“அதுக்கு நீ வேற தங்கச்சிக்கு அண்ணாவா பிறந்திருக்கோணும். எனக்கு இல்ல. வந்திட்டான் பிள்ளப் பெறுறது எல்லாம் பெரிய மனுசத்தனம் எண்டு சொல்லிக்கொண்டு.” என்று ஹெல்மெட் போட்டிருந்த அவன் தலையில் கொட்டியபடி.
“உனக்குப் பொறாமை. உனக்கு முதல் எனக்குக் கலியாணம் நடக்குது எண்டு.”
“அறிவடா அண்ணா நீ.” அண்ணனும் தங்கையும் விளையாட்டுக்குப் பிடுங்குப்பட்டுக்கொண்டே பேருந்து நிலையத்திலிருந்து புதுக்குடியிருப்பை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தனர்.
“ஆனந்தா நிப்பாட்டு. அந்த ஐயாட்ட ஒரு இளநி வாங்கித் தா!” வீதியோரமாக இருந்த மர நிழலின் கீழ் நின்று இளநீர் விற்றுக்கொண்டிருந்தவரைக் காட்டிச் சொன்னாள் ஆரபி.
நிழலில் கொண்டுபோய் பைக்கை நிறுத்திவிட்டு இரண்டு இளநீருக்குச் சொன்னான் ஆனந்தன்.
அந்த ஐயாவும் இளநீரைச் சீவி, பேப்பர் கோப்பைகளுக்குள் ஊற்றி, அதனோடு ஊறவைத்த கசகசா கொஞ்சம், வழுக்கை, ஐஸ் கட்டி துண்டுகள் எல்லாம் போட்டுத் தந்தார்.
எரித்துக்கொண்டிருந்த வெய்யிலுக்கு இவர்களின் தொண்டைக்குள் சில்லென்று இறங்கிற்று இளநீர்.
திடீரென்று பளார் என்று கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு வேகமாகத் திரும்பிப் பார்த்தார்கள் அண்ணாவும் தங்கையும்.
யாரோ இருவரை நாடு வீதியில் வைத்துப் பிளந்து கட்டிக்கொண்டிருந்தான் சகாயன். வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தான். சட்டையின் கைகள் முழங்கை வரை மடித்துவிடப்பட்டிருக்க, வேட்டியை மடித்துக் கட்டியிருந்தவன் இவளையே பார்த்தபடி ஒருவனின் தலையைப் பிடித்து நிலம் நோக்கி அழுத்திக்கொண்டே அவன் நடு முதுகில் ஓங்கிப் போட்ட ஒற்றை அடியில் இவளுக்கு முதுகுத் தண்டு சில்லிட்டுப்போனது.
அவனைப் பார்க்கும் சூழ்நிலை அமையும் என்று தெரிந்தாலும் இப்படிப் பார்ப்போம் என்று ஆரம்பி எதிர்பார்க்கவே இல்லை. அவனும் இவளைப் பார்த்தான். பார்த்தபடியே திரும்பவும் அந்த அவனைப் போட்டுப் பிளந்துகட்டினான்.
இவள்தான் நடுங்கிப்போய்க் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். நெஞ்சம் அவனின் ஒவ்வொரு அடியையும் போலவே டமார் டமார் என்று அடித்துக்கொண்டது.
“அண்ணா போவம்!” என்றாள் எழும்பாத குரலில் நடுங்கியபடி.
ஆனந்தனுக்கு முகம் மாறிப்போனது. அந்த இடத்தில் தங்கையோடு நிற்பது அவனுக்கும் உசிதமாக இல்லை. அந்த ஐயாவுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு அவளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.
சட்டென்று அவர்களின் முன்னால் வந்து நின்று மாறித்தான் சகாயன்.
“எங்க போறாய்?” கேள்வி ஆனந்தனிடம் இருந்தாலும் பார்வை ஆரம்பியிடம் இருந்தது.
ஆரபி வேகமாக அவனுக்கு எதிர்ப்புறத்தில் முகத்தைத் திருப்பிக்கொள்ள, “வீட்டுக்குத்தான் அண்ணா.” என்றான் ஆனந்தன்.
“இந்தப் பக்கத்தால் போக வேண்டாம். உள் றோட்டால போ.”
“அது ரெண்டு கிலோமீற்றர் சுத்தோணும்.”
“பரவாயில்ல போ!” என்றவன், “பெரிய மனுசி எப்ப வந்தவா?” என்றான் பார்வையால் ஆரபியைக் காட்டி.
“இப்பதான்.”
“திரும்பி எப்ப போறா?”
“என்ர கலியாணம் முடிஞ்சு.”
“அதுதான் எப்ப?”
ஆனந்தனுக்கு நாள் சரியாக நினைவில் இல்லை. அவள் சொல்லியிருந்தாள்தான். இவன்தான் மனத்தில் அதைப் பதியவைக்கவில்லை. அதில் திரும்பி ஆரபியைக் கேள்வியாகப் பார்த்தன்.
“அண்ணா நீ பைக்கை எடு!” என்றாள் ஆரம்பி சிடுசிடுப்பாக.
“எடுத்திடுவியோ? எங்க எடு! எடுத்துத்தான் பாரன்!” என்றவன் ஒற்றைக் காலைத் தூக்கி அவன் பைக்கின் முன் டயரில் வைத்து நின்றான்.
அவன் செயல் பிடிக்காமல் அவள் முகம் சுளித்துக்கொண்டது. அதே நேரம் சொல்லாமல் விடமாட்டான் என்று தெரிந்து, “இருபதாம் திகதி.” என்றாள் அவனைப் பாராமல்.
“ஆக, ஒழுங்கா கேட்டா பதில் வராது. கேக்கிற மாதிரிக் கேக்கோணும் உங்களுக்கு எல்லாம்.” என்றுவிட்டுக் காலை எடுத்தான் கேசிகன்.
அதையே அனுமதியாகக் கொண்டு பைக்கை எடுத்தான் ஆனந்தன். முக்கியமாகக் கேசிகன் சொன்ன பாதையிலேயே பைக்கைத் திருப்பினான். கொஞ்ச நேரம் அண்ணன் தங்கை இருவரும் நடந்ததை ஜீரணிக்கிறவர்கள் போன்று அமைதியாகவே வந்தார்கள்.
அதன் பின், “நீ எதுக்கும் கவனமா இரு. முந்தி மாதிரி தெரிஞ்சவன், உன்ர ஃபிரெண்டுன்ர அண்ணா எண்டு கதைக்க போயிடாத. அரசியல்ல இருக்கிறம் எண்டு சொல்லிக்கொண்டு ரெண்டு எருமைகளும் ஊரையே ஆட்டிவச்சுக்கொண்டு திரியுதுகள்.” என்று எச்சரித்தான் ஆனந்தன்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை. கேட்டுக்கொண்டாள். அவளால் கண்ட காட்சியிலிருந்து வெளிவரவே முடியவில்லை. இத்தனை காலமும் காதால் கேட்டவை எல்லாம் உண்மை என்று கண்ணால் கண்டிருக்கிறாளே.
எல்லாம் முடிந்துபோயிற்றுத்தான். ஆனாலும், ஏன் இப்படியாகிப்போனான், ஏன் அவர்களுக்குள் இப்படியெல்லாம் நடந்துபோனது என்கிற வலி அவளைப் போட்டு ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது.
உன்னை நான் கடந்து வந்துவிட்டேன் பார் என்று காட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டுதான் வந்தாள். ஆனால், அது எவ்வளவு அப்பட்டமான பொய் என்று அவள்தான் அறிந்து நிற்கிறாள்.
அவள் கன்னம் வருடிக் காதல் சொன்னவன், அவளுக்கு முன்னாலும் பின்னாலும் திரிந்து அவளையும் காதலிக்க வைத்தவன் ஏன் இந்தளவில் மாறிப்போனான் என்று தனக்குள் அழுதாள்.


