ஆர்கலி சென்று மூன்று மாதங்களாகியிருந்தன. அவளை எந்தளவு தூரத்துக்கு நேசிக்கிறோம் என்று பிரணவனே உணர்ந்துகொண்ட நாட்களவை! மிகக் கொடுமையாக உணர்ந்தான்.
உயிரின் ஒரு பாதியை அவள் எடுத்துச் சென்றிருந்தாள். அவள் இல்லாத வாழ்க்கை வெறும் சூன்யம் மட்டுமே! குட்டிப் புயலென மையம் கொண்டவள் அவனைச் சுருட்டி அப்படியே தன் இடுப்பு மடிப்புக்குள் செருகிக்கொண்டது போலவேயிருந்தது. அவளின்றி, அவளின் காதலின்றி அவனில்லை.
இந்தளவுக்கு நெஞ்சில் அவளைச் சுமக்கிறவனுக்குத் தன் இதயத்தை அவளிடம் கொட்டிக் கவிழ்க்க முடியாமல் போயிற்றே! அதனாலேயே அவன் இரக்கப்பட்டுச் சம்மதித்ததாகக் குற்றம் சாட்டிவிட்டுப் போயிருக்கிறாள் அவள்.
அவள் சென்றதும் அடுத்தநாள் அவளின் இலக்கத்துக்கு அழைத்தபோது எடுக்கவே இல்லை. மெசேஜ் அனுப்பினால் பதிலும் இல்லை. முயல்குட்டி மாதிரி இருக்கிறவளுக்குள் இவ்வளவு பிடிவாதம் இருக்கும் என்றும் அவன் உணர்ந்த நாட்களும் அவைதான்.
அவளின் பிரிவினால் ஏங்கித் தவித்து இளகி இருந்த மனது, அங்குப் போயும் தன்னைத் தவிர்த்தவளின் செய்கையில் மீண்டும் இறுகிப்போயிற்று!
‘என்றைக்காவது வாடி, நேர்ல இருக்கு உனக்கு!’ என்று கருவிக்கொண்டான்.
அந்தக் கோபமே அவனை வேகமாக இயங்கவும் வைத்தது. அவர்களின் வீடு பிரதான வீதியில் அமைந்திருந்ததால் வீதியோரமாகவே கடை ஒன்றினைப் பெரிய செலவில்லாமல் போட்டுக்கொண்டான்.
தன் பெயரில் ஒன்று, தமக்கையின் பெயரில் ஒன்று, தகப்பனின் பெயரில் ஒன்று என்று அவர்களின் தொழிலைக் காட்டி அவன் வேலை செய்யும் எக்ஸ்பேர்ட்டிலேயே மாதத் தவணையில் பணம் கட்டும் முறையில் மூன்று வோஷிங் மெஷின்களை வாங்கித் தன் கடையில் விற்பனைக்குப் போட்டான்.
அதனோடு நான்கைந்து பழைய மெஷின்களைத் திருத்தியும் விற்பனைக்கு வைத்துவிட, சிறிய அளவில்தான் என்றாலுமே அவனே இன்று அந்தக் குட்டிக் கடைக்கு முதலாளியாகிப் போனான்.
கருப்பனுக்கும் புவனாவுக்கும் மகனின் புத்திசாலித்தனத்தைக் கண்டு அவ்வளவு சந்தோசம்.
தம்பியின் முயற்சியைக் கண்டுவிட்டு, எதிர்காலத்தில் கணவனாகப் போகிறவனை ஏவிவிட்டு, முதலாவது மெஷினை மொத்தமாகக் காசு கொடுத்து வாங்கவைத்தாள் தமயந்தி!
அத்தானாகப் போகிறவரிடம் எப்படிக் காசு வாங்குவது? அவன் மறுத்தான்.
“அவர் இன்னும் அத்தான் ஆகேல்லையடா! அதால விலையைக் கூடவே வச்சு வாங்கு தம்பி!” என்று சொன்னாள் தமயந்தி.
“உன்ர அக்காக்காக ரெண்டு மெஷின்ர விலையை ஒரு மெஷினுக்குத் தரவும் தயாராத்தான்டா இருக்கிறன். அவளை மட்டும் எனக்கே எனக்கெண்டு தந்திடு!” என்று சரண் சரணடைந்துவிட, ‘என் இனமடா நீ!’ என்று பெரும் பாசமே பொங்கிற்றுப் பிரணவனுக்கு!
தமயந்தி திருமணத்தைத் தள்ளிப்போடுகிறாள் என்றால் அதில் ஒரு அர்த்தமிருக்கிறது. அவளுக்காக அவனும் காத்திருப்பதில் நல்ல மனதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?
சரண் மீது எப்போதுமே மதிப்பு உண்டு பிரணவனுக்கு. இப்போதோ நெகிழ்ந்து பாசமும் உருவாகிற்று!
“எவ்வளவு கெதியா(விரைவாக) முடியுமோ அவ்வளவு கெதியா அக்காவ உங்களிட்டத் தாறதுக்காகவே இந்தக் காச வாங்குறன் அத்தான்!” மனம் நிறையச் சொல்லிப் பணத்தைப் பெற்றுக்கொண்டான்.
சரணால் ஒருகணம் பதில் சொல்ல முடியாமல் போயிற்று! முதன் முறையாக அத்தான் என்று அழைத்திருக்கிறான். முதலுமே பிரணவனைப் பிடிக்கும்தான். இப்போதோ கண்ணுக்குத் தெரியாத பாச இழை ஒன்றை, ஒற்றைச் சொல்லில் பிரணவன் கட்டிவிட்டது போலுணர்ந்தான்.
தமயந்தியைப் பார்க்க அவளும் நெகிழ்ந்து போயிருப்பது தெரிந்தது. கண்களால் சமாதானம் சொல்லிவிட்டுப் பிரணவனை அணைத்துக்கொண்டான்.
“உன்ர முயற்சிக்காகவே நீ நல்லா வருவாயடா!” மனமாற வாழ்த்திவிட்டுச் சென்றான் சரண்.
ஒரு மெஷின் விற்ற பணம் கையிலிருந்தது. அந்த மெஷினுக்கு மாதத் தவணை மட்டும் கட்டினால் போதுமே!
வேறு கம்பனிகளின் மெஷின்கள் மலிவு விலையில் கிடைத்தால் வாங்குவோம் என்று எண்ணிக்கொண்டு அந்தக் காசோடு தான் புரட்டிய தொகையையும் எடுத்துக்கொண்டு கொழும்புக்குப் புறப்பட்டான் பிரணவன். தான் சேமித்து வைத்திருந்ததையும் தமயந்தி எடுத்துக் கொடுக்க நெகிழ்ந்துபோனான்.
சின்ன சின்னத் தியாகங்களைக் கொண்டும் பொறுமைகளைக் கொண்டும்தானே மிகப்பெரிய வெற்றிகள் கட்டியெழுப்பப் படுகின்றன!
தரமானதைத் தெரிந்துகொள்ளும் அளவுக்குத் தொழிலில் அவனுக்கு அனுபவமும் இருந்ததில், ஏற்கனவே இணையத்தில் தேடி எந்தெந்த வகையான மெஷின்கள் தரமானவை என்று தெரிந்துகொண்டிருந்ததும் உதவ, கிளிநொச்சியை விடவும் கொழும்பில் நல்ல மலிவில் மெஷின்களை அவனால் வாங்கிக்கொள்ள முடிந்தது.
அந்தப் பயணத்திலேயே இனித் தன் மோட்டார் வண்டி தனக்குதவாது என்று புரிந்துபோயிற்று! அதனைக் கொடுத்துவிட்டு ஒரு செக்கண்ட் ஹாண்ட் வாகனம் ஒன்றினை வாங்க எண்ணியபோது, போட்டிருந்த சீட்டினை எடுத்துக்கொடுத்தார் புவனா.
அதன் பிறகு அவன் வாழ்வில் ஏறுமுகம்தான். அது ஒன்றும் அவ்வளவு இலகுவாக நடந்துவிடாதபோதும், மெல்ல மெல்ல என்றாலும் முன்னேறிக்கொண்டே இருந்தான் பிரணவன்.
வெறுமனே வாங்கி விற்பவன் மட்டும் அல்லவே அவன். பழுதடைந்ததைத் திருத்தவும் தெரிந்தவன் என்பதில் செக்கண்ட் ஹாண்ட் பொருட்களையும் திருத்தி, மத்திய தரத்தினரையும் விடக் கீழிருப்பவர்களின் வீட்டுக்கு அவற்றை அவனால் கொண்டுசேர்க்க முடிந்தது.
நாளடைவில் இன்னும் இருவரைத் தன்னோடு வேலைக்குச் சேர்த்துக்கொண்டான். கடை ஆரம்பித்ததுமே எக்ஸ்பேர்ட்டிலிருந்து விலகிக்கொண்டான். இருந்தாலும், அவனை அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மெஷின்கள் பழுது என்று அழைத்தால் திருத்திக்கொடுத்தான்.
அதற்குத் தேவையான உதிரிப்பாகங்களை அவனே இணையத்தில் வாங்கி, அதற்கும் நியாயமான விலை வைத்தான். புதிது வாங்க நினைப்பவர்களைத் தன்னிடமே வாங்க வைத்தான். அவனது நாணயம் அவர்களை நம்ப வைத்தது.
எக்காரணம் கொண்டும் சொன்ன சொல் தவறாமல் நடந்தான். பக்கத்து வீட்டுக்காரனாக, பக்கத்துத் தெருக்காரனாக, அந்த ஊர்க்காரனாக, தெரிந்தவனாக அவன் இருந்ததில் அவர்களின் சின்ன சின்ன சந்தேகங்களை, அர்த்தமற்ற பயங்களை எந்தத் தயக்கங்களும் இல்லாமல் கேட்டுத் தெளிந்தனர் ஊர் மக்கள்.
அவனே வீட்டுக்குக் கொண்டுவந்து இறக்கி, அதற்கான வேலைகளையும் பார்த்துப் பொருத்திக் கொடுத்ததில் அவனிடம் வாங்குவது மிகவும் இலகு என்கிற மனநிலை உருவாகி இருந்தது.
வாகனமும் இருப்பதால் தேவைப்பட்டால் ஹயருக்குக் கூடப் போய்வந்தான். உழைப்பு… அது எந்த வகையில் வந்தாலும் உழைத்துக் காசீட்டினான்.
ஆனாலும், அது போதாது அவனுக்கு! அவனைச் சுற்றியிருக்கும் மக்களிடம் மட்டுமே கொண்டு சேர்க்க முடிந்ததில், ஒரு அளவைத் தாண்டி முன்னேற முடியவில்லை.


