தமயந்தியின் திருமணத்துக்காகச் சுந்தரேசன் மட்டுமே வந்திருந்தார். நிச்சயம் வருவாள் என்று மிகவுமே எதிர்பார்த்தவன் ஏமாந்துபோனான்.
தமக்கையைக் கொண்டு அவளுக்கு அழைத்து, ‘கட்டாயம் நீ வர வேண்டும்!’ என்று அன்போடும் உரிமையோடும் சொல்ல வைத்திருந்தான். அவன் வீட்டில் எல்லோருமே அவளைத் தனியாக அழைத்திருந்தார்கள். அவனைத் தவிர.
அவர்களுக்காகக் கட்டாயம் வருவாள் என்று நினைத்திருந்தான். எப்போதுமே அவனுடைய எதிர்பார்ப்பினைப் பொய்யாக்கி ஏமாற்றுகிறவளின் செய்கையில் மிகவுமே காயப்பட்டுப்போனான் பிரணவன்.
‘போடி! நீ வரவே வேணாம்!’ ஏமாற்றத்தில் நசுங்கிப்போன இதயம் படபடத்தது! மீண்டும் அவள் மீது கோபம் அவனுக்குள் கணகணக்கத் தொடங்கிற்று!
அவளின் தாக்கம் அவனுக்குள் மலையளவு இருக்க, அவனால் அவளுக்குள் மடுவளவு கூடவா தாக்கத்தை உருவாக்க முடியாமல் தோற்று நிற்கிறான்!
அந்த ஒரேயொரு நாளில் மட்டும் அவனை அவ்வளவு தேடினாளே! வேலைக்குப் போக வேண்டும் என்றவனிடம் கோபம் கொண்டு, குளிக்கப் போனவனை நிம்மதியாகக் குளிக்க விடாமல், உடைமாற்றப் போகிறான் என்று தெரிந்தும் கூட வெளியேறாமல் அறைக்குள்ளேயே இருந்து அவனைத் தன் அன்பினால் சித்திரவதை செய்தவளால் எப்படி இப்படி ஒரேயடியாக விலகி இருக்க முடிகிறது?
கிளிநொச்சிக்கு வந்து பார்த்த சுந்தரேசன் அவர்களைக் கண்டு மலைத்தே போனார். அவர்கள் வாழ்வாதாரத்தில் நிறைய மாற்றம்! நினைத்தே பாராத முன்னேற்றம். மூன்று வருட இடைவெளி இத்தனை பெரிய மாற்றத்தை உருவாக்குமா? ஆம் என்று செயலில் காட்டியிருந்தான் பிரணவன்.
வீட்டைக் கட்டி முடித்திருந்தான். அவனது சகோதரிகள் அணிந்திருந்த நகைகளும் உடைகளும் மிகவும் செழிப்பாக இருந்தன.
“உன்னப் பாக்கப் பெருமையா இருக்கடா பிரணவா!” மனத்திலிருந்து சொன்னவர் சந்தோச மிகுதியில் அவனை அணைத்துக்கொண்டார்.
“கெட்டிக்காரனடா உன்ர மகன்!” கருப்பனிடம் சொல்லி மகிழ்ந்தார்.
எப்படி அவன் முன்னேறினான் என்று கேட்டு அறிந்தவர், “பிள்ளைகள அருமையா வளத்திருக்கிறாயம்மா!” என்று, கூடப் பிறக்காதவளிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டார்.
“உன்ர கடையக் காட்டு பிரணவா!” என்று உரிமையாகக் கேட்டுச் சென்று பார்த்தார்.
“யாழ்ப்பாணத்திலையும் திறக்கப்போறன் மாமா. ஒரு ரெண்டு வருசம் அது ஒடித் தந்தபிறகு நானே இனிச் சொந்தமா ஆரம்பிக்கலாம் எண்டு இருக்கிறன்!” எந்தத் தயக்கமும் இல்லாமல் தன் திட்டங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டான்.
“உன்ர மனதுக்கும் குணத்துக்கும் எல்லாம் நல்லாவே நடக்கும் பார்!” மனதாரச் சொன்னவர் கேள்வியோடு அவனை ஏறிட்டார்.
எதுவாக இருந்தாலும் அவரிடமிருந்தே வரட்டும் என்று அவன் காத்திருந்தான்.
“இனி என்ன பிளான்?” அவரும் கேட்டார்.
அவன் உதட்டினில் சின்ன புன்முறுவல் மலர்ந்தது. அவனுடைய எதிர்காலத் திட்டங்களைப் பகிர்ந்தபிறகும் ‘என்ன பிளான்?’ என்று கேட்கிறார் என்றால், அதன் அர்த்தம் விளங்காதா அவனுக்கு?
“துவாரகாக்கும் முடிச்சிட்டுப் பிறகு எனக்குத்தான் மாமா கல்யாணம்!” அவனும் மறைமுகமாகவே சொன்னான்.
அவர் முகம் மலர்ந்து போயிற்று! சிரிப்புடன், “உன்ர கல்யாணத்துக்கும் என்னைக் கூப்பிடுவியோ?” என்று நூல்விட்டுப் பார்த்தார்.
“பின்ன? மாமா நீங்க ஆசிர்வாதம் செய்யாம என்னெண்டு என்ர கல்யாணம் நடக்கும்!” சளைக்காமல் பதில் கொடுத்தான் பிரணவன்.
இப்போது இவன் எந்த மாமாவைச் சொல்கிறான்? அவன் கண்களில் மின்னிய குறும்பைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தார் சுந்தரேசன்.
“சொன்ன சொல்லு மாறமாட்டான் மாமா உங்கட ‘மரோ’. இத உங்கட மகளிட்டையும் சொல்லிவிடுங்கோ!” அவளைப் பற்றிக் கதைக்கவே கூடாது என்று எடுத்திருந்த உறுதிமொழியை எப்போதும் போலவே நசுக்கியிருந்தாள் அவனுடைய எலிசபெத்!
“அதென்ன பிள்ளை மரோ? உன்ர கொண்ணா வர வரப் புதிராவே கதைக்கிறான்.” வெயில் அடங்கிவிட்டிருந்த பொழுதுக்கு இதமாக முறுக்கோடு தேநீரைக் கொண்டு வந்த துவாரகாவிடம் கேட்டார் சுந்தரேசன்.
“‘சகோ’ மாதிரி மருமகனின்ர சுருக்கம் மாமா ‘மரோ’.” என்று சிரித்தாள் துவாரகா.
“நீ எனக்கு மரோ எண்டா நான் உனக்கு ஆரடா?” தேநீரைப் பருகியபடி கேட்டார் சுந்தரேசன்.
“நீங்க எனக்கு மாம்ஸ் மாமா.” தங்கையிடமிருந்து தனக்கான கப்பை வாங்கிக்கொண்டு சிரிப்புடன் வேண்டுமென்றே சொன்னான் பிரணவன்.
“அடிதான் வாங்கப்போறாய். மரியாதையா மாமா எண்டு கூப்பிடு! இல்ல மகளத் தரமாட்டன்!”
அவன் ஒன்றும் சொல்லவில்லை. சிரிப்புடன் அவரையே பார்த்தான். ‘நீங்க என்ன தாறது? நாங்களே தூக்குவம் பாஸ்! அதுக்கான நேரம் மட்டும் வரட்டும். பிறகு இருக்கு!’ என்றுமட்டும் எண்ணிக்கொண்டான்.
எந்த வேலைகளைப் பார்த்தாலும், அவனுடைய சிந்தனைகளின் முடிவுகூட அவளில்தான் சென்று நின்றது.
அப்படியிருக்க அவள் வரவேயில்லையே! அவனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
கூடப்பிறந்தவளின் மணநாள்! மனமுவந்து காரியங்களைக் கவனிக்க முடியவில்லை. உயிருக்குள் குடையும் வண்டாக நினைவுகளில் நிறைந்திருந்து சித்திரவதை செய்துகொண்டிருந்தாள் அவனின் பொம்மா!
தன் மத்னதை யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை பிரணவன். உணர்ந்துகொண்டிருக்க வேண்டியவள் அதைத் தவறவிட்டபோது யாருக்கு எதை உணர்த்தி என்ன பயன்? மலர்ச்சியையும் புன்னகையையும் வலுக்கட்டாயமாக முகத்தில் பூசிக்கொண்டு திருமண வேலைகளைப் பார்த்தான்.
தன் வேதனையை அவன் காட்டாமல் இருக்கலாம். கூடப்பிறந்தவள் உணராமல் இருப்பாளா? இரவின் தனிமையில் வீட்டு முற்றத்தில் ஜாம் மரத்தின் கீழ் அலெக்சோடு ஒற்றையாய் அமர்ந்திருந்தவனைக் கண்டு மிகவுமே கவலையுற்றாள் தமயந்தி.
அவனருகில் தானும் சென்று அமர்ந்து, “அங்க ஏதும் முக்கியமான அலுவலோ தெரியாதடா தம்பி. இல்லாட்டிக் கட்டாயம் வந்திருப்பாள். சும்மா மனதைப் போட்டுக் குழப்பாத. மாமா வந்திருக்கிறார்தானே.” என்று இதமான குரலில் சமாதானமாகச் சொன்னாள்.
“என்ர அக்கான்ர கலியாணம் அவளுக்கு முக்கியம் இல்லை எண்டு சொல்லுறியா அக்கா? எனக்கும் அவளுக்கும் இடையில ஆயிரம் இருக்கட்டும். இந்தக் கலியாணத்தில அவள் நிக்கோணுமா இல்லையா?” தமக்கையிடமே நியாயம் கேட்டான் பிரணவன்.
அதற்குப் பதிலிறுக்கவில்லை தமயந்தி. தம்பியின் மனநிலையை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. தனக்கு மனைவியாக வரப்போகிறவள் தமக்கையின் திருமணத்தில் நின்று சிறப்பித்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். தவறில்லையே.
ஆனால், முடிந்தவரை அன்போடும் உரிமையோடும் அழைத்தாயிற்றே. இருந்தும் வராதவளை என்ன செய்வது? எனவே அவனைச் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டாள்.


