“சின்ன பிள்ளைதானே தம்பி…” என்றவளைத் தடுத்தான் அவன். “சின்ன பிள்ளைதான். ஆனா இது விளங்காத அளவுக்குச் சின்ன பிள்ளை இல்ல. சரி விடு, அவள் வரேல்ல எண்டுறதுக்காக என்ர அக்காட கலியாணம் நடக்காம இருக்கப்போறேல்ல. எந்தக் குறையும் இல்லாம சிறப்பா நடக்கும்!” முகம் இறுகச் சொன்னான் அவன்.
லலிதா வராததும் அவனுக்கு மிகுந்த சினத்தைக் கொடுத்திருந்தது. அவர் கலந்துகொள்ளும் அளவுக்கு அவன் வீட்டுத் திருமணம் முக்கியமானது அல்ல என்றுதான் எண்ணியிருப்பார். அதை நிச்சயமாக அவனால் சொல்ல முடியும்.
அப்படித்தான் அவளும் எண்ணுகிறாளா? இங்கிருக்கும் வரை காதலில் கரைந்தவள் அங்குப் போனதும் தாயைப் போலவே தராதரத்தை எடைபோடுகிறாளோ? நினைக்க நினைக்க அவனுக்குள் ஒருவித ஆவேசம் உருவாகிற்று!
“இன்னொருக்கா அவளோட கதைக்கவா?” கேட்கமுதலே மறுத்தான் அவன்.
“அது எனக்குக் கேவலம் அக்கா. உனக்கும் மரியாதை இல்ல. அந்தக் காரியத்தை நீ செய்யவே கூடாது. நீயும் என்னைக் கேவலப்படுத்திப் போடாத!” முகம் இறுகச் சொன்னவனை அதிர்வோடு பார்த்தாள் தமயந்தி.
இந்த நிகழ்வை அவன் தன்னுடைய சுயமரியாதையோடு இணைத்துப் பார்க்கிறான் என்று இப்போதுதான் விளங்கிற்று! இது நல்லதல்லவே!
மெல்ல அவன் கரம் பற்றி, “தம்பி, அக்கா கெதியில கலியாணம் முடிச்சு இன்னொரு வீட்டுக்குப் போய்டுவன். அதுக்குப் பிறகு பொறுப்பா இருந்து எல்லாத்தையும் பொறுமையாவும் நிதானமாவும் நீதான் கொண்டு போகோணும். சொந்த பந்தத்துக்க சுய மரியாதையையும் சுய கௌரவத்தையும் கொண்டுவராத. அது எங்கட வாழ்க்கையையே அழிச்சுப்போடும்.” என்றாள் மென்மையாக.
“உனக்கு அவள் கலியாணத்தில கட்டாயம் நிக்கோணும் எண்டால், ‘நீ கட்டாயம் வரத்தான் வேணும், வா!’ எண்டு ஃபோனைப்போட்டு உரிமையா சொல்லு. அதை விட்டுப்போட்டுக் கோபம் சாதிச்சுக்கொண்டு ரோசம் பாராட்டாத! அவள் ஆரு? நாளைக்கு உனக்கு மனுசியா வரப்போறவள். அவளிட்ட உனக்கு என்ன ரோசம் சொல்லு?” என்றவள் கேள்விக்கு அவன் பதிலிறுக்கப் போகவில்லை.
“விட்டுக்குடுத்து நடக்கோணும் தம்பி. அதவிட மாமி மறுத்தும் மாமாவும் அவளும் உன்னைத்தான் கட்டுறது எண்டு சொல்லி இருக்கினம். அதுக்கு என்ன காரணம்? நீ அவளைச் சந்தோசமா நல்லா வச்சிருப்பாய் எண்டுற நம்பிக்கை. அதுக்கு உரியவனா, நீ எண்டைக்கும் நடக்கோணும். விளங்கினதோ?” என்று சொன்ன தமக்கையின் முகத்தையே பார்த்தான் பிரணவன்.
விழிகளில் மெல்லிய கலக்கம் சூழ்ந்திருக்க, தம்பி பிழையான முடிவுகளை எடுத்துவிடுவானோ, தன் வாழ்வைச் சந்தோசமாக வாழமாட்டானோ, நாம் வேறு இன்னோர் வீட்டுக்குப் போகப்போகிறோமே, அதன்பிறகு இப்போது மாதிரி கூடவே இருந்து புத்திசொல்ல முடியாதே என்றெல்லாம் எண்ணிக் கலங்கியபடி மென்மையாக எடுத்துரைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
அதை உணர்ந்துகொண்டான் அவன். மணப்பெண் அவள். எதிர்கால வாழ்வைப் பற்றிய இனிய கனவுகளிலும் கற்பனைகளிலும் கழிய வேண்டிய பொழுதினை அவனுக்காகச் செலவு செய்கிறாள்.
பிரணவனுக்கு மனம் கனிந்து போயிற்று! இந்த அக்காவின் திருமணத்துக்குத்தான் அவனுடைய பொம்மா வராமல் விட்டுவிட்டாள். உள்ளுக்குள் வலித்தது. அதை லாவகமாக மறைத்துக்கொண்டு, தமக்கையின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு சிரித்தான்.
“இப்ப என்ன, உன்ர தம்பி பெரும் மோசமானவன் எண்டு சொல்லுறியா அக்கா?” அவன் கேள்வியில் அவள் முகத்திலும் நிம்மதி பரவிப் புன்னகை அரும்பிற்று.
குழப்பம் கலைந்து நிதானித்துவிட்டான் என்றால் போதும், பிறகு எதையுமே கச்சிதமாகக் கையாள்வான் அவளுடைய தம்பி. அவனுடைய சிரித்த முகத்தில் அந்த நிதானம் வந்துவிட்டதை உணர்ந்தாள் தமயந்தி.
“என்ர தம்பி மோசக்காரன் இல்ல. பெரும் பாசக்காரன். அந்தப் பாசத்தாலேயே கோவமும் படுவான். அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு!”
“அந்தப் பயமெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை சிஸ்! உங்கட தம்பி எல்லாத்தையுமே சமாளிப்பான்!” என்றான் கண்ணைச் சிமிட்டி!
அவன் முகத்தையே நிறைவோடு பார்த்தாள் தமயந்தி. “எனக்குத் தெரியும், என்ர தம்பியைப் பற்றி!” பெருமையில் குரல் தழுதழுக்கச் சொல்லிவிட்டு, நிம்மதியோடு உறங்கச் சென்றாள் அவள்.
ஆனால், பிரணவனின் மனது ஆறியிருக்கவில்லை. கோபம் மட்டுமே சற்று மட்டுப்பட்டிருந்தது. தன்னுடைய சின்ன முக வாட்டமும் அக்காவைப் பாதிக்கிறது என்பதை உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
ஆர்கலி வரமாட்டாள். முடிவாகத் தெரிந்துபோயிற்று. பிறகும் ஏன் தானும் வருந்தி, தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் வருத்துவான்? இனி இதைப் பற்றி யோசிப்பதில்லை என்கிற முடிவோடு உறங்கச் சென்றான்.
அடுத்தநாள் காலையிலேயே அழைத்தான் அகரன்; ஆர்கலியின் தமையன். பார்த்ததும் புருவங்களைச் சுருக்கினான் பிரணவன்.
அவர்கள் ஓரிருமுறை பேசிக்கொண்டிருக்கிறார்கள்தான். சரியாகச் சொல்லப்போனால் மூன்று முறை. சுந்தரேசன் முதன்முறை இங்கு வந்துவிட்டுப் புறப்பட்டபோது, நல்லபடியாகப் புறப்பட்டுவிட்டார்களா என்று கேட்க அகரன் இவனுக்கு அழைத்திருந்தான்.
பிறகு அவர்கள் இங்கிலாந்துக்கு வந்து இறங்கிவிட்டார்களா என்று அறிய பிரணவன் அவனுக்கு அழைத்திருந்தான்.
மூன்றாவது முறையாகத் தமயந்தியின் திருமணத்துக்குத் தன்னால் வரமுடியாத காரணத்தைத் தனியாக அழைத்துச் சொல்லியிருந்தான் அகரன்.
இதோ இப்போது அழைப்பது நான்காவது முறை.
எதற்காகவோ என்று எண்ணியபடி அழைப்பை ஏற்றான். நல விசாரிப்புக்களுக்குப் பிறகு, “ஆரு இங்க இருந்து வெளிக்கிட்டுட்டாள் பிரணவன். ஒருக்கா எர்போர்ட் போய் பிக்கப் செய்வீங்களா?” என்று வேண்டினான் அகரன்.
பிரணவனுக்கு முதலில் என்ன சொல்கிறான் என்று விளங்கிக்கொள்வதற்கே சற்று நேரம் ஆயிற்று. விளங்கியதும் ‘இப்ப எதற்கு வருகிறாள்?’ என்று சினம்தான் உண்டாயிற்று!
அவனோடு விளையாடுகிறாளா என்ன? அவளின் சகோதரனிடம் தன் கோபத்தைக் காட்டிக்கொள்ளவும் பிடிக்கவில்லை. எனவே, “எப்ப இங்க வந்து இறங்கிறாள்?” என்று மட்டும் கேட்டான்.
நேரத்தைச் சொல்லிவிட்டு, “ஆருக்கும் சொல்லவேணாம், நானே போவன் எண்டு சொன்னவள் பிரணவன். பயம், புது இடம் எண்டு எவ்வளவு சொல்லியும் கேக்கேல்ல. தெரியும் தானே உங்களுக்கு, செல்லமும் பிடிவாதமும் கூட. ஆனா, அவள் சொல்லிட்டாள் எண்டுறதுக்காக அப்பிடியே விடேலாது தானே. அதுதான், அவள் வெளிக்கிட்டதும் உங்களுக்குச் சொல்லுறன். அப்பாக்குச் சொன்னால், பயப்படுவார். நீங்க போவீங்க தானே?” சின்ன சிரிப்புடன் தங்கையின் பிடிவாதங்களை ரசித்துச் சொன்னான் அவன்.
சரி என்றுவிட்டு வைத்தாலும் மிகுந்த கோபத்தில் இருந்தான் பிரணவன். நேற்றிரவு தமக்கையின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்ட பிறகுதான், ஓரளவுக்கேனும் கட்டுக்குள் வந்திருந்தான்.
எதையும் யோசிக்காமல் திருமண வேலைகளைப் பார்ப்போம் என்று முடிவெடுத்த நேரத்தில் எதற்கு வருகிறாளாம்? அதுவும் தனியாகப் புறப்பட்டு, அங்கிருந்து இங்குவரை வருவது சாதாரண காரியமா?
அவனை ஒரு மனநிலையில் இருக்க விடவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறாளோ?
அதுவரை ஏமாற்றத்தில் தகித்த மனம் இப்போது மட்டும் எதற்கு வருகிறாளாம் என்று சுணங்கியது. இன்னும் புறப்படாது இருந்திருக்க, நீ வரவே தேவையில்லை என்று அழைத்துச் சொல்லியிருப்பான்.
அந்தளவு காயப்பட்டிருந்தான் பிரணவன். வரச்சொல்லி அக்கா சொல்லி இருப்பாரோ? முகம் இன்னுமே கடினமுற தமக்கையை விசாரித்தான். தமயந்தி தான் அழைக்கவில்லை என்றாள்.
“அவளாவே இருந்து யோசிச்சிட்டு வாறாள் போல தம்பி. நல்ல விசயம்தானே. நீ விரும்பின மாதிரி, எதிர்பார்த்த மாதிரி இந்தக் கல்யாணத்துல தானும் நிக்கோணும் எண்டு அவளுக்கே தெரிஞ்சிருக்கு. இன்னும் என்ன வேணும் உனக்கு? இதுக்குத்தானே நீயும் ஆசைப்பட்டாய். போ, போய்க் கூட்டிக்கொண்டு வா!” என்று, அவனை அனுப்பிவைத்தாள்.
தமயந்தி என்னதான் சொன்னாலும், ட்ரெயினில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டவனின் இறுக்கம் தளரவே இல்லை.
என்னவோ வராமல் இருந்தால் காலத்துக்கும் குறை வந்துவிடும், ஒருமுறை முகத்தைக் காட்டிவிட்டு வருவோம் என்று ஒரு கட்டாயத்தின் பெயரில் வருவது போல் ஒரு தோற்றம். அப்படி ஒரு கட்டாயத்தில் அவனிடம் அவள் வரவே தேவையில்லையே!


