“ஏய்! என்ன விளையாடுறிரா? நான் என்ன வேலைவெட்டி இல்லாமல் இருக்கிறன் எண்டு நினைச்சிட்டீரோ? அவசரமாக வெளிக்கிட்டனான் நீர் இப்பிடி எங்கயாவது நிற்பீர் எண்டு பதறிப்போய் வந்தா… ஏதோ உம்மக் கொல செய்ய வந்த கணக்கில கத்திறீர்.” சிடுசிடுத்துக்கொண்டு வந்தவனுக்கு, அப்போதுதான், உண்மையில் அப்படியேதும் விபரீதமான பயம் இருக்குமோவென்ற சந்தேகம் வந்தது.
அவள் விழிகளில் அந்தப் பயம் அப்பட்டமாகத் தெரிகின்றதே! அவன் முகம் இளகி, அங்கே சிறு முறுவல் வந்திருந்தது. அவனைக் கண்டு பயப்படுகிறாளே! விசரியேதான். அதேநேரம், ‘அப்பிடியொரு எண்ணம் இருக்கலாம்; கூடாதெண்டும் சொல்ல முடியாதுதானே? அவளுக்கு நான் ஆரெண்டு என்ன தெரியும்?’ மனம் அவளை உணர்ந்துகொண்டது.
“இங்க பாரும், கண்டதையும் யோசிச்சிட்டுத் தண்ணீக்க ஏதும் குதிச்சிராதேயும் சொல்லீட்டன்; உம்ம ஒண்ணும் செய்திர மாட்டன், பயப்படாமல் வாரும்!” கரத்தை நீட்டினான்.
அவள் அவனை நம்பவேயில்லை. என்னைக் காணவில்லை என்று வந்தானாமே! குழம்பியே போனாள்.
“நான்…நான்…இங்க வந்தது உங்களுக்கு எப்பிடித் தெரியும்? நீங்க ஆரு? அண்டைக்கு மோலில கண்ட போதே ஒரு மாதிரிப் பார்த்துக்கொண்டு நின்றனீங்க … ” ஒரு சாதியாக, எச்சரிக்கையும் பயமும் கலந்த பார்வை பார்த்துக்கொண்டு கேட்டவளை, நன்றாகவே சிரித்தபடி நோக்கினான், அவன்.
‘நீ என்ன என்னைப் பின்தொடர்ந்து இங்க வந்தியா?’ நுனி நாக்குவரை வந்த சொற்களை விழுங்கிவிட்டாள் என்றால், ‘நானெங்க உன்னப் பார்த்தன்? நீதான் சுற்றிச் சுற்றி வந்து என்னில முட்டி மோதி, கையைப்பிடிச்சு எண்டு எல்லாம் கலகம் செய்து உன்னையே பார்க்க வச்சனி! அது மட்டுமா? இப்ப…இங்கயும் வந்து…’ சொல்ல வந்தவனும் வார்த்தைகளை அடக்கிக்கொண்டான். அதற்கு இதுவா நேரம்?
மழையும் காற்றும் வலுத்துக்கொண்டே போனது. அவளின் கானோ அசைந்து அசைந்து விலகிச் செல்ல பொறுமையை இழந்துவிட்டான், வேந்தன்.
“இந்த விசாரணைய அங்க வீட்டில போய் வச்சுக் கொள்ளலாம் முதல் கயிறத் தா…ரும்!”
“இல்ல வேணாம்…நீங்க போங்கோ! நான் வந்தமாதிரித் திரும்பிப் போவன்.”
“அப்ப நீர் என்ன நம்பேல்ல என்ன? அந்தளவுக்கு கெட்டவனாவா நான் தெரியிறன்?”
“ஆங்! இந்தக் காலத்தில உருவத்த வச்சு ஆளிண்ட குணத்தச் சொல்ல முடியாது. அதோட, உங்களுக்குப் பயந்து கொண்டெல்லாம் நான் வரமாட்டன் எண்டு சொல்லேல்ல. காராத்தேல ப்ளெக் பெல்ட் நான். உங்களுக்கு ஏன் வீண் சோலி எண்டுதான் சொன்னனான்.” நிமிர்ந்து அமர்ந்தாள், இலக்கியா.
“ஓஹோ! நான் தான் சொல்லுறனே…உம்மக் கூட்டிக்கொண்டு போற வீண் சோலி பாக்கத்தான் வந்தனான் எண்டு. பிறகென்ன? இங்க பாரும், நீர் தலைகீழா நிண்டாலும் இந்தக் கானோ இப்படியே உம்ம இழுத்துக்கொண்டு போகுமே தவிர, வந்த வழில திரும்பிப் போக ஏலாது. இப்பிடியே போனால் மைல் கணக்கில இந்த லேக் போகும். சொல்லுறத கேளும்…கயிற்றைத் தாரும்!” அதட்டல் போட்டான்.
அவன் சொல்வதிலுள்ள உண்மை புரிந்தாலும், “இல்ல முடியாது.” என்றவள், கண நேர முடிவோடு அவனையும் அந்தப் படகையும் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடி, “உங்கட ஃபோன ஒருக்காத் தாங்கோ…அதுக்குப் பிறகு உங்களோட வாறது பற்றி யோசிக்கிறன்.” என்றாள், மிடுக்கோடு.
அவனில் கொண்டிருந்த பயமும் கொஞ்சம் குறைந்துதான் இருந்தது. முற்றிலும் குறையவில்லையே! சாத்தியம் இருக்கும் போலவும் இல்லை. அங்கு கண்டவன் இத்தூரமாக இங்கும் வந்து நின்றால்? என்னதான் நினைப்பது? வெகு தற்செயலான சம்பவம் என்றொதுக்க அவள் தயாராக இல்லை. இருந்தாலும், “நீர் முதல் கயிற்றைத் தாரும், சொல்லுறதக் கேளும்!” மீண்டும் அவன் போட்ட அதட்டலில் கயிற்றை அவன் பக்கமாக வீசிவிட்டிருந்தாள். அதோடு, “உங்கட…உங்கட ஃபோன ஒருக்காத் தருவீங்களா?” கரத்தை நீட்டவும் செய்தாள்.
கயிற்றை ஒருகரத்தால் பற்றிக்கொண்டு கானோவைத் தன்னை நோக்கி இழுத்தவன் மீண்டும் அவள் விழிகளில் பயத்தைப் படித்த கணம் உண்மையிலும் உள்ளே நொந்து போனான்.
“முன்னப் பின்னத் தெரியாதவன் தான், இருந்தாலும் நீரும் எனக்கு அப்பிடித்தானே? நான் உம்ம…” ஒரு மாதிரிக்குரலில் சொன்னவன், “நீர்…கொஞ்சமும் என்ன நம்பேல்ல எல்லா? இந்தாரும்!” காற்சட்டைப் பையினுள்ளிருந்து எடுத்து நீட்ட, “ஒன் பண்ணித் தாங்கோ…வீட்டுக்குக் கோல் பண்ணிச் சொல்ல.” என்றாளவள்.
“இதெல்லாம் எனக்கு வேணும்.” பற்களை நறும்பினாலும், கைபேசியை உயிர்ப்பித்து நீட்ட, எட்டி நடுங்கும் கரத்தால் வாங்கிய வேகத்தில் அவள் செய்த வேலை இருக்கே…அயர்ந்து போய் நின்றான், வேந்தன்.
சோவென்று பொழிந்த மழையும் விசிறியடித்த காற்றும் கொந்தளித்த ஏரியும் கூட ஒரு கணம் தயங்கி நின்று அவன் முகம் காட்டிய பாவங்களையும், அவள் செய்கையையும் இரசித்துவிட்டே தம் பயணத்தைக் தொடர்ந்தன.


