இணைபிரியா நிலை பெறவே – நிதனிபிரபு
அத்தியாயம் 1
ஆரபிக்குப் பயணங்கள் என்றால் மிக மிகப் பிடிக்கும். அதுவும் இந்த மூன்று வருடங்களும் அவள் செய்த பயணங்களை அவளாலேயே எண்ண முடியாது. ஒரு நாள் கிடைத்தால் கூடப் போதும். பேசாமல் பேருந்தில் ஏறி அமர்ந்துவிடுவாள்.
போகுமிடம் புருவங்களை உயர்த்திப் பார்க்கும் இடங்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டாள். உடைந்துகிடக்கிற ஒரு பழைய வீடாக இருந்தால் கூட அவளுக்குப் போதும்.
அங்கே சென்று அமர்ந்துகொண்டு இந்த வீட்டிலும் ஒரு குடும்பம் ஆனந்தமாக வாழ்ந்திருப்பார்கள், இதைக் கட்டும்போது வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிக் கட்டியிருப்பார்கள், குடிவந்த பிறகு ஒரு குழந்தையைக் கவனிப்பதுபோல் பார்த்து பார்த்துக் கவனித்திருப்பார்கள் என்றெல்லாம் யோசிப்பாள்.
கூடவே, இன்று கூரைகள் இல்லாமல், சைவர்கள் சிதிலமடைந்து, பற்றைகள் வீட்டுக்குள் வளர்ந்திருப்பதைக் காண்கையில் இவளுக்கே ஊமைக் காயமாக ஏதோ ஒரு வலி நமநமக்கும். இன்று இந்த நிலையில் இருப்பதை அன்று இந்த வீட்டை ஆசையாசையாகக் கட்டிய மனிதர் பார்த்தால் எந்தளவில் துடித்துப்போவார் என்றெல்லாம் அவள் சிந்தனை ஓடும்.
அப்படிப் பார்க்கையில் இறப்புகள் கூட ஒருவகை விடுதலை என்பது எத்தனை உண்மை என்றெல்லாம் அவைகளுக்குள் ஓடும்.
அவளைத் தனிமை விரும்பி என்று சொல்வதைக் காட்டிலும் அமைதிவிரும்பி என்று சொல்லலாம். அளவான நண்பர்கள். அவர்களோடு அளவான நட்பு. எல்லோரையும் அனுசரித்தே போவாள். பெரிதளவில் கோபப்படுவதில்லை.
அதே நேரத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவள். மிகுந்த நுண்ணுணர்வுகள் கொண்டவள். இலகுவில் காயப்பட்டுவிடுவாள். என்ன, அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாள். அதனாலேயே யாரோடும் அளவுக்கதிகமாக உறவு கொண்டாடி, காயப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பாள்.
இன்றும் ஒரு பயணத்திற்காகத்தான் தயாராகிக்கொண்டிருக்கிறாள். அவள் தமையனுக்குத் திருமணம். பிறகு எப்படிப் போகாமல் இருப்பது?
அவள் தமக்கை அபிசா திருமணமாகி கொழும்பில் கணவனோடு வசிக்கிறாள். கிருத்திகன் என்று நான்கு வயதில் மகனும் உண்டு.
அம்மா, அப்பா, அண்ணா மூவரும் சின்னவனைப் பார்க்க என்று அடிக்கடி கொழும்பு வருவதால் அந்த நேரங்களில் அவளும் கொழும்பு சென்று எல்லோருடனும் இருந்துவிட்டு வந்துவிடுவாள்.
ஊருக்கும் வந்துவிட்டுப் போ என்று பெற்றவர்கள் வற்புறுத்தாமல் இல்லை. ஆனாலும், அடிக்கடி அவளைப் பார்க்கக் கிடைப்பதால் ஏதோ ஒன்றைச் சொல்லி இவ்வளவு காலமும் சமாளித்துக்கொண்டாள். பெரிய கேள்விகளும் எழவில்லை.
இந்தமுறை அவர்கள் அழைக்கும் அவசியமே இல்லாமல் புறப்படுகிறாள். அதைவிட சொந்த ஊருக்கு இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் போகாமலேயே இருப்பது?
எல்லாவற்றையும் விட எதையும் தள்ளிப்போடுவதைக் காட்டிலும் சந்தித்துவிட்டால் என்ன என்கிற கேள்வி உண்டாயிற்று.
மட்டக்களப்பில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். தமையனின் திருமணத்திற்காக அடுத்த இரண்டு வாரங்கள் விடுமுறை எடுத்திருந்தாள்.
கொண்டுபோகும் பயணப்பையில் தேவையானவற்றை எல்லாம் வைத்து, சிப்பையும் இழுத்து மூடிவிட்டு நிமிர்ந்து, என்னவோ போருக்குத் தயாராகிறவள் போன்று வாயைக் குவித்துக் காற்றை ஊதி வெளியேற்றிவிட்டுப் புறப்பட்டுவிட்டாள்.
ஏசி பஸ் தன் ஜன்னலோர இருக்கை ஒன்றை அவளுக்குப் பரிசளித்து மகிழ்ந்துகொண்டது. இயர்போன்களை காதுகளில் கொழுவி பாட்டினை ஒலிக்கவிட்டாள். ஆனால் என்ன, அத்தனை பாடல்களும் அவள் நினைக்கக் கூடாது என்று நினைக்கிற அவனையும் அவளையும் இணைத்துவைத்தே அழகு பார்த்தன.
அதையெல்லாம் வெறுத்தபடியே விரும்பினாள். இந்த நினைவுகள் எல்லாம் வேண்டாம் என்று நினைத்தபடியே மறக்காதிருந்தாள்.
இந்தளவில் அவளை அலைக்கழிப்பவனை அவள் பார்க்கத்தான் இல்லையே தவிர்த்து, அவன் பற்றிய செய்திகள் அவள் காதில் விழாமல் இல்லை. அன்றைக்கு விடவும் இன்றைக்கு இன்னுமே பொல்லாதவனாகிவிட்டானாம். மூர்க்கன், முரடன் என்று அவனுக்குப் பல பெயர்கள். அதையெல்லாம் கேட்கிற பொழுதுகளில் வலிக்காமல் இல்லை. ஆனால் தாங்கிக்கொண்டாள். வேறு என்னதான் செய்வது?
அவன் தங்கையும் இவளும் ஒன்றாகப் படித்தவர்கள். போதாக்குறைக்கு இவர்களின் சொந்த இடமான மன்னார், புதுக்குடியிருப்பின் சாரணர் இயக்கத்தில் அவனும் அவளும் இருந்திருக்கிறார்கள்.
அதுவும் அவளை விடவும் ஐந்து வயது பெரியவனான அவன் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமிடத்தில் இருந்தவள் அவள். அவன் எழுதவேண்டிய நோட்ஸ் அனைத்தையும் இவள் தலையிலேயே கட்டிவிடுவான்.
அப்படியானவன் மீது எப்படிக் காதல் வந்தது? நற்பண்பு கொண்டவன் மீது, நம்மை மதிப்பவன் மீது, நமக்காகவும் யோசிப்பவன் மீதுதானே காதல் வரும். இவளுக்கு மட்டும் ஏன் அவன் மீது வந்தது?
இந்தப் பயணம் இத்தனை காலமும் அவள் செய்த சாதாரணப் பயணங்கள்போல் இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை.
தவிர்க்கவே முடியாத சந்திப்புகள் எல்லாம் நிகழும். அதைத் தடுக்கவும் முடியாது.
கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கும் மேலான பயணம். தனக்குள் போராடியபடியே கடந்தாள். அவளை அழைத்துப்போக ஆனந்தன் வந்திருந்தான். அவளை விடவும் இரண்டு வயதுகள் மாத்திரமே பெரியவன். அதில் பெயர் சொல்லிக் கூப்பிடுவதில் ஆரம்பித்து அடேய் வரையிலும் அவள் வாயில் சர்வசாதாரணமாக வந்துபோகும்.
மலர்ந்து விகசித்த முகத்துடன் வந்து அவளின் பயணப்பையை வாங்கிக்கொண்டவனைக் கண்டு, “என்னடா அண்ணா, இப்பவே கலியாணக் களை வந்திட்டுது போல இருக்கு.” என்றாள் சிரிப்புடன்.
சிறிதாகக் கூச்சப்பட்டு வெட்கப்பட்டான் அவள் தமையன். அதைத் தன் சிரிப்பில் மறைத்துக்கொண்டு, “இஞ்ச பார், இனியும் சும்மா சும்மா இந்த டா போடுறது, பெயர் சொல்லுற வேலை எல்லாம் வச்சிருக்கிறேல்ல சொல்லிப்போட்டன். அண்ணா எண்டு மரியாதை தந்து கதை. நாளைக்குப் பிள்ளை குட்டி எண்டு நாங்களும் ஊருக்க பெரிய மனுசர் ஆகப்போறம்.” என்றான் அவன் அலட்டலாக.


