இது நீயிருக்கும் நெஞ்சமடி 21 – 1

அவள் வருகிற நேரத்துக்குச் சரியாகச் சென்று விமானநிலையத்தில் காத்திருந்தான் பிரணவன். சற்று நேரத்தில் அவளும் வந்தாள்.

பார்த்ததும் பார்த்தபடி நின்றுவிட்டான் பிரணவன். ஆயிரம் கோபதாபங்கள் இருந்தாலுமே கண்ட கணத்தில் அது எதுவுமே நினைவில் இல்லை. உள்ளத்தில் காதலின் உணர்வுகள் பொங்கின. ஓடிப்போய் அணைத்துக்கொள்ள உடலின் ஒவ்வோர் அணுவும் தவித்தது.

நன்றாக மெலிந்துபோயிருந்தாள். வாடித் தெரிந்தாள். மாசு மருவற்ற அந்த முகத்தின் வசீகரம் மட்டும் குறையவே இல்லை.

அவளிடம் விரைந்துவிடக் கையும் காலும் உந்தின. கை தானாக உயர்ந்து கேசத்தைக் கோதப் போனது. தடுத்துப் பொக்கெட்டுக்குள் நுழைத்துக்கொண்டான். அப்படிச் செய்தால் அவன் தடுமாறுவதை அவள் கண்டுகொள்வாளே.

அண்ணா நிச்சயம் பிரணவனுக்குச் சொல்லுவான் என்று ஆர்கலிக்கும் தெரியும். அதனாலேயே, அவன் அவளைக் கண்டுகொள்ள முதலே அவனைத் தேடிக் கண்டுகொண்டிருந்தாள்.

பார்த்ததுமே கண்கள் கலங்கிப் போயிற்று! ஓடிப்போய் அவன் மார்புக்குள் புதைந்துகொள்ள நினைத்தாள். ஆனால், அவளை வேண்டாம் என்று சொன்னான்தானே. இத்தனை நாட்கள் கழித்தும் கூர்மையான ஆயுதம் ஒன்று கிழித்ததுபோல் அவள் இதயம் வலித்தது.

சற்று மறைவாக நின்று நீர்த்திரையிட்ட விழிகளால் அவனையே பார்த்தாள். சும்மாவே அவன் பேரழகன். இப்போதோ இன்னுமே பளிச் என்று தெரிந்தான். திடகாத்திரமான தேகத்தோடு நல்ல உயரத்தில் விழிகளால் அவளைத் தேடியபடி நின்றவனைப் பார்க்க பார்க்கக் காதல் பொங்கிற்று!

முன்னரெல்லாம் குறும்பு கொப்பளிக்கும் முகம். அதற்குள் பொறுப்பு மறைந்திருக்கும். இப்போதோ பொறுப்பானவன் என்று பார்த்ததும் சொல்லும் அளவுக்குப் பக்குவபட்ட தோற்றம். அவளை அவன்பால் இன்னுமின்னும் ஈர்த்தது.

‘ஆனா, இந்தமுறை நானா வரமாட்டன் பிரணவன். நீங்க வரோணும் என்னட்ட!’ மனத்தில் முடிவு எடுத்துக்கொண்டு மறைவிலிருந்து வெளியே வந்தாள்.

தமயந்தியின் திருமணம் எல்லாம் ஒரு சாட்டு. அவனைக் காண வேண்டும். இதுதான் அவளுடைய இந்தப் பயணத்தின் பிரதான நோக்கம். அவளை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறான், அப்படியே அவளை மணப்பதாக இருந்தால் இப்படித்தான் இருப்பேன் என்று விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறான். எல்லாம் தெரிந்தும் அவனைக் காண ஓடி வந்திருக்கிறாள் அவள்.

என்னவோ அவனிடம் தான் இன்னுமின்னும் தோற்றுக்கொண்டிருப்பது போன்றதொரு வலி அவளைப் போட்டுப் பந்தாடியது.

சலனமற்ற விழிகளால் அவனை நோக்கியபடி வந்துகொண்டிருந்தாள். அது பிரணவனை மிகவுமே தாக்கியது. முதன்முறை பார்த்தபோது ஆச்சரியமாக அவனையே தொடர்ந்த விழிகள், பின்னாட்களில் வம்பிழுத்துச் சிரித்த விழிகள், அதன்பிறகு அவன் மீதான மயக்கத்தைக் காட்டிய விழிகள் இன்று அனைத்தையும் மறைத்துக்கொண்டிருந்தது. அல்லது மறந்துவிட்டதா?

அவனை இரண்டு வருடங்கள் கழித்துக் கண்டதில் ஒரு மகிழ்ச்சி? காதல்? இத்தனை நாள் பிரிவின் தேடல்? எதுவுமே இல்லை. ஆயிரம்தான் கோபமும் குறையும் இருந்தாலும் ஆவலோடு காத்திருந்தவனின் காதல் மனம் வெகுவாக அடிவாங்கியது.

இன்னுமின்னும் தனக்குள் இறுகினான். இது அவனது இயல்பே அல்ல. அதுவேறு ஒருவிதச் சினத்தையும் எரிச்சலையும் உருவாக்கின.

அவள் நெருங்கியதும் மௌனமாகக் கையை நீட்டிப் பெட்டியை வாங்கிக்கொண்டான். மௌனமாகவே இருவரும் புறப்பட்டனர். எப்படி இருக்கிறாய் என்று கேட்பாள். அல்லது அப்பாவுடன் வராததற்குக் காரணம் சொல்லுவாள் என்று பெரிதும் எதிர்பார்த்தான் பிரணவன்.

தன்னோடு கதைக்காமல் இருக்க, தன் கேசத்தில் கைகளை நுழைக்காமல் இருக்க அவளால் முடியாது என்று நினைத்தான். அவள் கவனிக்காத பொழுதுகளில் அவளையே பார்த்தான்.

இந்தளவுக்கு உள்ளுக்குள் அவன் கரைந்து உருகிக்கொண்டு இருக்க, அவளால் அவனை யாரோவாக்கி இடைவெளி விட்டு நடந்துவர முடிகிறதே!

ஓட்டோவில் புறப்பட்டு ஒரு உணவகத்துக்கு அழைத்துச் சென்றான்.

“முகம் கைகால் கழுவுறதா இருந்தா கழுவிக்கொண்டு வா!” என்று ரெஸ்ட் ரூம் அழைத்துக்கொண்டு போனான்.

அவள் வெளியே வரும் வரைக்கும் வாசலிலேயே நின்று மீண்டும் அழைத்துக்கொண்டு வந்தான்.

அவனின் இந்த அக்கறையில் அசைந்தது அவள் மனது. எப்போதும் அவன் இப்படித்தானே. பார்த்துப் பார்த்துக் கவனிப்பான். அன்பையும் அக்கறையையும் அள்ளியள்ளிக் கொட்டுவான். ஆனால், அவளை மட்டும் வேண்டாம் என்பான்.

அந்த நினைவு வந்ததும் நெகிழ்ந்த மனது மீண்டும் கலங்கிப் போயிற்று! அமைதியாகவே சென்று அமர்ந்துகொண்டாள். காரம் குறைவாக அவளுக்கும், அவனுக்கு நல்ல காரமாகவும் இடியப்பம் கொண்டுவரச் சொன்னான்.

இடியப்பமும் பால் சொதியும்தான் சாப்பாடு. அந்தச் சொதியில் போட்டிருந்த இரண்டு பச்சை மிளகாய்க்கே அவள் முகமெல்லாம் சிவந்து, உதடுகள் அடர் சிவப்பாய் மாறிப்போயிற்று!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock