ரோசி கஜனின் இயற்கை 6 (2)

“ஏய் இலக்கியா?” கொட்டும் மழையோடு கலந்து வந்தது கவியின் குரல். சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவர்களின் வீட்டு யன்னலில் நின்றிருந்தாள், தமக்கை.

     “மழைக்க நிண்டு என்னடி செய்யிற?” மீண்டும் கத்தினாள்.

  அதன் பின்னரே அவள் கால்கள் தம் கொட்டேஜ் நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தன, அப்போதும், அவன் கொட்டேஜை ஒருதரம் பார்த்துவிட்டே தான்!

  “ஏய் எரும,  தொப்பலா நனைஞ்சு கொண்டு வாறியே விசரே உனக்கு? வந்த இடத்தில இப்பிடி நனைஞ்சு காச்சல் கீச்சல் வரப்போகுது. இப்ப  அம்மா கண்டாவோ நல்லா வாங்குவ. முதல்  உள்ள வா.” அடிக்குரலில் கடிந்தபடி வரவேற்றாள், கவி. 

   இலக்கியா எதுவும் சொல்லவில்லை. “குளிச்சிட்டு வாறன்.” குளியலறை நோக்கி நகர்கையில், அந்த வரவேற்பறையோடிருந்த சமையலறையில் நின்ற சுகுணா கண்டுவிட்டார்.

   “இலக்கி? என்னதிது? எப்ப வெளில போனனீ? சொல்லீட்டும்  போகேல்ல போல! கவி நீ எங்க எண்டு தெரியாதெண்டாளே! அறியாத தெரியாத இடத்தில வந்து நிண்டு இதெல்லாம் என்ன பழக்கம்?” ஆரம்பித்திருந்தாரவர். 

   “அம்மா ப்ளீஸ்! சரியாக் குளிருது! முதல் குளிச்சிட்டு வாறன்.” குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

   சும்மா மழையில் நனைந்து விட்டு வருவதாக நினைத்துவிட்டாரென்று புரிந்தது. அவள் செய்த வேலைக்கு இண்டைக்கு நல்லா வாங்கிக் கட்டப் போகிறாள். 

   “ச்சே!”  தன்னையே தான் கோபித்துக்கொண்டாள், இலக்கியா.   ‘இருந்தாலும் அப்பிடிப் போகப் போய்த்தான்…’ சிந்தனை ஆரம்பித்த வேகத்திலேயே தடைப்பட்டது. 

   ‘இப்ப நான் என்ன நினைக்க இருந்தன்?’ மனதுள், ஒரு தெளிவுக்காக இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டாள். 

   ‘இல்ல…வேற ஒண்டும் இல்ல. அப்பிடிப்போகப் போய்த்தான் இப்பிடி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சது. வாழ்க்கையில இனி இப்பிடி ஒரு லூசு வேல பார்க்கவே மாட்டன் எண்ட முடிவுக்கும் வந்திருக்கிறன். நம்மளால எல்லாம் முடியும் எண்ட நம்பிக்கையும் துணிவும் இருக்கத்தான் வேணும்; இருந்தாலும், அதுக்கும் ஒரு எல்லை இருக்கு; எதைச் செய்ய முதலும் ஒண்டுக்குப் பத்துத் தடவையா யோசிக்க வேணும் எண்டு நெத்தில அறைஞ்சு சொல்லித் தந்திருக்கு, நான் இண்டைக்கு செய்த வேலை…  எண்டுதான்  நினைக்க வந்தன்.’ இப்படி நினைத்தாலும், ‘அந்தாளின்ட பெயரைக் கூட கேட்கேல்லயே!’ இந்த எண்ணமும் சிந்தையிலோடியது.

   “வாட்சப் நம்பர் இருக்கு. அந்த ஃபோனில இருந்து என்ர போனுக்குத்தானே ஃபோட்டோ அனுப்பினன்.” தனக்குள் சொல்லிக்கொண்டவள், “அக்காவோட கதைக்கிறது மாதிரி நடிக்க அந்தாளிண்ட முகம் போன போக்கிருக்கே!” என்றதும், தான் புகைப்படம் எடுத்தபோது அவன் நின்ற நிலையும் நினைவில் வந்து சிரிப்புப் பீறிட்டது.    

கதவில் தட்டினாள், கவி “இலக்கி… கெதியா வெளில வாடி, அப்பா பாத்ரூம் போக வேணுமாம்.” என்று சொல்லிக்கொண்டே.

  “இந்தா அஞ்சு நிமிசம்.” என்றவள், அடுத்த கால்மணித்தியாலத்தின் பின்னரே வெளியில் வர, “எங்கம்மா போயிட்டு வந்தனீ? போட் ஏதும் எடுக்கேல்லையே?”    பதிலை எதிர்பார்க்காதே அவசரத்தோடு உள்ளே நுழைந்தார், சுதர்சன்.

   நாக்கைக் கடித்துக்கொண்டு அங்கமர்ந்திருந்த தாயைப் பார்த்தாள், இலக்கியா.

  நடந்ததை அப்படியே சொல்லவில்லையேல் அவளுக்கு அன்றைக்கு ஒரு வாய் தண்ணி உள்ளே போனாலும் செரிக்காது. அது அவள் சிறுவயதிலிருந்து பழகிய பழக்கம். உருவாக்கிவிட்டவரும் அவள் தாயார் தான். வழமையாகக்  கடகடவென்று கொட்டிவிடுபவள் இன்று வார்த்தைகளைத் தேடி எடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தாள்.  

    தாயின் அருகில் சென்று அணைந்து அமர்ந்துகொண்டாள். 

  “தலைய வடிவாத்  துடைக்கேல்ல. ட்ரையர எடுத்துக்கொண்டு வா கவி. நீ போய், கோப்பி போட்டிருக்கிறன் எடுத்துக்கொண்டு வா.” சொல்லிக்கொண்டே மகளின் தலை கோதினார், அவர்.

    “கவி …செல்லகுட்டியக்கா! கோப்பியை எடுத்துத் தாங்கோ பார்ப்பம்.” 

  “பெரிய வேலை செய்து களைச்சு வந்திருக்கிற பார்! எழும்பி எடு பார்ப்பம். பாருங்கம்மா இவள.” 

தாயின் மடியில் ஹெயர் ட்ரையரை வைத்துவிட்டுத்  தன் கைபேசியோடு அமர்ந்த தமக்கையின் தோள் பட்டையில் ஒரு அடிபோட்டுவிட்டு எழுந்து தனது கோப்பியை எடுத்துக்கொண்டு வந்தமர்ந்தாள், இலக்கியா.

  “ஏண்டி எரும இப்ப அடிச்சனீ? முதல் விடியவெள்ளன அந்தப் பக்கமாக எங்க போனனீ? எப்ப எழும்பினனி? சொல்லாமல் கொள்ளாமல் பாருங்கம்மா இவளிட வேலையை?” வரிசையாகப் போட்டுக்கொடுத்தாள், தமக்கை.

   தமக்கையை முறைத்த இலக்கியாவின் பார்வை தவிப்போடு தாயை நாடியது. 

  “இப்பிடித் திரும்பி இருந்து குடி!” மகளின் தலைமயிரைக்  காயவைத்துக்கொண்டே, “எங்க  போனனீ? அதுவும் எல்லாரும் நித்திரையாக் கிடக்கேக்க பறையாமப் போயிருக்கிற பிள்ள!” கடிந்துகொண்டே கேட்டார். 

  “மா…சொல்லுவன்  பிறகு ஏசக் கூடாது சரியா?” அரைவாசித் திரும்பிப் பார்த்துத் கேட்க, “முதல் நேரா இரு! சொல்லு. அப்ப  ஏசுற வேலை செய்திருக்கிற என்ன? போட்டில போனனியா பிள்ளை? வெளில பார், பேக்  காத்தும் மழையுமாக் கிடக்கு. இதுக்க உண்மையாவே போட் எடுத்தனியா இலக்கியா?”

   தாய் தன் பெயரை நீட்டி முழங்கியதிலிருந்தே அவருக்குக் கோபம் வந்துவிட்டதைப்  புரிந்து கொண்டவள், “போதும் விடுங்கோம்மா!” தலைமயிரை விடுவித்துக்கொண்டு, தாயைப் பார்க்கும் வகையில் திரும்பியமர்ந்து கொண்டாள்.

  “சத்தியமாம்மா… நான் கானோ எடுக்கேக்க மழை வாற சிரமன் இருக்கேல்ல. காத்துக்கூட இருந்திச்சு தான், இப்பிடி இருக்கேல்ல. அதனாலதான் நீங்க எல்லாம் எழும்ப முதல் ஒரு சுற்றுப் போயிட்டு வருவம் எண்டு வெளிக்கிட்டனான்.” என்றுவிட்டு, தாயின் முறைப்பைப் பார்த்தபடி கையில் இருந்த காலிக்கோப்பையை முன்னாலிருந்த சிறு மேசையில் வைத்தவள் தாயின் மடியில் சுருண்டு கொண்டாள்.

   “காத்து வளத்துக்குக்  கானோ அப்பிடி வேகமாகப் போனத நான் கவனிக்கவே  இல்லம்மா. அப்பிடியே நீட்டுக்கும் போக பே வடிவாக் கிடந்தது தெரியுமா? சொர்க்கலோகம் போல!  அவ்வளவு பெரிய பிராந்தியத்தில நான் மட்டும் ஹையோ! பேச்  சந்தோசமா இருந்திச்சுத் தெரியுமா?” சொல்லிக்கொண்டே தாயின் வயிற்றைக் கட்டிக் கொள்ள, அவரோ, அவளைப்  பிரித்தெடுக்க முயன்றபடி, “உன்ன என்ன செய்யிறது பிள்ள? இதெல்லாம் என்ன விளையாட்டு வேலையே! இத்தின பேர் இருக்கிற இடத்தில உனக்கு அப்பிடிப் போக விருப்பம் எண்டால் சித்தப்பாமாரில ஒருத்தரச்  சரி கூட்டிக்கொண்டு போகலாம் எல்லா? இப்பப்பார் சொல்லாமல் கொள்ளாமல் இந்த வேலை பார்த்ததுக்கு எல்லாரிட்டையும் வரிசையா வாங்கிக் கட்டப் போற.”

   “அதுதானே? முதல் கானோவ எதிர்க்காத்தில எப்படி டி வலிச்சனி? அதேன் அங்க பக்கத்துக் கொட்ஜ்ஜில நின்று வந்தனீ?” இடையிட்டாள், கவி.

   “அதைத்தானே சொல்லவாறன் அதுக்குள்ள உங்களுக்கு அவசரம்.” என்றாரம்பித்து மிகச் சுருக்கமாக நடந்ததைச் சொல்லியே விட்டாள்.

  கேட்டிருந்த தாய் அதிர்ந்து போனார். “அய்யோடி எரும! ஏதாவது நடந்திருந்தா?” கவி அதிர்வோடு கூவினாள்.

  “அதுதானே? வந்ததும் வராததுமா நீயே இப்பிடிச் செய்தா உன்ன விடச் சின்னப்பிள்ளைகள் என்ன செய்வீனம் சொல்லு?” என்றபடி வெளியில் வந்தார்,  சுதர்சன்.

    தந்தையின் கண்டிப்பில் கண்கள் நிறைந்து போயிற்று, அவளுக்கு. அந்தக் கண்ணீருக்கு காரணம் குற்றவுணர்வும், அந்த வேளையில், யாருமில்லா ஏரியில்  தான் அனுபவித்த அந்தப் பயமும் தான். கண்ணீரோடு அவரைப் பார்த்தவள், “சொறிப்பா… இனி அப்பிடிச் செய்யமாட்டன். நான்…நான் நல்லாப்  பயந்திட்டன் தெரியுமா? உங்களை எல்லாம் கத்திக் கூப்பிட்டனான்.”  என்றுவிட்டு விக்கி விக்கி அழ, “ஐயோ என்ர குஞ்சு!” தாய் இறுக அணைத்துக் கொண்டார்.

“விசரி! பெரிய வீரி போல போயிட்டு இப்ப அழுகிற என்ன?” தன் கண்களைத் துடைத்துக்கொண்டு சொன்னாள், கவி. 

  “என்ன நடக்குது? மழை வந்து எல்லாத்தையும் கெடுத்திட்டுதே!” சொல்லிக்கொண்டே நுழைந்த மாறன், நடந்ததைக்  கேட்டுவிட்டுப் படபடவென்று பொரியத் தொடங்கிவிட்டான். 

   “ஆர் அது?  இந்த கொட்டேஜ் சொந்தக்காரர்களோ? என்ன பெயர்?” என்றெல்லாம் விசாரித்தார், சுதர்சன்.

   “தெரிஞ்சா எல்லா சொல்ல? அதை எல்லாம் ஆரப்பா கேட்டது? தப்பினன் பிழைச்சன்  எண்டு ஏறி வந்திட்டன்.” என்று அவள் சொன்னதற்கும் நல்ல ஏச்சும் பேச்சும் வாங்கிக் கட்டிக்கொண்டாள். 

   “ஆர் எவனெண்டில்லாமல் என்ன துணிவில ஏறினனீ? ஃபோனும் இல்லாமல் ஏன் போனனீ?”  

மாறிமாறி குடும்பத்தினர் எல்லாரிடமும் வாங்கிக் கட்டி, காலையில் சிறுபொழுது அனுபவித்த ஆனந்தம் முற்றாய் வடிந்து போக அந்த இருக்கையில் அப்படியே சுருண்டு போனாள், இலக்கியா.

   “அண்ணா வாங்கோ, நாம அங்க போய்ப் பார்த்திட்டு வருவம். தேங்க்ஸ் சொன்னதாகவும் போகும்.” என்ற மாறனோடு, “சரிதான் வா.” எழுந்து போனார் சுதர்சன்.

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock