அதன் தீர்வாக ஒன்றரை வருடங்களிலேயே கிளிநொச்சி டவுனில் புத்தம் புதிதாக, “கருப்பன் எலக்ட்ரோனிக்ஸ்” ஷோரூம் திறப்புவிழாக் கண்டது!
அதற்கு மிகப்பெரிய முதல் தேவைப்பட்டது. போடும் பணத்தினைத் திருப்பிக்கொள்ள முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை அந்த ஒன்றரை வருட அனுபவம் கொடுத்திருந்ததில் வீட்டோடு காணியின் பெயரில் வங்கியில் லோன் வாங்கிக்கொண்டான்.
வோஷிங் மெஷின்கள் மாத்திரமல்லாமல், பிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன், மின்னடுப்புகள், கேஸ் அடுப்புகள் போன்றவற்றையும் கொள்வனவு செய்தான்.
பளபளவென்று மின்னும் கடைக்குப் பெரிதாக மாட்டியிருந்த போர்ட்டில் தன் பெயரைப் பார்த்த கருப்பனுக்குப் பெருமையோ பெருமை! வீதியின் மறு கரையில் நின்று தன் பெயரைத் தானே வாசித்துப் பார்த்தபோது விழிகள் பனித்துப் போயிற்று!
பார்த்துக்கொண்டே இருந்தார். மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருந்தார். அதுநாள் வரை அவரின் உருவத்துக்கான காரணப் பெயராக மட்டுமே இருந்த அப்பெயர், அன்றிலிருந்து அவரின் முகவரிப் பெயராகவும் மாறிப்போயிற்றே.
இதெல்லாம் அவரைப் பொறுத்தவரைக்கும் கனவுகளில் கூடக் கண்டிராத வாழ்க்கை!
நடந்துகொண்டிருந்தவர்களை மறித்து, ‘அந்த போர்ட்ல இருக்கிறது என்ர பெயர். அது என்ர மகன்ர கடை!’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.
கடைக்குள் கால் வைக்கும்போதே தேகமெல்லாம் புல்லரித்தது.
“மிஸ்டர் கருப்ஸ்! கடை எப்பிடி இருக்கு? பிடிச்சிருக்கா உங்களுக்கு?” குறும்புடன் கேட்ட மகனைப் பாசத்தோடு அணைத்துக்கொண்டவருக்கு முகம் பெருமையில் பூரித்துப் போயிருந்தது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பெருமையோடு அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார்.
வீட்டுக்கு விரைந்து, “பாத்தியா, என்ர மகன? என்ர பெயர்ல கடை திறந்திருக்கிறான்.” என்று மனைவியிடம் மீசையை முறுக்கிக்கொண்டார்.
“கிழட்டுப் பிள்ளைக்கு நினைப்புதான். அவன் என்ர ஆம்பிளைப் பிள்ளை! இன்னுமின்னும் முன்னேறுவான் பாருங்கோ.” அவனுக்காக என்று வேகவேகமாய்ச் சமையல் செய்துகொண்டிருந்த புவனா, தன் பங்குக்குத் தானும் பெருமைப் பட்டுக்கொண்டார்.
தமிழ் புத்தாண்டு, சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி என்றால் குறிப்பிட்ட விலைக்கழிவு கொடுத்தான். அதோடு, ‘கருப்பன் எலக்ட்ரோனிக்ஸ்’ என்று பெரிதாகப் பெயர் பொறித்த மினி லாரி ஒன்றும் ஓடத்தொடங்கியது.
அவனிடம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இலவசமாகவே வீட்டுக்கு ஏற்றிச்சென்று, அதற்கான வயர் கனெக்ஷன்களையும் பொருத்திக் கொடுத்தான்.
யுத்தத்தில் நசுங்கிப் பொசுங்கி மீண்டும் எழும்பத் தொடங்கியிருந்த கிளிநொச்சி போன்ற நகரத்துக்கு, காஸ் அடுப்பில் ஆரம்பித்துப் பிள்ளைகளுக்கான ‘ப்ளே ஸ்டேஷன்’ போன்ற கேம் வகைகள் தொடங்கி, ஹேர் டிரையர் வரையான வீட்டுப் பொருட்கள் அத்தனையையும் உள்ளடக்கிய அவனுடைய கடை மிகவுமே தேவையாக இருந்ததில் அவனும் நன்றாகவே பிழைக்கத்தொடங்கினான்.
ஒவ்வொரு படியாக அவன் ஏறிய பொழுதுகளில் அவன் மனம் அவளைத் தேடியது. அவளின் மடி சாய ஏங்கினான். தன் முயற்சிகளைப் பகிர, வெற்றிகளைக் கொண்டாட அவள் வேண்டுமே வேண்டும் என்று நெஞ்சம் அடம்பிடித்தது.
தினமும் அவளுக்கு அழைக்க ஃபோனை எடுப்பான். ‘பொம்மா’வையும் தேடி எடுப்பான். ஆனால் வைத்துவிடுவான்.
முதல் மூன்று மாதங்களைத் தவிர்த்து அவனும் அவளைத் தேடி அழைக்கவில்லை. விளக்கம் கேட்காமல் தண்டித்துவிட்டவள்தான் அவனைத் தேடி வர வேண்டும். ‘வரட்டும், செய்தது எல்லாத்துக்கும் சேர்த்து வச்சுத் தண்டனை குடுக்கிறன்!’
ஒரு லொறி இரண்டு லொறியாக மாறிப்போனபோது, அருகிலிருந்த கடையையும் சேர்த்து விஸ்தரிப்புச் செய்திருந்தான் பிரணவன். இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்திலும் தன் கால்களை ஊன்றக் கருப்பன் எலக்ட்ரோனிக்ஸ் இடம் தேட ஆரம்பிக்க, மறுபக்கம் தமயந்திக்குத் திருமண நாளையும் குறித்துவிட்டிருந்தான்.
“குடும்பத்தோட கட்டாயம் வரோணும் மாமா!” சுந்தரேசனுக்கு அழைத்துச் சொன்னான். திருமண அழைப்பிதழையும் அனுப்பி வைத்தான். ஆர்கலியைப் பற்றிக் கேட்கவேயில்லை. ஆனால், நுனி நாக்குவரை, “அவளிட்ட ஒருக்கா குடுங்க மாமா!” என்று வந்திருந்தது. அடக்கிக்கொண்டான்.
அவரோடு கதைத்தது அவரின் மகளின் நினைவுகளை அதிகமாகக் கிளறிவிட இரணைமடுக்குளத்துக்கு ஓடிவிட்டான்.
அவளோடு அமர்ந்த அதே இடம்! தன்னருகில் தடவிப்பார்த்தான். அவளின் அண்மை, அந்த மென் வாசம், மின்னலைத் தோற்கடிக்கும் சிரிப்பு எல்லாம் வேண்டும் போலிருந்தன. தன் கைகளில் அவள் கரைந்தபோது எழுந்த மயக்கம் இப்போது ஏக்கமாய் உருவெடுத்தது!
என் நேசத்தை அவள் உணரவேயில்லையா? யார் என்ன சொன்னாலும், அவனின் செய்கைகள், பார்வைகள் ஒன்று கூடவா அவனை உணர்த்தவில்லை. துளிகூட மிச்சம் வைக்காமல் மொத்தமாக அவளிடம் விழுந்து கிடக்கிறானே. எப்படி உணராமல் போனாள்?
இப்போதெல்லாம் கோபம் என்பதைவிட வருத்தம்தான் மேலோங்கியிருந்தது. விளக்கம் கொடுத்து விளங்கவைக்க வேண்டிய இடத்திலா அவனுடைய நேசம் அவளிடத்தில் தங்கியிருக்கிறது?
‘எது எண்டாலும் என்னட்டச் சொல்லுங்கோ’ என்றவள் எதையும் ஏன் அவனிடம் கேட்காமல் போனாள்? இன்றுவரை ஒருநாள் கூடக் கதைக்கவேயில்லையே!
தனக்குள் மருகிக்கொண்டு கிடந்தான் பிரணவன். இதயமோ அவளோடான நாட்களை ஏக்கத்துடன் ஆசை போட்டுக்கொண்டிருந்தது.
பார்த்த நாளிலிருந்தே ஒரு சின்ன விலகளைக் கூடக் காட்டாதவள். சந்தர்ப்பம் எப்போதடா கிடைக்கும் என்று பார்த்திருந்து உரிமையாக அவன் கேசத்தைக் கலைத்துவிட்டுச் சிரிப்பாள்.
அவனை வேற்று ஆணாக அவள் உணர்ந்ததே இல்லை. அவன்தான் மெல்லிய கூச்சத்துடன் விலகிப்போயிருக்கிறான். யோசித்துப் பார்க்கும்போதுதான் புரிந்தது, அவர்களுக்கான நெருக்கத்துக்கு ஆரம்ப அடிகளை எடுத்து வைத்ததே அவள்தான் என்று. நட்பு என்கிற எல்லைக்கோட்டைத் தாண்டி மனத்தளவில் அவன் முதலடி எடுத்து வைத்திருந்தாலும் அதற்குக் காரணம் அவள்.
அதை அவளும் உணர, ‘ஒரு மாப்பிள்ளை பார்க்கும் படலம்’ தேவைப்பட்டிருக்கிறது.
அவளோடான சாட்டினை எடுத்துப் பார்த்தான்.
‘மாப்பிள்ளை பாக்க வந்திருக்கிறன். டிஸ்டப் பண்ணாதீங்க!’
‘ஐயோ!!! உயிரையே வாங்குறான் பிரணவன்!’
‘பிரணவ்… நவ்… அவ்வ்வ்வ்…’ கண்ணீர் விட்டுக் கதறும் இமோஜியையும் சேர்த்து அனுப்பி இருந்தாள்.
கடைசியாக, ‘Adeiiiiiiii PirrraNaVaaaaaaaaaaaaaaaaaa!!!!’ என்று அனுப்பியிருந்தாள். பெரும்பாலும் அவளின் பொறுமை தீர்ந்துபோன கடைசி மணித்துளிகளாக அது இருந்திருக்க வேண்டும்!
இன்றும் அவன் உதட்டினில் சிரிப்பு முளைத்தது. அவளை எவனோ ஒருத்தன் எதிர்காலத் துணைவி என்கிற கண்ணோடு பார்ப்பான் என்கிற வெம்மை தாங்காது, அவளுக்குப் பதிலிடாமல் அவன் விட்டிருந்த கோபத்தை இப்படியெல்லாம் காட்டியிருந்தாள்.
கடைசி வாரம் அவனுடைய பெயரைக்கூட திணறலின்றி உச்சரிக்கப் பழகி இருந்தாளே. அவளின் மழலைத் தாமிழுக்காய் உள்ளம் ஏங்கியது! தமிழ் வார்த்தைகள், உச்சரிப்பு எல்லாமே அவ்வளவு கச்சிதமாக இருக்கும்.
ஆனால், வேகமாகக் கதைக்கமாட்டாள். விழாமல் கவனமாகச் சின்ன சின்ன அடியெடுத்து வைத்து நடக்கும் குழந்தையைப் போல அவள் கதைப்பதையே கேட்டிருக்கலாம் போலிருக்கும். அவ்வளவு அழகு!
ஒருமுறை அழைத்துப் பார்ப்போமா? அவனிதயம் மீண்டும் மீண்டும் ஏங்கிக் கேட்டது! அவனோடு கதைக்காமல் அவளால் இருக்க முடிகிறதுதானே? உள்ளம் சிணுங்கியது! அவனும் இருப்பான்!


