் எண்டும் தெரியுது. இல்லையோ, இந்தத் துணிவும் வராது. அதோடு, இப்ப நான்  போய்…நானும் ஒரு கானோவை எடுத்துக்கொண்டு பின்னால்  போறதா?’   மாறி மாறி உருண்ட எண்ணங்களில், அப்படிப் போவதென்பது சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்தது.

  

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock